இலக்கியம் படிக்க வேண்டுமா?
கோ.
மன்றவாணன்
கவிதை
எழுத விரும்பும் இளங்கவிஞர்கள் வாசிக்க வேண்டிய இலக்கிய நூல்களைப் பதிவிடுங்கள்
என்று “இலக்கியம் பேசுவோம்” குழுவில் தங்க. சுதர்சனம் ஐயா கேட்டு
இருந்தார். யாரும் பதில் அளிக்கவில்லை.
இலக்கியங்களைப்
படித்துவிட்டுத்தான் கவிதை எழுத வேண்டும் என்பதில்லை. நம் நாட்டுப்புறக்
கவிதைகளைச் சொன்னவர்கள் இலக்கியம் படித்து இருக்க மாட்டார்கள்.
ஏற்றப்
பாட்டுக் கேட்டுக் கம்பரே வியந்து போனார் என்று ஒரு கதை உண்டு. மெய்யோ பொய்யோ
தெரியாது. படிக்காத பாமர மக்களிடத்திலும் கவியுணர்வும் கவித்திறனும் உண்டு என்பதை
உணர்த்துவதாக அந்தக் கதை உள்ளது. நம்முடைய பழமொழிகள் பலவும் பாமர மக்களின்
கவிதைகள்தாம்.
இலக்கியங்களைப்
படிப்பதால் நன்மையே தவிர, எந்தவித இழப்பும் ஏற்படப் போவது இல்லை. வாய்ப்பு
இருந்தால், நேரம் கிடைத்தால் விருப்பமும் சேர்ந்தால் படிக்கலாமே.
கவித்திறனை
மேம்படுத்திக் கொள்ளவும் கவித்துவ உத்திகளைச் சிறப்பாகக் கையாளவும் சில இலக்கிய
நூல்களை வாசிக்கலாம். அவை கவிஞர் ஒருவரின் கவிச்சுடரை மேலும் ஒளிர வைக்கத்
தூண்டுகோல்கள் ஆகலாம்.
படிக்க
வேண்டியவை எனச்சொல்லிச் சங்க இலக்கியங்களில் இருந்து தற்கால இலக்கியங்கள் வரை உள்ள
நூல்களைச் சிலர் பட்டியல் இடலாம். பட்டியலைத்தான் வாசிக்க முடியுமே தவிர, அத்தனை
இலக்கியங்களையும் படித்துவிட முடியாது என்பது நடைமுறை.
புதிதாகக்
கவிதை எழுத வருவோர்க்கு உதவும் வகையில் யாப்பதிகாரம், தொடையதிகாரம், கவி பாடலாம்
வாங்க, யாப்பறிந்து பாப்புனைய எனப் பல நூல்கள் ஒரு காலத்தில் வந்தன. இலக்கணப் படி
மரபுக் கவிதைகளை எழுதவே அவை பயிற்சி தந்தன. கவிதைக்கு இலக்கணம் தேவை இல்லை
என்றாகிவிட்டது. அதனால் அத்தகைய நூல்கள் கிடைக்கவும் இல்லை. மறுஅச்சு இடுவோரும்
இல்லை. தேடிப் படிக்க வேண்டிய தேவையும் இல்லை. மரபில் ஆசை கொண்டோர் இருந்தால்,
அவர்கள் இணையத்தில் யாப்பியல், அணியியல் பயிலாம்.
கவிதை
எழுதுவோர் என்னென்ன வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, “கடவுளை நம்பு; கவிஞன் நீயே”
என்ற தலைப்பிலான கவிதையில் கண்ணதாசன் பதில் சொல்லி இருக்கிறார். அந்தக் கவிதையில்
உள்ள சில வரிகள் வருமாறு :
நடமிடும்
தெய்வம் ராமனின் காதை
நற்பார
தத்து நன்னெறி யாவும்
ஆய்ந்து
படித்து அறிக பொருள்களை
சாத்திரம்
வேதம் தர்மம் தத்துவம்
அனைத்தும்
அறிக அறிந்த பின்னாலே
எடு பேனாவை எழுதுக கவிதை
வாழ்வியலைப்
புரிந்துகொள்ளவும்; நல்லது கெட்டது எது எது என்பதைத் தீர்மானிக்கவும்; அறிவை
விரிவு செய்யவும் கண்ணதாசனின் இந்தக் கருத்து உதவும். எந்தப் பொருள்பற்றி
எழுதினாலும் சிந்தனை ஊற்றுப் பொங்கிப் பெருக அவை துணைபுரியும்.
கருத்துகள்
பொங்கிப் பெருகிட இத்தகைய வாசிப்புகள் பயன்படலாம். ஆனால் கவித்துவமும் கவிநுட்பமும் பூத்துக்
குலுங்கிட என்ன படிக்கலாம்?
ஒரு
கவிதைகூடப் படிக்காமல் கேட்காமல் யாரும் கவிஞர் ஆகி இருக்க முடியாது. தூண்டல்
இல்லாமல் எந்த வினையும் இல்லை. ஏதோ ஒரு
கவிதை, ஒருவரைக் கவிதை எழுதத் தூண்டி இருக்கலாம். யாரோ ஒரு கவிஞரின் கவிதை நூல்,
ஒருவரைக் கவிஞராக மலரச் செய்து இருக்கலாம்.
ஆக... கவிதை நூல்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டே வருவது நல்லதுதான். அவை
ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு உதவி செய்துவிட்டு
ஒளிந்துகொள்ளும்.
கவிதை
எழுதுவோர் கம்பன் காவியத்தைப் படிக்க வேண்டும் என்று பெருங்கவிஞர்களே சொல்லி
இருக்கிறார்கள்.
பன்னிரண்டாம்
நூற்றாண்டில் எழுதப்பட்ட கம்பன் காவியத்தை நேரடியாக நாம் படித்துவிட முடியாது.
உரைநூல் கொண்டு படிக்கலாம். சொற்களின் ஆளுகையையும் கவித்துவத்தின் பேரழகையும் அந்த
ஒரு காவியம் சொல்லித் தரும்.
யாம்
அறிந்த புலவர்களில் கம்பனைப் போல், வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே
பிறந்ததில்லை என்று பாரதியே சான்றுரை தந்துள்ளான். பழம் இலக்கியங்களைப் பொருத்த
வரையில் பாரதியின் வாக்குக்கு ஏற்ப- திருக்குறளை, சிலப்பதிகாரத்தை, கம்ப
இராமாயணத்தைப் படிக்கலாம். படித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இன்றைக்கு
இருக்கும் திறன்வாய்ந்த பல கவிஞர்கள் கம்ப இராமாயணத்தையோ திருக்குறளையோ
சிலப்பதிகாரத்தையோ படித்து இருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் சிறந்த
கவிஞர்கள்தாம்.
பாரதி,
பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோரின் கவிதைகளைப் படித்துக் கவிஞர் ஆனவர்கள் பலர்
உண்டு; தங்களைச் செழுமைப் படுத்திக் கொண்டவர்கள் உண்டு. இவர்கள் மரபுக் கவிதை விரும்பிகள்.
மீரா,
மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்து, நா. காமராசன் ஆகியோரின் கவிதைகளைக் கல்லூரிக்
காலங்களில் படித்துக் கவிஞர் ஆனவர்கள் பலர் உண்டு; தங்களை வளப்படுத்திக் கொண்ட
கவிஞர்கள் உண்டு. இவர்கள் புதுக்கவிதையின் காதலர்கள்.
பிரமிள்,
பசுவய்யா, நகுலன், பிச்சமூர்த்தி, ஞானக் கூத்தன், அபி, தேவதச்சன், தேவதேவன் ஆகியோர்
நவீன கவிதைத் தடத்தில் பயணித்தவர்கள். அவர்களைப் பார்த்துக் கவிதை எழுதியவர்கள்
உண்டு; தங்களைப் பட்டை தீட்டிக் கொண்டவர்கள் உண்டு. அந்தத் தொடர் வரிசையில் லதா
ராமகிருஷ்ணன், புதிய மாதவி, வெய்யில், யாழி, இசை, ஷக்தி, கதிர்பாரதி, யவனிகா
ஸ்ரீராம், றாம் சந்தோஷ், கண்டராதித்தன், குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, சுகிர்த
ராணி, மாலதி மைத்ரி, கனிமொழிஜி, ஸ்ரீகா, அனுமா என அடுக்கடுக்காய் வந்துகொண்டே
இருக்கின்றனர். யார்போலும் இல்லாமல் தன்போல எழுதுகிறார்கள். இன்றைய நாளுக்கேற்ப...
இந்த நொடிக்கு ஏற்ப... எப்பொழுதும் புதுமையாக இயங்குகிறார்கள். இவர்கள் நவீன கவிதை
ஓவியர்கள்.
த.
பழமலய் அவர்கள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இலக்கியங்களையும்
இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்தவர். கூடவே மக்களையும் படித்தவர். பாமர
மக்களின் இயல்பு மொழிக்குள் இருக்கும்
கவிதையையும் வாழ்வையும் சொன்னவர். அவர் எழுதிய சனங்களின் கதை வந்த பிறகு, சனங்களின்
கவிஞர்கள் எழுந்தார்கள்.
மரபுக்
கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை தாண்டி... அடுத்துவரும் கவிதைக்கு ஏற்பவும்
நனிநவீன கவிஞர்கள் வருவார்கள். காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். கவிதையும் நவீனமாகிக்
கொண்டே இருக்கும். கவிஞர்கள் முன்னேற வேண்டும் அதற்குத் தக.
திரைப்பாடல்
ஒருபோதும் இலக்கியம் ஆகாது; திரைப்பாடலுக்கும் கவிதைக்கும் தொடர்பே இல்லை என்று
சில விமர்சனவாதிகள் வாள்வீசிக்
கொண்டிருக்கின்றனர். அவர்களிடத்தில் தலை நீட்டாமல் தப்பித்துக் கொள்வதே நீதி வழுவா
நெறிமுறை. திரைப்பாடல்கள் கேட்டுக் கேட்டுக் கவிஞர் ஆனவர்கள் பலர் உண்டு. நேற்றும்
சரி; இன்றும் சரி, திரைப்பாடல் கேட்டு; வியந்து; மகிழாத கவிஞர்கள் உண்டா?
ஹைக்கூ
எழுதும் கவிதை வாமனர்கள் உருவாகி உள்ளனர். அவர்களின் கவிதைகளைப் படித்தால் நாமும்
கவிதை எழுதலாம் என்ற எண்ணம் பலருக்கு உருவாகும். சின்னச் சின்ன அகல் விளக்குகளை
ஏற்றி வைத்தல்போல் ஹைக்கூ கவிதைகளை எளிதில் எழுதலாம். ஐந்தாறு வார்த்தைகளோ ஏழு
எட்டு வார்த்தைகளோ போதும். கவிதை எழுதி விடலாம். கவிஞன் ஆகிவிடலாம். வரிவரியாக
எழுதும் பெருஞ்சுமை இல்லை.. ஹைக்கூவின் கிளை ஆறுகளாக ஓடும் சென்றியு, ஹைபுன்,
லிமரைக்கூ, லிமர்புன், லிமர் சென்றியு ஆகியவற்றிலும் நீந்தி மகிழலாம்.
அறிவுமதி,
அமுதபாரதி, ஈரோடு தமிழன்பன், சீனு, தமிழ்மணி, சீனு. தமிழ்நெஞ்சன், மு. முருகேஷ், வெற்றிச்செல்வி சண்மும், பல்லவி
குமார், ஆலா, அன்பாதவன், கன்னிக்கோயில் ராஜா, அருணாசல சிவா போன்றவர்கள் தங்களின் படைப்பாளுமையை
மிளிர விடுகிறார்கள். அத்தகையோர் செலுத்தும் தூண்டல்களில் புதுப்புது ஹைக்கூ
கவிஞர்கள் கவிவாண வேடிக்கை நடத்துகிறார்கள்.
மேலே
குறிப்பிட்ட கவிஞர்களும் ஏற்கெனவே இருந்த கவிஞர்களின் கவிதைகளைப் படித்து ஊக்கம்
பெற்று இருப்பார்கள். தொடக்கத்தில் அவர்களைப் போலவே எழுதியும் இருப்பார்கள்.
பின்னர் தமக்கென்று தனிவழியைத் தாங்களாகவே உருவாக்கி வெற்றிநடை போட்டு
இருப்பார்கள்.
அவர்களைப்
போலவே கவிதைத் துறையில் வெற்றி பெற்றவர்களின் கவிதைகளை வாசித்து வைத்துக்
கொள்ளலாம். ஆனால் அவற்றின் ஆட்சிக்கு ஆட்படாமல் தங்களுக்கான ஓர் உலகத்தை தாங்களே
படைத்துக் கொள்வதில்தான் கவிஞர்களின் வெற்றி இருக்கிறது.
கவிஞராக
ஒளிர, புகழ்மிகு கவிஞர்களின் படைப்புகளைத்தாம் படிக்க வேண்டும் என்று கருத வேண்டாம்.
அறிமுகம் இல்லாத கவிஞன் ஒருவன் சிகரெட் அட்டையில் எழுதிய கவிதையையும் படிக்கலாம்.
போட்டி வைத்தால் அந்த ஒரு கவிதையில் மகா கவிஞர்கள் தோற்கலாம். சிற்றிதழ்களில்
வரும் கவிதைகளையும் படிக்கலாம். ஏதேனும் ஒரு கவிதை உங்கள் சிந்தனையைத் தூண்டலாம்.
புதிய உத்திகள் தோன்ற உதவலாம்.
“பிறர்
கவிதையைப் படித்தால் அதன் சாயல் என் கவிதையில் படிந்துவிடும் என்பதால் நான் யார் கவிதையையும்
படிப்பது இல்லை” என்றார் கவிநண்பர் ஒருவர். அவருக்கு அப்படி ஒரு பலகீனம்
இருக்கிறது என்றால் அவரை விட்டுவிடுவோம்.
ஒரு
வணிக நிறுவனம் நடத்தினால் அந்த வணிகம் தொடர்பான அடுத்தடுத்த நகர்வுகளைத்
தெரிந்துகொண்டு வர வேண்டும். முன்னணியில் தொடர்ந்து இருக்கப் புதிய புதிய
உத்திகளையும் நுட்பங்களையும் அவ்வப்போது நடைமுறைப் படுத்த வேண்டும்.
போட்டியாளர்களின் வலிமையையும் அறிந்திருக்க வேண்டும். அப்படித்தான் கவிஞர்களும்
தற்காலக் கவிதைப் போக்குகளை அறிந்துவர வேண்டும். புதுமையை நோக்கி நகர்ந்துகொண்டே
இருக்கிறது இந்தப் பூவுலகு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தங்களை
முன்நிறுத்திக் கொள்ள... காலத்தின் வெகுவேகத்துக்கு ஏற்ப நவீன உத்திகளையும் கையாள
வேண்டும். அதற்கேற்ப வாசிப்பின் பயன் அமைய வேண்டும்.
ஜெயமோகன்,
எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏராளமாகப் படித்தவர்கள். சாதனை புரிந்தவர்கள். இனி எதுவும்
அவர்கள் படிக்கத் தேவை இல்லை. இருந்தாலும் அவர்கள் படித்துக்கொண்டே
இருக்கிறார்கள். படைப்பதற்குச் செலவிடும் நேரத்தைவிட, படிப்பதற்கே அதிக நேரம்
செலவிடுகிறார்கள். வாசிப்பு, புதுப்புது வாசல்களைத் திறந்துகொண்டே செல்லும் என்பதை
அவர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
கவிஞன்
வாசிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை எனச் சொன்னேன். ஆனால், கவிஞர்கள் தங்களைப்
புதுப்பித்துக்கொண்டே வர வேண்டும் என்றால் வாசிக்கத்தான் வேண்டும். படிக்க
வந்துவிட்டால் கவிதை இலக்கியங்கள் மட்டும் போதாது. கண்ணதாசன் சொன்னதுபோல் பலவும்
படிக்க வேண்டி இருக்கலாம். அவனுக்கான நூல்களை அவன் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவில்...
“படியுங்கள்” என்பதோடு நம் ஆலோசனையை நிறுத்திக் கொள்ளலாம்.
இதைப்
படி அதைப் படி என்று கவிஞனுக்குச் சேணம் கட்டி ஒரே திசையில் பயணிக்கச் செய்ய
வேண்டாம். அவன் கண்ணில் இருந்து பிற திசைகளை மறைக்க வேண்டாம்.
எந்தக்
கவிஞனுக்குள்ளும் ஓர் உள்ளொளி இருக்கும். அது இருளை விலக்கி வழிகாட்டிச் செல்லும்.
எதை எதை விரும்புகிறானோ அதை அதை வாசிக்கட்டும்.
அவனின் ரசனையில் அவன் திளைக்கட்டும்.
நம் ரசனையை இன்னொருவன்
மேல் திணிக்காமல் இருப்பதே... புதுமையை வரவேற்கும் செயல். அதனால்தானோ... என்ன
படிக்கலாம் என்பதற்கு யாரும் விடை அளிக்கவில்லையோ!
நன்றி :
திண்ணை இணைய இதழ்
30-05-2021