இலக்கியக் கூட்டத்தில்
பேராசிரியர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். இன்னா நாற்பது குறித்தும் அதுதொடர்பான இலக்கிய
மேற்கோள்கள் குறித்தும் சுவைபடத்தான் பேசினார்.
அறிஞர்கள் கூறும்
கருத்தை மறுதலிப்பதும் அதைக் கேள்வி கேட்பதும் அறிவிலார் செயல் என்றார். எனக்கு அதிர்ச்சியாக
இருந்தது. ஏன் கேள்வி கேட்கக் கூடாது? ஒருவர் அறிஞர்தானா என்பதை எப்படி ஒப்புக்கொள்வது?
எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவர் தவறாக ஒன்றைச் சொல்லும் போது, அல்லது அவர்
கருத்தில் தெளிவின்மை இருக்கும் போது ஏன் கேள்வி கேட்கக் கூடாது? ஏன் ஐயம் எழுப்பக்
கூடாது? அவர் அறிஞர் என்று சொல்வதால் அவரிடத்தில் கேள்விகள் கேட்டு ஐயம் தீர்ப்பதுதானே
முறை. அதைவிடுத்து வேறு யாரிடத்தில் வினா எழுப்புவது? என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள்
எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருந்தன.
ஏன் என்ற கேள்வி இங்குக் கேட்காமல் வாழ்க்கையில்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
என்ற
திரைப்பாடலும் என் மனச்செவிக்குள் ஒலித்து அடங்கியது
அடுத்த சில நொடிகளிலேயே
இன்னொன்றையும் சொன்ன போது இன்னும் பேரதிர்ச்சி ஏற்பட்டது.
“பதினொருபேர் கொண்ட
ஓர் அவையில், ஒருபொருள் பற்றிப் பத்துப்பேர் ஒரே மாதிரி கூறுகையில்- அவையில் ஒருவர்
மட்டும் எழுந்து அதை எதிர்த்துக் கூறுவது பேதைமையின் உச்சம்” என்று பேராசிரியர் சொன்னதுதான்
அந்தப் பேரதிர்ச்சி ஏற்பட்டதற்கான நதிமூலம். என் உள்மனசு போர்க்கொடி தூக்க முயன்றது.
பல இலக்கியப் பொருள்கோள்களை
எடுத்துரைத்துத் தம் புலமைத்திறத்தை வெளிப்படுத்தி விட்டதாகக் கருதிப் பெருமிதத்தோடு
அமர்ந்தார் பேராசிரியர்.
கூட்டத்தில் இருந்த
இலக்கிய ஆர்வலர்கள் அவர்பேச்சைச் சுவைத்த விதத்தைப் பார்த்த போதும், இடையிடையே பலத்த
கைத்தட்டல்களால் ஆராவாரித்த போதும், அவர் சொன்ன அனைத்தையும் அப்படியே கூட்டத்தினர்
ஒப்புக்கொண்டதாகத்தான் அறிய முடிகிறது. ஒருவேளை அறிஞர் பேச்சை யாரும் மறுக்கக் கூடாது
என்ற பேராசிரியரின் கூற்றுக்கு கட்டுண்டோ என்னவோ...
எனக்கு ஐயங்கள்
ஏற்பட்டன. பதினொருபேர் கொண்ட அவையில் உள்ள அத்தனை பேரையும் எவ்வாறு அறிஞர்கள் என்று
அறிய முடியும்? முனைவர் போன்ற படித்த பட்டங்கள் மூலம் ஒருவரை அறிஞர் என்று சொல்லும்
போக்கே நம்மிடையே இருக்கிறது.
முனைவர் பட்டம்
மட்டுமே ஒருவரை அறிஞர் என்று தீர்மானித்துவிடும் என்றால், ஒரு முனைவர் பற்றி இன்னொரு
முனைவரிடம் கேட்டுப் பாருங்கள். ஆய்வேடுகளின் உண்மைத்தன்மை குறித்துப் பல்கலைக் கழகங்களிலேயே
விசாரித்துக்கொள்ளுங்கள். (தரமான தகுதியான முனைவர்களும் இருக்கிறார்கள்.)
பதவியால் ஒருவர்
அறிஞர் ஆகிவிடுவாரா? பேராசிரியர் ஆக ஒருவர் பணியாற்றினால் அவர் அறிஞர்தான் என்றாகிவிடுவாரா?
துறைத்தலைவர் ஆகிவிட்டால் அவர் பேரறிஞர் ஆகிவிடுவாரா? பல்கலைக்கழகக் குழுவில் இடம்பெறுபவர்கள்
பெரும்பாலும் பதவி மூப்பு அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாகத்
தமிழில் புதுச்சொல் உருவாக்கக் குழு அமைக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். அதுகுறித்து
ஆற்றல் இல்லாதவர்களும் அந்தக் குழுவின் பெரும்பதவிகளில் வீற்றிருப்பார்கள். மெய்யாகவே
சொல்லாக்கத்தில் தேர்ந்தவர்கள் இடம்பெறாமல் போய்விடுவார்கள். சொந்தப்பயன் எதுவும் பெறாமல்
பின்னிருந்து யாரோ சிலர் உதவுவதால் அக்குழு புகழ்பெறவும் கூடும். இதுதான் தற்போதைய
நிலைமை. படித்தொகை பெறுவதற்காகவே பல அறிஞர் குழுக்கள் கூடிக் கலைவதும் உண்டாம். பதவி
அடிப்படையில் ஒருவரைச் சிறந்த அறிஞர் என்று கருதுவது எல்லாத் தரப்பிலும் சரிவராது.
(தம் அறிவால் ஆற்றலால் பதவிக்குப் பெருமை சேர்ப்பவர்களும் உண்டு)
சரி... அறிஞர் என்றே
ஒப்புக்கொள்வோம். அந்த அறிஞர் அவருடைய துறையில் அனைத்தும் அறிந்தவராக இருக்க முடியாது.
அவருக்குத் தெரியாதவை சாதாரண ஒருவருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.
எல்லாரும் சொல்லித்
தேய்ந்த புகழ்பெற்ற எடுத்துக்காட்டுதான். என்றாலும் நினைவூட்டுகிறேன். உலகப் புகழ்பெற்ற
அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டின் இரண்டு பூனைகள் வளர்த்தாராம். ஒருநாள் இரவு அடைபட்ட அறையை
விட்டு வெளியே வர முடியாமல் கத்திக்கொண்டே இருந்தனவாம். அந்தப் பூனைகள் போய்வர கதவில்
இரண்டு துவாரங்கள் போடும்படித் தன் உதவியாளரிடம் சொன்னாராம். பெரிய பூனை போய்வரப் பெரிய
துவாரமும், சின்னப் பூனை போய்வரச் சின்னத் துவாரமும் போடும்படிக் கவனமாக அறிவுறுத்தினாராம்.
அப்போது அந்த உதவியாளர், “பெரிய துவாரத்திலேயே சின்னப் பூனையும் போய்வர முடியுமே” என்றாராம்.
மூளையை அதிகமாகப் பயன்படுத்திய மேதை ஐன்ஸ்டினுக்கே அந்த நிலைமை. (இந்நிகழ்வு வெவ்வேறு
விதமாகப் பதிவாகி உள்ளது. எது சரியென்று தெரியவில்லை. ஆனால் சொல்லவரும் கருத்து என்னவோ
ஒன்றுதான்)
ஒருபொருள் குறித்த
அறிவைப் பெரும்பான்மைக் கணக்கில் பத்துப்பேர் ஒப்புக்கொள்வதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டுமா? அந்த ஒருவர் சொல்வதை நிராகரிக்க வேண்டுமா? யார்சொன்னாலும் மெய்ப்பொருள் காண்பது
அறிவு என்று வள்ளுவர் சொல்வதைப் பெரும்பாலும் மேடையில் போற்றிப் பேசுபவர்கள், தன்வாழ்வில்
பயன்படுத்தத மறந்துவிடுகிறார்கள் அல்லது மறுத்துவிடுகிறார்கள்.
அறிவை அளப்பதற்கு
ஜனநாயக முறை சரிவராது. தலைஎண்ணிக்கையில் தீர்மானித்தால் தப்பும் சரியென்று சாதிக்கப்படுமே...
போதிக்கப்படுமே...
உலகம் தட்டையென
அனைவரும் சொன்னார்கள், கலிலியோ ஒருவரைத் தவிர! இதை ஜனநாயக முறையில் தீர்மானித்திருந்தால்
உலகம் உருண்டை என்ற உண்மை வெளிப்படாமல் போய்இருக்கும்.
பெரும்பான்மையர்
சொல்லிவிடுவதால் அதை ஏற்கத்தான் வேண்டும் என்ற பேராசிரியரின் வாதம், சாதாரணன் ஆகிய
எனக்கு நெருடலாகத்தான் இருந்தது. அதை அவரிடத்தில் அப்போதே நேரில் சொல்லத் துணிந்தேன்.
அவைமரபு; அவைநாகரிகம் என்றெல்லாம் சொல்லி என்னைத் தடுப்பதற்கென்றே என்கூடவே என் நண்பர்
ஒருவர் இருந்தார்.
அவை நாகரிகத்தால்தான்
பலர் “அனைத்தும் அறிந்த” அறிஞர்கள் ஆக மேடையுலா வருகிறார்களோ?