Monday, 30 December 2019

சிரிக்க வைத்தார்... சிந்திக்க வைத்தார்...




சிரிக்க வைத்தார்;
சிந்திக்க வைத்தார்.

கோ. மன்றவாணன்

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் யாரென்றால் எல்லாருடைய பதிலும் சார்லி சாப்ளின்தான். மொழியின்றிப் பேசி அனைத்துமொழி மக்களையும் ரசிகர்களாக மாற்றியவர் அவர்தான். நூறாண்டுகள் கடந்தாலும் பேசும் படங்கள் பெருகினாலும் அதிநவீனத் தொழிநுட்பங்கள் வந்தபடி இருந்தாலும் இன்றும் உலகின் எந்த மூலையிலாவது யாருடைய வீட்டிலாவது அவரின் படங்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
     
வயிற்றுப் பாட்டுக்கு வழியில்லாமல் வாழ்வில் துயரங்களையே சுமந்து வருந்தும் மக்களையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த சீர்திருத்தவாதி அவர்தான். இந்த உலகத்தில் ஏழைகளே அதிகம். அவர்களைச் சிரிக்க வைப்பதுதான் எனது நோக்கம் என்று அவரே பலபேட்டிகளில் சொல்லியுள்ளார்.
     
இன்றைக்கும் அவருடைய படங்கள் திரைக்கல்லூரி மாணவர்களுக்குப் பாடங்களாக விளங்குகின்றன. கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, படத்தொகுப்பு, இயக்கம், தயாரிப்பு எனத் திரையிலக்கியத்தின் அத்தனை கோணங்களிலும் புத்திக் கூர்மையுடன் செயலாற்றிப் புதுமைகள் படைத்தார்.
     
பணக்காரர்களைப் பரிகாசம் செய்யும் வகையில் அவருடைய பல படங்களில் காட்சிகள் இருந்தன. இதனால் அமெரிக்க அரசாங்கம் அவரைக் கம்யூனிஸ்ட் எனக் குற்றம் சாட்டிக் கண்காணித்து வந்தது. ஆனால், தான் கம்யூனிஸ்ட் இல்லை என்றும் மனிதநேயன் என்றும் எதிர்க்குரல் கொடுத்தார். பல ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தும் பலகோடி டாலர்கள் சம்பாதித்தும் அவர் தன்னை அமெரிக்கக் குடிமகனாக மாற்றிக்கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்க அரசுக்குத் தன்செல்வாக்கில் போர்நிதியை அதிகமாகத் திரட்டித் தந்தார். அமெரிக்காவின் உளவு நிறுவனம் சார்லி குறித்துப் பலபக்கங்கள் கொண்ட பல கோப்புகளைப் பராமரித்தது. இதன்விளைவாக 1950களில் அமெரிக்காவில் நுழைய முடியாத நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. காலம் மாறியது. சார்லிக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டோம் என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்தார்கள். அதற்குப் பிழையீடாக 1971ல் சிறப்பு ஆஸ்கார் விருதை வழங்கிச் சிறப்பித்தார்கள் என்பது வரலாற்றுத் திருப்பம்.
     
ஹிட்லரை மையமாக வைத்து  ‘தி கிரேட் டிக்டேட்டர்” என்ற படத்தை எடுத்துச் சர்வாதிகாரத்தை எதிர்த்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஹிட்லரும் சார்லியின் அதிதீவிர ரசிகர். அவருடைய படங்களைத் தன் அரண்மனையில் திரையிட்டுப் பார்த்து மனசை ரிலாக்ஸ் செய்து கொள்வது ஹிட்லருக்கு வழக்கம். பல நாடுகளில் இந்தப்படம் தடைசெய்யப்பட்டது என்பதாலே, அதன் அரசியல் வீரியத்தை நாம் அறியலாம். அந்தத் திரைப்படத்தில் ஒரு பூகோளம் வரைந்த பலூனை வைத்துச் சர்வாதிகாரி விளையாடுகிறான். அந்தப் பலூனை மனம்போன போக்கில் தூக்கிப்போட்டுப் பல கோணங்களில் எட்டி உதைக்கிறான். “உலகம் என் காலடியில். நினைக்கும் போதெல்லாம் எட்டி உதைப்பேன்” என்ற சர்வாதிகாரத்தின் கோரத்தன்மையை அந்தக் காட்சியில் வெளிப்படுத்தி இருந்தார். ஹிட்லரும் அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்திருக்கிறார்.
     
அன்று உலகத் தலைவர்களாக விளங்கிய ஸ்டாலின், சர்ச்சில் ஆகியோரும் ஹிட்லரைப் போலவே சார்லியின் தீவிர விசிறிகளாக இருந்துள்ளார்கள். காந்தி அடிகளைப் பற்றி நிறைய கேள்விபட்டும் படித்தும் இருக்கிறார் சார்லி. காந்தியின் மீது அவருக்கு மரியாதை ஏற்பட்டது. எனவே இலண்டனில் காந்தியைச் சந்தித்தார். காந்தியோ சார்லியின் ஒரு படத்தைக்கூடப் பார்க்காதவர். அவரிடத்தில் என்ன பேசுவது என்று தவித்தார். இயந்திரங்களின் வருகையால் மனிதர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்படுவது குறித்து இருவரும் பேசிக்கொண்டார்கள். நம் ஜவஹர்லால் நேருவும் சார்லியின் தீவிர ரசிகர்தான். நீண்டநெடு நேரம் பேசி மகிழ வேண்டும் என்பதற்காகவே சார்லியுடன் ஒரே காரில் பயணித்திருக்கிறார். இந்திராவும் சார்லியைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறார்.
     
பிற்காலத்தில் இந்தியாவின் கடைசி வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குத் திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற வேண்டும் என்று ஆசை. அவர் சார்லியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். அவருடைய ஆசையை நிறைவேற்ற சார்லி படம்எடுத்தார். சில ஆயிரம் அடிகள் எடுத்தபின் அதைத் திரையிட்டுப் பார்த்தார். சார்லிக்குப் பிடிக்கவில்லை. “நீ பிரிட்டீஷ் பேரரசையே ஆளக்கூடும். ஆனால் உன்னால் ஒருபோதும் நடிகனாக முடியாது” என்று மவுண்ட் பேட்டனிடமே சொல்லிப் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்.
     
நடுத்தர வயதான போதும் சார்லி இளமைத்துள்ளலோடே இருந்தார். இது எல்லாருக்கும் வியப்பைத் தந்தது. தான் மறைத்துவந்த இளமையின்  ரகசியத்தைப் பின்னர் தெரிவித்தார். தினமும் யோகாசனம் செய்து வருவதுதான் இளமைக்குக் காரணம் என்றார். அவர்வாழ்ந்த காலத்தில் அமெரிக்கர்களுக்கு யோகாசனம் என்றாலே என்னவென்று தெரியாது. ஆனால் சார்லி அறிந்து வைத்திருந்தார்.
     
ஊமைப்படங்கள் காலம் முடிந்து பேசும் படங்கள் வந்தபோதும், பேச்சற்ற படங்களையே தயாரித்தார்... நடித்தார். உலகில் பல மொழிகள் உள்ளன. அத்தனை மொழியினருக்கும் சார்லியின் படம் அவர்கள் மொழியில் பேசுவது போலவே இருக்கும். ஆங்கிலம் பேசி நடித்தால் பிற மொழியினருக்கு அந்நியமாகிவிடும் என்று நம்பினார். 
     
தன்தாயின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். தாயின் மனநிலை குலைந்ததால் அவரை மனநலக் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளித்தார். சார்லியைப் புகழ்ந்து பேசிய மருத்துவரிடம் அந்தத்தாய், “சார்லி தன்மகன் இல்லை” எனச்சொன்னது பெருஞ்சோகம். சார்லியின் முதல் குழந்தை பிறந்த மூன்றே நாட்களில் இறந்து போனது. அந்தக் குழந்தையை அடக்கம் செய்த இடத்திலேயே தாயையும் அடக்கம் செய்தார். குழந்தை இறந்தபோதும் தாய் மறைந்த போதும் சிரிக்க வைத்த மேதை அழுதது அதிகம்.
     
1977 ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் நாளில் சார்லி மறைந்தார். கண்ணீர் ததும்பத் ததும்ப மண்ணில் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெரிய இடத்துச் சடலங்களைத் திருடிச் சென்று பணம்பறிக்கும் கொள்ளையர்கள் இருந்தனர். அதுபோலவே சார்லியின் உடலையும் திருடிச் சென்றனர். சடலத்தைத் திருப்பித்தரக் கொள்ளையர்கள் அதிகவிலை நிர்ணயம் செய்தனர். காவல் துறையினர் பலநாட்களுக்குப் பிறகு குற்றவாளிகளைக் கண்டுபிடித்துச் சடலத்தைக் கைப்பற்றினர். மீண்டும் கொள்ளை அடிக்காதவாறு ஆழத்தில் அவரது உடல் மறுஅடக்கம் செய்யப்பட்டு உறுதியான கல்லறை கட்டப்பட்டது. 
     
ஆனாலும் கல்லறையில் உள்ளது அவரது உடலல்ல என்றும் “ஒருபேச்சு” உலாவுகிறது.

நன்றி :
தினத்தந்தி, 25-12-2019


பரமசிவனைப் பார்க்கப் போனேன்... பாதியிலே திரும்பி வந்தேன்...


பரமசிவனைப் பார்க்கப் போனேன்
பாதியிலே திரும்பி வந்தேன்

-கோ. மன்றவாணன்

புகழ்பெற்ற கவிஞர் ஒருவரைப் பற்றி இணைய இதழொன்றில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். சில நாட்களிலேயே அந்தக் கட்டுரை இலக்கிய மாத இதழ் ஒன்றில் வேறொரு எழுத்தாளர் பெயரில் வெளியாகி இருந்தது. முதல் பத்தியும் இறுதிப் பத்தியும் அந்த எழுத்தாளர் எழுதிச் சேர்த்துள்ளார். இடையில் என் கட்டுரையை அப்படியே வரி பிசகாமல் வார்த்தை தவறாமல் நகல் எடுத்து இணைத்திருந்தார். புதிதாகத் தட்டச்சிட வேண்டிய அவசியம்கூட அவருக்கு ஏற்படவில்லை. படித்த எனக்குப் பெரிதும் அதிர்ச்சிதான். அந்த இதழாசிரியருக்கு இதுகுறித்து ஆதாரத்துடன் மின்னஞ்சல் அனுப்பினேன். இதழாசிரியரும் அந்த எழுத்தாளருக்குத் தெரிவித்துள்ளார். அதன்பின் அவர், என்னுடன் நட்புறவுள்ள எழுத்தாளர் மூலமாகச் சமாதானம் சொன்னார். இருப்பினும் அந்த இலக்கிய மாத இதழாசிரியர் என் நிலையை அவருடைய இதழில் பதிவு செய்தார். அந்த நேர்மைமிகு இதழாசிரியருக்கு நன்றி.

வாசகர்கள் நிரம்ப உள்ள இதழுக்கு நான் ஒரு கட்டுரையை அனுப்பி இருந்தேன். பத்திகளை முன்பின்னாக அச்சிட்டும்- வரிகளில் வார்த்தைகள் சிலவற்றை மாற்றியும் சேர்த்தும் அக்கட்டுரையை வெளியிட்டு இருந்தனர். என் சொற்றொடர்கள் பலவும் அப்படியே அச்சாகி இருந்தன. அந்தக் கட்டுரையை வேறொருவர் எழுதியதாக வெளியாகி இருந்தது கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அந்தக் கட்டுரைக்குள் நான் எழுதாத சிலவற்றையும் சேர்த்திருந்தனர். சட்டப் பிடிக்குள் சிக்காதவாறு சாமர்த்தியமாகத் திருடுவதாக அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள் போலும்.

த்தகையோர் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பெருமிதம் அடைகிறார்கள். இவர்களை எழுத்தாளர்கள் என்று சொல்வதைவிட “எடுத்தாளர்கள்” என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் யாவும் பொதுவானவை. யாரும் பயன்படுத்தலாம் என்று வாதிடக் கூடும். நான் மறுக்கவில்லை. ஆனால் தகவல்களைக் கொண்டு தங்கள் சொந்தச் சிந்தனையில் இருந்து கட்டுரையை எழுத வேண்டும். தங்களின் சொந்தச் சொற்றொடர்களைக் கொண்டு கருத்துகளை விவரிக்க வேண்டும். ஆனால் இத்தகைய எடுத்தாளர்கள் வெட்டு ஒட்டு முறையில் அடுத்தவர்களின் கட்டுரையையே தமதாக்கிக் கொள்கிறார்கள். பிறரின் அறிவுழைப்பைக் களவாடிக்கொண்டு “அசல் அறிஞர்களாகக்” காட்சி தருகிறார்கள்.
     
ஒரே சிந்தனை இருவருக்கு எழலாம் என்று வாதிடுவோர் உண்டு. அதையும் நான் மறுக்கவில்லை. ஒரே சிந்தனை என்றாலும் வெளிப்படுத்தலில் இருவருக்குள் வேறுபாடு இருக்கவே செய்யும். அப்படியும் வேறுபாடு இல்லை என்றால், அது அரிதினும் அரிதானதாகவே இருக்கும். ஆனால் ஒரே சிந்தனை இருவருக்கும் எழலாம் என்பதைத் தப்பிக்கும் பாதையாகக் கொண்டு அடுத்தவர்களின் சிந்தனைகளைக் கொள்ளையடிப்பதை ஏற்க இயலாது. பிறரின் எழுத்துகளை அப்படியே பயன்படுத்துவோர், ஏன் அந்த எழுத்தாளர்களின் பெயர்களை மறைக்க வேண்டும்?
     
நான் 15 வயது சிறுவனாக இருந்த காலத்தில் எங்களூரில் தமிழ்மன்றத்தில் செயலாளராக இருந்தேன். அங்குள்ள குமரக்கோவில் மண்டபத்தில்தான் இலக்கிய விழாக்களை நடத்துவோம். அதில் கிருபானந்த வாரியார்கூட வந்து பேசி இருக்கிறார். எங்கள் அமைப்பின் சார்பில்  ஒருநாள் மாலை வேளையில் கவியரங்கமும் பட்டிமன்றமும் நடத்தினோம். கவியரங்கத்துக்குத் தலைமைப் பொறுப்பேற்க ஒரு பெருங்கவிஞரை அழைத்திருந்தோம். அவரோ மாவட்டத்தில் உள்ள எல்லாக் கவிஞர்களுக்கும் தலைவர். அரசு ஆசிரியரும்கூட. பழகுவதற்கு இனியவர். அவரை நானும் பிற நண்பர்களும் பேருந்து நிறுத்தத்திலிருந்து விழா நடக்கும் கோவிலுக்கு அழைத்து வந்தோம். வரும்போது அவர், ”இன்று பள்ளியில் நிறைய வேலை. பேருந்தில் பயணித்தபடியே கவியரங்கக் கவிதையை எழுதி வந்துள்ளேன்” என்று எங்களிடத்தில் அவராகவே சொன்னார்.

கவியரங்கம் தொடங்கியது. நான் முன்வரிசையில் உட்கார்ந்து இருந்தேன். அப்போதெல்லாம் நாற்காலிகள் போடுவதில்லை. எல்லாரும் தரை டிக்கெட்டுகள்தாம். அவர், தலைமைக் கவிதையை வாசித்தார். அந்தக் கவிதை எனக்கு முன்னரே அறிமுகம் ஆகி இருந்தது. எண்சீர் விருத்தங்களில் அமைந்த கவிதையை அவர் படிக்கும் போது, அடுத்தடுத்த வரிகளை அவர் சொல்வதற்குமுன் நான் அருகில் இருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டே வந்தேன். கோவிலுக்கு எதிரே உள்ள சிவலிங்க முதலித் தெருவில்தான் எங்கள்  வீடு. உடனே ஓடிச்சென்று அந்தக் கவிதை வெளியான இதழை எடுத்துவந்து அங்கிருந்தவர்களிடம் காட்டினேன். தெசிணியை ஆசிரியராகக் கொண்ட “கவிதை” இதழில் சப்தங்கள் என்ற தலைப்பில் துறவி என்பவர் எழுதிய கவிதைதான் அது. அந்தக் காலகட்டத்தில் கவிதை இதழ், நாளிதழ் போன்ற தோற்றத்தில் வெளியாகி வந்தது. பிற்காலத்தில் புத்தக வடிவில் வந்தது. தலையங்கம் முதல் அனைத்தும் கவிதையிலேயே இருக்கும். அந்தக் கவிதை ஏட்டில் கவிஞர் வைரமுத்து அவர்களும் பல கவிதைகளை எழுதி இருக்கிறார். கவியரங்கத்துக்குப் பிறகு நடந்த பட்டிமன்றத்தின் நடுவரிடமும் அந்தக் கவிதையைக் காட்டினேன். கவிஞர்களுக்குக் கர்வம் இருக்கலாம். கள்ளத்தனம் இருக்கலாமா என்றேன்.
     
அந்தக் கவிஞரை யாரும் எதிர்த்துக் கேட்கவில்லை. அடுத்த நாள் எங்கள் அமைப்பின் துணைத்தலைவர் என்னை அருகில் உள்ள ஊருக்கு அழைத்துச் சென்றார். எதற்காக என்று என்னிடம் சொல்லவில்லை. அங்குள்ள பள்ளியில் அந்தக் கவிஞர் இருந்தார். திடுதிப்பென்று என்னை அலாக்காகத் தூக்கி அவர் காலில் போட்டு மன்னிப்புக் கேட்கச் சொன்னார்.
     
அய்யோ பாவம்... யார், யாரிடத்தில் மன்னிப்புக் கேட்பது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ழுபதுகளில் குமுதம் இதழில் வாரம் ஒரு கவிதையென்று கண்ணதாசன் எழுதி வந்தார். அத்தனைக் கவிதைகளும் அற்புதமான கவிதைகள். படித்துப் படித்து... ரசித்து ரசித்து எனக்குள் தாமாகவே அந்தக் கவிதைகள் மனப்பாடம் ஆகிவிட்டன. குமுதத்தில் வெளியான அந்தக் கவிதைகள் யாவும் கண்ணதாசனின் ஐந்தாம் கவிதைத் தொகுப்பில் உள்ளன. அதே கால கட்டத்தில் ஆனந்த விகடன் வார இதழில் வாரம் ஒரு கவிஞர் என்ற முறையில் கவிதையை வெளியிட முடிவு செய்தார்கள். அதன்படி நான்கைந்து வாரங்கள் கவிதைகள் வெளியாகின. அனைத்தும் நல்ல கவிதைகள்தாம். அந்த வரிசையில் ஓர் அருமையான கவிதை வெளியானது. அதை எழுதிய கவிஞரின் படமும் அச்சாகி இருந்தது. நானும் அந்தக் கவிதையைப் படித்தேன். “அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்” எனத்தொடங்கும் அந்தக் கவிதை, கண்ணதாசன் எழுதிக் குமுதத்தில் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அதைத் திருடி ஆனந்தவிகடனுக்கு அனுப்பி விட்டார் அந்தக் கவிஞர். புகழ்பெற்ற கவிஞரின் பாடலைத் திருடினால் அகப்பட்டுக்கொள்வோம் என்று அந்தக் கவிஞருக்குத் தெரியவில்லை. ஆனானப்பட்ட ஆனந்தவிகடன் ஆசிரியர் குழுவிற்கும் அந்தத் திருட்டுத் தெரிந்திருக்கவில்லை. அடுத்த வாரத்தில் கவிதை வெளியாகும் பக்கத்தில் ஓர் அறிவிப்பு இருந்தது. “சென்ற வாரம் வந்த கவிதையைக் கண்ணதாசன் எழுதியதாக வாசகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர். கவிஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கவிதையை வெளியிட்டு வந்தோம். கவிஞர்கள் நாணயமுள்ளவர்களாக நடந்துகொள்ளவில்லை என்பதால் இப்பகுதி நிறுத்தப்படுகிறது” என்று அறிவித்துவிட்டார்கள். (இப்பொருள்கள் கொண்ட ஆனந்தவிகடன் வரிகளில் எழுதி இருந்தார்கள்)
     
ள்ளிகளில் கல்லூரிகளில் கவிதைப் போட்டிகள் நடத்துகிறார்கள் என்றால் என்னிடத்தில் தலைப்புச் சொல்லிக் கவிதை எழுதித் தருமாறு கேட்கும் பெற்றோர்கள் இன்னமும் இருக்கிறார்கள். யாரோ எழுதிக் கொடுத்த கவிதைகளையே போட்டிகளில் சமர்ப்பித்துப் பரிசு வாங்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். இது காலங் காலமாய் நடந்து வருகிறது.
     
இப்படி எழுத்துகளைத் திருடுபவர்களைப் பற்றி முறையிட எங்களூர் சிவன் கோவிலுக்குச் சென்றேன். அவர்தான் முதன்முதலில் கவிதையைத் தருமிக்குக் கொடுத்துக் கவிதைத் திருட்டை ஊக்குவித்தவர் என்று தெரிந்து பாதி வழியில் திரும்பிவிட்டேன்.

நன்றி : திண்ணை

Wednesday, 11 December 2019

அப்பாவின் நாற்காலி




















அப்பா இருந்தவரை
அந்த நாற்காலிக்குக் கூட
அஞ்சி நடந்தோம் நாங்கள்.

காலொடிந்தும்
கையொன்று உடைந்தும்
பரணில் கிடக்கிறது அது.

இன்று
எங்கள் வீட்டுக் கூடத்தை
சோபா  அடைத்துக்கொண்டது

நாங்கள் வளர்க்கும் நாயொன்று
எப்பொழுதும்
உட்கார்ந்தும்
உறங்கியும் கொண்டிருக்கிறது
அந்த சோபாவில்தான். 

-கோ. மன்றவாணன்

மெளனச் சிறை




















ஊமையாகி
உள்ளுக்குள் குமறுகின்றன
சொல்ல வந்த நியாயங்கள்.

அகம் உலாவும் மர்மத்தை
முகம் காட்டிக்கொடுக்கும்
என்பதால்
சிரித்து நடிக்கவே
செலவிடுகிறேன் நேரத்தை.

ஒவ்வொரு நொடியும்
சீண்டிவிட்டுப் போகின்றன
குறுக்கும் நெடுக்குமாய்க்
கோர வவ்வால்கள்

மெளனம் உடைக்கவே
மொழிகள் முயல்கின்றன
தோற்றுத்தாம் போவோம் எனத்தெரிந்தே... 

-கோ. மன்றவாணன்