மேகங்கள்
வெளிநாடு சென்றனவோ
கோடை விடுமுறைக்கு?
வருணன்
தலைமறைவாக இருக்கிறானாமே
என்ன குற்றம் செய்தான்?
வெண்பஞ்சு அருவியில் நீராடிய
எங்களைச் சோதிக்கவா
வியர்வைக் குளியல்?
கார்ஓடும் நெடுஞ்சாலைகளில்
கானல்நீர் ஓடுகிறதே
கண்ணுக்கு எட்டிய தூரம்
நிலா இரவில்
வீட்டுக் குழாயைத் திறந்தால்
சுட்டு விடுகிறதே வெந்நீர்
சருகுகளாகி
விறகுகளாகிக் கிடக்கின்றனவே
காடுகள்
மழைதெய்வமாம்
மாரியம்மனுக்கு ஊர்தோறும் கோயில்கள்
அம்மனின் வேக்காட்டைத் தணிக்க
இளநீர்
சந்தனம்
தயிர் என அபிஷேகம் நாள்தோறும்
சாமி வெப்பம் தணிக்கின்றோம் நாங்கள்
பூமி வெப்பம் தணிக்க
சாமி நினைக்காதா?
சுற்றிலும்
துயர்பெருகிச் சுடும்போது
உதவும்
உள்ளத்துக்கு உவமை கேட்டேன்
பதில் சொல்லும் வகையில்
கோடையில்
கொட்டியது மழை!
- கோ. மன்றவாணன்
No comments:
Post a Comment