Thursday, 29 September 2016



திருமணம்



§  ஊரார் திருமணங்களில்
     ஓரமாக உட்கார்ந்திருக்கிறார்கள்…
     வயது தாண்டியும்
     வாலிபம் தாண்டியும் வாழும்
     முதிர்கன்னிகள்!

§  வெளியில்
     விழும் எச்சிலைகளின்
     மிச்சம்
     மீதிகளின் சுவையுணர
     மண்டபத்தின் பின்புறம்
     அழுக்குடை
     இந்தியா்கள்.

§  சிலரின்
     ஆடம்பர
     அழைப்பிதழ்ச் செலவில்…
     திருமணங்கள் ஆயிரம்
     திருப்தியாய் நடத்தலாம்
     என்று
     எண்ணுகின்றன
     ஏழை மனதுகள்!

§  ஒருநாள்
     உடுத்தும் பட்டுச்சேலைக்கு
     இலட்சங்கள் செலவாகின்றன.

§  மணமேடையில்
     மட்டுமே உடுத்தும்
     மேல்நாட்டு
     வடநாட்டு உடைகளுக்கு
     பல்லாயிரம் ரூபாய்
     பற்றவில்லையாம்.
§  நகைக்கடை
     நடந்து வருவதுபோல்
     புன்னகை மணமகளின்
     பொன்னகை அலங்காரம்
§  இப்போதெல்லாம்
     மணமகள் அலங்காரத்தைவிட
     மண்டப அலங்காரத்துக்குச்
     செலவழிக்கும்
     செழிப்பைக் காணுகையில்
     குபேர கருவூலத்தைக்
     கொள்ளை அடித்திருப்பார்களோ…

§  பெற்றோரைக்
     கடனில்
     கண்ணீரில் மூழ்கடிக்காமல்
     எளிய திருமண விழாக்கள்
     இனி வேண்டும்!
     இனிதாக வேண்டும்!
§  திருமணம்
     சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச்
     சொல்வது பொய்.
     திருமணம்
     ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுவது
     என்பது வணிகம்
    
     திருமணம்
     இதயத்தில் நிச்சயிக்கப்படுவது
     என்பதே நியாயம்.    
§  வெற்று ஆடம்பரங்களை
     வெளி அலங்காரங்களை
     விலக்கி-
     அன்பால்  
     பண்பால்
     இதயங்களை அலங்கரியுங்கள்!
     அப்போது…
     உலக அழகெல்லாம்
     உங்களை ஆராதிக்கும்!


     -கோ. மன்றவாணன்













No comments:

Post a Comment