Wednesday, 10 May 2017

நீர்வற்றிய குளம்




Image result for Pond without water




          வால்நெளித்து
          வந்த மீன்கள் கிச்சுக்கிச்சு செய்து
          அலைகளில் கவியெழுதி
          ஆழத்தில் கண்ணாமூச்சி ஆடினவே....

          மீனுக்குப் பொரிபோட்ட
          அருளாளர்கள்
          என்னை மறந்தனரே...

          என்வருத்தம் உணர்ந்த
          கரையோரத்து மரங்கள்
          மலராடை அணிவித்து
          மதிப்பூட்டினவே....

          இன்று
          மழைச்சொட்டு இல்லாமல்
          நா(ன்) வறண்டு கிடக்கிறேனே....

          நான்
          தீர்ந்து போனதால்
          திருக்கோயில் சாமிகளுக்குத்
          தினக்குளியல் இல்லையாமே..

          குடங்களைச் சாய்த்து
          என்னை அள்ளி அணைத்து
          இடையழகில் குழந்தையென அமர்த்தி
          ஊர்வலம் சென்ற மென்மகளிர்கள்
          இனி
          எப்போது திரும்புவார்கள்?

          என் மீது
          அடுக்கு வீடுகள் கட்ட
          நீள அகலம்
          அளந்துவிட்டுப் போனார்களே
          நேற்று.

          குளமாக இருந்த என்னை
          மட்டைப்பந்து களமாக ஆக்கி
          விளாசுகிறார்களே
          ஆறாக !

          ஆறாக ஆசைப்பட்டு-
          குளமாக வாழ்க்கைப்பட்டு-
          களமாக வறுபட்டுக் கிடக்கும் என்னை....

          எந்த இராமன் திருவடி மிதித்துக்
          கங்கையின்
          குழந்தையாக
          உயிர்ப்பிப்பான்?

          

          கோ. மன்றவாணன்





No comments:

Post a Comment