Thursday, 1 September 2016


வள்ளுவம் வாழ்வதெங்கே?


திடீரெனத்
தேர்தலில் நிற்க மனுதாக்கல் செய்தார்
திருவள்ளுவர்

அனைத்துச் சாதிகளும்
அறவே புறக்கணித்தன
பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்
என்ற வள்ளுவனை!

ஒவ்வொரு கட்சியும்
உத்தமர்கள் நாங்கள்தான் என
உரக்கப் பேசின
ஊர்முக்கில் நின்று.
“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்று
அருகில் இருந்து
அலறிய வள்ளுவனைப்
பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகப்
போலீசார் அழைத்துச்சென்றனர்.

வாகனங்களில்
வரவழைக்கப்பட்ட மக்கள் வெள்ளத்தில்
மிதந்தது
தேசத் தலைவர்கள் பேசிய
தேர்தல் மேடை
கூட்டம் கலைந்த பின்னும் நின்றிருந்த
குறளாசானின்
நாசியை
நாசப்படுத்தின
மைதானம் முழுவதும் சிதறிக்கிடந்த
புலால் பொட்டல எச்சங்களும்
மதுப்புட்டிகளும்

கட்சிகள்
வெளியிட்ட
வேட்பாளர்கள் பட்டியலில் தேடியும் கிடைக்கவில்லை
மனத்துக்கண் மாசிலனை

பிறன்மனை நயத்தலை எதிர்த்த
பெருமகனார் காதில் விழுந்தது
அரசியல்வாதிகள் பலருக்கு
அந்தப்புரங்கள்
ஆறேழு என்று

வசவு அகராதியை
ஒலிவடிவில் தரும்
மேடை இலக்கியம் கேட்டு
நாக்கைக் கடித்துக்கொண்ட வள்ளுவனுக்கு
ஞாபகம் வந்தது
நா-காக்க குறள்!

வாக்களிக்கப் பணத்தை எதிர்பார்த்து
வாசல் கதவைத் திறந்தே வைத்துத்
துயிலாமல் காத்திருந்தனர்
“தீயொழுக்கம் இடும்பை தரும்” எனத்
தெரியாத மக்கள் பலரும்

அப்புறம்தான் தெரிந்தது
யாரும் முன்மொழியவில்லை
யாரும் வழிமொழியவில்லை என்று
வள்ளுவனின் வேட்புமனு
தள்ளுபடியான விவரம்

நூற்றுக்குக்
கொஞ்சம் குறைவாகக்
குற்ற வழக்குகள் நிலுவை உள்ள
பேட்டைத் தலைவர்
பெருவெற்றி பெற்று
ஊர்வலமாய் வந்து மாலை அணிவித்தார்
“ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்ற
வள்ளுவனின் சிலைக்கும்!


      - கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment