Sunday, 18 December 2016


அழுத கண்ணீர்


அலைசீறும்
ஆழியைப் போலவே
தொண்டர்களின் கண்ணீர்
வடிவதுமில்லை
வற்றுவதுமில்லை
தம்
தலைவர்கள் மறைகையில்

மனைவியின் கண்ணீர்
ரத்தமாக வழியும்
கணவன் பிரிகையில்

பிள்ளையைப் பறிகொடுத்த
பெற்றோரின் கண்ணீர்
ஆயுளின் ஒவ்வொரு
நொடியிலும்
நுரைததும்பும்

ஒற்றை வார்த்தையில்
ஒடிந்துவிடும்
காதல் ;
அதுதரும் கண்ணீர் மட்டும்
மவுன நதியாக
மனப்பரப்பில் தகித்தோடும் என்றென்றும் 

உளியின்
ஓசை எழும்போதெல்லாம்
கல் வடிக்கும்
கண்ணீரை யார் காண்பார்?

மலையின் இடுக்கில் இருந்து கசியும்
கண்ணீரை
யார் துடைப்பார்?

யாரும் தெரிந்ததாகக்
காட்டிக் கொள்ளவில்லை
என் கண்ணீரை!

சேரிடம் தெரியாமல்
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
அநாதைக் கண்ணீர்

அனுபவித்துச் சொல்கிறேன்
அழுத கண்ணீராலும்
அணைக்க முடிவதில்லை
துயரப் பெருந்தீயை

- கோ. மன்றவாணன்








No comments:

Post a Comment