பொது
இடங்களும்
பொது
ஒழுங்கும்
வழக்கறிஞர்
கோ. மன்றவாணன்
அடுத்தவர்க்குத் தொல்லை அளிக்காத வகையில் நம்
நடவடிக்கைகள் அமைவதே பொதுஒழுங்கு. தனிஒழுங்கும் இல்லாமல் பொதுஒழுங்கும் இல்லாமல்
நம் சமூகம் தன்னல வெறியோடு அலைகிறது.
திருமண விழாவுக்குச் சென்றிருந்தேன். மற்ற
வாகனத்தை எடுப்பதற்குத் தொந்தரவு தராத வகையில் இடம்விட்டு என்வாகனத்தை வரிசை
முறையில் நிறுத்தினேன். திரும்ப வந்து பார்த்த போது என் வாகனத்தை எடுக்க முடியாத
வகையில் பல வாகனங்களைக் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி இருந்தார்கள். நான்
அவசரமாகச் செல்ல வேண்டி இருந்தது. வாகனத்தை எடுக்க முடியாததால் இரத்த அழுத்தமும்
எகிறியது. கடைசியில் என் வாகனத்தை எடுக்க முக்கால் மணிநேரத்துக்கு மேலானது.
இதுபோன்ற அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.
ஒரு வரிசையில் வாகனங்களை நிறுத்திய பிறகு,
அவ்வண்டிகளை எடுக்கும் வகையில் போதுமான பாதைவிட்டு, அடுத்த வரிசையில் வாகனங்களை
நிறுத்த வேண்டும். இவ்வாறே அடுத்தடுத்த வரிசைகளில் வாகனங்களை ஒழுங்கு முறையில்
நிறுத்த வேண்டும். ஆனால் இந்த ஒழுங்கைப் பலரும் பின்பற்றுவதில்லை. முதலில் யாரோ
ஒருவர் முறைதவறி நிறுத்தும் போது, மொத்த வரிசையும் சிதறிவிடுகிறது. ஒருவர்
செய்யும் தவறு, முழுசமூகத்தையும் பாதிக்கிறது.
சில திருமண மண்டபங்களில், சில விழாக்களில்
வாகனங்களை வரிசைமுறையில் நிறுத்தவும் எடுக்கவும் ஊழியர்களை அமர்த்துகிறார்கள்.
அவர்களும் ஒழுங்குபடுத்தத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் பேச்சைக் கேட்காமல்
மீறிச் சிலர் நடக்கிற செயல்கள், எல்லா நிகழ்விலும் நடந்தேறுகின்றன.
கடைவீதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டுத்
திரும்ப வந்தால், அவ்வளவு சீக்கிரத்தில் வாகனங்களை எடுத்து வெளிவர முடிவதில்லை.
மற்றவர்களுக்குப் பாதகம் ஏற்படுவதைப் பொருட்படுத்தாமல், தமக்குச் சாதகமாக வாகனத்தை
நிறுத்திவிட்டு வந்துவிடுவோருக்குக்கூட அதே முறையில் பதிலடி கிடைக்கிறது. ஆம்.
அதன்பின் வருவோர் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தும்போது, முன்னர் ஒழுங்கின்றி
நிறுத்தியவர்களின் வண்டிகளையும் எடுக்க முடிவதில்லை. எங்கோ ஓரிடத்தில் தீவைத்தால்
அது நாலா புறங்களிலும் பரவி பெரும் தீவிபத்து நடக்கும். அதற்கு ஒப்பானது, வரிசை
தவறி வாகனங்களை நிறுத்துவது ஆகும்.
ஆக ஒருவர் செய்யும் இந்தத் தவறு,
மற்றவர்களையும் தொற்றிக் கொள்கிறது. உரிய நேரத்தில் வாகனத்தை எடுத்துக்கொண்டு
செல்ல முடிவதில்லை. இதனால் பல மணி நேர உழைப்பும் வீண்போகிறது. பல முக்கிய பணிகளைச்
செய்ய முடியாமல் இழப்புகளும் நேரிடுகின்றன.
பேருந்தில் பயணம் போகும் போது முன்பக்க
சன்னல் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களில் சிலர், எச்சில் துப்புவதை வழக்கமாகக்
கொண்டிருப்பர். அந்த எச்சில் காற்றின் வேகத்தில் பின்னிருக்கையில் உள்ளவர்கள் மீது
தெறிக்கும். ”பேருந்து நிற்கும்போது எட்டத் தள்ளி எச்சில் துப்புங்கள்” என்றால்,
அவர் சற்று நேரம் துப்பாமல் இருந்துவிட்டு மறுபடியும் துப்புவார். இவ்வனுபவம்
பயணம் செய்யும் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
பான்பராக் சாப்பிடுவோர் அக்கம் பக்கம்
பார்ப்பதில்லை. பளிச்செனத் துப்பிவிடுகிறார்கள். அவர்கள் குபீர்எனச் சிரிக்கிற
நேரத்தில் அருகில் நிற்கிற வெள்ளுடை வேந்தர்கள் செங்கறையோடுதான் செல்ல வேண்டும். பொதுஇடங்களின்
சுவர்களில் தரைகளில் பான்பராக் கரைகளை எப்போதம் பார்க்கலாம். புற்றுநோயை
உருவாக்கும் பான்பராக்கைப் போடாமல் இருப்பதே அவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும்
நலம்பயக்கும்.
பேருந்து நிலையங்களில் நாள்தோறும் நடக்கிற
நிகழ்வுதான் இது. பேருந்து ஒன்று பஸ் நிலையத்துக்குள் நுழைகிறபோதே அந்தப்
பேருந்துக்காக காத்திருந்த பலர் ஓடி அதில் ஏறுவார்கள். இறங்க வேண்டியவர்கள் இறங்க
முடியாத நிலை. உள்ளிருப்பவர்கள் இறங்கினால்தானே வெளியில் நிற்பவர்களுக்கு இடம்
கிடைக்கும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் முட்டி மோதி உள்ளே வலுக்கட்டாயமாக
ஏறுவார்கள். பலரின் சிரமங்களைப் பொருட்படுத்துவதில்லை. இடத்தைத் தமக்கு ஒதுக்கீடு
செய்வதாகக் கருதிக்கொண்டு கைக்குட்டைகள், துண்டுகள் பைகள் போன்றவற்றை வெளியில்
நின்றபடியே பஸ் இருக்கையில் எறிவார்கள். சிலர் அதை எடுத்து வேறு இடங்களில் போடுவார்கள்.
இதனால் வாய்த்தகராறுகள், அடிதடிகள், மோதல்கள் ஏற்பட்டு மனத்துயர்கள்தாம் மிஞ்சும்.
மேலும் முன்னரே வந்து நீண்ட நேரம் காத்திருந்தவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.
அப்போதுதான் வந்தவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகின்றன. வலுத்தவனுக்கே இங்கே
வாழ்க்கை என்பது சமூக நேர்மைக்கு விடப்பட்ட சவால் அல்லவா?
இதற்கு மாறான நிகழ்வைப் பல ஆண்டுகளுக்கு முன்
நான் பெங்களூரு மாநகரப் பேருந்து நிலையத்தில் பார்த்து வியந்திருக்கிறேன்.
பேருந்து வருவதற்கு முன் தாமாகவே வரிசையில் ஆண்கள் பெண்கள் நிற்பார்கள். பேருந்து
வந்ததும் அதிலிருப்போர் இறங்கிய பிறகு, வரிசையில் நிற்போர் முறைப்படி ஏறுவார்கள். பஸ்
நிரம்பியதும் அடுத்த பேருந்து வரும்வரை காத்திருப்பார்கள். யாருக்கும் எந்தப்
பாதிப்பும் ஏற்படுவதில்லை.
நகரப் பேருந்துகளில், மாநகரப் பேருந்துகளில்
கூட்ட நெரிசல்கள் அதிகம். அத்தகைய பேருந்துகளில் சில இளைஞர்கள் முதுகில் மூட்டை சுமப்பது போல் ஒரு
பெரிய பையைச் சுமந்து, அடுத்தவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் முன்னும் பின்னும் தம்போக்கில்
மற்றவர்களை இடித்துவிட்டு அவசர அவசரமாக நடப்பார்கள். அவர்கள் முதுகில் இருக்கும்
பெரிய பைகள் மற்றவர்களை இடிக்கும். சிலர் அணிந்திருக்கும் கண்ணாடிகளை இழுத்துக்
கீழே விழச் செய்யும். அந்தப் பையில் துருத்தி இருக்கும் சில பொருட்கள்
மற்றவர்களின் ஆடைகளைக் கிழிக்கும். ஏன் சதைகளையும் கிழிக்கும். அத்தோடு
மட்டுமில்லாமல் அந்த இளைஞர்கள் அணிந்திருக்கும் கடினமான மூடு காலணிகள் பிறரின்
கால்களை நசுக்கும். கால் நசுங்கலில் வயதானவர்கள் அலறுவது அந்த இளைஞர்களின்
காதுகளுக்குக் கேட்காது. அந்தக் காதுகளில்தான் கர்ணின் கவச குண்டலம்போல் ஏற்கனவே
ஹெட்செட் கருவிகள்
பொருத்தப்பட்டிருக்கின்றனவே. பிறருக்குப் பாதிப்பு இல்லாமல் சற்றுக் கவனமாக
அந்த இளைஞர்கள் நடந்துகொண்டால், குறிப்பாக முதியோர்கள் மிகவும் வாழ்த்துவார்கள்.
பேருந்தில் பயணிகளின் நெரிசலைப் பயன்படுத்தி
சில இளைஞர்கள், பெண்கள் பகுதியில் முன்னேறிப் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார்கள்.
இளைஞர்களின் வன்முறைக்கு அஞ்சியும் வெளியில் சொல்ல முடியாமலும் அந்தப் பெண்களின்
மனம்படும பாடுகள் யாருக்குத் தெரியப் போகிறது?
பொதுஇடங்களில் எச்சில் துப்புவதும், சுவர்களில்
வாகனங்களில் சளியைத் துடைப்பதும், சாப்பாட்டு மிச்சங்களைப் பலர் நடந்து போகும்
பாதைகளில் வீசுவதும், அருகில் பெண்கள் இருக்கிறார்கள் என்ற கூச்சமோ வெட்கமோ
இல்லாமல் இயற்கைக் கடன்களைத் தீர்ப்பதும், நெடுஞ்சாலைகளில் உள்ள ஊர்காட்டிப்
பலகைகளில் சுவரொட்டி ஒட்டி மறைப்பதும் பொது ஒழுங்கைக் கெடுக்கும் செயல்கள்தாம்.
மக்கள் வாழும் சில தெருக்களைப் மூத்திரச் சந்துகளாகவும் பீ சந்துகளாகவும்
மாற்றியவர்கள் நம்மவர்களே! சுத்தம் சுகாதார மேம்பாட்டுக்கு அரசுகளை மட்டுமே நம்ப
வேண்டியதில்லை. அந்தக் கடமை நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. சுற்றுப் புறத்தைச்
சுத்தமாக வைத்திருப்பது ஆலயப்பணி போன்ற அறப்பணியே என்பதை எப்போது உணரப் போகிறோம்?
பூங்காக்களில் திரையரங்குகளில் கடற்கரைகளில்
வணிக வளாகங்களில் அலுவலகங்களில் புகைபிடிப்போர்கள் நிறைந்தே காணப்படுகின்றனர்.
புகைபிடிப்போரைவிட அவர்களின் அருகில் இருப்பவர்களுக்குத்தாம் பாதிப்புகள் அதிகம்.
பொதுஇடங்களில் புகைபிடிப்பதை அவர்கள் அறவே தவிர்க்க வேண்டும். அதுவே சமுதாய
நலனுக்கு அவர்கள் செய்யும் பேருதவி ஆகும். அதைவிட, அவர்கள் புகைபிடிப்பதையே
நிறுத்திக்கொண்டால் உடலுக்கும் நல்லது. ஊருக்கும் நல்லது.
பொதுநலம் விரும்பும் சிலர்கூட,
பொதுப்பிரச்சனைகளுக்காக ஊர்வலம் போகும் போது தெருவடைச்சான் போல் சாலையை அடைத்தவாறு
செல்கிறார்கள். அதனால் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டு, உரிய இடத்திற்கு உரிய
நேரத்தில் மக்கள் செல்ல முடியாத நிலை உருவாகிறது.
இவைபோல் இன்னும் பற்பல அன்றாட நிகழ்வுகள்
அரங்கேறிய வண்ணம் உள்ளன. பொதுஒழுங்கு இல்லாமல் போவதற்கு மக்களிடத்தில் உள்ள தன்நலம். அவசரம், சமூகப் பொறுப்பின்மை போன்றவைதாம்
காரணங்கள்.
நாகரிக சமுதாயம் என்பது, பொதுஒழுங்கு
மேம்படுவதில்தான் உள்ளது. நாம், நாகரிக சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா?
நன்றி
:
தினத்தந்தி, 22-09-2018