Thursday, 29 September 2016



திருமண நாள்

நாளைவரும்
திருமண நாள் மகிழ்வுக்காக-

நகர்படியில்
நின்ற இடத்திலிருந்தே இடம்பெயர்ந்து
வணிக வளாகங்களில்
வாங்கிக் குவித்து
நள்ளிரவில் வீடுவந்தோம்
நானும் அவளும்

செலவுக் கணக்கைச்
சிந்தித்த போது
பழைய பிரச்சனைகளில் மனம்தாவியதில்
பரவிக் கிளைத்தது சண்டைத்தீ

வழக்கம் போலவே
வார்த்தைப்போர் முடிவடையாமல்
அடுத்தடுத்த அறைகளில்
படுத்துக்கொண்டோம்

பால்காரர் மணியோசை கேட்டு
எழுந்துவந்து பார்த்தேன்
வாசலில்
சிக்குக்கோலம் போட்டு முடித்திருந்தாள்
செல்லக்கிளி

குறுக்கும் நெடுக்குமாக
முன்னும் பின்னுமாக
ஏற்றமும் இறக்கமுமாக

வளைந்தும் நெளிந்துமாக
உள்ள
சிக்கல் கோலத்தில்

எப்படியோ நுழைந்துவிட்டு
எப்படியும் வெளிவர முடியாத
தவிப்பை
மறக்க வைக்குமா
மணநாளாவது?

- கோ. மன்றவாணன்



No comments:

Post a Comment