திரைநிழலில் வந்தார் கதைநாயகன்
தீபத் தட்டேந்தியது ரசிகர் திரள்
ஷூ காலைத் தரையில் வைத்தார்
சூறாவளியொன்று சுழன்றடித்ததே !
எகிறி எகிறி அடித்தார் தன் எழுபது வயதில்
இருபது வலியவர்களை;
கைகளால் குத்திக்
காங்கிரிட் சுவர்களைத் தகர்த்து உள்பாய்ந்தார்;
அந்தரத்தில் பறந்தார்;
ஹெலிகாப்டரில் தொற்றினார்;
ஊழல் வாதிகளை உதைத்தும் துவைத்தும்
ஊருக்குக் காட்டினார்;
ஒட்டுமொத்த அநீதிகளையும் அழித்தொழித்து
ஒட்டுமீசையை முறுக்கினார்
அறத்தைக் காத்தார் ஆன்மீக அவதாரமாய்!
அவரே
அரசியலுக்கு வந்தார் பூமிக்கு வந்த சாமியாய்
அடுத்த நாளே
ஆளும்கட்சிப் பின்னணியில் “திடீராய்வு” நடந்தது
நடுஇரவில் நடுங்கும் மனதில்
ஞானோதயம் உதித்து ஒளிர்ந்தது
அவரே
ஓட்டு கேட்டு வந்தார் நேரில்
ஊழல் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து
மேலும் ஒரு கட்சி கூடியதன்றி
வேறொன்றும் காணவில்லை மக்கள் திரள்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment