Sunday, 18 September 2016


நெல்லுக்கு இறைத்த நீர்



நாளையோ
நாளை மறுநாளோ சாகப் போகும்
தாத்தா
வழிச்சாலையில்
மரக்கன்றை நட்டு வைக்கிறார்
என்ன எதிர்பார்த்து?

அவரின்
மரணத்தையே
மறந்துவிட்ட ஒருகாலத்தில்
கிளைவிரித்து நிற்கும் மரம்

அப்போது
கூடுகட்டிக் குடியிருக்கக்
குருவிகள் வரும்

ஏணைகட்டித் தாலாட்ட
நாடோடித்தாய் வருவாள்

மரத்தடியில் அமர்ந்து அருள்சுரக்க
மாரியம்மன்கூட வருவாள்

வாழ்வில்
நிழல்சுகத்தையாவது அனுபவிக்க
வியர்த்து வருவார்கள்
விவசாயத் தொழிலாளர்கள்

மரவேர்களில் அமர்ந்து
மணிகடந்து கதைபேச
வாலிபர்கள் வருவார்கள்

மரத்துக்கு
வாய் முளைத்ததோ என
விழாக்களின் போது
கிளைகளில்
ஒலிப்புனல் கட்டுவார்கள்

மின்விளக்குத் தோரணங்கள்
இலைகளோடு
உரசி உரசிக் கண்ணடிக்கும்

கல்லடிபட்டு விழும்
கனிகளைச் சுவைக்க
சிறுவர்கள் வருவார்கள்

சுள்ளிகளைப் பொறுக்கி
விறகாக்க
மூதாட்டிகள் வருவார்கள்

அவர்கள் யாருக்கும்
தெரியப்போவதில்லை
தாத்தாவை

ஒவ்வொரு பயனிலும்
தாத்தாவைப் பார்க்கிறது
மரம்

புல்லுக்கும் பாய்கிறது
நெல்லுக்கு இறைத்த நீர்
என்ற அவ்வையை நினைக்கிறது
மனம்

- கோ. மன்றவாணன்


No comments:

Post a Comment