நடுக்கடலில் தத்தளிப்பவனுக்கு
எட்டிப் பிடிக்க
மரத்துண்டு அனுப்பும் காற்று
இருட்டில் வழிகாட்ட
மின்மினி பூச்சி வரும்
பசியோடு வந்தவள்முன்
மரம் உதிர்க்கும்
கனி
இயலாதவர்கள் முன்னால்
கருணை தெய்வம்
அவதரிக்கும்
கதியற்றோரை அணைக்க
எட்டுத் திசைகளிலும் கைகள் நீட்டி நிற்கிறாள்
இயற்கைத் தாய்
இதை
நம்பத்தான் முடியவில்லை
நேற்றுவரை
வீட்டு வாசலில்
குருவிக்
கோலம் போட்டிருந்தாள் என் மனைவி
அதில் வந்துவிழுந்தது
ஒற்றைச் சிறகோடு ஒரு குருவி
அதை
மெல்லெனத் தாங்கிச்சென்று
மெத்தைமீது வைத்துக் கொஞ்சுகிறாள்
என் செல்லக்குட்டி வர்ஷா
தக்காளி நறுக்கித் தருகிறாள்
தயிர்ச்சோறு ஊட்டுகிறாள்
மடியில் வைத்தபடி
வீட்டுப் பாடம் எழுதுகிறாள்
குருவியோ
குழந்தையைப் போல் தத்தி நடந்து
ரேஷன் அட்டையில் பெயரெழுதாத
உறவானது
ஒற்றைச் சிறகு குருவிக்குத்
திறந்தது
இன்னொரு வானம்
-கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment