Monday, 27 November 2017

யாருமில்லாத மேடையில்....





               யாருமில்லாத மேடை
               ஆளுமில்லாத அரங்கு
               சுவரில் ஒட்டியபடி
               சங்கீத கச்சேரியை அரங்கேற்றுகிறது
               சற்றே வாலாட்டும் பல்லி

               காற்று விடைபெற்றுச் சென்றிருக்கும்
               கீற்று அசையாத தென்னந்தோப்பு
               கூவிக் கொண்டிருக்கிறது
               குயில்

               தகிக்கிறது பாலைவனம்
               தடம்ஏதும் அற்ற மணல்வெளி
               மண்பிளந்து வெளிக்கிளம்பும் உயிர்த்துளியாய்
               எழத்துடிக்கிறது மனம்

               கொட்டி வைத்துக் காத்திருக்கிறேன் கவிதைகளை...
               கொத்த வரவில்லையே ஒரு குருவியும்

               ஓர் அருவக் காற்றாய் நின்று
               யாருமில்லாத மேடையில் பாடுகிறேன்
               செவிகளற்றுக் கிடக்கிறது திடல்


               ....கோ. மன்றவாணன்

No comments:

Post a Comment