எண்ணத்தில்
களங்கம் இல்லை
கோ.
மன்றவாணன்
தற்போது
மலர்ந்துள்ள தமிழ்நாடு அரசு எழுத்தாளர்களைக் கொண்டாடும் என்றே நினைக்கத்
தோன்றுகிறது. நினைப்பது நிறைவேற வேண்டும் என்பதும் நம் ஆசை.
சில
நாள்களுக்கு முன் எழுத்தாளர் கி.ரா. மறைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம்
செய்யப்பட்டது. அவருடைய ஊரில் சிலையும் நினைவகமும் அமைக்கப்படும் என்றும் அரசு
அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் வேறு எந்த எழுத்தாளருக்கும் இத்தகைய மரியாதை
கிடைக்கவில்லை.
ஒவ்வோர்
ஆண்டும் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் மூவருக்கு இலக்கிய மாமணி விருதும் ஐந்து லட்சம் பணமும் அளிக்கப்படும் என்று
அறிவித்து உள்ளார்கள். எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் திட்டம் இது. பெருமை
அளிக்கும் செயல்பாடும்கூட!
இந்த
விருதுகளை அரசின் ஆதரவாளர்களுக்கே தருவார்கள் என்று விமர்சிக்கிறார்கள். நமக்கு
நன்மை செய்ய முன்வரும் போது, எடுத்த எடுப்பிலேயே அவர்களை நோக்கி அம்புகள் எய்ய
வேண்டியது இல்லை. அவ்வாறு சிலர் அவநம்பிக்கை கொள்வதற்கு அடிப்படைக் காரணங்கள்
இருக்கலாம். அவை நிரந்தரம் என்று எப்படிச் சொல்ல முடியும்? நம்பிக்கை வைப்போம்.
நல்லவை நடக்கட்டும்.
நடுநிலை
என்பது மிகமிக அரிதாகவே சமூகத்தில் உள்ளது. எந்த நடுநிலையிலும் குறை சுமத்த வழி கிடைக்கும்.
இருப்பினும் இலக்கிய மதிப்பு மிக்கவர்களுக்கே இலக்கிய மாமணி விருதுகள் கிடைக்க
வேண்டும். அதற்குரிய வழிமுறைகளை அரசு
கடைப்பிடிக்க வேண்டும். செய்வார்கள் என்றே நம்புகிறேன்.
யாருக்கு
விருது கொடுத்தாலும் விமர்சனம் செய்வோர் இருப்பார்கள். தகுதியை முன்நிறுத்தி, விருப்பு
வெறுப்புக்கு அப்பாற்பட்டு, அரசின் செயல்பாடுகள் இருக்கும்போது, விமர்சனம்
கூர்மழுங்கிப் போகும்.
ஞான
பீடம், சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என்ற
அறிவிப்புச் சற்றும் எதிர்பாராதது. உலக அளவிலும் தேசீய அளவிலும் மாநில அளவிலும் இயங்கும்
சில உயரிய அமைப்புகள் விருதுகள் வழங்குகின்றன. அத்தகைய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கும் வீடுகள் அளிக்கப்படும்
என்றும் சொல்லி இருக்கிறார் முதல்வர்.
அரசுப்பணி,
வங்கிப்பணி எனப் பாதுகாப்பான பணிகளில் இருக்கிற எழுத்தாளர்களே வளமையாக வாழ்கிறார்கள்.
மற்ற எழுத்தாளர்கள் எல்லாரும் மோசிக் கீரனார் வழி வந்தவர்கள்தாம்.
எத்தனை
விருதுகள் பெற்றாலும் வாடகை வீடுகளில் வாடும் எழுத்தாளர்களாகவே இருக்கிறார்கள்.
எழுத்தாளர்களுக்கு வெளி உலகத்தில் மதிப்பு இருக்கிறதோ இல்லையோ.... அவரவர்
வீடுகளில் மதிப்பு இருப்பதில்லை என்று சிலர் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அதற்குக்
காரணம், பணத்தை வைத்தே மனிதனின் மதிப்பை எடை போடுகிற காலத்தில் நாம் இருக்கிறோம்
என்பதுதான். என்ன செய்வது... சமூகத்தைப் பண்படுத்தும்... இலக்கியத்தை வளப்படுத்தும்
எழுத்தாளர்களுக்குத் தங்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே...!
இத்தகைய
சூழலில்...
தகுந்த
எழுத்தாளர் ஒருவருக்கு அரசு வீடு தரும்போது, அந்தக் குடும்பத்தில் எழுத்தாளரின்
பெருமை உணரப்படும். சமூகத்திலும் எழுத்தாளர்களுக்கு உயர் இடம் கிடைக்கும்.
இங்கே
ஒன்றைச் சொல்ல வேண்டும். அரசு, தம் கொள்கையைச் சார்ந்தவர்களுக்கும் தமக்கு
வேண்டியவர்களுக்கும்தாம் சிறப்புகள் செய்யும் என்று ஜாதகம் கணித்துச் சிலர்
சொல்கிறார்கள். பொதுவாக அரசுகள் அப்படித்தான் இருக்கின்றன என்பதற்கு நிறைய
எடுத்துக் காட்டுகளையும் அடுக்குகிறார்கள்.
ஆனால்
இந்த வீடு வழங்கும் அறிவிப்பில் அப்படியான நிலைமை வரப் போவது இல்லை என்பதை அவர்கள்
மறந்துவிடுகிறார்கள்.
ஞான
பீடமோ... சாகித்ய அகாதெமி விருதோ, பிற விருதுகளோ தமிழ்நாடு அரசு வழங்கவில்லை. அத்தகைய
விருதுகளைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றால்... விருப்பு
வெறுப்பு எங்கே இருக்கிறது? ஆக அரசின் எண்ணத்தில் களங்கம் இல்லை என்றே
கருதுகிறேன்.
சொல்லுக்குச் செய்கை பொன்னாகும்.