செல்லாக்
காசு
ஒரு கறுப்பு இரவில்
அறிவித்தது
அரசு
ஆயிரம் ஐநூறு ரூபாய்த்தாள்கள்
செல்லாதென!
பதவி பறிக்கப்பட்ட மந்திரிகளாய்ப்
பார்ப்பாரற்றுப் போயின
ரூபாய்த் தாள்கள்
பத்து, ஐம்பது, நூறு என விழுந்திருந்த
உண்டியலை
ஆளுங்கட்சியினரிடமிருந்து பாதுகாக்க
அந்த
ஆண்டவனாலும் முடியவில்லை.
சொர்க்க வாசல் திறக்காதா
எனக் காத்திருந்த
அந்தக் கால பக்தர்கள்போல்
ஏடிஎம் வாசல்களில்
இந்திய மக்கள்
உணவகத்தில்
உண்டு மகிழ்கிறார் பிச்சைக்காரர்;
வெளியில்
பசியோடு தவிக்கிறார்
பணக்காரர்
சில்லறை இன்றி!
மருந்து
வாங்க முடியாமல்
உலகைத் துறந்து போகிறது
தாயின் உயிர்
பேருந்து நிலையத்தில்
பிச்சைக்காரர்களாய் வெளியூர்க்காரர்கள்
ஆயிரங்கள் இருந்தும்
ஐநூறுகள் இருந்தும்
பேருந்துகள்
புறப்பட்டுப் போகின்றன
பயணிகள் இன்றி
வங்கி வாசலைத் தொடமாட்டோமோ என
வரிசையில் காத்திருக்கும்
கால்கள்
வீதி எல்லையையும் தாண்டி
கறுப்புப் பணம் ஒழிகிறதோ இல்லையோ
கறுப்பு மை
எங்கள் விரல்களில்
பணம் பத்தும் செய்யும்
பழமொழியாம் ;
பழம்வாங்க முடியவில்லை
இந்தியக் காக்கைகள்
வெள்ளையாக மாறும் என
மேஜிக் செய்கிறார் தலைவர்
விடிந்து கொண்டுதான் இருக்கிறது
ஒவ்வொரு நாளும்…
தேநீர் குடிக்கவும் வழியின்றி!
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment