உணர்ச்சி
இனப்பெருக்கத்திற்கு மட்டும்
இந்தியர்
ஒவ்வொருவருக்குள்ளும்
கரை உடைத்துப் பாய்கிறது
பாலுணர்ச்சி.
இலவசம்
எதுவென்றாலும்
முன்னே உள்ளவரைக் கீழே தள்ளி
மிதித்துவிட்டு
கையை மாற்றி மாற்றி
வாங்க எகிறுகிறது
பேராசை உணர்ச்சி
உதவி செய்தவரையும்
உதைத்து மகிழ்கிறது
நன்றி உணர்ச்சியை
நான்கு தலைமுறைக்கு முன்பே
உதறிவிட்ட
நம்தலைமுறை
பூமிப் பரப்பை விடவும்
பொங்கிப் பெருகுகிறது
பழிவாங்கும் உணர்ச்சி
பூதக் கண்ணாடி வைத்துத்
தேடியும் கிடைக்காதது
மன்னித்து மகிழும்
அருளுணர்ச்சி்
பணத்துக்கு
ஜனநாயகத்தை விற்றுவிட்டு
சாராயம் குடித்துச்
சகதியில் குதூகலிக்கிறது
பொதுசனம்.
மூன்று பக்கமும் கடல்சூழ்ந்தும்
இந்தியாவை
மூழ்கடிக்க முடியவில்லை
ஊழல் சாக்கடையில்
ஒட்டுமொத்த இந்தியாவும்
மூழ்கிக் கிடக்கிறதே…
தொட்டால் சுருங்கிச் செடிகூட
ஒவ்வாதவன் தொட்டால்
முகத்தை மூடி
எதிர்ப்புணர்ச்சியைக் காட்டுகிறது
எத்தனை அநீதிகள்
எத்தனை அராஜகங்கள் நிகழ்ந்த
போதும்
உணர்ச்சியற்று இருப்பதே
வாழ்க்கையின் வெற்றித் தத்துவமாம்!
உணர்ச்சி இல்லாத எதுவும்
சவம்தான்:
இந்தியாவை அரித்துத் தின்னும்
ஊழலை எதிர்க்காத
நானும் நீயும்
சவங்கள்தாம்.
எல்லாத் துன்பங்களுக்கும் ஒரே
காரணம்
நேர்மை மூச்சை
நிறுத்திக் கொண்டதுதான்!
நேர்மை உணர்ச்சி
அற்றுப் போன இந்தியாவைக்
காணாமல்
கண்மூடிய காந்தி
புண்ணியவான்தான்!
No comments:
Post a Comment