செம்மையாக்குநர்கள்
எடிட்டிர் என்பதைத் தமிழில் எப்படிச்
சொல்வது என்று தெரியவில்லை. திருத்தர் என்கிறார்கள். செம்மையாக்குநர்
என்கிறார்கள். பதிப்பாசிரியர் என்கிறார்கள். இதுகுறித்துச் சரியான சொல்காண
வேண்டும். அதுவரை செம்மையாக்குநர் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.
ஆங்கிலப்
பதிப்பக உலகில் தொழில்முறை செம்மையாக்கம் உள்ளது. தமிழில் அப்படி இல்லை. என்றாலும்
தெரிந்தோ தெரியாமலோ சிறுஅளவில் செம்மையாக்கப் பணி இங்கு நடந்துகொண்டுதான்
இருக்கிறது.
சிலர்,
தாங்கள் எழுதும் படைப்புகளை நூலாக்கும் போது, தமக்குத் தெரிந்த எழுத்தாளர்களிடமோ
வாசகர்களிடமோ காட்டிக் கருத்துக் கேட்கிறார்கள். தம் படைப்புகளைச் சரிபார்க்கவும்
திருத்தம் செய்யவும் இத்தகைய அணுகுமுறை உதவுகிறது. அவ்வாறு உதவியவர்களைத் தங்களின்
முன்னுரையில் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கிறார்கள்.
சங்க
காலங்களில்கூடச் சங்கப் பலகை என்ற அமைப்பை வைத்திருந்தார்கள். அதில் பல புலவர்கள்
இருந்தார்கள். ஒருவரின் படைப்பை ஆராய்ந்து அதில் இருக்கிற தவறுகளைச் சுட்டிக்
காட்டித் திருத்துவார்கள். தவிர்க்க வேண்டியவற்றைச் சொல்வார்கள். அந்த வகையில்
ஒவ்வொரு படைப்பும் செம்மையாக்கம் செய்யப்பட்டதாக அறிகிறோம். பின்னர் ஏன் அத்தகைய
அமைப்பு மறைந்து போனது என்று ஆராய வேண்டி உள்ளது.
அதை
மீட்டெடுக்கும் முயற்சி ஒன்று கடலூரில் நடந்தது. கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி
என்பவர் வெண்பூக்கள் என்றொரு நூல் எழுதினார். அதைப் படிகள் எடுத்துப் பல இலக்கிய அறிஞர்களிடம்
முன்னரே கொடுத்தார். அதில் உள்ள குறை நிறை சுட்டவும் சீர்செய்யவும் கூறியதோடு
அதையே சங்கப் பலகை என்ற பெயரில் இலக்கிய நிகழ்வாக நடத்தினார். கொஞ்சம் பெரிய நூல்
என்பதால், அந்த நூல் பகுதிகளை மூன்றாகப் பிரித்து மூன்று வெவ்வேறு நாள்களில் அந்த
நிகழ்வுகளை அமைத்தார். குறைகள் களையவும் நிறைகள் சேரவும் பல திருத்தங்களை அறிஞர்
பெருமக்கள் தெரிவித்தனர். அந்த நிகழ்வுகளில் நானும் பார்வையாளராகக்
கலந்துகொண்டேன். நூல் செம்மையாக வருவதற்கு இதுவும் ஒரு நன்முறை என்றே எனக்குத்
தோன்றியது. எந்தப் படைப்பாளரும் தன் குறை பலர் முன்னிலையில் வெளிப்படுத்தப்படுவதை
விரும்ப மாட்டார். குறையோ நிறையோ எதுவோ என்றாலும் பலர் முன்னிலையில்
விவாதிக்கப்பட்டுத் திருத்தம் செய்துகொள்ள முன்வந்த க.பொ. இளம்வழுதி அவர்களைப்
பாராட்ட வேண்டும்.
பூமிக்கு
வந்த நட்சத்திரங்களைப் போல எழுத்தாளர்கள் நிறைந்துள்ளனர். ஆனால் படைப்புகளைச்
செம்மையாக்கிப் பதிப்பீடு செய்யும் வழிமுறைகளை அவர்கள் அறியவில்லை. இந்த
நிலையில்தான் பதிப்பகங்களை நாடுகிறார்கள். எழுத்தாளர் எழுதித் தந்தவாறு நூலை
அச்சிட்டு வெளியிடுவது மட்டுமே போதுமானது அல்ல. எழுத்தாளரின் படைப்பை ஆய்வுக்கு
உட்படுத்தி மேம்படுத்த வேண்டும். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்குத்தான்
செம்மையாக்குநர்கள் தேவைப்படுகிறார்கள்.
தமிழில்
செம்மையாக்குநர்கள் யார்யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இருந்தால் விரல்
எண்ணிக்கைக்குள்தான் இருப்பார்கள். அவர்களுக்கும் சில அடிப்படைத் தகுதிகள் இருக்க
வேண்டும்.
ஒரு
செம்மையாக்குநர் பரந்துபட்ட வாசிப்புப் பழக்கம் கொண்டவராக இருத்தல் முதன்மையானது,
தவறில்லாமல் எழுதுவதற்குரிய இலக்கணம் தெரிந்தவராக இருப்பது முக்கியமானது.
தட்டச்சு, வடிவமைப்பு, அச்சிடல் பற்றிய நுணுக்கங்களை அறிந்தவராக இருத்தல்
மேன்மையானது. தற்கால இலக்கியப் போக்குகளையும் நாட்டு நடப்புகளையும் அறிந்து
வைத்திருத்தல் நல்லது. ஐயம் ஏற்படும் இடங்களில் வல்லுநர்களின் ஆலோசனைகளைக்
கேட்டுப் பெறத் தயங்கக் கூடாது. எழுத்தாளரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து நடக்க
வேண்டும். திருத்துவதால் எழுத்தாளரைவிடத் தான் மேம்பட்டவர் என்ற எண்ணம் தகாது.
படைப்பைச் சீர்படுத்தவே முயல வேண்டும். இம்மியளவும் சீர்குலைவுக்குக்
காரணமாகிவிடக் கூடாது. மொத்தத்தில் பதிப்புத் துறையில் சில ஆண்டுகளாவது அனுபவம்
பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளோடு செம்மையாக்குநர்கள் கிடைத்தால் நற்பேறு.
தங்கள்
படைப்புகளுக்குத் தாங்களே செம்மையாக்குநர்களாக இருக்கத்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள்
விரும்புகிறார்கள். எனினும் தமிழில் செம்மையாக்குநர்களின் அவசியம் மெல்ல மெல்ல
உணரப்படுகிறது.
ஜெயமோகன்
அவர்கள், ஆழமான இலக்கிய ஞானமும் உலக ஞானமும் கொண்டவர். அவர்தான் பிறருக்கு
வழிகாட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் எழுதிய வெண்முரசு
நாவல்களுக்கான செம்மையாக்கப் பணிகளை ஸ்ரீநிவாசன் – சுதா இணையர் மேற்கொண்டார்கள்.
அந்த இணையரை இணை ஆசிரியர்கள் என்றே பெருமைப்படுத்துகிறார் ஜெயமோகன்.
எழுத்தாளர்
மெளனி அவர்களை நாம் அறிவோம். அவரின் சிறுகதைகள் பலவும் எம்.வி. வெங்கட்ராம்
அவர்களால் திருத்திச் செம்மையாக்கம் செய்யப்பட்டவைதாம் என்பதை அறிவீர்களா?
படைப்பாளர்கள்
சிலருக்கு அறிவுச் செருக்கு இருக்கும்.
படைப்பைப் பாராட்டினால் ஏற்றுக்
கொள்வார்கள். குறைசுட்டினால் ஏற்க மறுப்பார்கள். மேலும் குறை சொன்னவரையே
வெறுப்பார்கள். தெளிவாகவே தென்படும் முரணைச் சுட்டிக் காட்டினாலும், அதற்குப்
புதியதாக ஒரு வழுவமைதி வகுப்பார்கள். “அவர் என்ன, என்னைவிட மேலானவரா? எனக்குத்
தெரியாதது அவருக்குத் தெரியுமோ?” என்று செம்மையாக்குநர்களை எழுத்தாளர்கள் ஏற்பதில்லை. படைப்பை மேம்படுத்தவே
செம்மையாக்குநர்கள் உதவுகிறார்கள்; உழைக்கிறார்கள் என்பதை எழுத்தாளர்கள் உணர்தல்
வேண்டும்.
ஒருவர்
தன் கவிதையைத் திருத்தம் செய்து கொடுங்கள் என்று பணிவாகச் சொல்வார். கவிதையில்
தேர்ந்த ஒருவர், அதனைச் செம்மை செய்து தருவதோடு, கவிதை இந்த இடத்திலேயே முடிந்துவிடுகிறது.
அதற்கு அடுத்துவரும் மூன்று வரிகள் தேவையில்லை என்பார். அவரிடத்தில் அந்தக்
கவிஞர், “ஆமாங்கய்யா சரிங்கய்யா” என்று சொல்லிவிட்டுப் போவார். நூல் வெளிவரும்
போது, அந்த மூன்று வரிகளும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கும். தம் வரிகளை நீக்கப்
பெரும்பாலும் கவிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. இதனாலும் தமிழில் செம்மையாக்கம்
என்பது தனியாக நிகழவில்லை.
ஒற்றுப்பிழை,
சொற்பிழை, இலக்கணப்பிழை பற்றிப் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அக்கறை இல்லை. அவை
பிழைகள் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. பிழை திருத்தங்கள் சொன்னால் அவர்கள் பொருட்படுத்துவதும்
இல்லை.
அதே
நேரத்தில், படைப்பாளர்களின் புனைவுமொழியைப் புரிந்துகொள்ளாமல் இயந்திரத்தனமான
மொழிப்புரிதலோடு பிழைதிருத்தினால்
படைப்புச் சிதைவுறும் என்று ஜெயமோகன் சுட்டிக்காட்டி உள்ளதைக் கவனத்தில்
கொள்ள வேண்டும்.
கூறியது
கூறல் என்பது பெரும்பாலும் வருகிறது. முந்தைய பத்தியில் சொன்னவற்றை இரண்டொரு பத்திகள்
தள்ளி, வேறு சொற்களில் அதே கருத்தைச் சொல்பவர்கள் உண்டு. தொடர்புடைய செய்திகளைக்
கலைத்துப் போட்டிருப்பார்கள். தேவைக்கு மேல் சொற்களைக் குவிப்பவர்கள் உண்டு.
அதனால் பொருள்மயக்கம் ஏற்படும் நிலையும் நேருவது உண்டு. தற்காலப் படைப்புகளில் இருவேறு
பொருள்தரும் சொற்றொடர்களும் பொருத்தமற்ற சொற்பயன்பாடுகளும் வருகின்றன.
கட்டுரைத் தொகுப்பாக இருந்தால், ஒரு
கட்டுரையில் உள்ள செய்திகள் வேறொரு கட்டுரையில் இருக்கும். சில போது ஒரே செய்தி அடிக்கடி
வரும். வரலாற்று நிகழ்வுகளையும் ஆண்டுகளையும் தவறாகக் குறிப்பிட்டு இருப்பார்கள்.
ஒரு கட்டுரையில் சொன்னதில் இருந்து, இன்னொரு கட்டுரையில் முரண்பட்டிருப்பார்கள். இவற்றை
எல்லாம் சுவடு தெரியாமல் சரி செய்ய செம்மையாக்குநர்கள் உதவுவார்கள்.
பிழை
திருத்தமும் செம்மையாக்கத்தின் ஒரு பகுதிதான். ஆனால் தமிழ்ச்சூழலில் பிழை
திருத்தம் மட்டுமே நடக்கிறது. அதற்கும் கூடத் தகுதியான பிழை திருத்தர்கள்
கிடைப்பதில்லை.
தம்
கைப்பட எழுதும்போது ஏராளமான எழுத்துப் பிழைகளோடும் இலக்கணத் தவறுகளோடும் எழுதுகிற
எழுத்தாளர்கள் சிலர் உண்டு. ஆனால் இவர்கள் அபாரமான படைப்பாற்றல் மிக்கவர்கள். செம்மையாக்குநர்களின்
துணையோடு பிழைகளைக் களைந்து விடலாம். இவர்களின் படைப்பாற்றலுக்கு இணையாக
இன்னொருவரைத் தேட முடியாது. இலக்கணம் படித்துத்தான் இலக்கியம் எழுத வரவேண்டும்
என்றால் இங்கே நா. பார்த்தசாரதிதான் மிஞ்சுவார்.
நாளிதழ்களில்
பருவ இதழ்களில் செம்மையாக்கம் செய்வதற்கு என்றே ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
நாளிதழுக்கு ஒரு படைப்பை அனுப்பினால் அதனைச் செம்மையாக்கம் செய்து அழகாக
வெளியிடுகிறார்கள். பெரும்பாலும் 500 சொற்களுக்குள் இருக்க வேண்டும். ஒரு பக்கம்
அல்லது இரு பக்கங்கள் என்ற அளவுக்குள் வர வேண்டும் என்று அங்கேயும் சில வரையறைகள்
வைத்திருக்கிறார்கள். அதனால் படைப்பைச் செம்மையாக்கம் செய்வதைவிட, படைப்பின் அளவைக்
குறைப்பதே சில இதழாசிரியர்களின் எடிட்டிங் கலையாக உள்ளது. அவர்கள் அப்படி வெட்டி
எறிவதற்கு எழுத்தாளர்களின் இசைவைப் பெறுவதில்லை. படைப்பைச் சுருக்கவும்
திருத்தவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு என்று தங்கள் இதழில் முன்னரே குறிப்பிட்டு
விடுகிறார்கள்.
தங்கள்
படைப்பில் எதையும் வெட்டக் கூடாது என்றும் எதையும் திருத்தக் கூடாது என்றும்
இதழாசிரியர்களுக்குக் கட்டளை இடும் பெரிய எழுத்தாளர்களும் உண்டு. புகழ்மிகு
எழுத்தாளர்கள் எதை எப்படி எழுதினாலும் அதில் எந்தத் திருத்தமும் செய்யாமல்
அப்படியே வெளியிடுகிற இதழாசிரியர்களும் உண்டு.
தமிழகத்தின்
தலைசிறந்த நாளிதழுக்கு அறுநூறு சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை அனுப்பினேன். நானூறு
சொற்களில் அந்தக் கட்டுரையைச் சுருக்கியதோடு அருமையான தலைப்பும் சூட்டி வெளியிட்டு
இருந்தார்கள். வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொருத்தமான படமும் அழகான பக்க வடிவமைப்பும்
செய்திருந்தார்கள். படித்துப் பார்த்த எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
அப்போதுதான் எடிட்டிங் கலை எவ்வளவு முக்கியமானது; அவசியமானது என்பதை உணர்ந்தேன்.
உடனே அந்த இதழ் ஆசிரியருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து
மடல்விடுத்தேன்.
பொதுவாக
எடிட்டிங் என்றால் அது திரைப்படத் துறை சம்பந்தப்பட்டது என்றே பலரும் அறிவார்கள்.
ஒரு படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதற்கும், குழப்பம் இல்லாமல் கதை
சொல்வதற்கும் எடிட்டிங் முக்கியமானது. எடிட்டிங் சரி இல்லாததால் தோல்வி கண்ட
படங்கள் பல உண்டு. திரைப்படத்துக்கு அடுத்ததாக, இதழ்களில் எடிட்டிங் கலையைக்
கையாண்டு வருகிறார்கள். தமிழ்ப் பதிப்பகச் சூழலில்தான் எடிட்டிங் பற்றிய விழிப்புணர்வு
தேவைப்படுகிறது.
படைப்புகளைச்
செம்மையாக்கம் செய்து வெளியிடுவதில் அக்கறை கொண்ட பதிப்பகங்கள் மிகக்குறைவாக
உள்ளன. பெரும்பாலான பதிப்பகத்தார் வணிகர்களாக இருக்கிறார்களே தவிர, இலக்கிய
நுகர்வு கொண்டவர்களாக இல்லை. அதனாலும் செம்மையாக்கம் பற்றி அவர்கள் கவலைப்படுவது
இல்லை. பிழை திருத்தும் பொறுப்பையும் எழுத்தாளர்களிடமே விட்டுவிடுகின்றனர்.
அவர்கள் சுட்டிய பிழைகளை மட்டும் சரிசெய்துவிட்டு, அந்தக் கோப்பை அப்படியே
அச்சகத்துக்கு மின்னஞ்சல் செய்துவிடுகிறார்கள்.
பொதுவாக
நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரியாது. அடுத்தவர்களின் பார்வையில்தான் அவை தென்படும்.
அதனால், படைப்பை எழுதி முடித்தவுடன் செம்மையாக்குநர்களிடம் தரவேண்டும்.
அப்போதுதான் எழுத்தாளருக்கே தெரியாத தவறுகள், முரண்கள், தெளிவின்மைகள், தொய்வான
இடங்கள் போன்றவற்றைக் கண்டறிந்து சரிசெய்ய முடியும்.
செம்மையாக்கம்
செய்யும்போது எழும் ஐயங்களைக் களைய ஆசிரியருடன் விவாதித்துத் தீர்வுகாண வேண்டும்.
செம்மையாக்கம் செய்து முடித்தவுடன் ஆசிரியரின் இசைவு பெறுதல் இயற்கை நீதிகளில்
ஒன்று.
எழுத்தாளர்கள்
உணர்வு வேகத்தில் தமக்குள்ளிருந்து வருவதை எல்லாம் கொட்டி விடுவார்கள்.
எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப அவற்றை ஒழுங்கமைக்க வேண்டியது அவசியம். அந்த
இடத்தில்தான் செம்மையாக்கத்தின் இன்றியமையாமை ஏற்படுகிறது. அதனால் பதிப்பகச்
சூழலில் வடிவமைப்போர், அச்சிடுவோர் என்பனர் போல், செம்மையாக்குநர்கள் என்று ஒரு
பிரிவினர் உருவாக வேண்டும்.
எழுத்தாளரும்
செம்மையாக்குநரும் ஒரே திசையில் இணைகோடுகளாக பயணிக்கும் வகையில் நற்சூழலைப் பேணிக்
காக்க வேண்டும்.
பரிந்துரை :
ஜெயமோகன் தளத்தில்
“வெண்முரசின் இணையாசிரியர்கள்” என்ற கடிதத்தைப் படியுங்கள்.
எடிட்டிங் பற்றி ஜா.
ராஜகோபாலனும் காளி ப்ரஸாத்தும் இணைந்து ஒளிஒலிப் பதிவு ஒன்றை வெளியிட்டு
இருக்கிறார்கள். அதையும் பாருங்கள்.
நன்றி :
திண்ணை,
27-09-2020
No comments:
Post a Comment