இளமை எனும் பூங்காற்று...
இரா. இராதாகிருஷ்ணன் பக்கமே வீசுகிறது.
இரா. இராதாகிருஷ்ணன்
கடலூர் மாநகராட்சியில் வன்னியர்பாளையம் என்றொரு
பகுதி உள்ளது. ஒரு காலத்தில் இங்குக் கிளை பரப்பாத அரசியல் கட்சிகளே இல்லை எனலாம்.
அந்த அளவுக்கு அரசியல் சிந்தனை தீப்பற்றி எரிந்த மண் இது. இதைக் கடலூரின் கிரேக்க பூமி
என்று நீதிபதி மகிழேந்தி விவரிப்பார். இங்குதான் இரா. இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்து
வளர்ந்தார். இங்குப் பிறந்ததாலோ என்னவோ “ஏன்?” என்ற கேள்வி கேட்காத ஒருநாள்கூட இவர்
வாழ்வில் இருந்ததே இல்லை.
இவர் எடுக்கும் முயற்சிகளையும், வென்று முடிக்கும்
செயல்களையும் பார்த்தால்... இவரே ஒரு நடமாடும் தன்னம்பிக்கை நூலகம் என உறுதியாகச் சொல்லலாம்.
இன்றைய சிந்தனைகூட இவருக்குப் பழைமை ஆனதாகத்
தோன்றுமோ என்னமோ... நாளைய உலகுக்கு இன்றே தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்.
இவருக்கு எண்பத்து ஐந்து வயது என்றால் யாரும்
நம்ப மாட்டீர்கள். உடை அழகையும் நடை அழகையும் உற்று நோக்கினால் இருபது வயது இளைஞராகவே
திகழ்கிறார். அது என்னவோ தெரியவில்லை... இளமை எனும் பூங்காற்று எப்பொழுதும் இராதாகிருஷ்ணன்
பக்கமே வீசுகிறது.
வடிநிலம் என்ற பெயரில் கடலூர் மாவட்ட வரலாற்றைச்
சிறப்பாக எழுதி உள்ளார். இதற்காக அவர் ஆற்றிய
களப் பணிகளும் தகவல் தேடல்களும் ஏராளம்.
பல நூல்களை எழுதித் தமிழுக்குப் பெருமை சேர்த்து
வருகிறார். தேநீர்க் கோப்பையுடன் இவரின் நூலைப் படிக்கத் தொடங்கினால், தேநீர் பருக
மறந்து விடுவோம். நாவில் விழுந்த தேன், தானாகவே நழுவித் தொண்டையில் இறங்குவதுபோல்,
இவரின் எழுத்து நடை எளிமை ஆனது; இனிமை ஆனது.
“முதலில் இருந்து” என்ற இவரின் தன்வரலாற்று
நூலைப் படித்தால் இவரின் உயரம் காணலாம்.
சின்னம்சிறு பருவத்தில் பெரியார் மேல் ஈர்ப்பு
ஏற்பட்டு, அவரோடு சென்றுவிட்டார். 'படி' என்ற அவரின் அறிவுரை ஏற்றுத் திரும்பி வந்து
படித்தார். அரசுப் பணியில் சேர்ந்தார். பல உயர் பதவிகளை வகித்தார். 39 ஆண்டுக் காலம்
அரசுப் பணி ஆற்றினார். திரு. வெ. இறையன்பு, திரு. உ. சகாயம் போன்ற அதிகாரிகளிடம் பணியாற்றிப்
பாராட்டுகள் பெற்றார்.
ஒருவர் 1330 திருக்குறள்களையும் பின்பற்ற
முடியாமல் போகலாம். ஏதேனும் ஒரு குறளைத் தேர்ந்து எடுத்து, அதன்படி வாழ்ந்தாலே போதும்.
உயர்வு நிச்சயம். அப்படி ஒரு குறளுக்கு வாழும் முறையால் உரை எழுதி வருகிறார் நம் இராதாகிருஷ்ணன்.
அந்தக் குறள் இதுதான்.
தெய்வத்தால்
ஆகாது எனினும் முயற்சி,தன்
மெய்வருத்தக்
கூலி தரும்.
கோ.
மன்றவாணன்