Sunday, 30 May 2021

ஒவ்வொரு பிழையையும் பொறுப்பதுவே


ஒவ்வொரு பிழையையும் பொறுப்பதுவோ…

கோ. மன்றவாணன்


ஒவ்வொரு பூவும் சரியா? ஒவ்வொரு பூக்களும் சரியா? என யாரோ கேட்டு இருந்த கேள்விகளை எனக்கு மடைமாற்றி இருந்தார் வளவ. துரையன்.

ஒவ்வொரு பூவும் என்பதே சரி என்று பதில் எழுதினேன்.

ஏற்கெனவே பலரும் பதில் சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் வினவியில் (வாட்ஸ்ஆப்பில்) இந்தக் கேள்விகள் ஓயாமல் சுற்றித் திரிகின்றன.

ஆட்டோகிராப் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலால்தான் இந்த ஐயம் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அந்தப் பாடலை ஒரு பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பாடத்தில் வைத்தும் இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையையும் உள வலிமையையும் ஊட்டும் கருத்தான பாடல்தான். அதன் பல்லவி இதுதான்.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே 

“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே” என்ற இந்த வரியில் இரண்டு தவறுகளைக் காணலாம். இந்த வரியே இருதலைக் கொல்லி போல உள்ளது. எந்தப் பக்கம் சென்றாலும் தவறு நம்மைச் சுடும்.

ஒவ்வொரு என்பது ஒருமையைத்தான் சுட்டுகிறது. ஒவ்வொரு என்பதற்குப்  பக்கத்தில் ஒருமைச் சொல்தான் வர வேண்டும்.. ஒரு பூ என்றுதான் சொல்வோம். ஒரு பூக்கள் என்று சொல்ல மாட்டோம். அதன்படி “ஒவ்வொரு பூவும்” என்றுதான் எழுத வேண்டும். ஒவ்வொரு பூக்களும் என்று எழுதியது பெருந்தவறு. இது ஒரு பக்கம்.

பூக்கள் சொல்கின்றன என்றுதான் எழுத வேண்டும். பூக்களும் என்று பன்மையில் எழுதிவிட்டுச் சொல்கிறதே என்று ஒருமை விகுதியில் முடிக்கிறார். இதுவும் தவறு, இது இன்னொரு பக்கம்.

ஒருமை எழுவாய்க்கு ஏற்ப ஒருமை விகுதியில்தான் வினைச்சொல் முடிய வேண்டும். பன்மை எழுவாய் என்றால் பன்மை விகுதியில்தான் வினைச்சொல் நிறைவடைய வேண்டும்.

எடுத்துக் காட்டுகள் :

பூ சொல்கிறது.

பூக்கள் சொல்கின்றன.

இந்த இரண்டு சொற்றொடர்களில் உள்ள வேறுபாட்டை நீங்களே கண்டு உணரலாம்.

ஆனால் அதே பல்லவியில் ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதேஎன்று கவிஞர் சரியாக எழுதி இருக்கிறார். “ஒவ்வொரு விடியல்களுமே சொல்கிறதே” என்று எழுதவில்லை என்பதை அறிய வேண்டும்.

பன்மை எழுவாய்க்குப் பிறகு ஒருமை விகுதியில் பாடல் வரியை முடிக்கும் தவறுகளைக் கவிஞர்கள் எல்லாரும் செய்து இருக்கிறார்கள்.

மெட்டுக்காக அப்படி எழுதுகிறோம் என்று சொல்லும் எந்தக் கவிஞரும் இசை ஓட்டம் எனக் காரணம் கூறி ஒருமை எழுவாய்க்குப் பன்மை விகுதியைப் பயன்படுத்தியது இல்லையே… ஏன்?

யாப்புச் சட்டத்துக்குள் கவிதை எழுதும்போது நம் புலவர்கள் பல பிழைகளைச் செய்து இருக்கிறார்கள். அவ்வாறு செய்தமைக்கு எதிர்ப்புகள் இருந்திருக்கக் கூடும். ஆனாலும் அவற்றை வழுவமைதி என்று வரையறை செய்து ஏற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் எல்லா வழுக்களையும் வழுவமைதியாக ஏற்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உரைநடை வளர்ந்த பிறகு வழுவமைதி “அமைதி” ஆகிவிட்டது.   

பா. விஜய் எழுதிய இதே பாடலில் வரும் இன்னொரு சரணத்தைப் பாருங்கள்.

உளி தாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும்

வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்

இங்கேயும் ஒருமை பன்மை மயக்கம் உள்ளது. உளிதாங்கும் கல்தானே மண்மீது சிலையாகும் என்று இருக்க வேண்டும். அல்லது உளி தாங்கும் கற்கள்தாமே மண்மீது சிலைகள் ஆகும் என்று இருக்க வேண்டும். பல கற்கள் கொண்டு ஒரு சிலை செய்யலாம் என்று கவிஞர் சமாளிக்கலாம். அப்படியானால் கற்கள்தானே  என்று எழுதாமல் கற்கள்தாமே என்று எழுதி இருக்க வேண்டும். பன்மைக்குத் “தாம்” என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்று பெரும்பாலும் யாருக்கும் தெரியவில்லை. நம் நாளிதழ்களில் ஒருமைக்கும் பன்மைக்கும் தான் என்பதையே பயன்படுத்துகிறார்கள். தான் என்பதே நிலைத்தும் விட்டது. தாம் என்று எழுதினால் செயற்கையாகத் தெரிகிறது. புலவர் நடை என்று புறம் தள்ளவும் கூடும்.

இத்தகைய ஒருமை பன்மை மயக்கப் பிழைகளை எல்லாரும் செய்கிறார்கள்.

ஒவ்வொரு என்ற சொல்லுக்குப் பின் ஒருமைச் சொல் வருமா பன்மைச் சொல் வருமா என்பதை அறிவோம்.

இந்தப் பாடல் வெளிவந்த பிறகே ஒவ்வொரு என்பது ஒருமையா பன்மையா என்று பலருக்குக் குழப்பம் வருகிறது. ஒவ்வொரு பூக்கள் எனச் சொல்வது சரிதான் என்று, பாடலைக் கேட்டு மகிழும் இன்றைய இளைஞர்கள் நினைப்பார்கள். “ஒவ்வொரு பெண்களும்” என்று அவர்களும் எழுதுவார்கள்.

பலவற்றில் ஒவ்வொன்றாய்ப் பார்ப்பதால் அச்சொல் பன்மையாகத்தான் இருக்க முடியும் என்று பலர் மயங்கலாம். எத்தனை இருந்தாலும் எந்த ஒன்றைப் பார்க்கின்றோமோ அதைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிப் பார்க்கும்போது ஒவ்வொரு என்பது ஒருமைதான் என்று தெளிவு அடையலாம்.

சங்க இலக்கியங்களில் இந்தச் சொல் இருப்பதாகத் தெரியவில்லை. கம்ப இராமாயணத்தில் தேடினேன். கம்பன் சொற்கடல் என்பதால் அந்தச் சொல் இருந்தது.

உருத்தல் கண்டு இராகவன் புன்முறுவல் கொண்டு

ஒவ்வொருவருக்கு – யுத்த காண்டம் 3, மிகை : 31 55/1 

நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை – யுத்த காண்டம் 3, மிகை : 11 1/2 

ஒவ்வோர் என்ற சொல்லுக்குப் பின் ஓசனை என்ற ஒருமைச் சொல்லைத்தான் கம்பர் பயன்படுத்தி உள்ளார்.

தொன்னூல் என்ற இலக்கண நூலையும் சதுரகராதி என்ற அகரமுதலியையும் தமிழுக்குத் தந்த வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணியில் தேடினேன்.

உறைவார் கையிலே தனி ஒவ்வொரு கோல் – தேம்பாவணி : 5 102/2

குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு – தேம்பாவணி 27, 160/2

ஒவ்வொரு கோல் என்றும் ஒவ்வோர் உறுப்பு என்றும் வீரமாமுனிவர் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு என்பதன் பக்கத்தில் கோல்கள் என்றோ உறுப்புகள் என்றோ எழுதவில்லை.

சீறாப் புராணத்தில் ஒவ்வொரு காதம், ஒவ்வொரு திக்கினில், ஒவ்வொரு புறத்தினில், ஒவ்வொரு பெயருக்கு எனப் பல இடங்களில் உமறுப் புலவர் எழுதி உள்ளார்.

ஆக… நம் முன்னோர் ஒவ்வொரு என்ற சொல்லின் பக்கத்தில் ஒருமைச் சொல்லைத்தான் பயன்படுத்தி உள்ளார்கள்.

பிற்காலத்தில் வந்தவர்களும் “ஒவ்வொரு” என்பதன் பக்கத்தில் பன்மைச் சொற்களை எழுதவில்லை. வித்தகக் கவிஞர் விஜய்யைத் தவிர வேறு யாரும் இந்தப் பிழையைச் செய்யவில்லை என்று நம்புகிறேன்.  பேரறிஞர்களிடமும் பெருங்கவிஞர்களிடமும் தவறுகள் நிகழக் கூடும்.

தவற்றை ஒப்புக்கொண்டு சரிசெய்து கொள்கிறவர்கள் மேன்மை அடைகிறார்கள்.

தவற்றைச் சரியென வாதிடுபவர்கள், பிறரையும் தவறு செய்யத் தூண்டுகிறார்கள்.

இசை மெட்டுக்காக அப்படி எழுதலாம் என்று சிலர் சொல்லக் கூடும். தவறு செய்வோர்க்குத் துணை போகிறவர்கள் எங்கும் இருப்பார்கள். மெட்டுக்கு உரிய சொல்லைத் தவறு இல்லாமல் எழுத வேண்டும்.  அப்படி எழுத முடியவில்லை என்றால்  அது கவிஞர்களின் இயலாமையைத்தான் குறிக்கும்.

ஆக….

“ஒவ்வொரு பூக்களும்” என்பதை வழுவமைதியாகக் கூட ஏற்க முடியாது. விஜய்யைப் பின்பற்றி, ஒவ்வொரு செடிகளும் ஒவ்வொரு மரங்களும் என்று நீங்களும் எழுதினால்… தமிழுக்குத் தீங்கு செய்தவர்கள் ஆவீர்கள்.


நன்றி :

திண்ணை இணைய இதழ்

23-05-2021

 



 

அன்னாரா? அண்ணாரா?

                            
அன்னாரா? அண்ணாரா?

கோ. மன்றவாணன் 


“............ இன்று மாலை 5 மணி அளவில் அன்னாரின் இறுதி ஊர்வலம்  நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ஒலிபரப்பிச் சென்றார்கள்.

கொஞ்ச நேரம் ஆன பின் கடைவீதிக்குச் சென்றேன். இறந்தவர் குறித்துக் கண்ணீர் அஞ்சலி பதாகை வைத்திருந்தார்கள். அதில்,

..................... ஆகியோரின் தந்தையும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான ................................  அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார். அண்ணாரின் உடல் இன்று மாலை 5 மணியளவில் கெடிலம் நதிக்கரையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அச்சிட்டு இருந்தார்கள். இந்த இறப்புச் செய்தியில் உள்ள “அண்ணாரின்” என்ற சொல்லைக் கவனித்துப் பார்த்தேன். இதுபோன்ற சொற்கள் பிழையாக இருந்தாலும் சரி போலத் தோற்றம் அளிக்கும்.

ண-ன-, ள-ல, ர-ற ஆகிய எழுத்துகளால் ஏற்படும் ஒலிமயக்கப் பிழைகளை ஒருவர் பேசும்போது நம்மால் கவனிக்க முடிவதில்லை. அவை சரியாகவே தோன்றும். ஆனால் எழுதும் போதோ அச்சிடும்போதோ அவை பிழைகளாகத் தோன்றிக் கண்ணையும் கருத்தையும் உறுத்தும். அதனால் ஒலி விளம்பரம் செய்தவரின் அறிவிப்பில் பிழை இருப்பதாக என் கவனத்துக்கு வரவில்லை. பதாகை வாசகங்களைப் பார்த்த போதுதான் அண்ணார் என்பது சரியா என்ற கேள்வி எழுந்தது.

இதுபோன்ற துயர்பகிர்வு செய்திகளில் அன்னார் என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். அண்ணார் என்ற சொல்லையும் பயன் படுத்துகிறார்கள். எது சரி என்று யாரும் ஆராய்வதில்லை.

இவற்றுள் எது சரி?

இவர் அவர் என்று நாம் சொல்வன போல், நம் முந்தைய தலைமுறையினரிடம் “இன்னார் அன்னார்” என்று பேசுகிற வழக்கம் இருந்துள்ளது.

இந்த இறப்பு அறிவிப்பு வாசகங்களை நெடுங்காலமாக ஒரே மாதிரி ஒலித்துக்கொண்டு வருகிறோம். கடந்த தலைமுறைகளில் அன்னார் என்றுதான் எழுதி வந்து இருப்பார்கள். ன ண வேறுபாடு தெரியாதவர்களால் இந்தத் தவறு ஏற்பட்டு இருக்கலாம். 

பெரும்பாலான பதாகைகளிலும் சுவரொட்டிகளிலும் அண்ணார் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதுவே சரியென நினைக்கிறார்கள். கேள்வி கேட்டால் புதுப்புது பொருளுரைகளும் சொல்வார்கள்.

வளவன் என்பதை வளவனார் என்று மரியாதை தந்து எழுதுகிறார்கள். அதிலும் அன் விகுதி இருப்பதால் வளவர் என்று எழுதுவோரும் இருக்கிறார்கள். அதுபோல் அண்ணன் என்பதில் உள்ள அன் விகுதியை மரியாதைக் குறைவாக நினைத்து அண்ணார் என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் அண்ணாரின் இறுதி ஊர்வலம் என்று அச்சிடுவது சரிதான் எனச் சிலர் சொல்லக்கூடும்.

அந்தப் பொருளில் பார்த்தாலும் அவர் எல்லாருக்கும் அண்ணனாக இருக்க இயலாது. அவரைவிட வயதில் மூத்தோருக்கும் அவர் அண்ணன் ஆக முடியாது. ஓர் அதிகாரியை அண்ணார் என்று அழைப்பதும் இல்லை. எல்லாருக்குமான பொது அறிவிப்பில் அண்ணன் என்று சொல்வது பொருத்தமாக இருக்காது.

இறப்பு அறிவிப்பில்... இறந்தவர் யார் என்பதை முதலில் சொல்கிறார்கள். அடுத்ததாகத்தான் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதைத்  தெரிவிக்கிறார்கள். இந்த இரண்டு தகவல்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் சொல்லாகத்தான் அன்னார் என்ற சொல் பயன்படுகிறது. அப்படிப்பட்டவரின்- அத்தகையவரின்- மேற்சொல்லப்பட்டவரின் என்ற பொருளில்தான் அன்னார் என்ற சொல் ஆளப்படுகிறது.

இலக்கியங்களில் அன்னார் என்ற சொல் அத்தகையவர் என்ற பொருளில் பல இடங்களில் உள்ளது. ஆனால் அண்ணார் என்ற சொல் அண்ணன் என்ற பொருளில் காணப்படவில்லை.

அன்னார் என்பதற்கு ஆதாரமாக நம் இலக்கியங்களில் நிறைய எடுத்துக் காட்டுகள் உள்ளன. அடிக்கடி நம் காதுகளில் விழும் குறள்களையே தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெரும்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து


மயிர்நீப்பின் வாழா கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்


புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீர்இயைந்து அன்னார் அகத்து

 

ஆக... அன்னார் என்ற சொல் அப்படிப்பட்டவரின்... அத்தகையவரின்... அத்தன்மையரின் என்ற பொருளில்தான் வந்துள்ளது.

அண்ணாரின் இறுதி ஊர்வலம் என்பதோ அண்ணாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதோ தவறு, அண்ணார் என்ற சொல் பொதுத்தன்மை கொண்டதும் இல்லை.

அன்னாரின் இறுதி ஊர்வலம் என்றுதான் எழுத வேண்டும்., அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றுதான் அச்சிட வேண்டும். அன்னாரின் மனம் இறைவன் நிழலில் இளைப்பாறட்டும் என்றுதான் வேண்டுரை அமைய வேண்டும். அன்னார் என்ற சொல் இருபாலருக்கும் பொருந்தும்.

ஆக, இறப்புச் செய்திகளில் அண்ணார் என்பது தவறு. அன்னார் என்பதே சரி.

தற்காலத்தில் இறப்புச் செய்திகளில்தாம் அன்னார் என்ற சொல்லைப் பார்க்க முடிகிறது. வேறு செய்திகளில் தென்படவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.


நன்றி :

திண்ணை இணைய இதழ்

16-05-2021

 

Tuesday, 11 May 2021

ஆயிரம் நிலவும் ஆயிரம் மலர்களும்

ஆயிரம் நிலவும்

ஆயிரம் மலர்களும் 

கோ. மன்றவாணன்


“ஆயிரம் நிலவே வா” என்று புலவர் புலமைப்பித்தன் அழைக்கிறார். “ஆயிரம் மலர்களே... மலருங்கள்” என்று கண்ணதாசன் வேண்டுகிறார். இந்த இரண்டு பாடல்களை இன்று கேட்டாலும் இதயம் மகிழாதவர் யார்?

இரண்டு பாடல்களின் வரிகளை ஒப்பிடும் போது உங்களுக்குள் கேள்வி எழலாம். ஆயிரம் நிலவு என்கிறார் புலவர். ஆயிரம் மலர்கள் என்கிறார் கவிஞர்.

ஆயிரம் என்பது பன்மை அன்றோ... ஆயிரம் நிலவுகள் என்றுதானே இருக்க வேண்டும். ஆயிரம் நிலவு என்றது தவறுதானே என்று ஐய வினாவை எழுப்பலாம்.

ஒரு நிலவு என்று சொல்லலாம். இங்கு ஒரு என்பது ஒருமையைக் குறிக்கிறது. அதனால் தவறு இல்லை. ஒன்றுக்கு மேற்பட்டால் பன்மையாகிவிடும்.  அப்போது பன்மையைக் குறிக்கும் கள் விகுதியைப் பயன்படுத்த வேண்டும். இரு நிலவு என்று எழுதாமல் இரு நிலவுகள் என்று எழுத வேண்டும். அதன்படி ஆயிரம் நிலவுகள் என்று எழுதுவதே சரி என்று வாதிடலாம்.

திரைப்படப் பாடல் ஆசிரியர்களில் புலவர் புலமைப்பித்தனும் கவிஞர் முத்துலிங்கமும் பிழையற இலக்கணம் கற்றவர்கள். புலமைப்பித்தன் இப்படிப் பிழையாக எழுதுவாரா என்று ஆராய்ந்து பார்த்தேன்.

ஆயிரம் நிலவே வா என்ற பாடலில் வா என்ற வினைச்சொல்லின்படியும் திரைப்படக் காட்சியின்படியும் ஒரு பெண்ணைத்தான் குறிக்கிறார். ஆயிரம் நிலவுகள் ஒன்று சேர்ந்து ஒரு நிலவாய் வந்ததால் ஆயிரம் நிலவே வா என்று எழுதியதாகப் புலவர் புலமைப்பித்தன் சொல்லலாம். ஆயிரம் நிலவு(கள்) போன்றவளே என்று உவமையாகவும் கொள்ளலாம்.

முற்காலத்தில் தமிழில் கள் விகுதி பயன்பாடு பெரும்பாலும் இல்லை. பறவை பறந்தது என்று எழுதினால் ஒரு பறவை என்று கருதுவார்கள். பறவை பறந்தன என்று எழுதினால் பல பறவைகள் பறந்தன என்று எண்ணுவார்கள். வினைச்சொல்லின் விகுதியைக் கொண்டு ஒருமையா பன்மையா என அறிவது அன்றைய வழக்கம்.

எண்ணிக்கையைச் சொல்லால் குறித்தால் அதன் பக்கத்தில் ஒருமை பெயர்ச்சொற்களை எழுதுவதும் வழக்கத்தில் உண்டு. எண்ணிக்கையை வைத்து ஒருமையா பன்மையா என்பதை அறிந்தார்கள்.

ஒரு சொற்றொடர் ஒருமையா பன்மையா என்பதை எப்படியாவது அந்தச் சொற்றொடர் குறிப்புணர்த்த வேண்டும். அதுதான் மொழிக்கூர்மை.

ஒரு மலர் என்றால் ஒற்றை மலர் என்று கருத முடியும். ஒரு மலர்கள் என்று குழந்தைகூடச் சொல்லாது. ஆனால் “ரெண்டு பூ கொடு” என்று குழந்தை கேட்கும். மொழியின் இயல்போட்டம் இது. இத்தகைய இயல்போட்டத்தில் எங்கேனும் குழப்பம் வரும் என்றால் அதற்குத் தீர்வு காண்பது மொழியியல் வல்லுநர்களின் வழக்கம்.

இரு மலர் என்பதில் இரு என்ற சொல்லே பன்மையைக் குறித்துவிடுகிறது. எதற்காகக் கூடுதலாகக் கள் விகுதி சேர்த்து மலர்கள் என்று எழுத வேண்டும்? இந்தக் கேள்வியை நம் முன்னோர்கள் எழுப்பி இருப்பார்கள்.

ஆயிரம் நிலவா ஆயிரம் நிலவுகளா என்பதைத் தீர்மானிக்க நம் இலக்கியங்களைப் புரட்டுவோம்.

ஆயிரம் தாமரை பூத்த போல் – சீவக சிந்தாமணி

தாமரை ஆயிரம் மலர்ந்து – கம்ப இராமாயணம்,

ஐந்நூறு யானையும் ஆயிரம் புரவியும் – பெருங்கதை

ஆயிரம் ஞாயிறு போலும் – அப்பர் தேவாரம்

இவற்றில் எதிலும் கள் விகுதி சேர்க்கப்படவில்லை.

இப்படிப் பன்மையைக் குறிக்கும் எண்ணிக்கையைச் சொல்லிவிட்டதால் அதை ஒட்டிவரும் பெயர்ச்சொல்லோடு கள் விகுதியைச் சேர்க்க வேண்டியதில்லை. ஆயிரம் தாமரை, ஆயிரம் புரவி, ஆயிரம் தோள், ஆயிரம் கண் என்று சொல்லுதல் மரபுதான். தவறு ஏதும் இல்லை. ஆக நம் முன்னோர் சொன்னபடி, ஆயிரம் நிலவே என்று புலமைப்பித்தன் அழைத்தது சரிதான். இதில் இலக்கணப் பிழை இல்லை.

பன்மை எண்ணிக்கை குறித்த சொற்களில் ஆயிரம் என்ற சொல்தான் நம் பழைய இலக்கியங்களில் அதிகம் ஆளப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

முற்காலத்தில் கள் விகுதி பெரும்பாலும் இல்லை என்று சொன்னேனே தவிர, முற்றிலும் இல்லை என்று சொல்லவில்லை. கம்பர் தன் படைப்பில் பன்மையைச் சுட்ட கள் விகுதியைப் பயன்படுத்தியும் உள்ளார். பயன்படுத்தாமலும் உள்ளார். யுத்த காண்டத்தில் ஆயிரம் கைகள் என்றும் ஆயிரம் கை என்றும் ஆண்டுள்ளார்.

வில்லி பாரதத்திலும் தேவாரத்திலும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் ஆயிரம் என்ற சொல்லுக்கு அடுத்துவரும் பெயர்ச்சொல்லில் கள் விகுதி சேர்த்தும் சேர்க்காமலும் எழுதி இருக்கிறார்கள். பெரும்பாலான நம் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கள் விகுதியைச் சேர்த்து இருக்கிறார்கள்.

நெஞ்சிருக்கும் வரை படத்தில் “பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி” என்றொரு பாடல் உண்டு. திருமண அழைப்பிதழையே பாடலாக மாற்றிப் புதுமை செய்திருப்பார்கள். அந்தப் பாட்டில் “குவிந்தது கோடிமலர்” என வரும். ஆயிரம் மலர்களே என்று பிற்காலத்தில் பாடிய கண்ணதாசன், கோடி மலர்கள் என்று சொல்லாமல், கோடிமலர் என்று இங்கே சொல்லி இருக்கிறார். நம் முன்னோர் வகுத்த மரபின்படி இது சரிதான். ஆனால் “குவிந்தது கோடிமலர்” என்று எழுதியதுதான் தவறு, கோடி மலர் என்பது பன்மை. குவிந்தது என்பதில் ஒருமை விகுதி வந்துள்ளது. “குவிந்தன கோடிமலர்” என்று இருந்திருந்தால் அந்தப் பாடல் தவறின்றி இருந்திருக்கும். இந்த இலக்கணம் கண்ணதாசனுக்குத் தெரியாது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்.

கட்டித் தங்கம் வெட்டி எடுத்துக்

காதல் என்னும் சாறு பிழிந்து

தட்டி தட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா…. – அவள்

தளதள என்றே ததும்பி நிற்கும் பருவமடா… என்ற பாடலை நீங்கள் கேட்டு இருப்பீர்கள். இந்தப் பாடலை எழுதியவரும் கண்ணதாசன்தான்.

அந்தப் பாட்டில் இப்படி ஒரு சரணம் உண்டு.

தொட்டுத் தொட்டு நின்றன கைகள்

சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் - நான்

கிட்ட கிட்ட வந்தது கண்டு

எட்டி எட்டிச் சென்றது வண்டு 

நின்றன கைகள், கொன்றன கண்கள் எனப் பன்மை விகுதியைப் பயன்படுத்திய கவிஞர்,  சென்றது வண்டு என்று ஒருமை விகுதியைச் சரியாகக் கையாண்டு இருப்பார். பூ முடிப்பாள் பாடல் வருவதற்கு மிகவும் முந்தைய பாடல் இது. 

கவிஞர் கண்ணதாசன் தன் கைப்பட எழுதும் வழக்கம் கொண்டவர் அல்லர். அவர் சொல்வார். உதவியாளர் எழுதிக்கொள்வார். கண்ணதாசன் பாடல் வரிகளை வேகமாகச் சொல்லும் ஆற்றல் கொண்டவர். உதவியாளர் அந்த வேகத்துக்கு ஓடிவர வேண்டும். குவிந்தன கோடிமலர் என்று கவியரசர் சொல்ல, குவிந்தது கோடிமலர் என்று உதவியாளர் எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன். குவிந்தது கோடிமலர் என்று இசை ஓட்டத்துக்காக வைத்திருக்கலாம் எனவும் சிலர் சொல்லக் கூடும். பூ முடிப்பாள் பூங்குழலி என்ற பாடலே பாட்டும் வசனமும் ஆக இருக்கும். குவிந்தது, குவிந்தன என்ற இரண்டு சொற்களும் சந்தத்துக்குள் கச்சிதமாக அடங்குபவை ஆகும். குவிந்தது கோடிமலர் என்பது கவனக் குறைவால் ஏற்பட்டிருக்கும் என்றே கருதுகிறேன். 

நாம் போற்றும் முற்காலப் புலவர்களும் ஒருமை பன்மை மயக்கத்துக்கு ஆளாகி உள்ளனர். அதன் காரணமாகவே கள் விகுதியின் தேவை பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கும். கூடுதல் கவனத்துக்காகக் கள் விகுதியைச் சேர்த்திருப்பார்கள். பன்மையைச் சுட்டுவதற்குக் கள் விகுதி எளிமையானது என்பதாலும் இருக்கலாம்.

இந்நிலையில்…

ஆயிரம் நிலவும் சரிதான். ஆயிரம் மலர்களும் சரிதான். எப்படியும் எழுதலாம். இரண்டில் ஒன்று என்று சொல்ல முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

சொல்ல முடியும்.

இரண்டு, ஐந்து, பத்து, நூறு, ஆயிரம், கோடி என எண்ணிக்கை சார்ந்த சொற்கள் வரும்போது, அவற்றை ஒட்டிவரும் பெயர்ச்சொற்களில் கள் விகுதியைச் சேர்த்து எழுதினால் கூடுதல் தெளிவு கிடைக்கும். கள் விகுதியால் பன்மையை எளிதில் அடையாளம் காணலாம்.

ஆம்!

தற்காலத் தமிழ்வானில் ஆயிரம் நிலவுகள் உலவட்டுமே….

 

நன்றி :

திண்ணை இணைய இதழ்,

09-05-2021


 

Thursday, 6 May 2021

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (முதல் முதலமைச்சர்)


ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்

(முதல் முதல் அமைச்சர்) 

நூல் மதிப்பீடு : கோ. மன்றவாணன்


நெய்வேலி நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்குச் சுற்றியுள்ள ஊர்களை எல்லாம் கையகப்படுத்தும்போது…. வள்ளலார் வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், வடலூர் ஆகிய ஊர்கள் எப்படி தப்பித்தன என்று யாரேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? ஓமந்தூர் பெரிய வளைவு இராமசாமி ரெட்டியாரின் கடும் முயற்சிதான் அதற்குக் காரணம்.

அப்படியா… யார் அவர்? என்றுதான் இன்றைய தலைமுறையினர் கேட்பார்கள்.

விடுதலை பெற்ற இந்தியாவில் சென்னை மாநிலத்தின் முதல் முதல் அமைச்சராக இருந்த பெருமைக்கு உரியவர் அவர். உங்கள் ஊர் நூலகத்தில் தேடினால் ஓமந்தூராரைப் பற்றி ஒரு புத்தகமும் கிடைக்காது. அத்தி பூத்ததுபோல் அவரைப் பற்றி விவசாய முதலமைச்சர் என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன் சோமலெ ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அதைப் பார்க்கும் பாக்கியம்கூட நமக்குக் கிடைக்காது.. வேறு யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இந்நிலையில்

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (முதல் முதலமைச்சர்) என்ற பெயரில் புதிதாக ஒரு நூல் 2021 பிப்ரவரியில் வெளிவந்து உள்ளது. இந்த அரிய நூலை எழுதியவர் கோவி. ஜெயராமன். மொத்தமே 83 பக்கங்கள் கொண்ட வரலாற்று நூல்.

பொதுவாக ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதினால்அவரைப் போல் உலகில் யாருமே இல்லை என்பது போல மிகுஉயர்வு நவிற்சியாக எழுதுவதே வழக்கமாக உள்ளது. அதிலும் அவர் தன் சாதிக்காரர் என்றால் அவரைத் தெய்வமாகவே சித்திரித்துவிடுகிறார்கள். ஆனால் கோவி. ஜெயராமன் எழுதிய இந்த நூலில் எதையும் மிகைப்படுத்தாமல் எழுதி இருக்கிறார். தேவை இல்லாத சொல் என்று எதுவும் இல்லை.

வரலாற்றுச் செய்திகளை உள்ளது உள்ளபடி எழுதினால் சுவை இருக்காது. விறுவிறுப்பு இருக்காது எனச் சொல்வோர் உண்டு. ஓமந்தூராரின் வரலாற்றுத் தகவல்களைக் கோவி. ஜெயராமன் உள்ளது உள்ளபடிதான் எழுதி இருக்கிறார். படிக்க நூலைக் கையில் எடுத்தேன். படித்து முடித்த பிறகே மேசையில் வைத்தேன்அந்த அளவுக்கு இந்நூல் உயிரோட்டமாக இருந்தது.

ஒவ்வொரு பத்தியிலும் இடம்பெற்ற வரலாற்றுத் தகவல்களைப் படிக்கப் படிக்க ஆர்வம் கூடிக்கொண்டே போனது. இவரின் ஒரு பத்தியைப் பிறர் எழுதினால் கண் காது மூக்கு வைத்து அவற்றில் போலி ஆபரணங்களைப் பூட்டி ஆறு பக்கங்களுக்குமேல் எழுதி ஆரவாரம் செய்து இருப்பார்கள்.

ஓமந்தூரார் வரலாற்றைப் பன்னிரண்டு தலைப்புகளில் பகிர்ந்து எழுதியுள்ள முறை நன்று,  அந்தத் தலைப்புகள் வருமாறு :

1. குடும்பம்,

2. கட்சி, அரசியல் பணிகள்,

3. விடுதலை இயக்கமும்  சிறைவாழ்க்கையும்,  

4. சென்னை மாகாண முதல்வர்,

5. நெஞ்சுக்கு நேர்மை,

6. விவசாய முதல்வர்,

7. ஆன்மீக அரசியல்,

8. தாழ்த்தப்பட்டோருக்கு நீதி,      

9. தமிழுக்குத் தொண்டு,

10. கடலூர் அஞ்சலை அம்மாளும் வடலூர் ஓமந்தூராரும்,

11. வடலூர் தவவாழ்வு,

12. நான் கண்ட ஓ.பி.ஆர்.

ஓமந்தூராரைப் பற்றிய செய்திகளும் அவரைச் சுற்றி நடந்த வரலாற்றுச் செய்திகளும் அடுத்துவரும் தலைமுறைகள் அறிய வேண்டியவை. தந்தை, தாய், மனைவி, மகன் ஆகியோர் அடுத்தடுத்து இறந்த நிலையில் அவர் ஒரு வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டைத் துறவியாகவே வாழ்ந்து இருக்கிறார். ஆன்மீக அரசியல் என்று ஒரு முழக்கம் தற்காலத்தில் முன்வைக்கப்படுகிறது. அதை முன்னரே செயலில் காண்பித்தவராக ஓமந்தூரார் இருந்துள்ளார். துறவிகளோடு தொடர்ந்து நல்லுறவு வைத்திருந்தாலும் அரசு நிர்வாகத்தில் அவர்களின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை.

நூல் மதிப்புரையின் ஊடாக, நூல்தலைவனைப் பற்றி வாசகர்கள் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகச் சில துளிகள்…

ஓமந்தூரார் அதிகம் படிக்கவில்லை. இருந்தாலும் திண்டிவனத்தில் உள்ள வால்டர் ஸ்கட்டர் உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார். அப்போது அவருடன் படித்துக் கொண்டிருந்த மாணவர் 1907 பிப்ரவரி 13 ஆம் தேதி காஞ்சி காமகோடி பீடத்தின் அதிபதி ஆனார். ஸ்ரீ ஜெகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்தான் அந்த மாணவர். அலிகார் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய திரு. சையது அகமதுகான் என்பவரும் இவருடன் படித்த சக மாணவரே.

(இணையத்தின் பல பதிவுகளில் ஓமந்தூராரை வழக்கறிஞர் எனத் தவறாகக்  குறிப்பிட்டுள்ளார்கள். சரி பார்க்காமல் தமிழ் இந்து நாளிதழிலும் அவரை வழக்கறிஞர் என எழுதி உள்ளார்கள். எந்தப் பொருள் ஆனாலும் இணையம் சொல்வன எல்லாம் உண்மை என்று பேதை நெஞ்சம் நம்புகிறதே…)

ஓமந்தூராருடைய இயற்பெயர் இராமசாமி. இவருடைய வீட்டின் பெயர் பெரிய வளைவு. இரண்டையும் இணைத்து ஓமந்தூர் பெரிய வளைவு இராமசாமி ரெட்டியார் என்று அழைக்கப்பட்டார். சுருக்கம் கருதி ஓமந்தூரார் என்றும் ஓபிஆர் என்றும் பின்னாளில் அழைக்கப்ட்டார். இவருடைய தந்தையார் பெயர் முத்துராம ரெட்டியார். ஆனால் தந்தையாரின் தலைப்பெழுத்து ஓபிஆர் என்பதில் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

அமாவாசை தோறும் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாரத மாதா படத்தையும் காந்தி படத்தையும் கைகளில் ஏந்திக்கொண்டு தெருத் தெருவாக சுதந்திஎழுச்சிப் பாடல்களைப் பாடியபடி கதர்த் துணிகள் விற்றுள்ளார். இதைப் படிக்கும்போது அந்தக் காலத்து இளைஞர்களிடம் பொங்கி எழுந்த சுதந்திர உணர்வை ஊகிக்கலாம். 

1921இல் அன்னிபெசண்ட் அம்மையார் தலைமையில் கடலூரில் பிரம்ம ஞான சபை மாநாட்டை நடத்திக் கொடுத்துள்ளார். அம்மையாரோடு உரையாடியும் உள்ளார்.

1922  முதல் திண்டிவனம் காங்கிரஸ் கட்சித் தலைவராகச் செயல்பட்டார். 1930 முதல் 1937 வரை தென்னார்க்காடு மாவட்டக் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். 1938 இல் நடந்த சென்னை மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற சத்தியமூர்த்தியைவிட 35 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார். அடுத்த முறையும் தலைவராக ஓமந்தூராரே தொடர வேண்டும் என்று காமராசர் இராஜாஜி ஆகியோர் வற்புறுத்தினர். ஆனால் இவர் மறுத்துவிட்டார்.

1938, 1946 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரை முதலமைச்சராக இருக்கச் சில மாதங்களாகப் பலரும் வற்புறுத்தினார்கள். இவர் சம்மதிக்கவில்லை. பின்னர் திருவண்ணாமலை பெருந்துறவி ரமணர் அவர்களின் ஆலோசனை கேட்டே முதலமைச்சராக இருக்க இசைவு தந்தார். இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே 23-03-1947 இல் சென்னை மாநில முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு ஏற்ப… முதல் அமைச்சர் ஆனாலும் சாதாரண மனிதரைப் போல் நடந்துகொண்டார்.

இந்தியா விடுதலை பெற்ற போது, 1947 ஆகஸ்ட் 15 அன்று காலை கோட்டையில் தேசியக் கொடியை ஓமந்தூரார் ஏற்றினார். பதவி ஏற்பு உறுதிமொழி கூறி  சுதந்திர இந்தியாவில் சென்னை மாகாணத்தின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்

இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷாரான ஐசிஎஸ் அதிகாரிகள் விரும்பினால் இந்தியாவில் தொடர்ந்து பணியாற்றலாம் என்று சர்தார் வல்லபாய் பட்டேல் கேட்டுக்கொண்டார்ஆனால் ஓமந்தூரார் பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் உங்கள் பணி எங்களுக்குத் தேவை இல்லை. புறப்படுங்கள் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

காந்தி அடிகள் இறந்த போது துடிதுடித்துப் போனார். அப்போது இவர் முதல் அமைச்சராக இருந்தார். தில்லிக்கு நேரில் சென்று திருச்சாம்பலை வாங்கி வந்தார். அதைக் கரைக்கும் முன்பாகத் தன் வீட்டு வழிபாட்டு அறையில் வைத்து வணங்கினார். மேல்சட்டை அணியாமல் திருச்சாம்பல் கலசத்தைக் கையில் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று கடலில்  கரைத்தார்.

சென்னை மாநிலத்தின் இலச்சினையாக உள்ள திருவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தைத் தேர்வு செய்தவர் இவரே. கோபுரம் ஒரு சமயச் சின்னம். மதச்சார்பற்ற அரசில் இதை அனுமதிக்கக்  கூடாது என்று சிலர் நேருவிடம் முறையிட்டனர். ஓமந்தூராரிடம் நேரு விளக்கம் கேட்டார். திராவிடக் கட்டடக் கலையின் அடையாளம்தான் கோபுரம் என்று பதில் அளித்தார். மேலும் காந்தியின் நண்பர் சி.எப்.ஆண்ட்ரூஸ் திருப்பத்தூரில் கோபுரத்துடன் ஒரு தேவாலயத்தைக் கட்டி இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

காந்தி அடிகளுடனும் நேருவுடனும் பலமுறை கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தார். அவற்றை நேரடியாகவும் வெளிப்படுத்தினார். இது தொடர்பான தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன. பட்டை தீட்டப்பட்ட வைரம் என்று பாராட்டுவது வழக்கம். ஆனால் நேருவோ, ஓமந்தூராரைப் பட்டை தீட்டப்படாத வைரக்கல் என்று பாராட்டினார். அப்படிச் சொன்னதற்கு ஓமந்தூராரின் கண்டிப்பும் கறாரும் முரட்டுப் பிடிவாதமும் காரணங்களாக இருக்கலாம்.

கம்யூனல் ஜிஓ என்றும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்றும் அந்தக் காலத்தில் குறிப்பிடப்பட்ட இடஒதுக்கீடு சம்பந்தமாக சில திருத்தங்களையும் இவர் கொண்டுவந்தார். அதன்படி மொத்த பதவிகள் 14 என்றால் பிராமணருக்கு 2, கிறிஸ்தவருக்கு 1, இஸ்லாமியருக்கு 1, ஆதி திராவிடருக்கு 2, பிற்பட்டோருக்கு 2, பிராமணர் அல்லாத மற்றவர்களுக்கு 6 என்ற விகிதத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று உத்தரவு இட்டார். பிராமணருக்கும் இடஒதுக்கீடு சலுகையை வழங்கி இருக்கிறார்.

தன்  ஆட்சிக் காலத்தில் வேளாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் இவர்தான் விவசாய முதல்வர்விவசாயத்தில் அதிக அனுபவ ஞானம் கொண்டவர். விவசாயச் சீர்திருத்தமும் சம நிலையும் என்ற புத்தகத்தையும் எழுதி உள்ளார்.

முதல்வராக இருந்த காலத்தில் அவர் இயற்றிய சட்டங்களும் திட்டங்களும் செயல்பாடுகளும் சரித்திரம் பேசும் சாதனைகளாக மாறிவிட்டன.

ஓமந்தூராரின் கண்டிப்பு கறார் தன்மை, நேர்மை, பிடிவாதம் காரணமாக பல எதிர்ப்புகளும் எழுந்தன. அவரைப் பதவியில் இருந்து விலக வைக்க முயற்சிகள் நடந்தன. 06-04-1949 அன்று முதல் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார். அன்றே அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு ஊர் திரும்பிவிட்டார்.

அரசாங்க அலுவலகப் பணியாளர் பெறும் ஊதியத்திற்கும் விவசாயக் கூலியாள் பெறும் ஊதியத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைச் சுருக்க வேண்டும் என்பதில் வலுவான கருத்துக் கொண்டிருந்தார். இவரின் இந்தச் சிந்தனையை இன்று முன்னெடுப்பார் யாரும் இல்லை.

ரமணர் நோய்வாய்ப்பட்டு இருந்த காலத்தில் அவருடனே இருந்து சேவை செய்தார். இவரின் மடியில்தான் ரமணர் உயிர் துறந்தார். அரசியலில் இருந்து விலகி வடலூரில் வாழ்ந்த போது, பல உயர்பதவிகள் தேடி வந்தன. ஏற்கவில்லை.

ஓமந்தூரார் நிறுவிய வள்ளலார் குருகுலம் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தவர் இந்த நூலாசிரியர். ஓமந்தூராரின் கண்காணிப்பில் வளர்ந்தவர். அந்தச் சமயத்தில் வடலூர் ஞான சபையில் திருப்பணிகள் நடந்தன. அப்பணிகளை மேற்பார்வையிட ஓமந்தூரார் ஞான சபைக்குச் செல்லும்போது அவருக்கு உதவும்பொருட்டு மாணவனாக இருந்த கோவி. ஜெயராமன் ஒருமுறை சென்றார். ஜோதி தரிசன அறையின் கீழ் உள்ள நிலவறையில் ஓமந்தூரார் படி இறங்கிய போது அவரைத் தாங்கியவாறு சென்றார். அந்த நிலவறையில்தான் வள்ளலார் தியானம் செய்வது வழக்கமாம். அது குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறைபோல் இருந்ததாம். ஞான சபையின் நுழைவாயிலில் இருக்கும் யானைச் சிற்பங்களின் காதுகள் வழியாக அந்தப் பாதாள அறைக்குள் வெளிக்காற்று நுழையும்படி கட்டுமானத்தை வள்ளலார் அமைத்துள்ளார் என்று வியக்கிறார் நூலாசிரியர். அந்த நிலவறையில் யாரையும் அனுமதிப்பது இல்லை. அந்நிலையில் வள்ளலார் தவம்புரிந்த நிலவறையைக் காணும் வாய்ப்பைப் பெற்றதைப் பெருமையாகச் சொல்கிறார் கோவி. ஜெயராமன்.

இந்த வரலாற்று நூலை இப்படி முடிக்கிறார்.

“நான் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்த போது ஓமந்தூரார் உயிரோடு இருந்திருந்தால் அவருடைய ஆசி எனக்குக் கூடுதலாகக் கிடைத்திருக்கும். அதன்வழியே என் வளர்ச்சி இன்னும் உயர்நிலை அடைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளே இன்றும் உள்ளது.”

முடிவாக….

இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, இன்றைய அரசியல்வாதிகள் மீது உங்களுக்குக் கோபம் ஏற்படலாம்.

…………………………………………………………………………..

நூல் : ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் (முதல் முதலமைச்சர்)

நூல் :ஆசிரியர் : கோவி. ஜெயராமன்

வெளியீடு : பெண்ணைப் பதிப்பகம், 12, கல்லூரி ஆசிரியர் நகர், உண்ணாமுலைச் சாவடி, கோண்டூர் அஞ்சல், கடலூர் – 607006. விலை : ரூபாய் 70 பக்கங்கள் : 83

நூல் ஆசிரியர் அலைபேசி : 9442746411

குறிப்பு : நான் படிக்க விரும்பிய போது இந்த நூலைக் கொடுத்து உதவிய எழுத்தாளர் வளவ. துரையன் அவர்களுக்கு நன்றி.

 

நன்றி :

திண்ணை இணைய இதழ்

02-05-2021