நாளைய அகழ்வாய்வாளன்
நதியோடிய தடம்தேடி
ஒட்டக இயந்திரத்தில் பயணிப்பான்
உலர்ந்துவிடும் நா
நதிதந்த சீதனங்கள்
பயிர்கள் மட்டுமல்ல
உயிர்கள் கூட!
நதிக்கரை ஓரத்தில்தான்
தோன்றி இருப்பான்
முதல் மனிதன்
பார்த்ததில்லை அவனை நாம்
பூமியைப் பாலையாக்கிவிட்டுப்
புதைந்து போவான்
கடைசி மனிதன்
பார்க்கப்போவதில்லை அவனை நாம்
அன்னையின் பால்சுரபியை
அறுத்துவிட்டு
அழுகின்றன குழந்தைகள் பால்கேட்டு
நதிகளின் மூச்சடக்கி
நகர்களை எழுப்பியவர்கள்
தொண்டை விக்குகிறார்கள் நீர்கேட்டு
நாளைய அகராதியில் வறண்டுபோகும்
நதி, ஆறு முதலிய சொற்களும்
மஞ்சள் பூசிக் குளித்தாடினாள்
மங்கலக் கண்ணகி,
மலர்சூடி வந்த காவிரியில் அன்று
சிட்டுக்குருவி
செத்துக் கிடக்கிறது நீரின்றி,
சரக்குந்து ஓடும் காவிரியில் இன்று
மூட நம்பிக்கைகளில் மேலுமொன்று கூடியது
நீர்கேட்டு
நீதிமன்றம் செல்வது
-கோ. மன்றவாணன்