Monday, 16 December 2024

வழி அடைக்கும் கல்லா? வழி அமைக்கும் கல்லா?

 


வழி அடைக்கும் கல்லா...

வழி அமைக்கும் கல்லா...


-கோ. மன்றவாணன்-


திருக்குறள் அறன் வலிஉறுத்தல் அதிகாரத்தில் ஒரு குறள்.

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃது ஒருவன் 

வாழ்நாள் வழிஅடைக்கும் கல். 

வீழ்நாள் என்றால் வீணான நாள் அல்லது நாள் தவறாமல் எனப் பொருள்படும். வீழ்நாள் படாஅமை நன்று ஆற்று என்றால் நாள் தவறாமல் அறம் செய்க என்பதாகும். வள்ளுவர் நமக்கு அறிவுறுத்தும் செய்தியும் அதுதான். 

ஆனால், அஃது ஒருவன் வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்ற வரிக்கு உரை எழுதும் பொழுதுதான், பலர் வழி தடுமாறுகின்றனர்; வழுக்கியும் விழுகின்றனர்.

மணக்குடவர், காளிங்கர், பரிமேல் அழகர், பரிதியார் உள்ளிட்ட பழம் உரையாசிரியர்கள், வாழ்நாள் வழி அடைக்கும் கல் என்பதற்கு அடுத்தடுத்து பிறக்கும் பிறவியைத் தடுக்கும் கல் எனப் பொருள் கூறி உள்ளனர். இதற்கு ஆதரவாகப் பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரை சேரலாம் என்ற இன்னொரு திருக்குறளையும் துணைக்கு அழைக்கலாம். அந்தக் குறளின் மெய்ப்பொருள் என்னவென இன்னொரு கட்டுரையில் ஆராயலாம்.

எல்லாரும் சொர்க்கத்துக்குப் போக ஆசைப்படுகிறார்கள். அதே வேளையில் இறந்து போக யாருமே விரும்புவது இல்லையே. இந்த முரணை எண்ணிப் பாருங்கள். ஆக எல்லா மனிதர்களும் வாழவே ஆசைப்படுகிறார்கள் 

நீடு வாழ்வார் என்ற சொல்தொடரை எழுதியவரும் வள்ளுவர்தான். அதன்படி, மக்கள் நீடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம்.  வாழக் கற்றுக் கொடுப்பதுதானே திருக்குறள். 

“இந்த உலகம் துன்ப மயமானது.”

“மறுபிறவி உண்டு.”

நாம் இந்தப் பிறவியில் அறம் செய்தால் இறைவனை அடையலாம்.  பாவம் செய்தால் மீண்டும் மீண்டும் இந்த உலகில் நாயாய் நரியாய்ப் பிற உயிரியாய்ப் பிறந்து துன்பம் அடைய நேரிடும். 

இந்த உலகில் நாம் தீமை செய்தால் நரகத்தில் தண்டனை கிடைக்கும். நன்மை செய்தால் சொர்க்கத்தில் மகிழ்ச்சியில் திளைக்கலாம்.

இந்தக் கருத்துகள் எல்லாம் காலம் காலமாக நம் மக்களின் மனதில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இவற்றை மெய்ப்பிக்க எந்த ஆதாரமும் கிடையாது. 

ஆனால் நம் முன்னோர்கள் ஏன் இந்த அறிவுக்குப் பொருந்தாத கருத்துகளை மக்கள் மனதில் பதித்து வந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? 

ஆனாலும் அதை நல்நோக்கத்தில் சிந்தித்துப் பார்த்தால், அதிலும் ஒரு பயன் இருப்பது தெரியவரும்.

மனித மனம் விசித்திரமானது. ஒன்றை நம்பி விட்டால், அதுவே மெய்யென உறுதி கொண்டுவிடும். அதை மாற்றுவது என்பது எளிதான செயல் இல்லை. அறிவா நம்பிக்கையா என வந்தால் பெரும்பாலும் மனது நம்பிக்கையின் பக்கமே சாய்ந்து விடுகிறது; சார்ந்து விடுகிறது.

ஒரு மனிதரை இயக்க; ஒன்றை நோக்கிச் செயல்படுத்த உளவியலில் இரண்டு வழிமுறைகள் உண்டு. ஆசையைத் தூண்டி நல்வழிப் படுத்துவது ஒன்று. அச்சுறுத்தித் தீயவழியில் செல்வதைத் தடுப்பது இன்னொன்று.

நம் முன்னோர்கள் இந்த இரண்டு வழிமுறைகளையும் கையாண்டு சமூக வாழ்வைச் சீர்படுத்த முயன்றார்கள். சமய அன்பர்களின் நோக்கமும் வள்ளுவர் சொன்னது போல், நாள்தோறும் அறம் செய்க என்பதுதான். அப்படி செய்யாவிட்டால் என்ன என்று எதிர்க் கேள்வி மக்கள் இடையே எழும். அறம் செய்வதை அலட்சியமாக அவர்கள் நோக்கவும் கூடும். 

ஆதாரமற்ற நம்பிக்கைகளைச் சொல்லித் திருத்த நினைப்பதைவிட, அறிவான வழிமுறைகளில் திருத்துவதே உகந்த முறை. 

இந்த நிலையில்தான் அறம் செய்தால் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். இறைவனிடம் அடைக்கலம் ஆகலாம் போன்ற ஆசை வார்த்தைகள் கூறி, அறம் செய்யவும்; ஒழுக்கமாக இருக்கவும் ஊக்குவித்தார்கள். அறம் செய்யாமல் போய்விட்டால் நரகத்தில் எண்ணெய்ச் சட்டியில் வறுபடுவாய் எனவும் அச்சுறுத்தினார்கள்; 

ஆனால் இன்றைய அறிவியல்படி சிந்தித்துப் பார்த்தால் அவற்றில் எதுவும் உண்மை இல்லை. கடந்த காலங்களைவிட இன்று மக்கள் மிகுந்த அறிவைப் பெற்று இருக்கிறார்கள். நிறைய சிந்திக்கவும் செய்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகிறது. 

இந்நிலையில்... ஆதாரமற்ற நம்பிக்கைகளைச் சொல்லித் திருத்த நினைப்பதைவிட, அறிவான வழிமுறைகளில் திருத்துவதே உகந்த முறை. அந்த முறையில் திருக்குறளுக்கு உரை காண்பதே சரி என நினைக்கிறேன். அப்படியானால், வழி அடைக்கும் கல் என்பதற்குப் பிறப்பைத் தடுக்கும் கல் என்று பொருள் கொள்ள முடியாது. 

வழக்கறிஞர் கு.ச. ஆனந்தன் அவர்கள், வழி அடைக்கும் கல் என்ற சொல் தொடருக்கு வழிஅமைக்கும் கல் என்று பாடம் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஓலைச்சுவடிகளில் காலம் காலமாய் எழுதி வருகிற பொழுது... படி எடுக்கின்ற பொழுது அவ்வாறு நேரிடவும் வாய்ப்பு உண்டு. தமிழ்த்தென்றல் திரு வி கலியாண சுந்தரம் அவர்களும் வழி அமைக்கும் கல் என்ற பொருளில்தான் இந்தக் குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். அது, அறிவியலுக்கு ஏற்றதாகவும் அமைந்துவிடுகிறது.

புலவர் குழந்தை போன்றோர் வாழ்நாளில் வரும் தீமைகளைத் தடுக்கும் கல் என்று பொருள் கூறி இருக்கின்றார்கள். அதனை ஒட்டியே நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும் உரை எழுதி உள்ளார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல், வழி அடைக்கும் கல் என்பதை நேரடியாகப் பார்த்தால், ஒரு வழியை மூடும் கல் என்றே பொருள் தருகிறது. வாழ்நாள் வழி என்பதைப் பிறவி எடுத்தலுக்கான காரணம் எனச் சமயக் கருத்தோடு பொருத்திப் பொருள்கொள்வது எளிதாக இருக்கிறது. அப்படி இருக்க, இவர்கள் ஏன், தீமை வரும் வழி என்று பொருள் கொள்கிறார்கள்? தீமை என்ற சொல்லாவது அந்தக் குறளில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. 

குறளில் வரும் இரு சொற்களுக்கு இடையில் நுழைந்து ஒரு பொருளைத் தருவித்தோ ஊகித்தோ உரை எழுதுவது ஒரு முறை.  மேலும் ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தமிழில் உண்டு. ஏழு சீர்கள் மட்டுமே கொண்ட செய்யுள். அதனால் சீர்களுக்கு இடையே சொல்லும் பொருளும் தொக்கிவர வாய்ப்பு உண்டு. குறளின் பொருளை நிகழ்காலத்துக்குப் பொருத்திப் பார்ப்பது தேவை. இந்தக் காரணங்களால்தாம் திருக்குறளுக்குப் புதுப்புது உரை எழுத முடிகிறது. அதற்குத் திருக்குறளும் இசைகிறது. 

அடைக்கும் என்பதற்கு மூடுதல் என்பதோடு துார்த்தல் என்ற பொருளும் உண்டு அடைக்கும் என்ற சொல்லை அப்படியே எடுத்துக் கொண்டு, வேறு வகையில் பொருள் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது. 

ஒவ்வொரு பாதையும் கல்பரப்பி அதாவது கல்அடைத்து உருவாக்கப்படுகிறது. நாள்தோறும் அறம் செய்பவர்களின் வாழ்க்கைப் பாதையைச் சீரமைத்து வாழ்க்கைப் பயணத்தைச் சுகம் ஆக்குவதுதான் அடைக்கும் கல் என்று பொருள்கொள்ள முடிகிறது. வாழ்க்கைப் பாதையில் எதிர்கொள்ளும் துயரப் பள்ளங்களைத் துார்ப்பதையும் அடைக்கும் கல் என்பது   உணர்த்தும்.                   

இந்தக் கருத்துக்கு ஆதரவாகக் கலைஞர் கருணாநிதியின் உரையும் அமைந்து இருக்கிறது. அவருடைய உரை இதுதான் : 

“பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.“

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் இந்த உரை ஏற்கத் தக்கது. குறளின் சொற்களை அப்படியே எடுத்துக் கொண்டு, பொருத்தமான உரை எழுதி இருக்கிறார். 

குறளில் வரும் வாழ்நாள் என்ற சொல்லை ஆராய்ந்து பார்ப்போம். இன்பம் - துன்பம், நல்வினை - தீவினை, நன்மை - தீமை என்பன போல்தாம் வாழ்நாள் - வீழ்நாள் ஆகியவை. இவை, எதிர்எதிர்த் தன்மைகள் கொண்டவை.

வீழ்நாள் என்பது வீணான நாள் அல்லது வீழ்ச்சியான நாள் எனப் பொருள் தரும். வாழ்நாள் என்பது பயனுடைய நாள் அல்லது வாழ்ந்து காட்டும் நாள் எனப் பொருள் தரும். இங்கே வாழ்நாளைத்தான் உயர்த்திப் பிடிக்கிறார் வள்ளுவர். எனவே வாழ்நாளைத் தடுக்கச் சொல்லவில்லை. அறம் செய்து ஒவ்வொரு நாளையும் பயனுடையதாக ஆக்கி நீடு வாழ்க என்றுதான் வாழ்த்தி இருக்கிறார். 

மக்கள் நீடு வாழ வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். வாழக் கற்றுக் கொடுப்பதுதானே திருக்குறள். 

திருக்குறளுக்கு இன்றைய வாழ் நிலையில் என்னவாக பொருள் இருக்க முடியும் என்று சிந்திப்பதே நிகழ்காலத் தேவையாகும்.   இந்தக் குறளுக்கு இப்படி எளிதாகப் பொருள் கொள்ளலாம்.

நாள் தவறாமல் நன்மை செய்து வந்தால்… அதுவே, வாழ்க்கைப் பாதையில் படிக்கல் ஆகும்.


                                                    -கோ. மன்றவாணன்


நன்றி

கணையாழி மாத இதழ்

நவம்பர், 2024








No comments:

Post a Comment