Sunday, 18 September 2016


புதியதோர் உலகம் செய்தோம்


ஆறு கண்டங்கள்
எண் திசைகள் கொண்ட
அகண்ட உலகை
ஒரு கைப்பேசிக்குள்
உள்ளடக்கி விட்டோம்!

மயிலேறி
உலகைச் சுற்ற வேண்டாம்:
நின்ற இடத்தில் இருந்தே
நீ உலகை வலம்வரலாம்!

சென்னையில் இருந்தபடியே
திருநெல்வேலியில்
நிலத்துக்கு
நீர் பாய்ச்சலாம்!

அன்று
மந்திரவாதிகள் சொன்ன
மாயக் கண்ணாடி
இன்று
கணினித் திரையாகிக்
காட்டுகிறது எதையும்!

எந்தத் தகவலையும்
இப்போதே தெரிந்துகொள்ளலாம்
எல்லாம் தெரிந்த
ஏகாம்பரமாய்
இணையம் இருக்கையில்!

நெட்டப்பாக்கத்திலிருந்து
நெதர்லாந்தில் உள்ள தோழியோடு
முறுவல் செய்து
முகம்பார்த்தபடி பேசலாம்

இங்கிலாந்துக்கு…
காந்தி காலத்தில்
கடிதம் எழுதி
மறுகடிதம் பெற
மாதக் கணக்கானது

கண்ணிமைக்கும் பொழுதில்
கனடாவுக்குக் கடிதம் போகிறதே
உரிய பதில்
உடனடியாக வருகிறதே

காற்று நுழையாத இடத்தைக்
காட்ட முடியும்
கணினி நுழையாத துறையைக்
காண முடியுமா?

நோயறிதலை
மருத்துவர் அறிவதைவிட
தொழில்நுட்பக் கருவிகளே
துல்லியமாக அறிகின்றன

இரண்டாயிரம் ஆண்டுகள் வாழவும்
இதோ வருகிறது
மருத்துவத் தொழில்நுட்பம்

அடடா… எந்திரன்கள் (ரோபோக்கள்)
அறுவை சிகிச்சை செய்கின்றனவாமே!

சாவை வென்று
சாதிக்கும் சக்தி
நாளைய தொழில்நுட்பத்துக்கு
உண்டு என்பதை
உணர்த்துகிறது இன்றைய ஆராய்ச்சி! 

காலை
செவ்வாய் கிரகத்தில்
நாயர் கடையில் சாயா குடித்து

மதியம்
மெர்க்குரி கிரகத்தில்
நவீனான்டி விலாசில்
நண்டு மீன் சாப்பிட்டு

மாலை
வீனஸ் கிரகத்தில்
நெடிதுயர்ந்த மால்களில்
ஷாப்பிங் செய்துவிட்டு

இரவு
சந்திர கிரகத்தில்
மது அருந்தி
தேவதைகளோடு நடனமாடி

விடிவதற்குள்
பூமிக்கு வந்து
அப்போதும்
சுப்ர பாதம் கேட்டு
சுறுசுறுப்பாய் இருக்கும் காலம்
தூரத்தில் இல்லை.


கூடுவிட்டு
கூடுபாய்வது போல்
கிரகம்விட்டு
கிரகம் பாய்வது என்பது
நம்வீட்டு
ஓர் அறையிலிருந்து
மற்றோர் அறைக்குப் போவதுபோல்
மாறிவிடும்!

கிரகங்கள்
நிமிடங்களுக்குள் சுருங்கி
நம்
சுட்டுவிரல் அசைவுக்கு
கட்டுப்பட்டு நடக்கும்!

ஜிபூம்பா என்று சொன்னால்
எதையும் செய்து முடிக்கும்
பூதத்தைப்
புத்தகக் கதைகளில் படித்திருக்கிறோம்

மெய்யாகிவிட்டது
அந்தப் பூதம்
அறிவியல் தொழில்நுட்பமாக!

புதியதோர் உலகம் செய்தோம்
அடுத்ததோர் உலகமும் செய்வோம்!


- கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment