சூரிய தாகம்
தூரத்தில் இருந்தபடியே
சூரியன் நாவு
எங்களூர்
குளத்து நீரைக்
குடித்துவிட்டது
மாயக் குழாய்போட்டு.
இப்படியே போனால்
கடல்
திடல் ஆகும்
நம்
ஒவ்வொருவருக்குள்ளும்
சுட்டுக்கொண்டிருக்கிறது
குட்டிச் சூரியன் ஒன்று
அதன்தாகம் தணிக்க
தீரா நதியொன்று தேவை
வேட்கை தீர்க்காது பூந்தேன் என்று
சிற்றோடை தேடிச் சோர்கிறது
பட்டாம்பூச்சிக் கூட்டம்
சூரியனின் எச்சில் பட்டிருக்குமோ...
இளநீர்க்குள்ளும்
சுடுநீரே!
வெய்யில் போர்த்திய என் பகலில்
உப்பளங்களும்
கொப்பளங்களும்
நெருப்புலை எதற்கு?
கத்தி செய்ய
கத்திரி வெய்யில் போதும்
இந்த
வெய்யில் பூமிக்கு முகம்காட்ட
நிலவும் அஞ்சுகிறதாம்
அதன்
அழகிய முகத்திலும்
அம்மைப்புண் வந்துவிடுமோ என்று!
தாகம் தீர்க்காத
வியர்வைக் கசிவு மட்டுமே
சூரியனின் மாற்றீடு
- கோ. மன்றவாணன்