பச்சை
நிலம்

சோறு தண்ணீர் இல்லாமல்
சோர்ந்திருக்கும்
நூறு வயது கிழவியின்
தளருடல் முழுவதும்
தோல்வறண்டு
ரேகைகள் நெளிவதுபோல்
வெடித்து மல்லாந்து கிடக்கிறது
வயல்வெளி !
பசும்புல் தேடி
ஏமாந்து திரும்பும்
எங்களூர் மாடுகள்
காகிதம் தின்னக்
கற்றுக்கொண்டன.
பச்சைப் புற்களையும்
பசும் மூங்கில்களையும்
ஞெகிழியில் செய்து
வீட்டுக்குள் தோட்டமிட்டு
விழிகளை ஏய்க்கிறார்கள்.
இனி
ஓவியத்தில் மட்டுமே
பார்க்க முடியுமாம்
பச்சை நிலத்தை.
முன்னறி ஞானம்கொண்ட எங்கள்
முன்னோர்கள்
காகிதத்தில் செய்த
மாவிலைத் தோரணத்தைக்
கண்டுபிடித்துவிட்டார்கள்
கடந்த நூற்றாண்டில்
மெழுகுத் தாளில் தயாரித்த
வாழை இலையில்
மணவிருந்து பரிமாறுகிறோம் நாம்
இந்த
நூற்றாண்டில்
நாளைய
சருகு தேசத்தில்
பச்சை நிலம்காண முடியும்
என்கிறார்
உளமருத்துவர்,
மாயக்காட்சி காணும்
மனப்பிறழ்வு நோயிருந்தால்
- -கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment