Tuesday, 30 August 2016


காத்திருப்பு

ஆலயத்தில்
அன்னதானம் செய்துவிட்டு-
சாமிக்குப் போட்ட மாலையைத்
தன்கழுத்தில் அணிந்துவரும்
தர்ம புண்ணியவான்கள் சிலர்
விரட்டி அடிப்பார்கள்
வீதி நாய்களை!

என்
மற்றொரு அம்மாவான
மாமியார்
தினமும் சோறளிக்கும்
திருத்தொண்டு ஆற்றுவார்
தெரு நாய்களுக்கு!

அது எப்படி
அந்த நாய்கள்
கடிகாரம் இல்லாமல்
காலநேரம் தவறாமல்
வாசலில்
வந்து காத்திருக்கின்றனவே!

காலம்
கடந்து வரும்
பணியாளர்களைப்
பழிக்கின்றனவோ அவை?

ஒருநாள் என் மாமியார்
ஊருக்குப் போய்விட்டார்
அன்றும்
வழக்கம் போலவே
வாசலில் காத்திருந்தன
அந்த
நடமாடும்
நன்றி இலக்கியங்கள்!

அம்மா சென்று
ஆறேழு நாட்கள் ஆகிவிட்டன
நாய்கள் காத்துக் கிடக்கின்றன
இன்னமும்…..

நாளை
நல்லது நடக்கும் என
நம்பிக்கையோடு
நாம் காத்திருப்பதுபோல்!



           - கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment