என்னைத்
தன்குரலால் மயக்க
எத்தனை குரல்கள்?
நட்சத்திரப் பூச்சொரியும் நள்ளிரவில்
கீழிறங்கி...
பாறையை மீட்டி...
பூமியைச் சிலிர்க்க வைக்கிறது
அருவியின் குரல்
பாரதியின்
குயில்தோப்பில் இருந்து
கூவுது குயிலொன்று
கண்ணதாசன் தமிழில்
காற்றேறி வருகிறது
சுசீலாவின் குரல்
கம்பன் காவியமும்
கண்மூடிக் கேட்கிறது
தாயின்
தாலாட்டுக் குரல்
வானிலிருந்தும் வரலாம்
ஒரு தேவ குரல்
மெல்லிய விரல்படும் யாழும்
மலரிதழ் முத்தமிடும் குழலும்
காதுக்குள்
பேரம் பேசிச் செல்கின்றன
தீர்ப்பெழுதி
என்னை முந்திக்கொண்ட
வள்ளுவன் மீது
இன்னமும் கோபம் எனக்கு.
மழலை பேசி
மடியில் வந்து அமர்ந்தது குழந்தை
மனதில் வந்து அமர்ந்தது குழந்தையின் குரல்!
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment