Wednesday, 2 March 2022

தமிழ்ப் பல்லவி

 



தமிழ்ப்பல்லவி

கோ. மன்றவாணன்

 

கரோனா தீநுண்மி காலத்தில் அச்சு இதழ்களின் விற்பனை வெகுவாகச் சரிந்துவிட்டது. பரபரப்பாக வந்த பல பருவ இதழ்களை விகடன் குழுமமே நிறுத்திவிட்டது. அச்சு இதழை நிறுத்தியதோடு மின்னிதழாக மாற்றிக் கொண்டது கல்கி.

கடையில் விற்பனை ஆகும் நிலையில் சிற்றிதழ்கள் இல்லை. அவை 100 அல்லது 200 சந்தாதாரர்களை நம்பியே உள்ளன. ஊரடங்கு காரணமாக அச்சுக் கூடங்கள் இயங்க முடியாத நிலையில் அந்த இதழ்களும் தொடர்ந்து வரவில்லை.

மிகப்பெரும் நிறுவனங்களே நாளிதழ்களின் பக்கங்களைக் குறைத்துவிட்டன.

நினைத்தபோது கடைகளுக்குச் சென்று எந்த நாளிதழையும் வாங்கும் நிலை முன்பு இருந்தது. தற்போது இல்லை. வழக்கமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே நாளிதழ்களைக் கடைக்காரர்கள் வருவித்துக் கொள்கிறார்கள். வாடிக்கையாளராய் இல்லாதவர்கள் குறிப்பிட்ட சில நாளிதழ்களைக் கடையில் வாங்க முடியாது.

நூலகச் செயல்பாடுகளும் முடங்கி உள்ளன. நூலக ஆணைகளை நம்பி வெளிவந்த இதழ்களும், செய்வன அறியாமல் தத்தளிக்கின்றன.

அச்சு இதழ்கள் மூலமாகவும் கொரோன பரவும் என்ற அச்சம் காரணமாக இதழ்களைத் தொடவே சிலர் அஞ்சுகிறார்கள்.

தடம் என்ற பெயரில் தரமான அழகான இலக்கிய மாத இதழை விகடன் நிறுவனம் நடத்தி வந்தது. பொருள் இழப்போ... விற்பனை குறைவோ... என்ன காரணமோ... தெரியவில்லை. கரோனா காலத்துக்கு முன்பே அந்த இதழை நிறுத்தி விட்டனர். 

எத்தனையோ இடர்களைத் தாங்கியபடி இதழ்களை நடத்திக்கொண்டு இருந்தவர்களின் தன்னம்பிக்கையைத் தகர்த்துவிட்டது கரோனா.

இத்தகைய சூழ்நிலையில்தான் பல்லவி குமார் அவர்கள் தமிழ்ப்பல்லவி இதழைத் தொடங்கி இருக்கிறார். அந்த இதழை எனக்கு அனுப்பியும் இருந்தார். முடியாது என்ற நிலையில் முடியும் என்று செயல்படுவதுதான் தன்னம்பிக்கை. அது நிறையவே பல்லவி குமார் அவர்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். காலாண்டு இதழ் என்பதால் கால அவசரகதி ஏதும் இருக்காது. நிதானமாக இதழ்ப்பணிகளை மேற்கொள்ளலாம் என்று அவர் திட்டமிட்டு இருப்பார் என்று கருதுகிறேன்.

தமிழ்ப்பல்லவியின் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று அறிய முடிகிறது. மக்கள் ரசனைக்கு ஏற்ப இதழ்கள் நடத்துபவர்கள் ஒவ்வொரு பக்கத்தின் மூலையிலும் நகைச்சுவை அல்லது துணுக்குச் செய்திகளை வெளியிடுவார்கள். தமிழ்ப்பல்லவியிலோ பக்க மூலைகளில் தரமான ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வெளியிடுகிறார்கள். அதனால் ஒவ்வொரு பக்கத்திலும் இலக்கிய விறுவிறுப்பு எகிறுகிறது.

சிறுகதைகள், கவிதைகள், கலை, இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் என இதழ்களின் பக்கங்கள் யாவும் பூத்துப் புன்னகைக்கின்றன. ஆங்கிலம், இந்தி, மலையாளம் எனப் பிற மொழிகளில் இருந்து கவிதைகளையும் சிறுகதைகளையும் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். பாரதியார் எண்ணத்துக்கு ஏற்பவே கலைச்செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.

தரமான இலக்கிய இதழ் இது என்று தமிழ்ப்பல்லவிக்குத் தரச்சான்று தரலாம்.

எனக்கு அனுப்பிய இதழில் வேர்கள் மு. இராமலிங்கம் என்பவர் எழுதிய நினைவில் நின்ற வாழ்க்கைச் சுவடுகள் என்ற கட்டுரை உள்ளது. ஒரு காலத்தில் அச்சு இதழ்களைப் படிக்கும் ஆர்வம் எப்படி இருந்தது என்பதை அந்தக் கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது. அந்தக் கட்டுரையில்  இருந்து சில வரிகள்....

“என் தந்தை என் பெயரில் கோகுலத்துக்குச் சந்தா கட்டி இருந்தார். என் பெயருக்குப் பத்திரிகை வருவது எனது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. இது தவிர, பஞ்சாயத்து நூலகத்தில் சிறுவர் நூல்கள் படிக்கக் கிடைத்தன.”

”உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்பொழுது நண்பர் ஒருவர் முத்து காமிக்ஸ் புத்தகங்களை வகுப்புக்கு எடுத்து வருவார். கடைசிப் பெஞ்சில் அமர்ந்து பாடப் புத்தகத்திற்கு உள்ளே மறைத்து வைத்து அந்தக் காமிக்ஸ் புத்தகங்களைப் படித்துவிட்டு ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்கியதும் உண்டு. அபூர்வமாகக் கிடைக்கும் கைச்செலவுக்கான காசுகளை, காமிக்ஸ் புத்தகங்களையும் அணில் போன்ற சிறுவர் இதழ்களையும் வாங்குவதற்குச் செலவிட்டது இன்றும்கூட நினைவில் உள்ளது. நான் உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டில் சீர்காழியில் தங்கிப் படிக்க நேரிட்டது. அப்போது சீர்காழி பொது நூலகத்தில் மூன்று ரூபாய் கட்டி உறுப்பினராகிப் புத்தகங்களை  எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். டால்ஸ்டாயின் அன்னா கரீனா அந்த நூலகத்தில் படிக்கக் கிடைத்தது.”

“பொன்னியின் செல்வனின் பைண்ட் செய்யப்பட்ட பாகங்களைப் பள்ளி விடுமுறை நாள்களில் படித்ததில் இருந்துதான் எனது தீவிர வாசிப்பு ஆரம்பம் ஆனது. கல்கியின் விறுவிறுப்பான கதை சொல்லும் பாணியில் கவரப்பட்டு அவருடைய தீவிர வாசகராக மாறினேன். புத்தமங்கலம் என்ற ஊருக்குச் சென்று கல்கி பிறந்த வீட்டைப் பார்த்து வரும் அளவுக்குக் கல்கி பைத்தியம் பிடித்து இருந்தது.”

”தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கல்கி இதழ் சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் வெளிவந்தது. கல்கி மீது இருந்த தணியாத தாகத்தால் இதழ் வெளிவரும் ஒவ்வொரு வியாழனும் புத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த சீர்காழிக்குச் சென்று கல்கியை வாங்கி வருவேன். லிப்ஃகோ வெளியிட்ட பெரிமேசன் துப்பறியும் நாவல்கள் வாங்கியது உண்டு. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள புத்தகக் கடையில் கணையாழி கிடைக்கும்.”

குறிஞ்சிவேலனின் சேகரிப்பில் இருந்த தீபம் இதழின் மொத்த தொகுப்பையும் படித்ததோடு மட்டும் அல்லாமல் கண்ணதாசன், ஞானரதம், கணையாழி போன்ற பிற இதழ்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

“குமுதம் இதழில் இருந்து மாலைமதி என்ற மாத நாவல் வெளிவந்தது. அதன் ஆரம்ப வெளியீடுகளில் இருந்து 50 நாவல்கள் வரை வாங்கி எனது நூலகத்தைத் தொடங்கினேன்.”

இவ்வாறான அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்கும். 

இப்படி அந்தக் காலத்தில் புத்தக வாசிப்புத் தீவிரமாக இருந்தது. பெண்களும் வார மாத இதழ்களை வரவழைத்துப் படித்துவந்த வசந்த தருணம் அது.

வேர்கள் மு. இராமலிங்கம் சொன்ன நூல்வாசிப்பின் நறுமணக் காலம்  இன்று இல்லை. 

இந்நிலையிலும் விடாப்பிடியாகச் சிலர், இலக்கிய இதழ்களை அச்சில் கொண்டு வருகின்றனர். தங்களைத் தேய்த்துத் தமிழை மணக்க வைப்பவர்கள் இவர்கள். இயன்றவர்கள் அந்த இதழ்களுக்குச் சந்தா செலுத்திப் படிக்கலாம். கொடுமுடி தேடி மூச்சிரைக்க மலையேறும் இவர்களுக்குத் தென்படும் சுனைநீர் அது.

தமிழ்ப்பல்லவி.... அநுபல்லவி, சரணங்கள் ஆயிரம்... என்று தொடர வேண்டும்.

தமிழ்ப் பல்லவியின் முகவரி :

ஆசிரியர் : பல்லவி குமார், 9/1A, இராஜவீதி, கூட்டுறவு நகர், பெரியார் நகர் (தெற்கு), விருத்தாசலம் – 606001. கடலூர் மாவட்டம். அலைபேசி : 9942347079. தனி இதழ் ரூ. 20. ஆண்டுச் சந்தா ரூ. 100.



No comments:

Post a Comment