Friday, 16 September 2016


குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி

காளான் குடைக்குக் கீழ்
கட்டிப் பிடித்தபடி
எறும்புகள் இரண்டு
மழையைத் தவிர்த்தபடி…
மகிழ்ச்சியில் சிலிர்த்தபடி….

அகன்றும்
உயர்ந்தும்
விரிந்தும்
விளங்கும்
வெண்கொற்றக் குடைக்குள்
பெய்யும் மகிழ்ச்சியாய்
பள்ளிகொண்ட பெருமாள்
பக்கத்தில் திருமகளுடன்

கடைவிரித்தேன் கொள்வார் இல்லை
குடைவிரித்தேன் மழையே இல்லை
என்ற போதிலும்
குடைக்குள்
குல்ஃபியானது சுடும் சூரியன்
நினைவெல்லாம்
நித்யா

மழை இரவில்
மரங்களின் நீர்விசிறல்களில்
சின்னக் குடைக்குள்
சேர்ந்தே நடந்தோம்
உடல்கள் உடலானது
உள்ளங்கள் உள்ளமானது

பெய்தது மழை
குடைக்கு வெளியே
பெய்தது மகிழ்ச்சி
குடைக்கு உள்ளே

குடையை விரித்தபடி
குடைக்குள் சிரித்தபடி
பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளைப் பார்த்ததும்

மழை தன்னை மறந்து பெய்தது
மகிழ்ச்சி


- கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment