Tuesday, 5 July 2022

கம்பருக்கே கர்வம் இல்லை


கம்பருக்கே கர்வம் இல்லை

கோ. மன்றவாணன்

ஒரு பூனை பால்கடல் முழுவதையும் நக்கி நக்கிக் குடித்துவிட வேண்டும் என ஆசைப்படுவது போல், இராமாயணத்தை முழுவதுமாகச் சொல்லிவிட ஆசை கொண்டேன் என்று கம்பர் சொல்கிறார். தன்னால் இராமாயணத்தை நிறைவாகச் சொல்லிவிட முடியாது என்பதுதான் அதன் பொருள். ஆனால், இராமாயணத்தைத் தமிழ்ச்சூழலுக்கு ஏற்பவும் காவியச் சுவை ததும்பி வழியவும் சிறப்பாகவே எழுதி இருக்கிறார். 

இளம்பெண்களின் ஆடல் நிகழ்வால் அரங்கின் தரையில் கீறல் விழுந்துவிட்டதற்காகத் தச்சர் யாரும் அந்தப் பெண்களைத் திட்ட மாட்டார்கள். அதுபோல் தெளிவும் ஞானமும் இல்லாத தன்னுடைய புன்கவியைக் கேட்டு, நூல்பல கற்ற புலவர் பெருமக்கள் யாரும் சினம் கொள்ள மாட்டார்கள் என்றும் கம்பர் சொல்கிறார்.

கம்பர் கவியைப் பொன்கவி என்று தமிழ் உலகமே போற்றுகிறது. ஆனால் கம்பரோ தன்கவியைப் புன்கவி என்று தாழ்த்திக் கொள்கிறார். இவற்றை எல்லாம் அவையடக்கம் என்ற பகுதியில்தான் சொல்கிறார்.

இப்படிக் கம்பர் ஏன் தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்? ஒருவேளை அவருக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்திருக்குமோ என்றும் ஐயம் கொள்ளலாம். தாழ்வு மனப்பான்மை என்பது உளவியல் சிக்கல். அவையடக்கம் என்பது பண்பியல் சிறப்பு.

புலமையும் திறமையும் நற்பண்புகளும் கொண்டவர்கள்தாம் அவையினராக இருந்திருக்கிறார்கள். அதனால் அவையில் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும் அவையினரை உயர்த்திச் சொல்வதும் அந்தக் காலத்து மரபாக இருந்திருக்கிறது. தன்னைத் தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப் படுவார் என்றொரு திருவாசகம், திருவிவிலியத்தில் வருகிறது. 

அன்றைய சூழ்நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு இடம்தரும் ஒரு பெரும்படைப்பை... அரும்படைப்பை அறிஞர் அவை ஏற்றுக் கொள்ளுமோ அல்லது ஒதுக்கித் தள்ளுமோ என்ற அச்சம் கம்பருக்கு ஏற்பட்டிருக்கலாம். நன்றாகத் தேர்வு எழுதி, முடிவுக்காகக் காத்திருக்கும் மாணவரின் மனநிலைதான் அது. 

அன்றைய அரங்கேற்றம் என்பது நூலாசிரியர்களுக்கு வைக்கப்படும் தேர்வு. இன்றைய வெளியீட்டு விழா என்பது, நூலாசிரியர்கள் தாங்களே செய்துகொள்ளும் புகழ் விளம்பரம். 

ஆனால் இந்தக் காலத்தில் சில படைப்பாளர்கள் தங்களைத் தாங்களே உயர்த்தித் தற்பெருமை பேசுகிறார்கள்.. படைப்பாளருக்கு வித்யா கர்வம் இருக்க வேண்டும் என்றும் கொடி உயர்த்துகிறார்கள். தற்பெருமை பேசுவதைக்கூட ஒரு வகையில் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் தங்களை உயர்த்திக்கொள்ள அடுத்தவர் பெருமையைத் தாழ்த்திப் பேசுவதை ஏற்க இயலாது. 

நம் பெருமையை நாமே பேசுவது நாகரிகம் இல்லை.
நம் பெருமையைப் பிறர் பேசுவதில்தான் உலக அங்கீகாரம் கிடைக்கிறது.

எழுத்தாளருக்கு அவையடக்கம் இருக்க வேண்டுமா? அல்லது, அவைக்கு அடங்காத கல்விச் செருக்கு (வித்யா கர்வம்) இருக்க வேண்டுமா? இப்படியான விவாதம் இலக்கிய அரங்கில் இன்னமும் நடந்து வருகிறது. வித்யா கர்வம் இருக்க வேண்டும் என்போர், பாரதியை உதாரணம் காட்டுகிறார்கள். 
  
“சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் என்னை” என்று பாரதி தன்னை உயர்த்திப் பாடிக்கொண்டார் என்கிறார்கள். 

“சுவை புதிது; பொருள் புதிது;  வளம் புதிது; சொல் புதிது; சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று தன் கவிதையைத் தானே புகழ்ந்துகொண்டார் என ஆதாரம் காட்டுகிறார்கள். 

“புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்த தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும் வசை என்னால் கழிந்தது அன்றோ!” என்று கர்வம் கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

அதற்காக எல்லாரும் பாரதியாகி விட முடியாது. 

இவை எல்லாம் பாரதியாரின் “ஒரு காலக் கட்டக்“ கவிதைகளாகவே இருக்கும். பாரதியே மகாசக்தியிடம் பணிந்து நிற்கிறார். உள்ளம் தெளியாதோ... பொய்ஆணவ ஊனம் ஒழியாதோ என்று விண்ணப்பம் வைக்கிறார். 

தன் கவிதையை மகாகவிதை என்று சொன்ன பாரதி, கர்ணனொடு கொடை போயிற்று; கம்பனொடு கவிதை போயிற்று என்று வேறோர் இடத்தில் சொல்கிறார். பிற்காலத்தில் பாரதியாரிடம் கர்வம் இருந்திருக்காது என்றே கருதுகிறேன். ஆனாலும் சிலர், பாரதியாரிடம் இருந்தது கர்வம் இல்லை; அது பெருமை கொள்ளும் மனோபாவம் என வலிந்து பொருள்திணிப்புச் செய்யலாம். 

கண்ணதாசன் தன் வரலாற்றை எழுதும் போது, நான் என்பதற்குப் பதிலாக அவன் என்றே எழுதினார். நான் என்று சொன்னால்கூட அதுவும் கர்வமாகக் கருதப்படும்; ஆணவமாக அறியப்படும் என்று அஞ்சியே அப்படி அவர் எழுதினார். 

இரத்த ஓட்டம்போல் கற்றல் என்பது தொடர்ந்து நடைபெற வேண்டிய நிகழ்வு. கற்றல் என்பது படைப்புக்கு மூலதனம். எப்போது படைப்பாளர் கர்வத்துக்கு ஆளாகிறாரோ... அதுமுதல் கற்பதிலிருந்து அவர் விலகுகிறார். 

தனக்கு நிகராகவோ உயர்வாகவோ யாரும் இல்லை என்ற மூடத்தனத்தை வளர்க்கிறது கர்வம். கர்வம் உள்ள மனிதர் யாரையும் மதிப்பதும் இல்லை. யார் சொல்லையும் கேட்பதும் இல்லை.  

கர்வத்தோடு நடப்பவரை உலகம் வெறுக்கும். பணிவோடு நடப்பவரை உலகம் வணங்கும். “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்” என்ற கண்ணதாசனின் பாடல் வரியை இங்கே நினைத்துக்கொள்ளலாம். 

அவையடக்கம் என்பது ஆணவப் போக்கை அண்டவிடாமல் தடுக்கிற ஓர் உளவியல் சிகிச்சை முறை. 

பணிவு என்பது பூவனத்துக்குச் செல்லும் பாதை. கர்வம் என்பது புதைகுழிக்குப் போகும் பாதை. இதைப் பல பெரிய மனிதர்களின் வரலாற்றுப் பக்கங்களில் பார்க்கலாம். 

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து என்பது திருக்குறள் வழங்கும் தீர்ப்பு.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்பது வள்ளுவர் நீதி.

நாம் பணிவாக இருக்கும் போது பிறரை உயர்த்துகிறோம். பிறரின் மனங்களில் நாம் உயர்கிறோம்.
 
அட... கம்பருக்கே கர்வம் இல்லை என்னும் போது, நாம் ஏன் கர்வப்பட வேண்டும்? 


நன்றி 
திண்ணை இணைய இதழ்
04-07-2022


 

உருப் பளிங்கு

 உருப்பளிங்கு

-கோ. மன்றவாணன்



    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

    ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய

    உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தின் உள்ளே

    இருப்பள்இங்கு வாரா(து) இடர்.


இது, சரசுவதி அந்தாதியில் வரும் காப்புச் செய்யுள். இதில் வரும் உருப்பளிங்கு என்ற சொல்லைப் பார்த்து வியக்கிறேன்.

உருவத்தைக் காட்டும் கண்ணாடி போல், கலைமகள் மேனி இருப்பதாகக்கம்பர் சொல்கிறார். இதை எதிரொலிப்பதுபோல் திரைப்பாடல் ஒன்றும் உண்டு.

‘படைத்தானே பிரம்ம தேவன் பதினாறு வயதுக் கோலம்’ என அந்தப்பாடல் தொடங்கும். அதில் ‘அந்தக் கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா?இல்லை, உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா?’ என்று கவிஞர் கேட்டு இருப்பார்.

உருவத்தைக் காட்டும் பொருள் வள்ளுவர் காலத்திலும் உண்டு. பொதுவாக அதற்குப் பளிங்கு என்று பெயர். அதனால்தான் அவர் “அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்” என்ற திருக்குறளை எழுதி உள்ளார். .

நாம் பொதுவாகச் சொல்லும் கண்ணாடி என்பதில் முகம் பார்க்கிறோம். ஆடி என்பதுதான் பொதுச்சொல். அந்தச் சொல்லில் முன் ஒட்டுச் சேர்த்துக் கண்ணாடி என்றும், மூக்குக் கண்ணாடி என்றும், முகம் பார்க்கும் கண்ணாடி என்றும் பலவாறு வேறுபடுத்தி அழைக்கிறோம்.

பின்புறத்தில் வேதிப்பொருள் பூசப்பட்ட ஆடியை முகம் பார்க்கும் கண்ணாடி என்று சொல்கிறோம். அதைத்தான் ஆங்கிலத்தில் Mirror என்கிறார்கள். ஒளிபுகும் ஆடியை, அதாவது, தெள்ளிய (transparent) ஆடியை Glass என்று சொல்கிறார்கள்.

Mirror என்பதற்கும் Glass என்பதற்கும் சேர்த்தே நாம் கண்ணாடி என்ற சொல்லைப் பரவலாகப் பயன்படுத்தி வருகிறோம். பல காலமாகப் புழக்கத்தில் வந்துவிட்டதால் அவ்வாறே பயன்படுத்தலாம்.

கண்ணாடி என்ற சொல், கண்ணுக்கு அணியும் ஆடி என்றும், கண்ணால் காணும் ஆடி என்றும், கண்ணைக் காட்டும் ஆடி என்றும் விரிந்து பொருள்கள் தரும். உருவத்தைக் காட்டும் ஆடி என்று நேரடியாகப் பொருள் தரவில்லை.

முகம் பார்க்கும் ஆடியை அல்லது உருவத்தைக் காட்டும் ஆடியைக் குறிப்பதற்கு மிகவும் பொருத்தமாக உருப்பளிங்கு என்ற சொல் உள்ளது.

அதனால்தான் கம்பனைச் சொல்கடல் என்று சொல்கிறார்களோ...


Saturday, 4 June 2022

இலக்கிய முதல்வர்

 


மனத்தை வெளுக்கும் மருந்து




மனத்தை வெளுக்கும் மருந்து

கோ. மன்றவாணன்

யாப்பு இலக்கணத்தில் மணிமுடியாக ஒளிர்வது வெண்பா. அதில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா போன்ற வகைகளும் உண்டு. குறிப்பாக நேரிசை வெண்பாதான் பெரிதும் கோலோச்சி வந்துள்ளது.

வெண்பா பாடுவது மிகவும் கடினம் என்று பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தொடக்கத்தில் எழுதும் போது தளை பார்த்து எழுத வேண்டி இருக்கலாம். எழுத எழுத இயல்பாகவே தளை தட்டாமல் வெண்பா தானாகவே வரும். தேனாகவே சுவை தரும்.

திரைப்பட நடிகரும் உரையாடல் எழுத்தாளருமான கிரேசி மோகன் பொறியியல் படித்தவர். மிக எளிமையாக இனிமையாக வெண்பாக்களை எழுதிப் பலரையும் கவர்ந்தார். பேச்சு வழக்கில் வெண்பாக்களை எழுதிப் பேர் வாங்கினார் ஆகாசம்பட்டு சேசாசலம். வெண்பா எவ்வளவு எளிமையானது இனிமையானது என்பதை மெய்ப்பித்தவர்கள் இவர்கள்.

நளவெண்பா எழுதியவரை வெண்பாவுக்கு ஒரு புகழேந்தி என்று தமிழ் இலக்கிய உலகம் இன்றும் புகழ்ந்து கொண்டாடுகிறது. நம் காலத்தில் பேராசிரியர் சுப்புராமன் என்பவர் அறிவியல் விதிகளை வெண்பாவில் எழுதி அசத்தி இருக்கிறார்.

அந்த வகையில் கடலூர் மண்ணுக்கும் வெண்பாவுக்கும் அண்மைக் கால வரலாறுகள் சில உண்டு.

கரூரில் பிறந்து இருந்தாலும் கடலூரில் வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் கரூர் சேதுராமன். திருக்குறள் போலப் புதுக்குறள் என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதில் திருக்குறளை மிஞ்ச வேண்டும் என்பதற்காக 1331 குறள்களை எழுதி உள்ளார். தன்னுடைய நாள்குறிப்புகளை வாழ்வின் இறுதிவரை வெண்பாவில் எழுதி வந்தார். அவ்வாறு எழுதிக் குவித்தவை பல்லாயிரம் வெண்பாக்கள்.

நாட்டரசன் கோட்டையில் பிறந்தாலும் கடலூரில் வாழ்ந்து தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வருபவர் கவிஞர் க. காத்தப்பன் ஆவார். இவரும் 3333 குறள்களைக் கொண்ட காத்தப்பர் குறள் என்ற நூலை வெளியிட்டு உள்ளார். ஏராளமான வெண்பாக்களை எழுதி உள்ளார். பல்வேறு இதழ்கள் தந்த ஈற்றடிகளுக்கு இவர் எழுதிய வெண்பாக்கள் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வெண்பா ஐயாயிரம் என்றொரு நூலையும் வெளியிட உள்ளார்.

‘கண்ணுடைய நாயகியாம் காண்’ என்ற ஒரே ஈற்றடி கொண்டு 4000 நேரிசை வெண்பாக்கள் எழுதி இருக்கிறார். இன்னும் எழுதுவார் என்று நினைக்கிறேன். ஒரே ஈற்றடிக்கு ஏற்ப இத்தனை பாக்களுக்கும் எப்படி இவரால் எதுகை அமைக்க முடிந்தது என்று வியக்காமல் இருக்க முடியாது. இந்த அருஞ்செயலை முறியடிக்க இனி யாராலும் முடியாது.

புதுவை மாநிலம்  கலிதீர்த்தாள் குப்பம் கிராமத்தில் பிறந்து இருந்தாலும் கடலூரில் வாழ்ந்து கவிதைத் தொண்டு ஆற்றியவர் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி. வெண்பூக்கள் என்ற தலைப்பில் ஓர் அரிய நூலைப் படைத்து உள்ளார். எத்தனை வகை வெண்பாக்கள் இருக்கின்றனவோ அத்தனை வகையிலும் எழுதி இருக்கிறார். நூலாக ஆவதற்கு முன்பு, சங்கப் பலகை என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்தினார். வெண்பூக்களில் அதாவது வெண்பாக்களில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சங்கப் பலகையில் பேசச் செய்தார். தமிழ் அறிஞர்கள் சொன்ன குறைகளை நீக்கியும் அறிவுரைகளைப் பின்பற்றியும் வெண்பூக்களை வெளியிட்டார். சங்க(க்) காலத்தில் இப்படித்தான் புலவர்கள் கூடிப் பாடல்களின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து உள்ளனர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். சமுத்திரம் என்ற சமற்கிருதச் சொல்லுக்கு உரிய தமிழ்ச்சொல்லான கடலைக் குறிக்கும் கடலூரில் வாழ்ந்தார். இங்குதான் பெரும்பாலான நூல்களை எழுதினார். அந்த நூல்களில் ஒன்றுதான் உலகியல் நூறு. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

மேற்சொன்ன கவிஞர்கள் வரிசையில் கடலூர் மண்ணில் பிறந்த தமிழ் இயலன் அவர்களும் வந்து சேர்கிறார். இயற்பெயர் தனசேகரன் என்றாலும் நாள்தோறும் தமிழ்ச்செல்வம் சேர்க்கும் தமிழ்சேகரன் இவர்.

கொரொனா காலத்தில் உலகம் முடங்கிப் போனது. ஆனால் இவர் முடங்கவில்லை. முன்னிலும் சிறந்து செயல்பட்டார். வலையரங்கு வழியாக நாள்தோறும் தமிழ் சார்ந்த கூட்டங்களை நடத்தினார். நடத்தியும் வருகிறார். இவர் நடத்தும் தமிழ்நிகழ்வுகள், ஆயிரத்தைத் தொட உள்ளன.

இவர் தமிழ்ப்பணி செய்யாத நாளில்லை. இவர்போல் தமிழ்ப்பணி செய்ய ஆளில்லை என்று சான்று அளிக்கலாம்.

தமிழுக்காக வாழும் இவருக்குத் தமிழக அரசு விருது அளிக்கும் நாள் விரைவில் வரும். தமிழுக்கான உயர் அமைப்புகளில்  தலைமை தாங்கும் காலமும் வரும்.

இவர் எழுதி வெளியிட்டு உள்ள “நண்பா உனக்கொரு வெண்பா” என்ற நூல் தமிழ் அன்பர்கள் இடையே பெரும் அளவில் பேசு பொருளாக உள்ளது. அந்நூல் குறித்து என்னுள் எழும் கருத்துகளை இங்கே பதிவிடுகிறேன்.

‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்பில் நாள் ஒன்றுக்கு ஒரு வெண்பா” என்ற கணக்கில் நூறு நாள்களில் நூறு வெண்பாக்களை எழுதி முடித்துள்ளார். அவற்றைத் தொகுத்து நூலாகவும் வெளியிட்டு உள்ளார். இப்படி நூல் எழுதுகிற போது கடவுள் வாழ்த்தாக ஒரு பாடலைச் சேர்த்து, நூற்று ஒரு பாடல்களாக வெளியிடுவது முற்காலப் புலவர்களின் வழக்கம். தேவை அற்ற அந்த வழக்கத்தைத் தவிர்த்து உள்ளார். முதல் பாடலில் உலகம் என்ற சொல்லை இடம்பெற வைப்பதும் பழங்கால வழக்கம். அதனையும் விலக்கி உள்ளார்.

முதல் வெண்பாவிலேயே தமிழைப் பாடுகிறார். தமிழை வாய்மொழியாகப் பார்க்காமல் வாழ்வியலாகப் பார்க்கிறார். வாழ்ந்தும் காட்டுகிறார். வாழ வழியும் காட்டுகிறார். தமிழ் உயர, தமிழன் உயர்வான் என்ற பாவாணர் கருத்து இங்கே நினைவுக்கு வருகிறது.

நூலில் நூறு வெண்பாக்கள் உள்ளன. அதனால் ‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்புப் பொருத்தம் உடையதா எனச் சிலர் கேட்கக் கூடும். முகநூல், வினவி ஊடாக ஒவ்வொரு நாளும் ஒரு வெண்பா எழுதி இருக்கிறார். நண்பருக்கு நாளும் ஒரு வெண்பா என்று தொடர்ந்து எழுதி வந்ததால், இந்தத் தலைப்புப் பொருத்தம் உடையதுதான். தென்கச்சி சாமிநாதன் ‘இன்று ஒரு தகவல்’ எனப் பேசி வந்தார். நூலாகும் போது அதில் பல தகவல்கள் இருந்தாலும் ‘இன்று ஒரு தகவல்’ என்ற தலைப்பில்தான் வெளியானது. ‘நண்பா உனக்கொரு வெண்பா’ என்ற தலைப்பில் உள்ள எதுகை எடுப்பாகவும் சிறப்பாகவும் உள்ளது. தலைப்புக்கு ஒரு கவர்ச்சியையும் தருகிறது.

தன்முன்னேற்ற வாழ்க்கைக்கும் சமூக மேன்மைக்கும் தமிழ் உயர்வுக்கும் பயன்படும் கருத்துகளை நண்பருக்குச் சொல்லும் வகையில் வெண்பாக்களை அமைத்து இருக்கிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும் போது, நம் வாழ்வில் சந்தித்தவை நினைவுக்கு வரும். நம்மைச் சரிசெய்து கொள்ள ஊக்கம் தரும்.

எப்போதும் நேர்ப்பாங்காகச் சிந்திப்பவர் தமிழ் இயலன். அவரின் முன்னேற்றத்திற்கு இதுவே அடிப்படை என்று கருதுகிறேன். மென்போக்குக் கொண்டவர் இவர் என்றாலும் தமிழுக்குத் தீங்கு வருகுது என்றால் போர்வாளைத் தூக்கிவிடுகிறார்.

வீட்டுப் பணியில் இருவரும் என்ற தலைப்பில் ஒரு வெண்பா இருக்கிறது. அதை ஏற்று நடந்தால் போதும். இல்வாழ்க்கை நல்வாழ்க்கை ஆகும். அந்த வெண்பா இது.  

ஆக்கிடும் வேலைகள் அன்புடன் செய்திட;

தேக்கிய குப்பை பெருக்கிட; – ஊக்கமாய்த்

தூக்கிப் பிடித்திட; தாய்மையைப் போற்றிட

வாக்குரைக்கும் ஆண்களுக்கென் வாக்கு.

ஒரு நூலோ ஒரு கவிதையோ படித்தால் நம்முள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இந்த வெண்பா படித்தேன். அந்த நாளில் இருந்து வீட்டு வேலைகளில் நானும் சமப்பங்கு வகிக்கிறேன். சில நாள்களில் முழுப்பங்கும் ஏற்கிறேன். இது இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். துடைப்பம் ஏந்திக் குப்பையை அகற்றுவது பெண்களுக்கே உரியது அன்று. அது ஆண்களுக்கும் உரியது என்பதையும் உணர்த்துகிறார். ‘ஏணை அசைத்தலும் கூடும்; அது யார் அசைத்தாலும் ஆடும்’ என்ற பாவேந்தர் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

சாலை ஓரத்து ஏழை வணிகர்களிடம் பேரங்கள் பேசாதே என்று நண்பருக்கு அறிவுறுத்துகிறார். பெரும் வணிக வளாகங்களில் பேரம் பேசினால் மதிப்புக் குறைவு என்று நினைப்பவர்கள், வீதி ஓரத்துப் ஏழைப் பாட்டியிடம் அடாவடி பேரம் பேசுவது சரிதானா முறைதானா என்று ஏழை வணிகர்களுக்காகக் குரல் எழுப்புகிறார். அந்த வெண்பாவைப் படித்த பிறகு அன்றாட வாழ்வில் தத்தளிக்கும் ஏழை வணிகர்களிடம் பேரம் பேச நா எழாது.

மனித இலக்கண வழுவாகத் திருநர்களைக் கருதக் கூடாது. அவர்களை மனித இலக்கண வகையாக அறிய வேண்டும். புறத்தினர் மட்டும் அல்ல, பெற்றோரே மூன்றாம் பாலினரை ஒதுக்குகின்றனர். அந்நிலை மாற வேண்டும்.  ஆண்பெண் சமன்மையை உடலிலேயே உயர்த்திப் பிடிக்கும் அவர்களுக்கு நட்பைத் தரவேண்டும்... கல்வியைத் தரவேண்டும் என்கிறார்.

மனித நேயத்தையுத் தாண்டி உயிர்நேயத்தை வளர்க்கும் நோக்கில் ‘சிற்றுயிர் ஓம்பு’ என்ற வெண்பாவைப் படைத்து இருக்கிறார். இந்த வெண்பாவுக்குப் பொருத்தமாகவே நூலின் முகப்பு ஓவியம் உள்ளது. இந்த உலகம் மனிதருக்கு மட்டும் சொந்தம் இல்லை. செடி கொடிகளுக்கும் சொந்தம். சின்ன சின்ன உயிரினங்களுக்கும் சொந்தம். தமிழ் இயலன் சொல்லும் உயிர்நேயத்தை உள்வாங்கி நடந்தால் உலகம் நன்மை அடையலாம்.

ஒரு நூலகம் போல நம் மூளை அறிவு நிரம்பி இருக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு வெண்பா உண்டு. அப்படி இருந்தால் எந்தத் தேர்விலும் எந்த நேர்விலும் நமக்கு வெற்றி உண்டு. நாளை உலகை ஆளப் போகும் இன்றைய மாணவர்களுக்கான அறிவுரை இது. 

அடுக்கிய நூல்கள் அறிவுதரல் போலச்

சொடுக்கினால் மூளையது செய்திதர வேண்டும்

நடுக்கமிலா அப்பயிற்சி நாம்பெற்றுச் சொல்வோம்

எடுத்ததெலாம் வெற்றியே என்று


வெற்றிச் சூத்திரத்தை வெண்பாவில் வடிக்கிறார் இப்படி : 

உன்னால் முடியும் உயர்கனவே நீபெறுவாய்

உன்கனவை நெஞ்சில் உரமேற்று! – பின்னர்த்

தொடர்செயலால் பெற்றிடலாம் தொய்விலா வெற்றி

தடம்பதித்து வானம் தொடு.

உழவன் உழைப்பில் அழகாகிறது இந்த உலகு என்று உணர்த்துகிறது இந்த வெண்பா. 

உணர்ந்தே அளவாய் உணவைச் சுருக்கி

உணவே இலார்க்கென உண்ணக் கொடுக்கும்

உழவன் உழைப்பே உலகென்(று) உணரும்

அழகியலில் வாழ்கிறது அன்பு.

வெண்பாக்களில் பல சித்து வேலைகள் செய்து அசத்தி இருக்கிறார்கள் நம் புலவர்கள்; தமிழை உசத்தி இருக்கி்றார்கள் நம் கவிஞர்கள். இவரும் பதினைந்து சீர்களிலும் ஒரே எதுகை வர ஒரு வெண்பா எழுதி இருக்கிறார். அருணகிரிநாதர் சந்தம்போல் ஓசை நயம் துள்ளுகிறது. உள்ளத்தை அள்ளுகிறது. தமிழ் இயலன் அவர்களின்  வெண்பாத் திறனுக்கு இது ஓர் எடுத்துக் காட்டு. சந்தம் துள்ளும் அந்த வெண்பா இதுதான்.

             பெற்றாரும் உற்றாரும் பெற்றளிக்கும் பற்றுடையார்

கற்றோரின் சொற்றிறனும் குற்றமிலா நற்றுணையார்

சுற்றத்தால் உற்றிசைந்து சுற்றிடுவார் வெற்றியைத்தான்

முற்றாகப் பெற்றிடுவார் மற்று.

ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு பேராற்றல் உள்புதைந்து இருக்கும். அந்தத் திறனை ஊக்குவிப்பதும் பழக்குவதும் நம் கடமை. அவ்வாறு செய்தால் குழந்தைகள் வெற்றி பெறுவார்கள் என்று வெண்பாவால் அன்பாகச் சொல்கிறார்.

பயணத்திசை என்று ஒரு நூலைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டார் தமிழ்இயலன். அந்த நூலின் அட்டைப் படத்தில் தம் இரு பிள்ளைகளின் படங்களை ஓவியமாக்கி இருந்தார். நண்பா உனக்கொரு வெண்பாவிலும் முல்லை, பண்பு ஆகிய சொற்களின் ஊடாகத் தம் மக்கள் தமிழ்முல்லையையும் பண்பரசனையும் காவியமாக்கி இருக்கிறார். தமிழ்இயலன் அவர்களின் பிள்ளைப் பாசம், சிலப்பதிகாரக் காலத்துக் காவிரி போல் பொங்கிப் பெருகிப் பாய்கிறது. அன்பு பொங்கும் அந்த வெண்பா :

             குழந்தைகளைப் பாராட்டி அன்புசெய்; நாளை

அழகாகப் பூத்திடுமே முல்லை மலர்ச்சோலை!

நண்பர்போல் வைத்திடு நம்பிக்கை; பின்மகிழ்வாய்ப்

பண்புமனம் வீசுவதைப் பார்த்து!

நீடு வாழவும் நிறைவாக வாழவும் உடலையும் உள்ளத்தையும் பயிற்சியின் மூலம் பாதுகாக்க வேண்டும் என்கிறார். அதற்கு ஒரு வெண்பாவை அளிக்கிறார். படியுங்கள்; பயிற்சி செய்யுங்கள்.

             உலவுதல் நற்பயிற்சி உள்மூச்சை நோக்கல்

பலசெயலில் ஒன்றில் பதிந்துமனம் ஒன்றல்

நலமளித்தே வாழ்தல் நடுவுநிலை கொள்ளல்

கலங்கரை ஆக்கிடுமே காண்.

மாற்றுத் திறனாளி என்று குறிப்பிடுகிறோம். இவரோ மாற்றும் திறனாளி என்கிறார். மாற்றும் திறனாளி என்ற தலைப்பே, சிறகு ஏதும் இல்லாமலேயே சிந்தனை உயரத்தை எட்டிப் பிடிக்கிறது.

வெண்பா ஒவ்வொன்றுக்கும் அழகாகத் தலைப்பு இட்டு இருக்கிறார். ஒவ்வொரு வெண்பாவுக்கும் ஒற்றை வரியில் பொருளுரை சொல்வதுபோல் அந்தத் தலைப்புகள் உள்ளன.

ஊழல் என்பது நாட்டின் புற்றுநோய். இதை ஒழிக்க முடியவில்லை. கையூட்டு வாங்கினேன் கைது செய்தார்கள். கையூட்டுக் கொடுத்தேன் விட்டுவிட்டார்கள் என்ற நிலையில்தான் நம் ஊழல் ஒழிப்பு உள்ளது. ஊழல் வழக்கில் இருந்து விடுபெற ஆளும் கட்சிக்குத் தாவுதலும் ஓர் உத்தியாக உள்ளது. “ஊழல் வழக்கில் இருந்து விடுதலை செய்தால் உன் உண்டியலைப் பணத்தால் நிரப்புகிறேன்” என்று திருப்பதி வேங்கடவனிடம் வேண்டுகிறார்கள். கடவுளுக்கே கையூட்டுக் கொடுக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க வேறு வழி தெரியவில்லை கவிஞருக்கு. அதனால் அறம் பாடுகிறார். அந்த வெண்பா இது.

             ஆழ்ந்திட்ட ஊழல்நீ ஆணிவேர் ஆனதனால்

தாழ்ந்துதான் போனதே தாய்நாடு – சூழ்ந்துநின்று

வாழவிடாது ஏழையரை வாட்டி வதைக்கின்ற

ஊழலே நீமறைந்து ஓடு!

தடைச்சட்டம் இருந்தாலும் சாக்கடைக் குழிக்குள் ஏழைத் தோழர்களை இறங்க வைத்து வேலை வாங்குவதை இன்றும் பார்க்கின்றோம். அருவருப்பு, நாற்றம், நோய்த்தொற்று, உயிர்போக்கும் நச்சுஆவி, ஆகியவற்றிற்கு இடையே பணியாற்றுகிறார்கள். அவர்களின் கைகளில் மலர் தரச் சொல்கிறார் நம் மனிதநேயக் கவிஞர். அந்த வெண்பா...

             சாக்கடை அள்ளும் சரிநிகர் தோழனுக்குப்

பூக்கள் கொடுப்பாய்ப் புகழ்சேர்த்து! – தூக்கமிலாத்

தூயோர் பணியினைத் தூற்றியே வாழ்ந்திடும்

தீயோரைத் தீயால் திருத்து!

இந்த வெண்பாவில் சாக்கடை அள்ளும் தோழரைச் சரிநிகர் தோழன் என்று நமக்கு இணையாக உயர்த்திச் சொல்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். அழுக்கு, குப்பை, சாக்கடை அள்ளும் அவர்களைத்  தூயோர் என்று போற்றுகிற முரண் அழகையும் கவனியுங்கள். நேர்மையானவர்களைத்தாம் தூயவர்கள் என்கிறோம் நாம். சாக்கடை அள்ளுபவர்களைத் தூயவர்கள் என்கிறார் தமிழ்இயலன்.

என்ன விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்வோம். நல்லதைச் செய்வோம்; நல்லதைப் பெறுவோம் என்பதை உணர்த்துகிறது இந்த வெண்பா. 

கூடும் மழையைக் குறைசொலக் கூடாதே

வாடும் நிலையும் வருந்தும் நிலையுமே

வந்திடக் காரணம் வாழ்வியல் மாந்தரிங்குத்

தந்ததையே வானம் தரும்.

எல்லாம் இங்கு மாறும். உலகம் ஒவ்வொரு நாளும் புதிதாய் உருமாற்றிக் கொள்ளும். நாமும் நல்ல மாற்றங்களுக்கு ஏற்பப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்று நாள்தோறும் புதுப்பொலிவுடன் இருக்கச் சொல்கிறார் தமிழ் இயலன். இப்படி இயங்குவதுதான் முன்னேற்றம். மாறாமல் இருந்தால் வளர்ச்சி இல்லை. இதை உணர்த்தும் இனிய வெண்பா இது. 

பதிந்திருக்கும் பூமிப் படிமங்கள் மாறும்

குதித்திங்கே ஓடுகிற காட்டாறும் மாறும்

எதிலுமே மாற்றத்தை ஏற்றுத்தான் நாளும்

உதிக்கும் புதிய உலகு

குடி, போதையால் இளைஞர் திரள் பாழ்பட்டுப் போகிறது. போதைப் பழக்கம் இல்லை என்றால் நம் குடும்பங்கள் வளமாக வாழும். போதையை ஒழித்து நல்ல பாதையை அமைக்க வழி சொல்லும் பாடல் இது. 

படித்திட்ட நற்குறளின் பாடம் மறந்தே

குடித்தே அழியுதொரு கூட்டம் – கடிந்தும்

குடியாட்சி செய்யும்  குறைபட்ட நாட்டில்

குடியாட்சி வேண்டுமெனக் கூறு.

குடியாட்சி என்ற சொல்லை இரு பொருள்களில் பயன்படுத்தி இருப்பது சிறப்பு. குடிதான் ஆட்சி செய்கிறது என்ற நிலைமாறிக் குடிமக்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்கிறார்.

மன்னிப்புக் கேட்பதை மதிப்புக் குறைவாக நினைக்கிறார்கள் பலர். ஆனால் மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார் தமிழ் இயலன். 

தவறு நிகழலாம் தன்னல வாழ்வில்

தவறின் பொறுத்தருள வேண்டலே நன்று

வெறுப்பினை நீக்கிட வேறுவழி இல்லை

பொறுத்தருளக் கேட்பதைப் போன்று.

பல்லால் நாய் துரத்துவது போல் சொல்லால் துரத்தும் சிலர் உண்டு. அவர்களிடம் இருந்து விலகிச் செல் என்கிறார் இன்னொரு வெண்பாவில். ஆக... நடைமுறை வாழ்க்கையின் ஊடே, நல்வழி காட்டுகிறார் நம் கவிஞர்.

கோபுரம்போல் உயர்ந்தவர்களாக இருந்தாலும் கோபத்தால் வீழ்ந்தவர்கள் பலர் உண்டு. ஒவ்வொருவர் இடத்திலும் கோபம் இருக்கிறது. அதனை அடக்கி ஆளத் தெரிய வேண்டும். அதற்கான வழி சொல்கிறார். 

சினம்வரும் நேரம் சிறிதாய் அமைதி

உனக்கு வழங்கிடும் உள்ளொளி நன்மை

இனம்போற்றும் அந்த இனிய அமைதி

மனத்தை வெளுக்கும் மருந்து.

ஆக.... நண்பா உனக்கொரு வெண்பா என்ற இந்த நூல் நம் மனத்தைத் தூய்மை செய்கிறது. மன ஆளுமையை வளர்க்கிறது. வாழக் கற்றுத் தருகிறது.

பள்ளியில் அறவுரை வகுப்பு உண்டு. அதுபோல் இந்நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவும் அறவுரை வகுப்புதான்.

இந்த நூலுக்கு ஒரே வரியில் மதிப்புரை சொல்லலாம்.  அதற்கும் தமிழ் இயலனின் ஈற்றடி உதவுகிறது. அந்த ஒருவரி மதிப்புரை இதுதான் : “இந்த நூல், மனத்தை வெளுக்கும் மருந்து.”

ஆரஞ்சு பழம் விற்பவர் சுவைத்துப் பார்க்க ஒருசுளை தருவார். அதுபோல்தான் சில வெண்பாக்களை உங்களுக்குச் சொன்னேன். நூறு வெண்பாக்களையும் சுவைக்க நூலைப் படியுங்கள்.

வெண்பா எழுதும் வேறுசிலர், புரியாத புலவர் நடையைப் பயன்படுத்துகிறார்கள். அது இந்தக் காலத்துக்கு ஒத்துவராது. தமிழ் இயலன் அவர்களின் மொழியில் புரியாத சொல் ஏதும் இல்லை. அகர முதலியைப் புரட்ட வேண்டியதும் இல்லை. உரைநூல் தேவை இல்லை. 

அனைவருக்கும் புரியும் சொற்கள்.

யாவரும் ஏற்கத் தகுந்த கருத்துகள்.

நடைமுறைப் படுத்தக் கூடிய அறிவுரைகள்.

வானைச் சிமிழுக்குள் வைத்துக் காட்டும் சுருக்கமான கூறுமுறைகள்


இவை எல்லாம் தமிழ் இயலன் அவர்களின் வெண்பாக்களில் உள்ள சிறப்புக் கூறுகள்.


வெண்பாவை இவர் காதலிக்கிறாரா... வெண்பா இவரைக் காதலிக்கிறதா... என்று பிரித்து உணர முடியவில்லை. தலைப்புகளில் கூடத் தளை தட்டவில்லை. சிறு தவறும் தலை நீட்டவில்லை.

வாழ்வியலைச் சொல்லித் தரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய நூல் இது.

பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியப் பட்டப் படிப்புகளில் பாடமாகச் சேர்க்கத் தகுதி வாய்ந்த நூல் இது.

நூலை எழுதிய கவிஞர் தமிழ் இயலன் அவர்களுக்கு வாழ்த்து மாலைகள் நூறு சூட்ட வேண்டும். அச்சாரமாக ஒன்று சூட்டுகிறேன். 

நூறென வெண்பாக்கள் நூல்முழுதும் நூற்றவரே

சாறென நம்தமிழைத் தந்தவரே – ஆறென

ஓடும் கருத்துகளில் உன்மேன்மை நான்அறிந்தேன்

நாடும் உனைப்புகழும் நன்று.  

 

 

 

 

 

பட்டறை என்ற சொல்

பட்டறை என்ற சொல்...

கோ. மன்றவாணன்

 

உலோகத் தொழில், மர வேலை செய்யும் இடத்தைத்தான் பட்டறை என்ற சொல் குறிக்கும். ஆனால் அந்தச் சொல்லைக் கொண்டு உருவாக்கும் கூத்துப் பட்டறை, செந்தமிழ்ப் பட்டறை, பேச்சுப் பட்டறை, கவிதைப் பட்டறை போன்ற சொல்கூட்டுகள் தவறானவை என்று சிலர் வாதிடுகிறார்கள்.

இந்தப் பட்டறை என்ற சொல்கூட, பட்டடை என்னும் சொல்லில் இருந்து வந்ததாகச் சிலர் சொல்கிறார்கள். படு என்பதுதான் அதன் வேர்ச்சொல்லாக இருக்கும். படு என்ற சொல் செயல்படுதலைக் குறிக்கும். அனுபவத்தைக் குறிக்கும். படு என்ற சொல்லில் இருந்து பாடு என்ற சொல் வந்திருக்கும்.“பட்டது போதும் பெண்ணாலே இதைப் பட்டினத்தாரும் சொன்னாரே...” என்ற பாடலில் பட்டது என்பது செயல் அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. “பட்ட பாட்டுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை” என்ற பேச்சு வழக்கும் உண்டு. பட்டறிவு என்ற சொல்லும் அனுபவ அறிவைத்தான் குறிக்கும் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

அனுபவத்தின் வாயிலாக ஒன்றைக் கற்றுத் தேர்வதற்கு உரிய இடத்தையும் பட்டறை என்ற சொல் குறிக்கிறது.

Workshop என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பட்டறை என்ற சொல் பொருந்துகிறது. பட்டறை என்ற சொல், பழந்தமிழ் இலக்கியங்களில் கிடைக்கவில்லை. இந்தச் சொல் மக்கள் வழக்கில் நெடுங்காலமாக இருந்து வருகிறது.

உலோகம், மரம் தொடர்பான பணி நடக்கும் இடத்தைக் குறிக்கத்தான் பட்டறை என்ற சொல்லை நம் முன்னோர் பயன்படுத்தி வந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தமிழில் உண்டு என்பதை மறுக்க முடியாது. பட்டறைக்கு இயந்திரம், தொழிற்சாலை, வீட்டின் உத்திரம், மக்கள் கூட்டம், நெல் சேமிக்கும் சாக்கு, தோணி தாங்கி போன்ற பொருள்களும் உண்டு. கால மாற்றத்துக்கு ஏற்பப் புதுப் பொருள்களும் வந்து சேரலாம்.

Workshop என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகரமுதலி கீழ்க்கண்டவாறு பொருள்கள் தருகிறது.

1.    ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி அறிய, குறிப்பாக விவாதங்கள் அல்லது செயல்பாடுகளில் பங்கேற்பதன் மூலம் ஒரு குழுவாக மக்கள் கூடும் நிகழ்வு. (An occasion, when a group of people meet to learn about a particular subject, especially by taking part in discussions or activities.)

2.    பொருட்கள் தயாரிக்கப்படும் அல்லது பழுது நீக்கப்படும் அறை அல்லது கட்டடம். (A room or building, in which, goods are manufactured or repaired.)

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி தரும் பொருள்கள் வருமாறு :

1.    தயாரிப்பு அல்லது கைவினைப் பொருட்கள் செய்யும் ஒரு சிறிய நிறுவனம் (A small establishment where manufacturing or handicrafts are carried on)

2.    பணிமனை, பணியறை (WORK ROOM)

3.    ஒரு குறிப்பிட்ட துறையில் உள்ள நுட்பங்களை மற்றும் திறன்களை அறிவதற்கான முனைப்புக் கல்வித் திட்டம். (A usually brief intensive educational program for a relatively small group of people that focuses especially on techniques and skills in a particular field.)

ஆங்கில அகரமுதலிகள்படி ஒர்க் ஷாப் என்ற சொல், தொழில்நடக்கும் இடத்தையும் குறிக்கிறது. ஒரு பொருள் அல்லது திறன்நுட்பம் பற்றிச் செயல் / விவாதம் மூலமாகக் கற்றுத் தேர்வதற்கான நிகழ்வையும் குறிக்கிறது.

சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியத்திலும் ஒர்க் ஷாப் என்பதற்குப் பட்டறை, பணிப்பட்டறை, பயிலரங்கு ஆகிய பொருள்கள் தரப்பட்டு உள்ளன.

தமிழில் வெறும் பட்டறை என்று சொன்னால் கொல்லுப் பட்டறையா, தச்சுப் பட்டறையா என்று தெரியாது. அதனால் தொழிலைக் குறிப்பாகச் சொல்வதற்கு முன்சொல் இணைக்கிறோம்.

அதுபோல் செயல்வழி கற்றல் நி்கழ்விலும் வெறும் பட்டறை என்று குறிப்பிடாமல் பேச்சுப் பட்டறை, கவிதைப் பட்டறை என்று முன்சொல் இட்டுக் குறிப்பிடுகிறோம். எனவே குழப்பம் வராது.

“செந்தமிழ்ப்  பயிற்சிப்  பட்டறை என்றால் இங்கே தமிழை உடைத்து அறுத்து ஏதும் செய்வாரோ?” என்று இடக்காகக் கேள்வியும் எழுப்பித் தமக்குள் பெருமிதம் கொள்கிறார்கள் சில புலவர்கள். மழமழ மாம்பழக் கன்னம் என்று எழுதினால், கடித்துப் பார்த்தால் தித்திக்குமா என்று கேட்பார்கள் போலும்.

ஒரு தச்சுப் பட்டறையில் ஒழுங்கற்ற மரத்தை அறுத்து, இழைத்து, ஒழுங்குபடுத்திப் பயன்தரும் பொருள்களாக மாற்றுகிறார்கள். அதுபோல் பட்டறையில் ஒரு பொருளை உருவாக்குவதுபோல் கவிதைப் பட்டறையில் நல்ல கவிதையை உருவாக்கும் திறனைப் பெறலாம். மொழிப் பட்டறையில் பிழையற்ற மொழிநடையைக் கற்கலாம். கூத்துப் பட்டறையில் பல்வேறு கலைத்திறன்களைப் பயிலலாம். போதிக்கும் அறிவு மறந்து போகலாம். புரியாமலும் போகலாம்.  செயல்மூலம் சாதிக்கும் அறிவோ நம் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும். பட்டறையில் கழிக்கப்பட்ட கூளங்கள் இருக்கும். இத்தகைய திறன் வளர்க்கும் பட்டறையில் நம் தவறுகள் கழிக்கப்பட்டு இருக்கும்.

பேச்சுப் பட்டறை என்றால் அங்கே சிறந்த பேச்சாளர்கள் உருவாகலாம். கடலூரில் பேச்சுப் பட்டறை என்ற அமைப்பு இருந்தது. வாரம் தோறும் சிலர் கூடிப் பல்வேறு தலைப்புகளில் பேசிப் பயிற்சி பெற்றார்கள்.

நாடகப் பயிற்சி அளிக்கிற இடத்தை / அமைப்பைக் கூத்துப் பட்டறை என்று சொன்னால் என்ன குறைந்துவிடும்? எப்படித் தவறு நேர்ந்துவிடும்? கூத்துப் பட்டறை என்று கூறாமல் கூத்துப் பயிற்சிக் களம் என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள். கவிதைப் பட்டறையைக் கவிதைப் பயிற்சிப் பள்ளி என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள். மூன்று சொற்களைக் கொண்டு சொல்லாக்கம் செய்வது சிறப்பு ஆகாது.

பொருள் உருவாக்கும் பட்டறையின் தன்மையை ஒத்திருப்பதால்... திறன் உருவாக்கும் இடத்தைக் குறிக்கவும் பட்டறை என்ற சொல் ஒத்து வருகிறது..

கவியரங்கம் என்பதற்கும் கவிதைப் பட்டறை என்பதற்கும் வேறுபாடு உண்டு. கவியரங்கில் கவிதை படிப்பார்கள். கவிதைப் பட்டறையில் கவிதை சொல்லவும் கவிதையைச் செப்பம் செய்யவும் கவிநுட்பங்கள் கற்கவும் வாய்ப்புகள் கிடைக்கும். பட்டறையில் தரமான பொருள் உருவாவது போல், இத்தகைய திறன்வளர்ப்புப் பட்டறையில் நல்ல கலைஞர்கள் / கவிஞர்கள் / வல்லுநர்கள் உருவாகுவார்கள்.

ஆக.... கவிதைப் பட்டறை, கூத்துப் பட்டறை என்று சொல்லலாம்.

மேலோட்டமாக ஆய்ந்தால் பட்டறை என்ற சொல்லைப் பட்டு + அறை என்று பிரிக்கலாம். பட்டு என்ற சொல் பட்டு அறிதலை / செயலை உணர்த்துகிறது. அறை என்று சொல் பட்டு அறியும் இடத்தைக் குறிக்கிறது. ஆக... பட்டறை என்ற சொல் இயற்கையாகவே ஒர்க் ஷாப் என்ற ஆங்கிலச் சொல் வழக்குகளுக்குப் பொருந்தி வருகிறது.

WORKSHOP என்ற ஆங்கிலச் சொல்லாட்சியை அப்படியே மொழிபெயர்த்துப் பயன்படுத்த தமிழ் என்ன பிச்சைக்கார மொழியா என்று கேட்கிறார்கள். தமிழின் பெரும்பான்மையான கலைச்சொற்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிச் சொற்களை மொழிபெயர்த்துச் செய்தவையே. அவ்வாறு மொழி பெயர்க்கத் தமிழ் வளமாகவும் உள்ளது. இது தமிழுக்குப் பெருமையே.

புதுப்புதுக் கலைகளும் புதுப்புதுக் கருவிகளும் புதுப்புதுத் துறை அறிவுகளும் மேலை நாடுகளில்தாம் உள்ளன. அவற்றை நாம் மொழிபெயர்த்துத்தான் ஆக வேண்டும். அப்படிச் செய்வதுதான் தமிழுக்கு வளர்ச்சி ஆகும். தமிழை அடுத்த அடுத்த நூற்றாண்டுகளுக்குக் கொண்டு செல்லும் வழிமுறையும் இதுதான். இதைப் பாரதியார் நூறாண்டுகளுக்கு முன்னமே சொல்லி உள்ளார்.

“புத்தம் புதிய கலைகள் – பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்

மெத்த வளருது மேற்கே – அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை”

என்ற வசை, தமிழ்மொழிக்கு ஏற்படாமல் இருக்கவே

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” என்றார் பாரதியார்.

பட்டறை என்ற சொல்கூட ஒர்க் ஷாப் என்ற சொல்லின் மொழி பெயர்ப்பு இல்லை. ஒர்க் ஷாப் என்பதை மொழி பெயர்க்க வேண்டுமானால் பணிமனை என்றுதான் மொழி பெயர்க்க வேண்டும். பணிக்கடை என்று மொழி பெயர்த்தால் நகைப்புக்கு உள்ளாகிவிடும். பட்டறை என்ற சொல் பணிமனை என்பதைவிடப் பொருள்செழுமை வாய்ந்த சொல். தமிழிலேயே உருவான மக்களின் சொல்.

தற்கால மொழி வளர்ச்சிக்கு ஏற்ப, பட்டறை என்ற சொல்லானது பொருள் உருவாக்கும் இடத்தையும் குறிக்கும். நுட்பங்ளைக் கற்றுத் தேர்வதற்கான இடத்தையும் குறிக்கும். இவற்றை இன்றைய தமிழ் ஏற்றுக்கொண்டது. மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும் இணைத்துக்கொண்டது.

தமிழ் மேலும் மேலும் மெருகு ஏறித்தான் வருகிறது. நம் புலவர்கள்தாம் துருப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்..

 

நன்றி : திண்ணை இணைய இதழ்

 


 

Wednesday, 2 March 2022

எண்ணத்தில் களங்கம் இல்லை...

 



எண்ணத்தில் களங்கம் இல்லை

கோ. மன்றவாணன்

தற்போது மலர்ந்துள்ள தமிழ்நாடு அரசு எழுத்தாளர்களைக் கொண்டாடும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நினைப்பது நிறைவேற வேண்டும் என்பதும் நம் ஆசை.

சில நாள்களுக்கு முன் எழுத்தாளர் கி.ரா. மறைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவருடைய ஊரில் சிலையும் நினைவகமும் அமைக்கப்படும் என்றும் அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வேறு எந்த எழுத்தாளருக்கும் இத்தகைய மரியாதை கிடைக்கவில்லை.

ஒவ்வோர் ஆண்டும் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் மூவருக்கு இலக்கிய மாமணி  விருதும் ஐந்து லட்சம் பணமும் அளிக்கப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டம் இது. பெருமை அளிக்கும் செயல்பாடும்கூட!

இந்த விருதுகளை அரசின் ஆதரவாளர்களுக்கே தருவார்கள் என்று விமர்சிக்கிறார்கள். நமக்கு நன்மை செய்ய முன்வரும் போது, எடுத்த எடுப்பிலேயே அவர்களை நோக்கி அம்புகள் எய்ய வேண்டியது இல்லை. அவ்வாறு சிலர் அவநம்பிக்கை கொள்வதற்கு அடிப்படைக் காரணங்கள் இருக்கலாம். அவை நிரந்தரம் என்று எப்படிச் சொல்ல முடியும்? நம்பிக்கை வைப்போம். நல்லவை நடக்கட்டும்.

நடுநிலை என்பது மிகமிக அரிதாகவே சமூகத்தில் உள்ளது. எந்த நடுநிலையிலும் குறை சுமத்த வழி கிடைக்கும். இருப்பினும் இலக்கிய மதிப்பு மிக்கவர்களுக்கே இலக்கிய மாமணி விருதுகள் கிடைக்க வேண்டும்.  அதற்குரிய வழிமுறைகளை அரசு கடைப்பிடிக்க வேண்டும். செய்வார்கள் என்றே நம்புகிறேன்.

யாருக்கு விருது கொடுத்தாலும் விமர்சனம் செய்வோர் இருப்பார்கள். தகுதியை முன்நிறுத்தி, விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, அரசின் செயல்பாடுகள் இருக்கும்போது, விமர்சனம் கூர்மழுங்கிப் போகும்.

ஞான பீடம், சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்ற அறிவிப்புச் சற்றும் எதிர்பாராதது. உலக அளவிலும் தேசீய அளவிலும் மாநில அளவிலும் இயங்கும் சில உயரிய அமைப்புகள் விருதுகள் வழங்குகின்றன. அத்தகைய விருதுகளைப் பெற்ற  எழுத்தாளர்களுக்கும் வீடுகள் அளிக்கப்படும் என்றும் சொல்லி இருக்கிறார் முதல்வர்.

அரசுப்பணி, வங்கிப்பணி எனப் பாதுகாப்பான பணிகளில் இருக்கிற எழுத்தாளர்களே வளமையாக வாழ்கிறார்கள். மற்ற எழுத்தாளர்கள் எல்லாரும் மோசிக் கீரனார் வழி வந்தவர்கள்தாம்.

எத்தனை விருதுகள் பெற்றாலும் வாடகை வீடுகளில் வாடும் எழுத்தாளர்களாகவே இருக்கிறார்கள். எழுத்தாளர்களுக்கு வெளி உலகத்தில் மதிப்பு இருக்கிறதோ இல்லையோ.... அவரவர் வீடுகளில் மதிப்பு இருப்பதில்லை என்று சிலர் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அதற்குக் காரணம், பணத்தை வைத்தே மனிதனின் மதிப்பை எடை போடுகிற காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதுதான். என்ன செய்வது... சமூகத்தைப் பண்படுத்தும்... இலக்கியத்தை வளப்படுத்தும் எழுத்தாளர்களுக்குத் தங்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே...!

இத்தகைய சூழலில்...

தகுந்த எழுத்தாளர் ஒருவருக்கு அரசு வீடு தரும்போது, அந்தக் குடும்பத்தில் எழுத்தாளரின் பெருமை உணரப்படும். சமூகத்திலும் எழுத்தாளர்களுக்கு உயர் இடம் கிடைக்கும்.

இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். அரசு, தம் கொள்கையைச் சார்ந்தவர்களுக்கும் தமக்கு வேண்டியவர்களுக்கும்தாம் சிறப்புகள் செய்யும் என்று ஜாதகம் கணித்துச் சிலர் சொல்கிறார்கள். பொதுவாக அரசுகள் அப்படித்தான் இருக்கின்றன என்பதற்கு நிறைய எடுத்துக் காட்டுகளையும் அடுக்குகிறார்கள்.

ஆனால் இந்த வீடு வழங்கும் அறிவிப்பில் அப்படியான நிலைமை வரப் போவது இல்லை என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

ஞான பீடமோ... சாகித்ய அகாதெமி விருதோ, பிற விருதுகளோ தமிழ்நாடு அரசு வழங்கவில்லை. அத்தகைய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றால்... விருப்பு வெறுப்பு எங்கே இருக்கிறது? ஆக அரசின் எண்ணத்தில் களங்கம் இல்லை என்றே கருதுகிறேன்.

சொல்லுக்குச் செய்கை பொன்னாகும்.

தமிழ்ப் பல்லவி

 



தமிழ்ப்பல்லவி

கோ. மன்றவாணன்

 

கரோனா தீநுண்மி காலத்தில் அச்சு இதழ்களின் விற்பனை வெகுவாகச் சரிந்துவிட்டது. பரபரப்பாக வந்த பல பருவ இதழ்களை விகடன் குழுமமே நிறுத்திவிட்டது. அச்சு இதழை நிறுத்தியதோடு மின்னிதழாக மாற்றிக் கொண்டது கல்கி.

கடையில் விற்பனை ஆகும் நிலையில் சிற்றிதழ்கள் இல்லை. அவை 100 அல்லது 200 சந்தாதாரர்களை நம்பியே உள்ளன. ஊரடங்கு காரணமாக அச்சுக் கூடங்கள் இயங்க முடியாத நிலையில் அந்த இதழ்களும் தொடர்ந்து வரவில்லை.

மிகப்பெரும் நிறுவனங்களே நாளிதழ்களின் பக்கங்களைக் குறைத்துவிட்டன.

நினைத்தபோது கடைகளுக்குச் சென்று எந்த நாளிதழையும் வாங்கும் நிலை முன்பு இருந்தது. தற்போது இல்லை. வழக்கமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே நாளிதழ்களைக் கடைக்காரர்கள் வருவித்துக் கொள்கிறார்கள். வாடிக்கையாளராய் இல்லாதவர்கள் குறிப்பிட்ட சில நாளிதழ்களைக் கடையில் வாங்க முடியாது.

நூலகச் செயல்பாடுகளும் முடங்கி உள்ளன. நூலக ஆணைகளை நம்பி வெளிவந்த இதழ்களும், செய்வன அறியாமல் தத்தளிக்கின்றன.

அச்சு இதழ்கள் மூலமாகவும் கொரோன பரவும் என்ற அச்சம் காரணமாக இதழ்களைத் தொடவே சிலர் அஞ்சுகிறார்கள்.

தடம் என்ற பெயரில் தரமான அழகான இலக்கிய மாத இதழை விகடன் நிறுவனம் நடத்தி வந்தது. பொருள் இழப்போ... விற்பனை குறைவோ... என்ன காரணமோ... தெரியவில்லை. கரோனா காலத்துக்கு முன்பே அந்த இதழை நிறுத்தி விட்டனர். 

எத்தனையோ இடர்களைத் தாங்கியபடி இதழ்களை நடத்திக்கொண்டு இருந்தவர்களின் தன்னம்பிக்கையைத் தகர்த்துவிட்டது கரோனா.

இத்தகைய சூழ்நிலையில்தான் பல்லவி குமார் அவர்கள் தமிழ்ப்பல்லவி இதழைத் தொடங்கி இருக்கிறார். அந்த இதழை எனக்கு அனுப்பியும் இருந்தார். முடியாது என்ற நிலையில் முடியும் என்று செயல்படுவதுதான் தன்னம்பிக்கை. அது நிறையவே பல்லவி குமார் அவர்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். காலாண்டு இதழ் என்பதால் கால அவசரகதி ஏதும் இருக்காது. நிதானமாக இதழ்ப்பணிகளை மேற்கொள்ளலாம் என்று அவர் திட்டமிட்டு இருப்பார் என்று கருதுகிறேன்.

தமிழ்ப்பல்லவியின் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று அறிய முடிகிறது. மக்கள் ரசனைக்கு ஏற்ப இதழ்கள் நடத்துபவர்கள் ஒவ்வொரு பக்கத்தின் மூலையிலும் நகைச்சுவை அல்லது துணுக்குச் செய்திகளை வெளியிடுவார்கள். தமிழ்ப்பல்லவியிலோ பக்க மூலைகளில் தரமான ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை வெளியிடுகிறார்கள். அதனால் ஒவ்வொரு பக்கத்திலும் இலக்கிய விறுவிறுப்பு எகிறுகிறது.

சிறுகதைகள், கவிதைகள், கலை, இலக்கியம் தொடர்பான கட்டுரைகள் என இதழ்களின் பக்கங்கள் யாவும் பூத்துப் புன்னகைக்கின்றன. ஆங்கிலம், இந்தி, மலையாளம் எனப் பிற மொழிகளில் இருந்து கவிதைகளையும் சிறுகதைகளையும் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். பாரதியார் எண்ணத்துக்கு ஏற்பவே கலைச்செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.

தரமான இலக்கிய இதழ் இது என்று தமிழ்ப்பல்லவிக்குத் தரச்சான்று தரலாம்.

எனக்கு அனுப்பிய இதழில் வேர்கள் மு. இராமலிங்கம் என்பவர் எழுதிய நினைவில் நின்ற வாழ்க்கைச் சுவடுகள் என்ற கட்டுரை உள்ளது. ஒரு காலத்தில் அச்சு இதழ்களைப் படிக்கும் ஆர்வம் எப்படி இருந்தது என்பதை அந்தக் கட்டுரையின் மூலம் அறிய முடிகிறது. அந்தக் கட்டுரையில்  இருந்து சில வரிகள்....

“என் தந்தை என் பெயரில் கோகுலத்துக்குச் சந்தா கட்டி இருந்தார். என் பெயருக்குப் பத்திரிகை வருவது எனது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. இது தவிர, பஞ்சாயத்து நூலகத்தில் சிறுவர் நூல்கள் படிக்கக் கிடைத்தன.”

”உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்பொழுது நண்பர் ஒருவர் முத்து காமிக்ஸ் புத்தகங்களை வகுப்புக்கு எடுத்து வருவார். கடைசிப் பெஞ்சில் அமர்ந்து பாடப் புத்தகத்திற்கு உள்ளே மறைத்து வைத்து அந்தக் காமிக்ஸ் புத்தகங்களைப் படித்துவிட்டு ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்கியதும் உண்டு. அபூர்வமாகக் கிடைக்கும் கைச்செலவுக்கான காசுகளை, காமிக்ஸ் புத்தகங்களையும் அணில் போன்ற சிறுவர் இதழ்களையும் வாங்குவதற்குச் செலவிட்டது இன்றும்கூட நினைவில் உள்ளது. நான் உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டில் சீர்காழியில் தங்கிப் படிக்க நேரிட்டது. அப்போது சீர்காழி பொது நூலகத்தில் மூன்று ரூபாய் கட்டி உறுப்பினராகிப் புத்தகங்களை  எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். டால்ஸ்டாயின் அன்னா கரீனா அந்த நூலகத்தில் படிக்கக் கிடைத்தது.”

“பொன்னியின் செல்வனின் பைண்ட் செய்யப்பட்ட பாகங்களைப் பள்ளி விடுமுறை நாள்களில் படித்ததில் இருந்துதான் எனது தீவிர வாசிப்பு ஆரம்பம் ஆனது. கல்கியின் விறுவிறுப்பான கதை சொல்லும் பாணியில் கவரப்பட்டு அவருடைய தீவிர வாசகராக மாறினேன். புத்தமங்கலம் என்ற ஊருக்குச் சென்று கல்கி பிறந்த வீட்டைப் பார்த்து வரும் அளவுக்குக் கல்கி பைத்தியம் பிடித்து இருந்தது.”

”தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கல்கி இதழ் சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் வெளிவந்தது. கல்கி மீது இருந்த தணியாத தாகத்தால் இதழ் வெளிவரும் ஒவ்வொரு வியாழனும் புத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த சீர்காழிக்குச் சென்று கல்கியை வாங்கி வருவேன். லிப்ஃகோ வெளியிட்ட பெரிமேசன் துப்பறியும் நாவல்கள் வாங்கியது உண்டு. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள புத்தகக் கடையில் கணையாழி கிடைக்கும்.”

குறிஞ்சிவேலனின் சேகரிப்பில் இருந்த தீபம் இதழின் மொத்த தொகுப்பையும் படித்ததோடு மட்டும் அல்லாமல் கண்ணதாசன், ஞானரதம், கணையாழி போன்ற பிற இதழ்களையும் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

“குமுதம் இதழில் இருந்து மாலைமதி என்ற மாத நாவல் வெளிவந்தது. அதன் ஆரம்ப வெளியீடுகளில் இருந்து 50 நாவல்கள் வரை வாங்கி எனது நூலகத்தைத் தொடங்கினேன்.”

இவ்வாறான அனுபவங்கள் உங்களுக்கும் இருந்திருக்கும். 

இப்படி அந்தக் காலத்தில் புத்தக வாசிப்புத் தீவிரமாக இருந்தது. பெண்களும் வார மாத இதழ்களை வரவழைத்துப் படித்துவந்த வசந்த தருணம் அது.

வேர்கள் மு. இராமலிங்கம் சொன்ன நூல்வாசிப்பின் நறுமணக் காலம்  இன்று இல்லை. 

இந்நிலையிலும் விடாப்பிடியாகச் சிலர், இலக்கிய இதழ்களை அச்சில் கொண்டு வருகின்றனர். தங்களைத் தேய்த்துத் தமிழை மணக்க வைப்பவர்கள் இவர்கள். இயன்றவர்கள் அந்த இதழ்களுக்குச் சந்தா செலுத்திப் படிக்கலாம். கொடுமுடி தேடி மூச்சிரைக்க மலையேறும் இவர்களுக்குத் தென்படும் சுனைநீர் அது.

தமிழ்ப்பல்லவி.... அநுபல்லவி, சரணங்கள் ஆயிரம்... என்று தொடர வேண்டும்.

தமிழ்ப் பல்லவியின் முகவரி :

ஆசிரியர் : பல்லவி குமார், 9/1A, இராஜவீதி, கூட்டுறவு நகர், பெரியார் நகர் (தெற்கு), விருத்தாசலம் – 606001. கடலூர் மாவட்டம். அலைபேசி : 9942347079. தனி இதழ் ரூ. 20. ஆண்டுச் சந்தா ரூ. 100.