நெல்மணி
உயர்ந்த
மணியெதுவென
ஒருபோட்டி
நடந்தது.
மின்னி
மினுக்கி
நவமணிகள்
நடந்து வந்தன.
நெல்மணி
வந்தது
நெளிந்தும்
தலைகுனிந்தும்!
அரங்கம்
அதிர்ந்தது
ஆரவாரித்து!
ஒவ்வொரு
நெல்மணியிலும்
இறைவனாய்
ஒளிவீசுகிறான்
உழவன்!
காற்றுப் போகும்
திசையில்
கழுத்தை
வளைத்து
ஏதோ
கதைபேசிச்
சலசலக்கும்
கதிர்மணியின்
அழகை
வரப்பில்
நின்று பார்த்தால் போதும்;
மனசுக்கு
வண்ணங்கள் பூசும்!
வள்ளலார்
செல்வந்தர்களிடம்
சென்று
யாசித்தது
பொன்மணியை
அல்ல
நெல்மணியைத்தான்!
சொல்மணி வேண்டுமா?
நெல்மணி
வேண்டுமா?
என
வறுமையில்
வாடும்
புலவரைக் கேளுங்கள்;
வாய்மூடிச்
சொல்வார்
வயிற்றைத்
தடவி!
· உயிர்
வளர்ப்பதும்
உடல்
வளர்ப்பதும்
உலகை
வளர்ப்பதும்
நீயல்ல;
நெல்மணியே!
· நிலத்தின்
கருணைதான்
நெல்மணி!
-கோ.
மன்றவாணன்
No comments:
Post a Comment