கோ. மன்றவாணன்
“............
இன்று மாலை 5 மணி அளவில் அன்னாரின் இறுதி ஊர்வலம்
நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று
ஒலிபரப்பிச் சென்றார்கள்.
கொஞ்ச
நேரம் ஆன பின் கடைவீதிக்குச் சென்றேன். இறந்தவர் குறித்துக் கண்ணீர் அஞ்சலி பதாகை
வைத்திருந்தார்கள். அதில்,
.....................
ஆகியோரின் தந்தையும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான
................................ அவர்கள்
நேற்று இரவு இயற்கை எய்தினார். அண்ணாரின்
உடல் இன்று மாலை 5 மணியளவில் கெடிலம் நதிக்கரையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அச்சிட்டு இருந்தார்கள். இந்த
இறப்புச் செய்தியில் உள்ள “அண்ணாரின்” என்ற சொல்லைக் கவனித்துப் பார்த்தேன். இதுபோன்ற
சொற்கள் பிழையாக இருந்தாலும் சரி போலத் தோற்றம் அளிக்கும்.
ண-ன-,
ள-ல, ர-ற ஆகிய எழுத்துகளால் ஏற்படும் ஒலிமயக்கப் பிழைகளை ஒருவர் பேசும்போது நம்மால்
கவனிக்க முடிவதில்லை. அவை சரியாகவே தோன்றும். ஆனால் எழுதும் போதோ அச்சிடும்போதோ
அவை பிழைகளாகத் தோன்றிக் கண்ணையும் கருத்தையும் உறுத்தும். அதனால் ஒலி விளம்பரம்
செய்தவரின் அறிவிப்பில் பிழை இருப்பதாக என் கவனத்துக்கு வரவில்லை. பதாகை
வாசகங்களைப் பார்த்த போதுதான் அண்ணார் என்பது சரியா என்ற கேள்வி எழுந்தது.
இதுபோன்ற
துயர்பகிர்வு செய்திகளில் அன்னார் என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். அண்ணார்
என்ற சொல்லையும் பயன் படுத்துகிறார்கள். எது சரி என்று யாரும் ஆராய்வதில்லை.
இவற்றுள்
எது சரி?
இவர்
அவர் என்று நாம் சொல்வன போல், நம் முந்தைய தலைமுறையினரிடம் “இன்னார் அன்னார்”
என்று பேசுகிற வழக்கம் இருந்துள்ளது.
இந்த
இறப்பு அறிவிப்பு வாசகங்களை நெடுங்காலமாக ஒரே மாதிரி ஒலித்துக்கொண்டு வருகிறோம்.
கடந்த தலைமுறைகளில் அன்னார் என்றுதான் எழுதி வந்து இருப்பார்கள். ன ண வேறுபாடு
தெரியாதவர்களால் இந்தத் தவறு ஏற்பட்டு இருக்கலாம்.
பெரும்பாலான
பதாகைகளிலும் சுவரொட்டிகளிலும் அண்ணார் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதுவே
சரியென நினைக்கிறார்கள். கேள்வி கேட்டால் புதுப்புது பொருளுரைகளும் சொல்வார்கள்.
வளவன்
என்பதை வளவனார் என்று மரியாதை தந்து எழுதுகிறார்கள். அதிலும் அன் விகுதி
இருப்பதால் வளவர் என்று எழுதுவோரும் இருக்கிறார்கள். அதுபோல் அண்ணன் என்பதில் உள்ள
அன் விகுதியை மரியாதைக் குறைவாக நினைத்து அண்ணார் என்று சொல்வது வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில் அண்ணாரின் இறுதி ஊர்வலம் என்று அச்சிடுவது சரிதான் எனச் சிலர்
சொல்லக்கூடும்.
அந்தப்
பொருளில் பார்த்தாலும் அவர் எல்லாருக்கும் அண்ணனாக இருக்க இயலாது. அவரைவிட வயதில்
மூத்தோருக்கும் அவர் அண்ணன் ஆக முடியாது. ஓர் அதிகாரியை அண்ணார் என்று அழைப்பதும்
இல்லை. எல்லாருக்குமான பொது அறிவிப்பில் அண்ணன் என்று சொல்வது பொருத்தமாக
இருக்காது.
இறப்பு
அறிவிப்பில்... இறந்தவர் யார் என்பதை முதலில் சொல்கிறார்கள். அடுத்ததாகத்தான்
அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதைத்
தெரிவிக்கிறார்கள். இந்த இரண்டு தகவல்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தும்
சொல்லாகத்தான் அன்னார் என்ற சொல் பயன்படுகிறது. அப்படிப்பட்டவரின்- அத்தகையவரின்-
மேற்சொல்லப்பட்டவரின் என்ற பொருளில்தான் அன்னார் என்ற சொல் ஆளப்படுகிறது.
இலக்கியங்களில்
அன்னார் என்ற சொல் அத்தகையவர் என்ற பொருளில் பல இடங்களில் உள்ளது. ஆனால் அண்ணார்
என்ற சொல் அண்ணன் என்ற பொருளில் காணப்படவில்லை.
அன்னார்
என்பதற்கு ஆதாரமாக நம் இலக்கியங்களில் நிறைய எடுத்துக் காட்டுகள் உள்ளன. அடிக்கடி
நம் காதுகளில் விழும் குறள்களையே தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெரும்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
மயிர்நீப்பின்
வாழா கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
புலத்தலின்
புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீர்இயைந்து
அன்னார் அகத்து
ஆக...
அன்னார் என்ற சொல் அப்படிப்பட்டவரின்... அத்தகையவரின்... அத்தன்மையரின் என்ற பொருளில்தான் வந்துள்ளது.
அண்ணாரின்
இறுதி ஊர்வலம் என்பதோ அண்ணாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதோ தவறு, அண்ணார்
என்ற சொல் பொதுத்தன்மை கொண்டதும் இல்லை.
அன்னாரின்
இறுதி ஊர்வலம் என்றுதான் எழுத வேண்டும்., அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்
என்றுதான் அச்சிட வேண்டும். அன்னாரின் மனம் இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்
என்றுதான் வேண்டுரை அமைய வேண்டும். அன்னார் என்ற சொல் இருபாலருக்கும் பொருந்தும்.
ஆக,
இறப்புச் செய்திகளில் அண்ணார் என்பது தவறு. அன்னார் என்பதே சரி.
தற்காலத்தில்
இறப்புச் செய்திகளில்தாம் அன்னார் என்ற சொல்லைப் பார்க்க முடிகிறது. வேறு
செய்திகளில் தென்படவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.
நன்றி :
திண்ணை இணைய இதழ்
16-05-2021
No comments:
Post a Comment