சாதீ
ஊர் உலகை
எரித்துப் பொசுக்கித்
தின்னுகிறது
சாதீ
சாதி தாண்டி-
சமத்துவ நிலத்தில்
கால்பதித்த
காதல் நெஞ்சங்களுக்குச்
சாவுத் தண்டணை விதிக்கிறது
சாதி மன்றம்
செம்பரம்பாக்கம் வெள்ளம் புகுந்த
சென்னை ஆகும்
சாதி புகுந்த
வீடு
பிறப்பொக்கும்
எல்லா உயிருக்கும்
என்ற
வள்ளுவனைக் கூடச்
சாதிப் பட்டியலில் அடைத்துச்
சமாதி கட்டிவிட்டார்கள்
ஊருக்கு ஊர் பெருமை பேசும்
உங்கள் சாதி முகங்களை
நியாயக் கண்ணாடியில் பாருங்கள்
மனிதச்சதை தொங்கும் கொம்புகளுடன்
மனிதரத்தம் வழியும் கோரப் பற்களுடன்
வெறிபிடித்து அலையும்
மிருகங்களைக் காணுவீர்கள்!
சேரி சாமியை
ஊருக்குள் விடாமல்
தீப்பந்தம் ஏந்தி வருகிறது
சாதீ
ஊர்ச்சாமி,
சாதித் தலைவரின்
சரசகலா வீட்டு வாசலில்
கற்பூர ஆரத்திக்காகக்
காத்துக் கிடக்கிறது.
சாமிக்குச்
சந்தனம் பூசலாம்
சாதி பூசியது யார்?
கோவிலின்
வெளியில் நின்று
வேண்டுகிறான் மனிதன் :
பிறப்பால் வருவதுதான் சாதி
என்றால்
பிறக்காமல் செய்துவிடு சாமி!
-
கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment