சுடும்
நினைவுகள்
நினைவுகள் சுடும்
நேர்மை உன்
நெஞ்சைக் குத்திக் கிளறும்
நேரம் வரும்போது!
நீ
குழந்தையாய் இருந்தபோது
உன்நோய் தீர்க்க
ஒவ்வொரு மருத்துவராய்த் தேடி
உன்னைக் காத்த அன்னை…
ஒவ்வொரு கோவில் வாசலிலும்
உன் நலத்துக்காக
மடிப்பிச்சை கேட்ட அன்னை…
மருத்துவ மனையில்
வாடி வதங்கிய போது…
எட்டிப் பார்க்காமல்
சுற்றுலாக் கேளிக்கையில்
சுற்றிக் களித்த மகனே!
அந்தத் துயர்நினைவுகள்
அனல்தீ அலைகளாகத்
திரண்டுவந்து சுடும் உன்னை,
மருத்துவ மனையில்
நீ படுத்திருக்கும் காலம் வரும்போது!
அப்போதும்
அன்னை அருகில் இருப்பாள்
உன்னைக் காக்க
ஊர்தெய்வங்களிடம் முறையிட்டபடி…
நினைவுகள் சுடுவது
நீ திருந்துவதற்காகத்தானோ?
- கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment