கோ. மன்றவாணன்
திருவாரூர் தங்கராசு கூட்டம் ஒன்று கடலூர் முதுநகரில் நடந்தது. துறைமுக நகர் என்ற பெயர் அப்போது இல்லை.
நான் கூட்டத்தில் ஒருவராகக் கலந்து கொண்டேன். அவருடைய வாதங்களையும் நகையாடலையும் கேட்டுக் கை தட்டினேன். அப்போது நான் சிறுவன்.
பையில் பத்துக் காசு இல்லை. அந்தப் பேச்சுதான் எனக்கு அன்றைய இரவு உணவு.
நடு இரவு நெருங்கும் நேரத்தில் கூட்டம் நிறைவடைந்தது.
அந்த இரவு நேரத்தில் பேருந்து வசதி இல்லை. ஆட்டோக்களும் அறிமுகம் ஆகவில்லை. சாமி லாரி புக்கிங் ஆபிஸ் எதிரில் ஜட்கா ஸ்டாண்ட் இருக்கும் அது வேறொன்றும் இல்லை. குதிரை வண்டி நிலையம்தான்.
அங்கிருந்து குதிரை வண்டிகள் முதுநகருக்கும் திருப்பாதிரிப்புலியூருக்கும் ஓடிக்கொண்டிருக்கும். அதில் பயணம் செய்ய காசு வேணுமே!
வரும்போது நடந்துதானே வந்தேன். திரும்பும் போதும் நடந்துதானே போக வேண்டும். ஏழ்மை நடக்க வைத்தது காலில் செருப்பும் இல்லாமல்.
நள்ளிரவு தாண்டிய நேரத்தில் இருள் சூழ்ந்த சாலையில் நடந்து கொண்டிருந்தேன். இடையிலே மோகினி பாலம் குறுக்கிட்டது.
திகில் பற்றி எரிய எரிய மோகினி பற்றிய பல கதைகளைப் பலர் சொல்லக் கேட்டு நடுங்காதவர்களே அன்று இல்லை. அந்தக் கதை மன்னர்களிடத்தில் பேய்க்கதை மன்னன் பி டி சாமியே தோற்றுப் போய்விடுவார்.
ஒரு பக்கம்... பேய் இல்லை என்று அறிவு சொல்கிறது. மறுபக்கம்... ஒரு வேளை பேய் இருந்துவிட்டால் என்று பயம் கவ்வுகிறது. இந்த நிலையில்… என்னதான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே... என்று எம்ஜிஆர் பாட்டைப் பாடியபடி திருப்பாதிரிப்புலியூர் நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.
எனக்கு முன்னே குள்ளமான ஓர் உருவம் நடந்து போய்க் கொண்டிருந்தது. அந்த உருவம்தான் மாதவன். அவரும் அன்றைய கூட்டத்தில் என்னைப்போல் கலந்துகொண்டவர். ஆனால் அவருடன் பேசியதில்லை அப்போது.
அந்தக் காலத்தில் இருந்தே அவர் கருப்புச் சட்டைதான் அணிந்திருப்பார். நான் கருப்புச் சட்டை அணிந்ததில்லை. பிறர் கொடுக்கும் பழைய சட்டைகளையே போட்டு வந்ததால், கருப்புச் சட்டை அணியும் வாய்ப்பை யாரும் தரவில்லை.
அவர் அதிர்ந்து பேசி நான் கேட்டதில்லை. அவர் கோபம் கொண்டு நான் பார்த்ததில்லை.
அவரால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வார். பெரும்பாலோர் அவரை எடுபிடியாகவே நடத்தினார்கள். ஆனாலும் அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. எப்படியோ யாருக்கோ இந்த சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதே அவர் நோக்கமாக இருந்தது.
கடலூரில் எந்தக் கூட்டம் நடந்தாலும் அங்கே மாதவன் இருப்பார். எளிய தோற்றம் என்பதால் அவரை அலட்சியமாகப் பார்த்துச் செல்வார்கள் பலர்.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் ஊரில் உள்ள பெரிய மனிதர்களைச் சிலர் போய்ப் பார்த்து மரியாதை செய்வது உண்டு. எனக்கு அந்தப் பழக்கம் இல்லை. ஆனாலும் அது போன்ற ஒரு புத்தாண்டு தினத்தில் நானும் ஒரு பெரிய மனிதரைப் பார்த்து மரியாதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
யாருக்கு மரியாதை செய்வது? இந்தக் கேள்விக்கு எனக்கு உடனே பதில் கிடைத்தது. அவர்தான் மாதவன்.
யாரோ கொடுத்த பழத்தை அல்ல, பணம் கொடுத்து ஓர் ஆப்பிள் பழத்தை வாங்கிக் கொண்டு, அவர் வீட்டுக்குப் போய் வாழ்த்தினேன். பழத்தையும் கொடுத்தேன். சத்தம் இல்லாத சிரிப்போடு அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விழுப்புரம் மற்றும் கடலுார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அஞ்சல் கொண்டு செல்பவராகக் கொஞ்ச காலம் பணி புரிந்தார். அரசு நியமன வேலை இல்லை அது. கூலிக்கு வைத்துக் கொள்ளும் வெளிஆள் வேலை.
கடலூர் பெரியார் நூலகத்தில் நூலகராகவும் பணி செய்தார். திராவிடர் கழகம் அவருக்குச் செய்த கவுரவம் அது. அவருக்கு அந்த வேலை பிடித்திருந்தது. அந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்க வேண்டி இருந்ததால் இடித்துவிட்டார்கள். புது கட்டுமானப் பணியும் தடைபட்டது. அதன்பின், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் நூல்களை எல்லாம் கூட்டங்களின் போது விற்பனை செய்து வந்தார்.
அவரிடத்தில் பலர் புத்தகங்களை வாங்கிக்கொண்டு பின்னர் பணம் தருவதாகச் சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் அவர்கள் தரவில்லை. இவரும் கேட்கவில்லை.
ஒரு பெருமழையின் பொழுது அவருடைய ஓட்டு வீட்டுக் கூரை ஒழுகியதால் ஏராளமான புத்தகங்கள் வீணாகிவிட்டன. அவற்றுக்குரிய பணத்தை, நிறுவனத்துக்குச் செலுத்த முடியவில்லையே என்று வருந்தினார்.
பின்னர் நியூ சினிமா அருகில் இருந்த இந்திரா டிராவல்ஸில் இரவுக் காவலராகவும் பணிபுரிந்தார்.
தி.க., தி.மு.க., கூட்டம் மட்டுமல்லாமல் இலக்கிய கூட்டங்கள், பொதுநல அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் என்றாலும் அங்கே மாதவன் இருப்பார். பொதுநலப் போராட்டம் ஒன்றில் பங்கேற்றதால் நீதிமன்றத்துக்கு நடையாய் நடந்தார். வழக்கின் கடுமை அவருக்குப் புரிந்ததே இல்லை. நீதிமன்றத்தில் சிரித்தபடி நின்றிருப்பார்.
பல இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களை… பல்வேறு அமைப்புகளின் அழைப்பிதழ்களை… அவர்தான் நடையாய் நடந்து, வீடு வீடாகச் சென்று கொடுப்பார். ஆனால் எந்தக் கூட்ட அழைப்பிதழிலும் அவர் பெயர் இருக்காது. கூட்ட நிறைவில் நன்றி சொல்லுகின்ற பொழுது, அழைப்பிதழைக் கொடுத்த மாதவன் பெயரை மறந்திருப்பார்கள்.
கூட்ட அழைப்பிதழ்களை எடுத்துக்கொண்டு என்னைப் பார்க்க வருவார். அழைப்பிதழை வாங்கிப் படித்தபடியே தேநீர்க் கடைக்கு அவரை அழைத்துச் செல்வேன். தேநீர் அருந்துவோம்., எனக்கு முந்திச் சென்று தேநீருக்குப் பணம் கொடுக்க முயலுவார். நான் தடுத்துவிடுவேன்.
(அப்பொழுது எல்லாம் நினைத்துக் கொள்வேன். ஒரு காலத்தில் நடந்த தி.க., தி.மு.கழகக் கூட்டங்களில் மூவர் கட்டாயம் இருப்போம். இரும்புக் கடையில் வேலை செய்யும் தங்கத் தமிழன் என்ற இராமலிங்கமும்- செருப்புக் கடையில் வேலை செய்யும் நானும்- எந்த வேலையிலும் இல்லாத மாதவனும்தாம் அந்த மூவர். கொடுத்துச் சிவந்த கரங்கள் என்று வள்ளல்களைப் பாராட்டுவார்கள். பொதுக்கூட்டங்களில் கைதட்டி கைதட்டியே சிவந்தன எங்கள் கரங்கள். மாதவனும் இராமலிங்கமும் அழுக்கு வேட்டி அணிந்திருப்பார்கள். அவர்களில் நான் வேறுபட்டு இருப்பேன். ஆம். அழுக்குக் கைலி கட்டி இருப்பேன். அந்த நினைவில் இருந்து மீண்டு வருகிறேன்.)
ஒரு கூட்டத்தில் அரங்கின் ஓரமாக மாதவன் நின்றுகொண்டிருந்தார். பார்வையாளராக வந்திருந்த ஓர் இலக்கிய அன்பர், “மாதவன் இந்த டீ கப்பு எல்லாம் எடுத்துப் போடக் கூடாதா,” என்று தன் வீட்டு வேலைக்காரர் போல் தாழ்த்தி அதட்டினார். மாதவனும் அந்த டீ கப்புகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு போய் வெளியில் போட்டார். அதையும் அவர் மகிழ்ச்சியோடுதான் செய்தார்.
தோற்றத்தை வைத்தே ஒருவரை உலகம் மதிக்கிறது. குள்ளமான உருவம். அழுக்கடைந்த ஆடை. முடிமழிக்காத முகம். தெளிவில்லாத பேச்சு என்று இருந்தால், மதிப்பார் யார்?
யாருக்கும் எந்த உதவியும் ஒருவர் செய்ய வேண்டியது இல்லை. மேக்கப் சகிதம் வந்தால் போதும். அவருக்கு மரியாதை உண்டு. மாதவனுக்கு எப்படி மரியாதை கிடைக்கும்?
மாதவனைப் பார்த்து நாம் பரிதாபப் படலாம். ஆனால் அவருக்குத் தாழ்வு மனப்பான்மை கிடையாது. தன் தோளில் துண்டு அணிந்து கம்பீரமாகவே இருந்தார்.
அவர் மேடை ஏறி முகம் காட்டியதில்லை. யாரிடத்திலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. எந்த விளம்பரமும் தேடிக் கொண்டதில்லை. ஆனாலும் கடலூரில் உள்ள பொதுநலம் சார்ந்த பிரமுகர்களுக்கு அவரைத் தெரியும். அதுவே அவருக்குக் கிடைத்த பெரும் புகழ்.
மாதவன் அவர்களின் மணிவிழாவைத் திராவிடர் கழகத் தோழர்கள் எழிலேந்தி, தென். சிவக்குமார், சின்னதுரை உள்ளிட்டோர் நடத்தினார்கள். வெண்புறா குமார் உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும் மாதவனுக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள். இலக்கிய அமைப்பினர் சிலரும் வேறு அமைப்பினர் சிலரும் நிகழ்வுகளில் மாதவனுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்துள்ளார்கள். இவர்கள்தாம் சேவையை மதிக்கத் தெரிந்தவர்கள். உருவத்தைப் பார்க்காது உள்ளத்தைப் போற்றியவர்கள்.
பலருக்குப் பல பதவிகளும் பட்டங்களும் கிடைத்திருக்கலாம். அந்தப் பதவிகளையும் பட்டங்களையும் விடவும் உயர்ந்தது ஒன்று உண்டு. அது, பெரியார் தொண்டர் என்ற பெருமை!
பெரியார் தொண்டர் தி. மாதவன் அவர்களுக்குக் கண்ணீர் மாலை சூட்டுகிறேன்.
கோ. மன்றவாணன்