கவிதை விடைபெறும் காலம்…
கோ.
மன்றவாணன்
மரபுக் கவிதையாளர்கள், வசன கவிதையாளர்களை
எதிர்த்தார்கள். வசன கவிதையாளர்கள், புதுக்கவிதையாளர்களை வெறுத்தார்கள்.
புதுக்கவிதையாளர்கள், நவகவிதையாளர்களை- நவீன கவிதையாளர்களைப் பழிக்கிறார்கள்.
மரபுக்கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை ஆகிய இம்மூன்றிலும் சொல்லின்பம் உள்ளது. அத்தகைய
சொல்லின்பம், கவிதை ரசிகர்களைக் கவா்ந்திழுத்தது. என்றாலும் வெறும் சொல்லின்பமே
கவிதையாகி விடாது. இருப்பினும் அது கவிதைச்சோலைக்குள் நம்மைக் கைப்பிடித்து
அழைத்துச் செல்லும் தேவதையாக உள்ளது என்பதும் உண்மைதான். ஆனால்
நவீன கவிதையாளர்கள் சொல்லின்பத்தை “முழக்கம்” என்று சொல்லி அதற்கு மூடுவிழா
நடத்திவிட்டார்கள். எவ்வித அலங்காரமும் இல்லாமல் நிர்வாணமாகவே கவிதை இருக்க
வேண்டும் என்று நியாயம் பேசுகிறார்கள். இயல்பாகவே அவர்களின் கவிதைகளில்
சொல்லின்பம் வந்துவிட்டால், “அய்யோ…” என்று அலறி விலக்கி விடுகிறார்கள். கவிதைகளை
அப்படியே நினைவில் வைத்துக்கொள்ளச் சொல்லின்பம் உதவுவதை மறுக்க முடியுமா என்ன?
செவிவழி
காலத்தில் மரபுக்கவிதைகள் வலம் வந்தன. அதில் உள்ள எதுகை மோனை சீர்வரிசை,
யாப்பமைப்புகள் யாவும் கவிதையை நினைவில் நிறுத்திக்கொள்ள வழிசெய்தன. யாப்பை
உடைத்துப் புதுக்கவிதை யாக்கியவர்கள், மோனையை மட்டும் புளியங்கொம்பாய்ப்
பிடித்துக்கொண்டு ஊஞ்சல் ஆடினார்கள். ஓலைச்சுவடி, காகிதம் தாண்டி கையிலே இணையத்தை
வைத்திருக்கும் காலத்துக்கு நாம் வந்துவிட்டோம். மனப்பாடம் அவசியம் இல்லை. ஆனாலும்
எந்த விதத்திலாவது மனதுக்குள் ஆட்சி செலுத்துவதே கவிதையின் வலிமையாகும்.
“சொல்லின்பம் என்பது சொல்லில் அதிக அர்த்தத்தை
ஏற்றும்போது வருவதல்ல. சொற்களின் சுமையை நீக்கும்போது இனிமை தானாகவே வந்துசேரும். ” என்று ஆசை
அவர்கள் எழுதியுள்ளார். ஆனால் நவீன
கவிதைகளில் சொற்களில் மட்டுமல்ல கவிதைப்போக்கிலும் நோக்கிலும்கூட பெருஞ்சுமை
ஏற்றப்படுகின்றன. பலவற்றைப் படிக்கும்போது கவிதைகளா எனக் கேட்டுவிடத் தோன்றுகிறது.
அப்படிக் கேட்டால் நாம் ஏதோ அறிவில் குறைந்தவர்கள் எனப் பிறர் எண்ணக்கூடும் என்ற
அச்சத்தில், “ஆகா… சபாஷ்!” என்று சொல்லி நம்மை நாமே மேதாவியாகக்
காட்டிக்கொள்ள வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். நவீன கவிதை புரியவில்லை என்று
சொன்னால், நம்மைப் பழைமைவாதிகள் என்று சொல்லிப் பரணில் தூக்கிப்போட்டு விடுவார்களோ
எனப் பயந்துபோய்… புரியாமலேயே பாராட்டி விடுகிறோம். முன்னிலும் மேன்மையானதாக-
பிரமிக்க வைப்பதாகப் புதுமை இருந்தால், பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்க யார்
தயங்குவார்கள்? அதே நேரத்தில் மரபுக் கவிதைகளோ புதுக்கவிதைகளோ வெறும்
சொல்லடுக்குகளாக மட்டுமே இருந்தால் அவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை.
அவை வெற்றுச் சுவா்களாக இருக்குமே தவிர வீடாகி விடாது. அதற்காக அவர்களைத் தண்டிக்க
வேண்டியதுமில்லை. அவர்கள், கவிதையின் முதல்படியில் ஏறி ஏறித் தடுக்கி
விழுகிறார்கள். எப்படியாவது ஏறி விடுவார்கள். ஏறவில்லை என்றால் ஏற்கப்படாமல்
போய்விடுவார்கள். அவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
இன்றைய
கவிதைப்போக்கு வெகுவாக மாறிவிட்டது. காட்சியின்பம் நோக்கிக் கவிதை
நகர்ந்துவிட்டது. மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். ஆனால் பழைய கவிதைகளில்
காட்சியின்பம் இல்லாமல் இல்லை. விதவிதமான உத்திகளுக்கும் குறைவில்லை. எனினும்
அவற்றை நவீன கவிதையாளர்கள் பலர் படிக்கவில்லை. படித்தவா்களோ அவற்றை வேண்டுமென்றே திரைமறைப்புச்
செய்கிறார்கள். இன்றைய சிலரின் நவீன கவிதைகளில் சொற்களின் பிரயோகம், வாக்கியங்களின்
அமைப்புமுறை, இதுவரை அறியப்படாத கருத்துப்பார்வைகள், மிகுநுட்பமான அணுகுமுறைகள்
ஆகியவை புதுமையாகத்தான் உள்ளன. இவை வரவேற்கப்பட வேண்டியவையே. ஒவ்வொரு 20
ஆண்டுகளுக்கும் ஒருமுறை எல்லாத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்த
வண்ணம் உள்ளன. கவிதை அதற்கு விதிவிலக்கல்ல. விதிவிலக்காக இருக்க வேண்டிய அவசியமும்
இல்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கவிதை மெருகேறிக்கொண்டே வரவேண்டும்.
இருப்பினும்
கவிஞா்களாக இருப்பவர்களுக்கே- கவிதையின் சுவைஞர்களுக்கே கூட இன்றைய கவிதைகள்
புரியாமல் போய்விடுகின்றன. சிதறுண்ட கனவுகள் போல அவை உள்ளன. அதனால் அவை மனத்தில்
பதியாமல் போய்விடுகின்றன.
நவீன
கவிதையாளர்கள் சிலர், பல பக்கங்களைத் தாண்டும் நெடுங்கவிதைகளை எழுதுகிறார்கள்.
பத்தியோ இடைவெளியோ இன்றி மூச்சு முட்டமுட்டக் கவிதை எழுதுகிறார்கள். புது மலைபடுகடாம்
எனச் சொல்லத்தக்க வகையில் நீண்ட கவிதைகளை நவீன கவிஞர்கள் எழுதுகிறார்கள். நீளமான
கவிதைகள் தேவையா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விதமாகக் காட்சி தரக்கூடிய படிமங்களையே வெகுவாகப் பாராட்டுகிறோம். அதற்காக
வெகுநீண்ட கவிதை வரிகளை வாசிக்க வேண்டிய சுமையை வாசகன் தாங்க வேண்டிய நிலை உள்ளது.
“படிமம்” என்று புதுப்பெயரிட்டு நவீன கவிதையாளர்கள் தங்களைப்
புதுஉலக பிரம்மாக்கள் எனப் பறைசாற்றிக்கொண்டு உலா வருகிறார்கள். ஆனால் நமக்குத்
தெரிந்து சங்ககாலம் தொட்டுக் காலம்தோறும் மலர்ந்துவந்த கவிதைகளில் நிறைய படிமங்கள் உள்ளன. அவற்றை நடுநிலையோடு அணுகினால்
நல்லது. ஆகப் படிமங்கள், நவீன கவிதையாளர்களின் புதுக்கண்டுபிடிப்பும் அல்ல.
சொந்தச் சொத்தும் அல்ல. அந்தப் படிமங்களை புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ரசித்து,
புதுக் கண்டுபிடிப்பாகச் சொல்லும்போதுதான் அவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
மற்றபடி சாதாரணமாகக் கவனத்தை ஈா்க்கவில்லை. ஏன் எழுதிய கவிஞனுக்கே தன்கவிதையில்
இந்த மாதிரியான படிமம் இருக்கிறது என்று தெரியவில்லை. பிறர் அது இருக்கிறது இது
இருக்கிறது என்று சொல்லும்போது “ஆம்... அப்படித்தான்” என்று தலையசைத்து விடுகிறார்கள்.
புகழ்பெற்ற
எழுத்தாளர்கள் தமக்கு வேண்டியவா்களின் கவிதைகளைச் சிலாகித்துப்
பரிந்துரைக்கிறார்கள். அவா்களுக்குப் புகழ்வெளிச்சமும் தருகிறார்கள்.
வேண்டாதவர்களின் கவிதைகள் நல்லனவாக இருந்தாலும் அவைபற்றிப் பேசாமலோ அல்லது
எதிர்த்தோ நடுநிலை மீறுகிறார்கள். பரிந்துரை என்பதுகூட நடுவு நிலைமை தாண்டிய நவீன
இலக்கிய ஊழலாகவே உள்ளது.
நவீன
கவிதையாளர்கள்- நவீன எழுத்தாளர்கள் சிலரைப் பார்க்கும்போது அவா்களிடத்தில் படிமம்
என்றால் என்ன என்று கேட்பது எனக்கும் பழக்கம் ஆகி வழக்கம் ஆகிவிட்டது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள். படிமம் என்றால் என்னவென்று தெரியவில்லை
என்று சிலர் நாணயமாகத் தெரிவித்தார்கள். உவமை, உருவகம் ஆகியவற்றைப் படிமம்
என்றார்கள். சிலர் அவற்றை மறுத்தார்கள்.
ஆக அவா்களும் நவீன கவிதைகளை எழுதித்தான் வருகிறார்கள். அடிக்கடி பேச்சில்
படிமம் படிமம் என்று சொல்வதையே நாகரிகத் தகுதியாகக் கருதுகிறார்கள். பலருக்கும்
பலவாறு காட்சிதரக் கூடியதாகப் படிமங்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள். இது
ஒருவகையில் சரியாகத் தெரியும். மறுவகையில் உண்மைக்குப் புறம்பாகத் தெரியும்.
யானையைப் பார்த்த பார்வை அற்றவர்களைப் போல ஒவ்வொருவரும் ஓர் அர்த்தம் கொள்ளலாம்.
உண்மையை யாரே அறிவார்? என்றொரு பார்வையும் உள்ளது.
நவீன
கவிஞா்கள் என அறியப்பட்டவா்களின் கவிதைத்
தொகுப்புகளில் பல நல்ல கவிதைகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால்
அந்தக் கவிதைகளை சாதாரண வாசகா்களால் எளிதில் நெருங்க முடியாது. ஒரு பிரபல கவிஞரின்
பெயரைக் குறிப்பிட்டு, அவருடைய ஒரு கவிதையைப் புரிந்துகொள்ள ஆறு மாதம்
தேவைப்பட்டது என்பதையே பெருமையாய்ப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். அத்தகைய நல்ல
கவிதைகளை அடையாளம் காண்பதற்கே ஏதோ அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதுபோல்
மிகவும் மெனக்கெட வேண்டியுள்ளது. கதைகளில் சொல்வதுபோல்… ஏழுகடல் தாண்டி, ஏழுமலை
தாண்டி, ஏழு சுரங்கங்களைத் தாண்டி, ஏழு நாகங்களைத் தாண்டி ஆங்கோர் பொந்தில் இருக்கும்
ராஜ நாகத்தின் வாயில் உள்ள இரத்தினத்தை எடுப்பதுபோல்தான் உள்ளது நவீன கவிதைகளைப்
படிக்கின்ற சிரமம். பல நேரங்களில் அந்த இரத்தினமும் வெறும் கூழாங்கல்லாக
இருந்துவிடுகிறது. இன்றைய மின்னல் வேக உலகில் இவ்வளவு சிரமப்பட்டுக் கவிதையைப்
படிக்கத்தான் வேண்டுமா? எளிமையாக- புரியும்படியாக எழுதினால் நவீனத்துக்குப் பங்கம்
ஏற்பட்டுவிடுமா? “சொல்புதிது பொருள்பொதிது சோதிமிக்க நவகவிதை” என்று தம் கவிதைகளைப் பாரதியார்
குறிப்பிடுகிறார். புதுமைக்கவியாக மிளிர்ந்த பாரதியாரின் எளிமையும் இனிமையும்தாம்
அவரை மக்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தன. மக்களை விட்டு அந்நியப்பட்டுக்
கிடக்கும் நவீன கவிதைகளால் என்ன மாற்றத்தை நிகழ்த்த முடியும்?
இன்றைய
நவீன இலக்கிய இதழ்களில் வரும் நவீன கவிதைகளை என்னுடைய வழக்கறிஞா் தோழா்களிடத்தில் கொடுத்துப்
படிக்கச் சொன்னேன். படித்தும் புரியவில்லை என்றார்கள் சிலர். படிக்கவே முடியவில்லை
என்றார்கள் பலர். அவற்றையே கவிஞா்களிடத்தில் கொடுத்தேன். அவா்களிடத்திலும் இதே
நிலைமைதான். சரி இளைஞா்களிடத்தில் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். “தலை சுத்துது ஆளை விடுங்க” என்றார்கள். அவர்களிடத்தில் இந்தக் கவிதைகளில்
எந்தச் சொல்லாவது புரியவில்லையா? என்று கேட்டேன். எல்லாச் சொற்களும் புரிகின்றன
என்றார்கள். அப்படியானால் கவிதைகள் ஏன் புரியவில்லை? தகவல்களை- எண்ணங்களைக்
கடத்தும் சக்தி அந்தக் கவிதைகளுக்கு எப்படி இல்லாமல் போய்விட்டது?
சில
நவீன கவிதைகளைப் பற்றிப் பிரபல எழுத்தாளர்கள் விளக்கம் சொல்லும்போதுதான் வியக்க
முடிகிறது; ரசிக்க முடிகிறது. நல்ல கவிதைகளுக்கு இடைப்பூசாரிகள் தேவையில்லை.
சிறந்த கவிதைக்கு உரையாசிரியர்களோ பாஷ்யக்காரர்களோ தேவையில்லை. நல்ல கவிதை தானாகவே நம்மோடு பேச வேண்டும். இல்லை
எனில் கவிதைப்பண்டிதர்கள் என்றோர் இனம் தோன்றி, இல்லாதததையும் பொல்லாததையும் பேசி,
கர்வ தேசத்தில் காலாட்டிக் கொண்டிருப்பார்கள்.
நவீன
கவிதைகளின் நல்ல சுவைஞராகத் திகழும் கடலூர் சீனு அவர்களிடத்தில் கேட்டேன். நவீன
கவிதைகள் என்ற அடையாளத்தோடு வரும் கவிதைகளில் பெரும்பாலும் தனக்கும் புரியவில்லை
என்று, ஒரு நீதிமானாக ஒப்புக்கொண்டார்.
அங்கொன்றும்
இங்கொன்றுமாக எடுத்துக்காட்டுகளைக் காட்டி இவற்றுக்கெல்லாம் மறுப்புகள்
வரக்கூடும். நல்ல கவிதைகளை அடையாளம் காட்டக்கூடும். இன்றைய நவீன கவிதையைக் குறித்த
ஒட்டுமொத்த பொதுப்பார்வைதான் இது.
பறவைகள்
பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள்
பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
என்பதுபோல் கவிதைகள் மரபுக்கவிதை என்றும்
புதுக்கவிதை என்றும் நவீன கவிதை என்றும் பலவாறு இருக்கட்டும். அதில் தவறில்லை.
ஒருசாரார் இன்னொரு சாராரின் கவிதையைக் கவிதை அல்ல என்று ஜீன்ஸ் பேண்ட் கிழியச்
சண்டைபோட வேண்டியதில்லை. உணவகத்தில் யாருக்கு என்ன உணவு பிடிக்கிறதோ அதை அவர்
உண்டு மகிழட்டும். இட்லி, தோசை, பூரி, பொங்கல் எல்லாம் உணவு வகைதான். மரபுக்கவிதை,
புதுக்கவிதை, நவீன கவிதை எல்லாமும் கவிதை வகைதான். ஒரே மாதிரியான உணவைத் தொடர்ந்து
சாப்பிடச் சலிப்புதான் வரும். சலிப்பு
வராத அளவுக்கு அடுத்தடுத்த உணவைச் சுவைக்கலாம். ஆனால் எல்லா உணவுகளும் சுவைக்கத்
தக்கனவாக இருக்க வேண்டும். தொண்டைக்குள் இறங்காத உணவும் சிந்தைக்குள் பதியாத
கவிதையும் ஒன்றுதான். ஒரே மாதிரியான சுவைஞர்கள் இருக்க முடியாது. இருக்கவும்
கூடாது. சுவைஞர்களும் பலவிதம். சுவைகளும்
பலவிதம். யாருக்கு எந்தச் சுவை பிடிக்கிறதோ அந்தச் சுவையை அவர்கள் அதிகமாக நுகர
உரிமை உள்ளவர்கள். எல்லா உணவு வகைகளையும் அவ்வப்போதான நேரங்களில் சுவைக்கத்
தெரிந்தவர்கள்தாம் நளபாகம் அறிவதுபோல் கவிபாகம் அறிந்தவர்கள். ஓர் உண்மையை
ஒப்புக்கொள்ள வேண்டும். நவீன கவிதைக்கு அறிவார்ந்த வாசகர்கள் உள்ளனர். அவர்கள்
வாசிக்கட்டும். நவீன கவிதையைத் தாண்டியும் கவிதை உள்ளது. அடுத்த புதுமைக்கு
வழிவிடாமல் தடைபோட இங்கு யாருக்கும் உரிமையில்லை.
இன்றைய
நவீன கவிதையாளர்கள் இதுதான் கவிதை என வரையறை செய்தால் நாளை உருவாகும் அதிநவீன
கவிதைக்கு இன்றே அவர்கள் ஆசிட்பால் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம். கவிதை என்றால்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு காலத்திலும் மேலாதிக்க வாதிகள்
தடைபோட்டுச் சர்வாதிகாரம் செய்தார்கள். தடை உடைத்துப் புதுப்புதுச் சிகரங்களில்
வெற்றிக்கொடி நாட்டி வந்துள்ளது கவிதை.
இப்படி
எழுதுவதால் நான் நவீன கவிதைக்கு எதிரி அல்ல. அதைத் தாண்டியும் கவிதை வளர வேண்டும் என்று
ஆசைப்படுபவன். ஆசையில் ஆசிட் ஊற்றி விடுமோ காலம்? அனைத்து எழுத்து வடிவங்களிலும்
கவிதைக்கு மட்டுமே காதலைப்போல் ஒரு காந்த சக்தி உண்டு. அந்தச் சக்தி முடங்கிப்போய்
விடுமோ? முடமாகிப்போய் விடுமோ?
பொதுவாகக்
கவிதையைச் செய்கிறார்கள். செய்வது கவிதையல்ல; மலர்வது கவிதை! என்பதெல்லாம்
ஒருபுறம் இருக்கட்டும்.
வரவர
கவிதைக்கு ரசிகர்கள் குறைந்து வருகிறார்களே… ஏன்? கவிதைப் புத்தகங்களைப்
பதிப்பகங்கள் பதிப்பிக்க மறுக்கின்றனவே… ஏன்? நூலகங்கள், கவிதை நூல்களை வாங்காமல்
தவிர்க்கின்றனவே… ஏன்? இந்த நிலைமைக்கெல்லாம் எது காரணம்? யார் காரணம்?
இவற்றுக்கெல்லாம்
விடைகாண வேண்டிய தருணமிது. இல்லாவிட்டால் கவிதை விடைபெறும் காலம் வந்துவிடும்.
malaranicham@gmail.com
No comments:
Post a Comment