கையுறைகள்
கோ. மன்றவாணன்
தமிழ்த்தாத்தா
உ. வே. சாமிநாதர் 1936 ஆம் ஆண்டில் புதியதும் பழையதும் என்ற நூலை வெளியிட்டார்.
அந்த நூலில் இடம்பெற்ற ‘திருக்குறளால் வந்த பயன்’
என்ற கட்டுரையில் பின் வருமாறு எழுதி உள்ளார்.
“சரபோஜி மன்னர் ஒருமுறை காசி யாத்திரை
சென்றார். அப்பொழுது கல்கத்தா நகரத்தில் இருந்த ராஜ பிரதிநிதியைக் காண எண்ணினார்.
அவரைப் பார்க்க வேண்டியதற்குரிய அநுமதியை முன்னரே பெற்று ஏற்ற கையுறைகளுடன் சென்று
கண்டார்.”
இதைப்
படித்ததும், சரபோஜி மன்னர் ஏன் கையுறைகளுடன் (Hand Gloves)
சென்று கண்டார் என்று சிலருக்கு ஐயம் ஏற்படும். கரோனா தீநுண்மிக் காலத்தில்
கையுறைகள் என்பதை Hand
Gloves என்றுதான்
நினைப்போம்.
ஒருவரை
நேரில் சந்திக்கப் போகும்போது, மதிப்பின் அடையாளமாகக் கையில் கொண்டுசென்று அளிக்கும்
பொருள்களைத்தாம் கையுறைகள் என்று அக்காலத்தில் சொன்னார்கள்.
கையுறை
என்பதற்குக் காணிக்கை, பரிசுப் பொருள், மொய்ப்பணம் எனப் பொருள்கள் உண்டு. “மையறு சிறப்பின் கையுறை ஏந்தி” என்ற
சிலப்பதிகார வரியிலும் காணிக்கை என்ற பொருளில் இந்தச் சொல் இடம் பெற்றுள்ளது. “நாணாள்
உறையும் நறுஞ்சாந்தும் கோதையும்“ எனப் பரிபாடல் வரி உள்ளது. இதில் வரும் உறை என்ற
சொல்லும் காணிக்கைப் பொருளையே குறிக்கிறது.
நம்
காலத்தில் திருமண விழா, பிறந்தநாள் விழா போன்றவற்றுக்குச் செல்லும்போது பரிசுப் பொருளைத்
துணிப் பையிலோ, தாளிலோ, அட்டைப் பெட்டியிலோ பொதிந்து எடுத்துச் செல்கிறோம். மொய்ப்பணத்தையும்
உறையில் வைத்தே தருகிறோம். அவற்றைக் கையுறைகள் என்று சொன்னால் மிகவும்
பொருத்தமாகத்தான் இருக்கும்.
ஆனால், கையுறை என்ற பழஞ்சொல்லுக்கு அன்பளிப்பு என்ற புதுச்சொல்லை உருவாக்கிக்கொண்டோம். Hand Gloves என்ற புதுப்பொருளுக்குப் பழஞ்சொல்லைப் பொருத்திக்கொண்டோம்.
நன்றி :
13-06-2021
தினமணி - தமிழ்மணி
No comments:
Post a Comment