குடும்பங்கள்
வாழும்
குடியிருப்புப்
பகுதியில்
குடிநீர்க்
குழாய் கேட்டுக்
கோரிக்கை
வைத்துக்
காத்திருந்ததில்
ஐந்து
மாவட்ட ஆட்சியர்கள்
நான்கு
வட்டாட்சியர்கள்
மூன்று
முதலமைச்சர்கள்
மாறிப் போனார்கள்.
கோஷமும்
இல்லை ;
கோரிக்கையும்
இல்லை ;
நள்ளிரவில்
பெற்ற
சுதந்திரம்போல்
இரவில்
சுவரெழுப்பிக்
காலையில்
திறந்தார்கள்
மதுக்கடை
எமனுக்குப்
போட்டியாய்
நம் தெருவுக்குள்ளேயே
நரகத்தைக்
கொண்டுவந்துவிட்டார்கள்
தெருவோர
அரச மரத்தடியில்
பிள்ளையாருக்கு
எதிரே
புஸ்ஸென்று
புட்டியைத்
திறந்து குடிக்கிறார்கள்
மறக்காமல்
காலி
பாட்டலை
செருகிச்
செல்கிறார்கள்
சிறிதே
வளைந்த தும்பிக்கையில்
தெரு
வாசலில்
கோலம்
போடக்கூட வரமுடியவில்லை
பெண்கள்
பருவம்
எய்யக் காத்திருக்கும்
சிறுமிகள்
சைக்கிள்
ஓட்டிப் பழக முடியவில்லை
எவ்வளவு
கோபங்களை அடக்கி வைப்பது
சின்னச்
சிமிழுக்குள்?
மயிலிறகுகள்
மாறிப்
போயின அம்புகளாய்
மலர்த்தோட்டம்
மாறிப்
போனது பாசறையாய்
காந்தள்
விரல்களின் விசைபட்டு
மதுப்பாட்டில்
ஒவ்வொன்றாய்
உடைந்து
நொறுங்குகிறது
மோப்பக்
குழையும் அனிச்சங்களின்
முகங்களில்
முறுக்கிய
மீசைகள்;
குற்றுயிரும்
குலையுயிருமாய்க் கிடக்கிறான்
மதுஅரக்கன்
வருங்காலத்துக்கு
நற்செய்தி
எழுதி நகர்கிறது
நிகழ்காலம்
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment