வேண்டும் என்றொரு சொல் இருந்தால்....
வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்.
கோ. மன்றவாணன்
வேண்டும் என்ற சொல் இல்லாமல், எந்தத்
தேவையையும் நாம் பெற்றுவிட முடியாது. நமக்குப் பிடிக்காததை ஏற்க மறுக்கும்போது
வேண்டாம் என்று சொல்லி விடுகிறோம். பேசவும் எழுதவும் இச்சொற்கள் எளிமையாகவும்
இனிமையாகவும் இருக்கின்றன.
வேண்டாம்
என்ற சொல்லை எதிர்மறைச் சொல்லாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சில
புலவர்கள் வேண்டாம் என்பதும் நேர்மறைச் சொல்லே என்று உரைக்கின்றனர்.
வேண்டாம்
என்ற சொல்லை வேண்டு + ஆம் எனப் பிரித்துப் பொருள் சொல்கின்றனர் இதில் வரும் ஆம் என்பது ஒப்புதல் தருவதைக்
குறிக்கிறதே தவிர மறுப்புத் தெரிவிப்பதாக இல்லை என்கின்றனர். அதனால் வேண்டாம் என்ற
சொல்லும் வேண்டும் என்ற சொல்லும் ஒரே நேர்மறைப் பொருளைத்தான் தருகிறது என்று
கூறுகின்றனர். இதை இன்னொரு வகையில் விளக்கலாம். உண்டு என்ற சொல்லை உண்டாம் என்றும்
சொல்வோம். இந்த இருண்டு சொற்களும் உடன்பாட்டுச் சொற்களே. இதுபோல் வேண்டும்
என்பதும் வேண்டாம் என்பதும் உடன்பாட்டுச் சொற்களே என வாதிட முடியும். ஆனாலும், ஒரு
சொல்லை இரு பொருள்களில் இரட்டுற மொழியும் வழக்கம் தமிழில் உண்டு. இது கவிஞர்களின்
திறன். அதைப் போலவே வேண்டாம் என்ற சொல்லையும் பிரித்துப் பொருள்மாயம்
காட்டுகின்றனர்.
வேண்டாம்
என்ற சொல்லும் உடன்பாட்டுச் சொல்தான் என்பவர்கள் அதற்கான சான்றைச் சொல்ல வேண்டும்.
நான் தேடிய வரையில் வேண்டாம் என்பதற்கு வேண்டும் என்பதுதான் பொருள் என்று எந்த இலக்கியச்
சான்றும் கிடைக்கவில்லை.
வேண்டும்
என்றோர் உடன்பாட்டுச் சொல் இருக்கையில் அதற்கு எதிர்ச்சொல் ஒன்று இருந்தாக
வேண்டும். அது வேண்டாவா? வேண்டாமா?
நம்
பேச்சுப் புழக்கத்திலும் சரி, எழுத்து வழக்கத்திலும் சரி, வேண்டும் என்ற
சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக வேண்டாம் என்ற சொல்லைத்தான் இயல்பாகப் பயன்படுத்தி
வருகிறோம். சில புலவர் பெருமக்கள் வேண்டா என்ற சொல்லே சரியென்று எழுதுகிறார்கள்.
அவர்கள் அப்படி எழுதுவதைத் தவறென்று சொல்லப் போவதில்லை. ஆனால் இந்த வேண்டா என்ற
சொல், சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்ப்பேரகராதியில் இடம்பெறவில்லை.
ஆனால் அதே அகராதியில் வேண்டாம் என்ற சொல், எதிர்மறைப் பொருளில் இடம்பெற்று உள்ளது.
அதற்கு இலக்கிய எடுத்துக் காட்டாக “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்ற உலக
நீதியில் வரும் பாடலைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
பல
அகராதிகளில் வேண்டும் என்ற சொல்லும் இல்லை. வேண்டாம் என்ற சொல்லும் இல்லை. ஆனால்
வேணும் என்ற சொல் இருக்கிறது.
க்ரியா
வெளியிட்டுள்ள தற்காலத் தமிழ் அகராதியிலும் வேண்டா என்ற சொல் இடம்பெறவில்லை.
ஆனால், வேண்டும் என்ற வினைமுற்றுச் சொல்லுக்கு வேண்டு என்ற வினைச்சொல்லின்
பொருளைக் காணச் சொல்கிறது. அதுபோல் வேண்டாம் என்ற வினைமுற்றுச் சொல்லுக்கும்
வேண்டு என்ற வினைச்சொல்லின் பொருளைக் காணச் சொல்கிறது. ஆக, வேண்டும் என்பதற்கும்
வேண்டாம் என்பதற்கும் ஒரே பொருளைத்தான் இந்த அகராதி தருகிறது. வேண்டாம் என்பதற்கு
எடுத்துக் காட்டுச் சொற்றொடர் எதையும் குறிப்பிடவில்லை. தற்கால மொழிப்பயன்பாட்டை
முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அகராதியில் வேண்டாம் என்ற சொல்லை எதிர்மறைச்
சொல்லாகக் குறிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது. தற்கால அகராதி என்பதால் மிக்சர்
என்ற சொல்லுக்குக் காரச்சுவை உள்ள தின்பண்டம் எனக் குறித்தவர்கள், வேண்டாம் என்ற
தற்காலப் பயன்பாட்டைத் தவிர்த்து இருப்பதற்கு ஏதோ காரணம் இருக்கலாம். எனக்குத்
தெரியவில்லை.
திருக்குறள்,
சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பியங்கள் உள்ளிட்ட நூல்களில்
வேண்டும், வேண்டா, வேண்டாம் ஆகிய சொற்களின் பயன்பாடுகள் பற்றி ஆராய்ந்து பார்த்தேன்.
தொல்காப்பியத்தில்...
நமக்குக்
கிடைத்தவற்றுள் தலை நூலாகத் திகழும் தொல்காப்பியத்தில் வேண்டாம் என்ற சொல் இல்லை.
ஆனால், வேண்டும் என்ற சொல் 39 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. வேண்டா என்ற சொல்
5 இடங்களில் வந்துள்ளது. எடுத்துக் காட்டுகள் :
உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் – பொருள்,
உவம : 8/1
தன்சீர் உள்வழி தளைவகை வேண்டா – பொருள்.
செய்யுள் : 55/1
திருக்குறளில்...
வேண்டும்
என்ற சொல்லைத் திருவள்ளுவர் 22 முறை பயன்படுத்தி உள்ளார். எடுத்துக் காட்டுக்காக
ஒரு குறள் இதோ...
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்
உருள்பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. - 67-7
வேண்டா
என்ற சொல்லை 9 முறை பயன்படுத்தி உள்ளார். எடுத்துக் காட்டாக ஒரு குறள் :
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. - குறள் 4 : 7
வேண்டா
என்பதன் அடியொற்றி வேண்டற்க, வேண்டாதார், வேண்டாதான், வேண்டாமை, வேண்டாரை,
வேண்டாவாம் ஆகிய சொல்நீட்சிகளையும் பயன்படுத்தி உள்ளார்.
சங்க இலக்கியங்களில்...
பத்துப்
பாட்டு, எட்டுத் தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் வேண்டும் என்ற சொல், 37
இடங்களில் வந்துள்ளது. எடுத்து உரைப்பதற்காக ஒரு வரி:
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் . – புறம் 367/9
வேண்டா
என்ற சொல், 12 இடங்களில் கையாளப் பட்டுள்ளது. எடுத்து உரைப்பதற்காக இரண்டு அடிகள்
:
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 101/10
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் – கலி 28/22
வேண்டா என்பதன் அடியொற்றி வேண்டலமே, வேண்டலன், வேண்டாதார், வேண்டாது, வேண்டாதோளே, வேண்டாமையின், வேண்டார், வேண்டாள் ஆகிய சொல்நீட்சிகளையும் சங்க இலக்கிய நூல்களில் காணலாம். எந்த ஓர் இடத்திலும் வேண்டாம் என்ற சொல் இடம்பெறவில்லை.
பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களில் வேண்டும் என்ற சொல் 49 இடங்களிலும் வேண்டா என்ற சொல் 44
இடங்களிலும் உள்ளன. வேண்டும் மற்றும் வேண்டா என்பவற்றின் அடியொற்றிய பல சொற்களும்
உள்ளன. ஆனால் வேண்டாம் என்ற சொல் இல்லை.
சொற்கடலாகப்
பரவிக் கிடக்கும் கம்ப ராமாயணத்தில் வேண்டும் என்ற சொல் 38 தடவையும் வேண்டா என்ற
சொல் 12 தடவையும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவ்விரண்டின் அடியொற்றிய சொற்கள்
பலவும் உள்ளன. ஆனால் வேண்டாம் என்ற சொல் எங்கேயும் இல்லை. எடுத்துக் காட்டுகள் :
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம்
வேண்டும் – பால காண்டம் 13 – 43 / 1,2
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின்
அஞ்சி – யுத்த காண்டம் 3 : 31-54/1
வேண்டா
என்பதற்கு இணையாக வேண்டல, வேண்டலர் ஆகிய சொற்களையும் கம்பர் கையாண்டு உள்ளார். ஓர்
எடுத்துக் காட்டாக...
வெறுங்கூந்தல் மொய்க்கின்றன வேண்டல வேண்டும்
போதும்.. – பால காண்டம் பூ கொய்ப் படலம்
17/12-13
கம்பர்
எந்த இடத்திலும் வேண்டாம் என்ற சொல்லைக்
கையாளவில்லை.
நாலாயிரத்
திவ்ய பிரபந்தத்தில் வேண்டும் என்ற சொல், நேரடியாக 17 இடங்களில் உள்ளன. அதன்
அடியொற்றிய வேண்டிற்று, வேண்டுவம் போன்ற பல சொற்கள் உள்ளன. வேண்டாம் என்ற சொல்
நேரடியாக எங்கும் இல்லை. ஆனால் அதற்கு இணையாக வேண்டேன் வேண்டோம் என்றவாறு எதிர்மை
கையாளப் பட்டுள்ளது.
வேண்டாம் என்ற சொல்
இடம்பெற்ற இலக்கியங்கள் உண்டா? :
மேற்கண்ட
இலக்கியங்களைப் பார்க்கின்ற போது வேண்டாம் என்ற சொல்பயன்பாடு இல்லை தானோ... என்று
நினைக்கத் தோன்றும். ஆனால் வேண்டாம் என்ற சொல்லை ஆளும் இலக்கியங்களும் உள்ளன.
அவற்றில் சில காண்போம்.
ஐம்பெருங்
காப்பியத்தில்...
ஐம்பெரும்
காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் வேண்டாம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது.
சான்றுகள் வருமாறு :
“கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம்.”
“துனித்து நீர் துளங்கல் வேண்டாம் தூமணி சிவிறி நீர்தூய்”
பெருங்கதையில்...
பெருங்கதையில்
24 முறை, வேண்டும் என்ற சொல்லும், 26 முறை, வேண்டா என்ற சொல்லும் இடம்பெற்று
உள்ளன. கூடவே, வேண்டாம் என்ற சொல்லும் பெருங்கதையில் இடம்பெற்று உள்ளதைப்
பெரும்புலவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக...
செரு மீக்கூற்றமும் செய்கையும் வேண்டாம் – மகத. 25/84
மேலும்
வேண்டும் என்பதற்கு எதிர்ச்சொல் போல வேண்டலம் என்ற சொல்லும் உள்ளது.
திருமந்திரத்தில்...
திருமந்திரம்
என்ற அரிய நூலில் வேண்டாம் என்ற சொல்லைத் திருமூலர் 16 முறை கையாண்டு உள்ளார்
என்பது மிகப்பெரும் சான்றாகத் திகழ்கிறது. நாம் தெளிவடைய ஒரு பாடல்...
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்ளுற்றால்
காதலும் வேண்டாம் மெய்க்காயம் இடம்கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதி கைகூடினால்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே – திருமந்திரம் 1633
பெரிய புராணத்தில்...
பெரிய
புராணத்தில் வேண்டாம் என்ற சொல் 5 இடங்களில் இடம்பெற்று உள்ளது. ஓர்
எடுத்துரைத்தல்.
“வித்தகம் பேச வேண்டாம் பணிசெய வேண்டும் என்றார்.”
திருமலை : 5, 41/4.
இந்த
ஒரே அடியில் வேண்டும் என்ற சொல்லையும் வேண்டாம் என்ற சொல்லையும் சேக்கிழார் எழுதி
உள்ளார் என்பதைக் கவனியுங்கள்.
தேம்பாவணியில்...
தமிழில்
அகர வரிசைப்படி முறையான அகராதியை முதலில் உருவாக்கிய வீரமாமுனிவர் அவர்கள் எழுதிய
தேம்பாவணி என்ற நூலில் 31 இடங்களில் வேண்டும் என்ற சொல் வந்துள்ளது. வேண்டா என்ற
சொல் 14 இடங்களில் வந்துள்ளது. எனினும், வேண்டாம் என்ற சொல்லையும் வீரமா முனிவர்
இருமுறை ஆண்டுள்ளார். அறிவதற்காக அந்த வரிகள் இதோ...
தானவரை என்னும் கால்தடம் நீங்கி மயல் வேண்டாம்
பொய்விளைந்த சொல்பொருந்தி உள்கொள்வதும் வேண்டாம்
பாரதியார் கவிதைகளில்...
பாரதியார்
தான் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் வேண்டா என்ற சொல்லைத்தான் பயன்படுத்தி உள்ளார்.
அவர் எழுதிய முரசு என்ற தலைப்பில் உ்ளள கவிதையில் வேண்டாம் என்ற சொல்லையே கையாண்டு உள்ளார். எடுத்துக் காட்டாக...
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.
பாவேந்தர் கவிதைகளில்...
பாவேந்தர்
பாரதிதாசன் அவர்களும் வேண்டாம் என்ற சொல்லை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளவில்லை.
எடுத்துக் காட்டாய்ப் பெண்ணுக்கு நீதி என்ற பாட்டில்...
வல்லி உனக்கொரு நீதி – இந்த
வஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்.
குழப்பம் தீர...
வேண்டு
என்று வருகிற போது, அதன் எதிர்ச்சொல் வேண்டா என்றாகும். வேண்டும் என்று வருகிற
போது அதன் எதிர்ச்சொல் வேண்டாம் என்றாவதும் சொல்மலரும் இயல்புகளில் ஒன்றாகும். இது
போலவே, வேணும் என்பது வேணாம் என்றாகிறது. சொல் மலர்தலுக்கு உகந்துதானே இலக்கணமும்
அமைய வேண்டும். அதுதானே இயல்பான இலக்கணப் போக்கு. Analogy என்ற ஒப்புமை ஆக்கத்தின்
படியும், வேண்டாம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று சிலர் நெகிழ்வு அளிக்கின்றனர்.
வேண்டாம்
என்ற சொல், பழக்கத்திலும் வழக்கத்திலும் வந்து நம் பேச்சில் இரண்டறக்
கலந்துவிட்டது. மேலே கண்ட எடுத்துக் காட்டுகளின் அடிப்படையில் நம் முன்னோரும்
வேண்டாம் என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழின் முதன்மை அகராதியான தமிழ்
லெக்சிகன் என்னும் தமிழ்ப் பேரகராதியிலும் வேண்டாம் என்ற சொல்
இடம்பிடித்துவிட்டது. வேண்டா என்ற சொல், நான் பார்த்த அகராதிகளில் இல்லை. வேறு
அகராதிகளில் இருக்கலாம். தற்காலத்தில் ஓரிரு புலவர் பெருமக்களைத் தவிர, யாரும்
வேண்டா என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஒரு வேளை, வேண்டாம் என்ற சொல் பயன்பாடு
தவறானதுதான் என்றால்... அதை வழு இலக்கண நோக்கில் சரிசெய்து கொள்ளலாமே!
எனவே
மக்கள் உணர்த்தும் முறையிலேயே வேண்டாம் என்ற சொல்லை யாவரும் ஏற்றிட வேண்டும்.
வேண்டாம் என்பது, வேண்டும் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்தான். ஆகவே வேண்டும் என்ற
சொல்லுக்கு வேண்டாம் என்ற சொல்லையே எதிர்ச்சொல்லாகப் பயன்படுத்தலாம். இதனால் தமிழ்
அழகுறுகிறதே தவிர, அழிவுறுவது இல்லை.
.........
“அங்க
என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்க” என்று என் மனைவி குரல் கொடுத்தார். “வேண்டும்
என்ற சொல்லுக்கு எதிர்மறைச் சொல், வேண்டாம் என்பதா வேண்டா என்பதா வேறுசொல் சொல்வதா
என்பது குறித்து எழுதிக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னேன். “இது வேண்டாத வேலை”
என்ற அவர், “தோட்டத்தில புல் செதுக்கட்டுமானு கேட்டு ஒருத்தர் வருவாரு. வேண்டாம்னு
சொல்லிடுங்க.” என்று என்னிடத்தில் அவருடைய அதிகாரத்தைச் சற்று நேரம் கைமாற்றிச்
சென்றார்.
நன்றி :
திண்ணை
16-08-2020
No comments:
Post a Comment