புதையல்
பூமியின் ஆழத்தில்
பொன்பொருளைப் புதைத்து வைத்தார்கள்
தன்னலவாதிகள்
அவர்களும் அனுபவிக்கவில்லை ;
அடுத்தவர்களையும் விடவில்லை!
பத்மநாபசாமி திருக்கோயில்
பாதாள அறைகளுக்குள்
பல
லட்சம்கோடி ஆபரணங்களாம்
யாருக்கும் பயனில்லை ;
அந்த மாலவனோ அனந்த சயனத்தில்!
புதையலைப்
பூதம் காப்பதாகப்
புரளியைக்
கிளப்பிவிட்டு
யார்யாரோ பங்கிட்டதாக
யார்யாரோ கதைசொன்னார்கள்
பூசைகள் போட்டுப்
புதையல் தேடிப்
பூமியைத் தோண்டியவர்கள்,
தங்களின் பிணக்குழியைத்
தாங்களே வெட்டிக்கொண்டார்கள்
இன்றுகூட
நிலத்தின் கீழ்
மர்மக் குகைமாளிகைகள் கட்டி
கட்டித் தங்கங்களையும்
கட்டு பணத்தாள்களையும் அடுக்கி
வைத்தவர்கள்
கதறுகிறார்கள் சப்தமின்றி….
கனவில் ரெய்டு வந்து !
புதையலைத் தேடி
அலைய வேண்டாம்
அங்கும் இங்கும்
உனக்கு எதற்கு
உழைப்பின் வாராச் சொத்து?
உனக்குள்
கொட்டிக் கிடக்கும் ஆற்றலைத்
தோண்டி எடு
உனக்குள்
பூட்டிக் கிடக்கும் அறிவைத்
திறந்து விடு
உனக்குள்
நிரம்பி இருக்கும் புதுநம்பிக்கைகளுக்கு
உயிர் கொடு
உனக்குள்
உறங்கிக் கிடக்கும் உழைப்பை எழுப்பு
உன்னைத் தோண்டிப்பார்
உனக்குள்ளேதான் இருக்கு
ஒட்டுமொத்த புதையலும்
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment