கோப்பையைக்
கவிழ்த்துவிடுகிறார்கள்.
---கோ. மன்றவாணன்---
இலக்கியக்
கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். பேராசிரியர் ஒருவர் கவிதை நூலொன்றை விமர்சனம்
செய்தார். அது மரபுக்கவிதை நூல். அதைப் படிக்காமலேயே அதுகுறித்துப் பேசினார்
என்றால் அவருடைய அசாதாரண ஆற்றலை வியக்காமல் இருக்க முடியாது.
பொதுவாக
அணிந்துரையை, முன்னுரையைப் படித்துவிட்டு மொத்த நூலையும் படித்த மாதிரி பேசுகிற
வழக்கம் பெருகிவிட்டது. மிகவும் எதிர்பார்ப்போடும் மதிப்போடும் ஒருவரை அணுகி,
மதிப்புரை ஆற்ற அழைக்கிறார்கள்; வண்ண அழைப்பிதழ் அச்சடிக்கிறார்கள்; சுவரொட்டி
ஒட்டுகிறார்கள்; நாளிதழ்களில் சிலர் விளம்பரமும் செய்கிறார்கள்; வெளியூர்க்காரர்
என்றால் குளிரறை ஏற்பாடு செய்கிறார்கள்; அழைத்துவர மகிழுந்து கொண்டுவருகிறார்கள்.
நூல்குறித்து
விமர்சனம் செய்பவரின் சிறப்புகளை எல்லாம் செந்தமிழ்த் திறத்தால்
புகழ்ந்துரைக்கிறார்கள்; பொன்னாடை அணிவித்துப் பூங்கொத்துக் கொடுக்கிறார்கள்;
மினுமினு தாளில் பொதிந்து பரிசுப்பொருட்களைத் தருகிறார்கள்; விடைபெற்றுப்
போகும்போது பணஉறை அளிக்கிறார்கள்.
ஆனால்
அத்தகு பேராசிரியர்கள் அந்நூலைப் படிக்காமல் பேசிச் சென்றால், ஆர்வத்தோடு
கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் நிலை எப்படி இருக்கும். எதிர்பார்ப்போடு
காத்திருந்த நூலாசிரியரின் நுண்மனம் நொந்து நைந்து இருக்காதா? வருகை தந்த
சுவைஞர்கள் ஏமாற மாட்டார்களா?
அப்படித்தான்
அன்றும் நடந்தது.
மரபுக்
கவிதை நூலென்று தெரிந்துவிட்டது. எண்சீர் விருத்தங்களால் எழுதப்பட்ட நூல் என்பதும்
புரிந்துவிட்டது. அதுபோதுமே பேராசிரியருக்கு. அதனால் அவர் முன்னுரையையோ
அணிந்துரையையோகூடப் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
புதுக்கவிதையா
மரபுக்கவிதையா என்ற சென்ற நூற்றாண்டு தலைப்பில் அரைமணி நேரமாகப்
பேசிக்கொண்டிருந்தார். பலரும் பலகாலமாகச் சொல்லித் தேய்ந்த கருத்துகளையே மேலும்
தேய்த்தார். அது அந்நிகழ்வின் பேசுபொருள் அல்ல. பேச வேண்டிய பொருள், பேசாப்
பொருளாய் ஆனது.
“மரபுக்கவிதை
என்பது உறையில் உள்ள வாள்” என்றார். “புதுக்கவிதை என்பது உறையில் இருந்து வெளிவந்த
வாள்” என்றார். கூட்டம் கைதட்டி மகிழ்ந்தது. நவீன கவிதை பற்றி அவருக்குத்
தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் அதை
“மார்பில் செருகப்பட்ட வாள்” என்று சொல்லி இருப்பாரோ என்னவோ?
மரபுக்கவிதை
என்பது உறையில் உள்ள வாள் என்றால், பாரதியின் மரபுக்கவிதை அப்படித்தானோ?
சுதந்திரப்போர் காலத்தில் பாரதியின் கவிதையே மக்களின் ஆயுதமாகக்
கையாளப்பட்டிருக்கிறதே!
கவிதையைப்
பார்க்காமல் கவிவடிவை விமர்சித்துக்கொள்வதில் என்ன பெரிய ஆதாயம்? கோப்பையின்
வடிவத்தைக் குறைசொல்லும்போது, கோப்பையைக் கவிழ்த்துவிடுகிறார்கள். விளைவு... பருகத்
தந்த தேநீர் மண்ணில் கொட்டிப் பாழாகிவிடுகிறதே. உள்ளத்தைப் பார்க்காமல் உடலைப்
பார்த்துக் கூறுபோடுவது போல் அல்லவா இத்தகைய விமர்சனம் இருக்கிறது.
காலத்துக்கு
ஏற்ப வடிவங்கள் மாறும். சொல்லும் முறைகளும் மாறும். ஒன்றிலிருந்து ஒன்று
உருவாகிக்கொண்டு வந்தால்தான் அது வளர்ச்சி முகம். ஆனால் நுண்ணிய கவிமனம் மட்டும்
என்றும் ஆராதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
பேச்சை
முடிக்கும் தறுவாயில், கடைசி மூன்று மணித்துளிகளில் அந்தக் கவிநூலில் இருந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாக இரண்டு வரிகள் படித்தார். ஏன் அதைப் படித்தார் என்று
எங்களுக்கும் தெரியவில்லை. அவரும் சொல்லவில்லை.
கடைசிவரை
அந்த நூலில் என்ன சிறப்பு இருக்கிறது என்று சொல்லவில்லை.
முழுவதும்
படித்ததுபோல் காட்டிக்கொள்ளவும், தனக்கும் இலக்கணம் தெரியும் என்று
மிடுக்குயர்த்திக்கொள்ளவும் முயன்றார். அதனால் அந்த விருத்தங்களில் ஏழு இடங்களில்
தளை தட்டுப்படுகிறது என்றார். ஆனால் எந்த இடத்தில் எப்படித் தளை தட்டுப்படுகிறது
என்று இறுதிவரை சொல்லவில்லை. எங்கோ எப்போதோ தமிழ்படித்த என் உள்மனம் புலம்பியது.
“வெண்பா, கலிப்பா போன்ற பாவகைகளில் தளை தட்டுப்படுகின்ற சிக்கல் வரும்.
விருத்தப்பாக்களில் தளை தட்டுப்படுவதாகச் சொல்ல முடியாது”
விருத்தப்பா
வாய்ப்பாட்டுக்குரிய சீர்களில் தவறு ஏற்படலாம். காய்ச்சீர் வரவேண்டிய இடங்களில்
விளச்சீர், கனிச்சீர் போன்றவற்றை வைத்துவிடுவோர் உண்டு. குற்றியலுகரப் புணர்ச்சி
காரணமாகச் சீர் குறைந்து போவதும் உண்டு. ஆனால் விருத்தப்பாக்களில் தளை
பார்ப்பதில்லை. இவை என் பட்டறிவுக்குப் பட்டவை.
கூட்டத்தை
ஏற்பாடு செய்த நிர்வாகிகளை மறக்காமல் பாராட்டி உரையை நிறைவு செய்த பேராசிரியர்,
ஓரிடத்தில் கூட நூலாசிரியரைக் குறிப்பிடவே இல்லை.
குறிப்பு :
இதுகுறித்துக்
கலிபோர்னியாவில் உள்ள பொறியாளரும் புலவருமான செந்தமிழ்ச்சேய் அவர்களுக்கு
மின்னஞ்சல் செய்தேன். விருத்தப்பாக்களில் தளைபார்ப்பதில்லை என்று விளக்கமாகவும்
எடுத்துக்காட்டுகளுடனும் பதில் அனுப்பினார்.
No comments:
Post a Comment