Thursday, 29 September 2016


தொலைந்து போன கடிதம்


கடிதம்
அதற்கு உணர்ச்சி உண்டு
அது அழும் ;
அது சிரிக்கும்!

கடிதம்
அதற்கு மொழி உண்டு
அது பேசும்!

கடிதம்
அதற்கு இதயம் உண்டு
அது உருகும்!

கண்கள் படாமல்
கைகள் தொடாமல்
காதல் மலர்வதில்லை
என்பதைப்
பொய்யாக்கிய
புதிய அகநானூறுதான்
கடிதம்!

நெருக்கத்தில் இடைவெளி இருக்கும்
நேரில் உறவாடுகையில் ;

நெஞ்சுகளின் நெருக்கத்துக்கு
இடைவெளி
என்பதே இல்லை
கடித உறவாடுகையில்! 

பதில் கடிதம் வரும்வரை
படபடக்கும்
வேதனையின்
விதவிதமான விசித்திரங்கள்
இரவென்று சோராது
பகலென்று பாராது.

கடிதம்
கண்டபின்
கதவு மூடிய அறைக்குள்
நிலவு பொழியும்
நிறநிறமான கவிதைகளை!

இன்று
தொழில்நுட்ப உலகில்
தொலைந்து போனது கடிதம்.

மின்னஞ்சல், குறுஞ்சேதி
மின்னலென வந்தாலும்….
கண்ணீரில் தாள்நனைய
கையால் எழுதும்
கடிதம் மட்டுமே ஏந்திச் செல்லும்
மனசை!


              -கோ. மன்றவாணன்



No comments:

Post a Comment