Monday, 31 August 2020

தத்தித் தாவுது மனமே...


 

தத்தித் தாவுது மனமே

கோ. மன்றவாணன்

 

நித்தம் நித்தம் எழும் வாழ்க்கை நிகழ்வுகளில் நமக்குக் கிடைத்துள்ள திரும்பக் கிடைக்காத நொடிகளைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதில்.

மனைவி சுவையாக உணவு சமைத்து அன்போடு பரிமாறுகிறார். எங்கோ சிந்தனையைப் பறக்கவிட்டு, அனிச்சை செயலாகச் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவுகிறோம்.

வாகனம் ஓட்டியவாறு அலுவலகமோ வேறு வேலைக்கோ போகிறோம். நம் மனம் வாகன வேகத்தையும் தாண்டித் தறிகெட்டு எங்கோ ஓடுகிறது. எப்படியோ விபத்து இல்லாமல் போய் சேர்ந்து விடுகிறோம். சில நேரங்களில் விபத்தும் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

அலுவலகம் சென்று அமர்ந்து வேலை பார்க்கும்போது... வீட்டுக்குள் உலாவுகிறது அதே மனம்.

அலுவலக வேலையைவிட்டு வீட்டுக்கு வருகிறோம். வீட்டுக்குள்ளும் அலுவலகச் சிந்தனைதான். “என்னங்க” என்று அழைத்து மனைவி ஏதோ சொல்கிறார். காதில் பாதி விழுந்தும் பாதி விழாமலும் போகிறது. அந்தப் பாதியிலும் நம் கவனம் இருப்பது இல்லை. அப்போதும் நம் மனப்பறவை எல்லை தாண்டி எங்கோ பறந்து போகிறது.

இருள்சூழ்ந்த பொழுதில் உடலுறவு கொள்ளும் போதும்... இன்னொரு துணையை இன்னொரு உறவைத் தேடி மனம் மதில் தாவுகிறது என்று சிலர் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் போதும் கூடத் தொலை தூரத்துக்குச் செல்கிறது சிந்தனை.

மனதுக்குப் பிடித்த எழுத்தாளரின் நாவலை வாசிக்கையிலும்...  புத்தகப் பக்கங்களில பார்வை இருக்கிறது. புத்தியோ பூமியைச் சுற்றக் கிளம்பி விடுகிறது. அதற்குள் பல பக்கங்கள் புரட்டப் பட்டிருக்கும். என்ன படித்தோம் என்பது தெரியாது. மீண்டும் மனதைப் பிடித்து இழுத்துவந்து முந்தைய பக்கங்களைத் தேடிப் படிப்போம். மனவேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு நம்மை ஏளனமாகப் பார்க்கும். பிறகென்ன... புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் படுக்கச் செல்வோம். படுத்துக் கொண்டிருக்கும் போது, மூளை மிகவும் சுறுசுறுப்பாகி விடுகிறது. உடல் பஞ்சணையில் படுத்துக் கிடக்கிறது. உள்ளம் போர்க்களத்துக்கு வாள்தூக்கிச் செல்கிறது.

இந்த நொடியில் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து அதற்கு இயைந்து அந்த நொடியை நாம் அனுபவிப்பது இல்லை. சாப்பிடும் போது சிந்தனை வேறிடத்தில் இருந்தால், அந்த உணவின் சுவை நம் நாவைத் தழுவுவது இல்லை. அந்தச் சாப்பாட்டின் மணம் நம் நாசியைத் தொடுவது இல்லை. அந்த அமுதுணவின் சத்து நம் உடலுக்குள் சரியாகச் சேர்ந்து இருக்குமா என்பது ஐயம். உடலும் உள்ளமும் இணைந்து இயைந்து இயங்கினால்தான் சரியான செயலும் அதற்கு உண்டான சரியான பயனும் உருவாகும்.

செய்யும் வேலையில் கவனம் இல்லாமல் சிந்தனை சிதறினானல் அந்த வேலைப்பாடு நேர்த்தியாக இருப்பது இல்லை. மண்பானை வனைகிற போது கண்ணும் கவனமும் வேறு பக்கம் சென்றால், பானையின் வாய் கோணலாகி இளிக்கும். உளிகொண்டு சிற்பம் செதுக்குகிற போது, உள்ளம் வேறு திசை நோக்கிச் சென்றால், சிலை உருவாகிற போதே ஊனம் அடையும். இயந்திரங்களில் வேலை செய்வோர் தம் கவனக் குறைவால் கைகளை, கால்களை இழப்பதோடு வாழ்க்கையையும் இழந்து தவிக்கிறார்கள்.

வாகன விபத்துகளுக்கு மிகுவேகம் மட்டும் காரணம் இல்லை. கவனக் குறைவும் காரணம் ஆகும். திரும்பித் திரும்பிப் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களை எங்கும் காணலாம். அரசியல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபடி ஓட்டுபவரையும் என்றும் பார்க்கலாம். வீட்டிலோ வேறு எங்கோ நடந்த ஒரு நிகழ்வைத் திடீரென நினைத்து, அதனால் கோபம் தலைக்கு ஏறிப் பல்லைக் கடித்தபடி ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு நொடிக் கவனக் குறைவு, ஒரு கோர விபத்துக்குக் காரணம் ஆகிவிடுகிறது. 

ஒன்றில் நிலைக்காமல் எண்ணம் தாவி ஓடுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை, உளவியல் வல்லுநர்கள் நுட்பமாக விவரிக்கலாம்.

பொதுவாக...

ஒரு வேலையில் ஒரு நிகழ்வில் ஆர்வம் இல்லாமல் போவது, எண்ணச் சிதறலுக்கு முக்கிய காரணம் என்று எல்லாரும் அறிவார்கள்.

நிகழ்சூழலில் மனம் நிலைகொள்ளாமல் இருப்பதற்கு, எதிர்வரும் சூழலை முன்னரே நினைத்துப் பரபரப்பு அடைவதும் காரணம் ஆகிறது. இதனால்தான் பதறாத காரியம் சிதறாது என்கிறார்கள்.

மனதை ஒன்றில் குவிய விடாமல் தடுப்பதில் வல்லமை கொண்டவை தீயப் பழக்கங்கள்.

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை என்ற வள்ளுவரின் கருத்து உண்மைதான். ஆனால் அறிவுத் தெளிவைத் தாண்டி அஞ்சுவதும்- மிகை அச்சம் கொள்வதும் வாழ்வை ரசிக்க விடாமல் செய்கின்றன. மனம் அங்கும் இங்கும் பறப்பதற்கு அத்தகைய அச்சம்தான் சிறகுகள் தயாரித்துத் தருகின்றது.

மனஅழுத்தம் இருந்தாலே எதிலும் நாட்டம் இருக்காது. மகிழ்ச்சியே வந்தாலும் அதைத் துய்க்க முடியாது. அதனால் அவர்களால் நிகழ்நொடியில் வாழ இயலவில்லை.

பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டாம் பூச்சி போல, மனம் பறந்து போவதைத் தடுக்க மேற்சொன்ன தடைகளைத் தகர்க்க முயல்வது நல்லது.

இன்பம் வரும்போது மகிழ்ச்சி அடையாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் துன்பம் வரும்போது துயர் அடையாமல் இருப்பது இல்லை. துயர் அடையாமல் இருந்தால் அவர்கள் ஞானிகளாக இருக்க வேண்டும். அல்லது மனநோயாளிகளாக இருக்க வேண்டும்.

அந்தந்த நேரத்து இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும். அந்தந்த நேரத்துத் துன்பத்தையும் துய்க்க வேண்டும். துன்பம் வரும்போது அதில் இருந்து மீள முயல வேண்டுமே தவிர, அதிலே தோய்ந்து கிடப்பதா என்று நீங்கள் வினா எழுப்ப முடியும். அப்படி மீள எடுக்கும் முயற்சிகளில் உங்கள் கவனம் முழுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் பதில்.

நிகழ்கால நொடிகளில் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றால் எதிர்காலத்தை எப்படி வடிவமைத்துக் கொள்வது என்று சிலர் கேட்கக் கூடும். எதிர்காலத் திட்டமிடலும் அதற்கான செயல்களும் நிகழ்காலத்தில் அடங்கி உள்ளன. அவற்றையும் அதன் அதன் நேரத்தில் மனம் இயைந்து செயல்படுத்துங்கள்.

இரவு நேரம். பல் வலிக்கிறது. நேரம் ஆக ஆக வலி கூடுகிறது. மருத்துவ மனைக்குச் செல்ல முடியாத நிலை. வலி தணிக்கும் மாத்திரைகளும் கைவசம் இல்லை. படுத்திருந்தபடியே அந்த வலியில் உங்கள் மனதைச் செலுத்திப் பாருங்கள். அந்த வலியின் நுட்பத்தில் உங்கள் கவனத்தை வைத்துப் பாருங்கள். அதுகூட சுகமாக மாறலாம். அந்த வலியின் போக்கைக் கவனிக்க கவனிக்க... ரசிக்க ரசிக்க... அந்த வலியின் வலிமை குறைந்து போவதை அறியலாம். உங்களை அறியாமல் உறக்கம் உங்களை தழுவி இருக்கலாம். இதை நீங்கள் நம்ப மறுக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் அனுபவமே இது. அந்த வலியை நிரந்தரமாகப் போக்க மறுநாளோ வாய்ப்புள்ள ஒருநாளோ மருத்துவரிடம் சென்று தீர்வு காணலாம். அதற்காகப் வலி வரும் போதெல்லாம் அதை ரசியுங்கள் என்று சொல்லப் போவது இல்லை.

சுகத்தைக் கொண்டாடலாம். சோகத்தையும் ரசிக்கலாம். அதுஅது கொஞ்ச நேரம்தான் இருக்க வேண்டும். அதில் இருந்து நாம் கடந்து வந்துவிட வேண்டும். வாழ்க்கை நதியில் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எந்த இடத்திலும் தேங்கிவிடக் கூடாது. ஒவ்வொரு நொடியிலும் நம் பயணம் இருக்க வேண்டும்.

சில நேரங்களில் திரையரங்கில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்க்கிறோம். சிந்தனை சிதறாமல் அந்த நகைச்சுவையோடு ஒன்றிச் சிரிக்கிறோமே... திரையில் தோன்றும் சோகக் காட்சிகளில் அது கதை என்று தெரியாமல் கண் கலங்குகிறோமே... ஆபத்தில் சிக்கிய நாயகனையோ நாயகியையோ பார்த்துப் பதைபதைக்கிறோமே... இந்தக் கற்பனைக் காட்சிகளில் மனம் ஒன்றி இருக்கும்போது, மெய்வாழ்க்கையில் மனம் ஒன்ற முடியாதா என்ன?

ஒவ்வொரு நொடி நேர நிகழ்வையும் அனுபவித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்வின் அருஞ்சுவை. இதைச் சொல்ல எளிதாக இருக்கிறது. முடிவதில்லை என்பதுதான் இயல்புநிலை.  இதில் நானோ நீங்களோ யாருமோ விதிவிலக்கு இல்லை.

நம் நவீன கால வாழ்க்கை,  போட்டிகள் நிறைந்தது ; போராட்டங்கள் சூழ்ந்தது. மனஅழுத்தம் இல்லாதவர்களே இப்போது இல்லை. குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் இருக்கிறது. இவற்றை முழுமையாக எதிர்கொள்ள முடியாது. ஒவ்வொரு நொடியும் மனதை அலைபாய விடாமல் வாழ வேண்டும் என்று ஆசைப்படலாம். அது நடைமுறைக்கு வருவது இல்லை. அப்படியானால் என்னதான் செய்வது?

கீழ்க்கண்டவாறு குறைந்தளவு செயல்திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்க முடியாது என்றால், இன்னும் குறைத்துக் கொள்ளலாம். முடியாது என்று ஒதுங்குவதைவிட, முடிந்தவரை முயன்றுதான் பாருங்களேன். முயல முயல மனம் நம் வசப்படும். தியானப் பயிற்சியும் அப்படித்தானே! இதோ செயல்திட்டங்கள்...

குழந்தைகள் ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொஞ்சிப் பேசும் போது, நீங்களும் குழந்தையாய் மாறுங்கள். குழந்தைகளோடு விளையாடி மகிழுங்கள். அப்போது மனதுக்குள் பூக்கள் மலரும்.

நீங்கள் கணவர் ஆனால் உங்களுக்கு மனைவியைவிட வேறு யாரும் மிக முக்கியமானவர் இல்லை. நீங்கள் மனைவி ஆனால், உங்கள் கணவரே உங்களுக்கு முக்கியமானவர். எனவே துணையிடம் பேசும்போது மனம் ஒன்றித்து உரையாடுங்கள். அந்த ஒவ்வொரு நொடியும் வாழ்வைச் சீராக்கும்.

வேலையில் கவனம் குவியுங்கள். அது உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும்.

ஒவ்வொரு நொடியிலும் சாலையில் கவனம் வைத்தும், வேகத்தைக் கட்டுப்படுத்தியும் வாகனத்தை ஓட்டுங்கள். உயிரைப் பாதுகாக்கும் மந்திரம் அதுதான்.

பொழுதுபோக்கு நிகழ்வில் பங்குகொண்டால், உங்கள் மனதும் அந்த நிகழ்வும் பாலும் வெண்சர்க்கரையும்போல் இரண்டறக் கலக்கட்டும். அப்போது மனம் இளைப்பாறும்.

கண்ணதாசன் சொன்னதுபோல் “நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து” ஒவ்வொரு நாள் இரவும் உறங்கச் செல்லுங்கள். இடையூறு இல்லாத தூக்கமும் வாழ்வின் சுவைதான்.

நன்றி :

திண்ணை 23-08-2020

 

 

 

 

Monday, 24 August 2020

வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்

 

வேண்டும் என்றொரு சொல் இருந்தால்....
வேண்டாம் என்றொரு சொல் பிறக்கும்.

கோ. மன்றவாணன் 

வேண்டும் என்ற சொல் இல்லாமல், எந்தத் தேவையையும் நாம் பெற்றுவிட முடியாது. நமக்குப் பிடிக்காததை ஏற்க மறுக்கும்போது வேண்டாம் என்று சொல்லி விடுகிறோம். பேசவும் எழுதவும் இச்சொற்கள் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கின்றன.

வேண்டாம் என்ற சொல்லை எதிர்மறைச் சொல்லாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சில புலவர்கள் வேண்டாம் என்பதும் நேர்மறைச் சொல்லே என்று உரைக்கின்றனர்.

வேண்டாம் என்ற சொல்லை வேண்டு + ஆம் எனப் பிரித்துப் பொருள் சொல்கின்றனர்  இதில் வரும் ஆம் என்பது ஒப்புதல் தருவதைக் குறிக்கிறதே தவிர மறுப்புத் தெரிவிப்பதாக இல்லை என்கின்றனர். அதனால் வேண்டாம் என்ற சொல்லும் வேண்டும் என்ற சொல்லும் ஒரே நேர்மறைப் பொருளைத்தான் தருகிறது என்று கூறுகின்றனர். இதை இன்னொரு வகையில் விளக்கலாம். உண்டு என்ற சொல்லை உண்டாம் என்றும் சொல்வோம். இந்த இருண்டு சொற்களும் உடன்பாட்டுச் சொற்களே. இதுபோல் வேண்டும் என்பதும் வேண்டாம் என்பதும் உடன்பாட்டுச் சொற்களே என வாதிட முடியும். ஆனாலும், ஒரு சொல்லை இரு பொருள்களில் இரட்டுற மொழியும் வழக்கம் தமிழில் உண்டு. இது கவிஞர்களின் திறன். அதைப் போலவே வேண்டாம் என்ற சொல்லையும் பிரித்துப் பொருள்மாயம் காட்டுகின்றனர்.

வேண்டாம் என்ற சொல்லும் உடன்பாட்டுச் சொல்தான் என்பவர்கள் அதற்கான சான்றைச் சொல்ல வேண்டும். நான் தேடிய வரையில் வேண்டாம் என்பதற்கு வேண்டும் என்பதுதான் பொருள் என்று எந்த இலக்கியச் சான்றும் கிடைக்கவில்லை.

வேண்டும் என்றோர் உடன்பாட்டுச் சொல் இருக்கையில் அதற்கு எதிர்ச்சொல் ஒன்று இருந்தாக வேண்டும். அது வேண்டாவா? வேண்டாமா?

நம் பேச்சுப் புழக்கத்திலும் சரி, எழுத்து வழக்கத்திலும் சரி, வேண்டும் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக வேண்டாம் என்ற சொல்லைத்தான் இயல்பாகப் பயன்படுத்தி வருகிறோம். சில புலவர் பெருமக்கள் வேண்டா என்ற சொல்லே சரியென்று எழுதுகிறார்கள். அவர்கள் அப்படி எழுதுவதைத் தவறென்று சொல்லப் போவதில்லை. ஆனால் இந்த வேண்டா என்ற சொல், சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்ப்பேரகராதியில் இடம்பெறவில்லை. ஆனால் அதே அகராதியில் வேண்டாம் என்ற சொல், எதிர்மறைப் பொருளில் இடம்பெற்று உள்ளது. அதற்கு இலக்கிய எடுத்துக் காட்டாக “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்ற உலக நீதியில் வரும் பாடலைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

பல அகராதிகளில் வேண்டும் என்ற சொல்லும் இல்லை. வேண்டாம் என்ற சொல்லும் இல்லை. ஆனால் வேணும் என்ற சொல் இருக்கிறது.

க்ரியா வெளியிட்டுள்ள தற்காலத் தமிழ் அகராதியிலும் வேண்டா என்ற சொல் இடம்பெறவில்லை. ஆனால், வேண்டும் என்ற வினைமுற்றுச் சொல்லுக்கு வேண்டு என்ற வினைச்சொல்லின் பொருளைக் காணச் சொல்கிறது. அதுபோல் வேண்டாம் என்ற வினைமுற்றுச் சொல்லுக்கும் வேண்டு என்ற வினைச்சொல்லின் பொருளைக் காணச் சொல்கிறது. ஆக, வேண்டும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் ஒரே பொருளைத்தான் இந்த அகராதி தருகிறது. வேண்டாம் என்பதற்கு எடுத்துக் காட்டுச் சொற்றொடர் எதையும் குறிப்பிடவில்லை. தற்கால மொழிப்பயன்பாட்டை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அகராதியில் வேண்டாம் என்ற சொல்லை எதிர்மறைச் சொல்லாகக் குறிக்கவில்லை என்பது கவனிக்கத் தக்கது. தற்கால அகராதி என்பதால் மிக்சர் என்ற சொல்லுக்குக் காரச்சுவை உள்ள தின்பண்டம் எனக் குறித்தவர்கள், வேண்டாம் என்ற தற்காலப் பயன்பாட்டைத் தவிர்த்து இருப்பதற்கு ஏதோ காரணம் இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

திருக்குறள், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பியங்கள் உள்ளிட்ட நூல்களில் வேண்டும், வேண்டா, வேண்டாம் ஆகிய சொற்களின் பயன்பாடுகள் பற்றி ஆராய்ந்து பார்த்தேன்.

தொல்காப்பியத்தில்...

நமக்குக் கிடைத்தவற்றுள் தலை நூலாகத் திகழும் தொல்காப்பியத்தில் வேண்டாம் என்ற சொல் இல்லை. ஆனால், வேண்டும் என்ற சொல் 39 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது. வேண்டா என்ற சொல் 5 இடங்களில் வந்துள்ளது. எடுத்துக் காட்டுகள் :

     உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும் – பொருள், உவம : 8/1

     தன்சீர் உள்வழி தளைவகை வேண்டா – பொருள். செய்யுள் : 55/1

திருக்குறளில்...

வேண்டும் என்ற சொல்லைத் திருவள்ளுவர் 22 முறை பயன்படுத்தி உள்ளார். எடுத்துக் காட்டுக்காக ஒரு குறள் இதோ...

     உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெரும் தேர்க்கு

     அச்சாணி அன்னார் உடைத்து. -  67-7

வேண்டா என்ற சொல்லை 9 முறை பயன்படுத்தி உள்ளார். எடுத்துக் காட்டாக ஒரு குறள் :

     அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை

     பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. -  குறள் 4 : 7

வேண்டா என்பதன் அடியொற்றி வேண்டற்க, வேண்டாதார், வேண்டாதான், வேண்டாமை, வேண்டாரை, வேண்டாவாம் ஆகிய சொல்நீட்சிகளையும் பயன்படுத்தி உள்ளார்.

சங்க இலக்கியங்களில்...

பத்துப் பாட்டு, எட்டுத் தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் வேண்டும் என்ற சொல், 37 இடங்களில் வந்துள்ளது. எடுத்து உரைப்பதற்காக ஒரு வரி:

     வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் .  – புறம் 367/9

வேண்டா என்ற சொல், 12 இடங்களில் கையாளப் பட்டுள்ளது. எடுத்து உரைப்பதற்காக இரண்டு அடிகள் :

     வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே – புறம் 101/10

     நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் – கலி 28/22

வேண்டா என்பதன் அடியொற்றி வேண்டலமே, வேண்டலன், வேண்டாதார், வேண்டாது, வேண்டாதோளே, வேண்டாமையின், வேண்டார், வேண்டாள் ஆகிய சொல்நீட்சிகளையும் சங்க இலக்கிய நூல்களில் காணலாம். எந்த ஓர் இடத்திலும் வேண்டாம் என்ற சொல் இடம்பெறவில்லை.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் வேண்டும் என்ற சொல் 49 இடங்களிலும் வேண்டா என்ற சொல் 44 இடங்களிலும் உள்ளன. வேண்டும் மற்றும் வேண்டா என்பவற்றின் அடியொற்றிய பல சொற்களும் உள்ளன. ஆனால் வேண்டாம் என்ற சொல் இல்லை.

சொற்கடலாகப் பரவிக் கிடக்கும் கம்ப ராமாயணத்தில் வேண்டும் என்ற சொல் 38 தடவையும் வேண்டா என்ற சொல் 12 தடவையும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவ்விரண்டின் அடியொற்றிய சொற்கள் பலவும் உள்ளன. ஆனால் வேண்டாம் என்ற சொல் எங்கேயும் இல்லை. எடுத்துக் காட்டுகள் :

     நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் – பால      காண்டம் 13 – 43 / 1,2

    ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – யுத்த    காண்டம் 3 : 31-54/1

வேண்டா என்பதற்கு இணையாக வேண்டல, வேண்டலர் ஆகிய சொற்களையும் கம்பர் கையாண்டு உள்ளார். ஓர் எடுத்துக் காட்டாக...

    வெறுங்கூந்தல் மொய்க்கின்றன வேண்டல வேண்டும் போதும்.. –    பால காண்டம் பூ கொய்ப் படலம் 17/12-13

கம்பர் எந்த இடத்திலும் வேண்டாம் என்ற சொல்லைக் கையாளவில்லை.

நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் வேண்டும் என்ற சொல், நேரடியாக 17 இடங்களில் உள்ளன. அதன் அடியொற்றிய வேண்டிற்று, வேண்டுவம் போன்ற பல சொற்கள் உள்ளன. வேண்டாம் என்ற சொல் நேரடியாக எங்கும் இல்லை. ஆனால் அதற்கு இணையாக வேண்டேன் வேண்டோம் என்றவாறு எதிர்மை கையாளப் பட்டுள்ளது.

வேண்டாம் என்ற சொல் இடம்பெற்ற இலக்கியங்கள் உண்டா? :

மேற்கண்ட இலக்கியங்களைப் பார்க்கின்ற போது வேண்டாம் என்ற சொல்பயன்பாடு இல்லை தானோ... என்று நினைக்கத் தோன்றும். ஆனால் வேண்டாம் என்ற சொல்லை ஆளும் இலக்கியங்களும் உள்ளன. அவற்றில் சில காண்போம்.

ஐம்பெருங் காப்பியத்தில்...

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் வேண்டாம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. சான்றுகள் வருமாறு :

     “கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம்.”

     “துனித்து நீர் துளங்கல் வேண்டாம் தூமணி சிவிறி நீர்தூய்” 

பெருங்கதையில்... 

பெருங்கதையில் 24 முறை, வேண்டும் என்ற சொல்லும், 26 முறை, வேண்டா என்ற சொல்லும் இடம்பெற்று உள்ளன. கூடவே, வேண்டாம் என்ற சொல்லும் பெருங்கதையில் இடம்பெற்று உள்ளதைப் பெரும்புலவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக...

     செரு மீக்கூற்றமும் செய்கையும் வேண்டாம் – மகத. 25/84

மேலும் வேண்டும் என்பதற்கு எதிர்ச்சொல் போல வேண்டலம் என்ற சொல்லும் உள்ளது.

திருமந்திரத்தில்...

திருமந்திரம் என்ற அரிய நூலில் வேண்டாம் என்ற சொல்லைத் திருமூலர் 16 முறை கையாண்டு உள்ளார் என்பது மிகப்பெரும் சான்றாகத் திகழ்கிறது. நாம் தெளிவடைய ஒரு பாடல்...

     ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்ளுற்றால்

     காதலும் வேண்டாம் மெய்க்காயம் இடம்கண்டால்

     சாதலும் வேண்டாம் சமாதி கைகூடினால்

     போதலும் வேண்டாம்  புலன்வழி போகார்க்கே – திருமந்திரம் 1633 

பெரிய புராணத்தில்... 

பெரிய புராணத்தில் வேண்டாம் என்ற சொல் 5 இடங்களில் இடம்பெற்று உள்ளது. ஓர் எடுத்துரைத்தல்.

     “வித்தகம் பேச வேண்டாம் பணிசெய வேண்டும் என்றார்.”

     திருமலை : 5, 41/4.

இந்த ஒரே அடியில் வேண்டும் என்ற சொல்லையும் வேண்டாம் என்ற சொல்லையும் சேக்கிழார் எழுதி உள்ளார் என்பதைக் கவனியுங்கள்.

தேம்பாவணியில்...

தமிழில் அகர வரிசைப்படி முறையான அகராதியை முதலில் உருவாக்கிய வீரமாமுனிவர் அவர்கள் எழுதிய தேம்பாவணி என்ற நூலில் 31 இடங்களில் வேண்டும் என்ற சொல் வந்துள்ளது. வேண்டா என்ற சொல் 14 இடங்களில் வந்துள்ளது. எனினும், வேண்டாம் என்ற சொல்லையும் வீரமா முனிவர் இருமுறை ஆண்டுள்ளார். அறிவதற்காக அந்த வரிகள் இதோ...

     தானவரை என்னும் கால்தடம் நீங்கி மயல் வேண்டாம்

     பொய்விளைந்த சொல்பொருந்தி உள்கொள்வதும் வேண்டாம்

பாரதியார் கவிதைகளில்...

பாரதியார் தான் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் வேண்டா என்ற சொல்லைத்தான் பயன்படுத்தி உள்ளார். அவர் எழுதிய முரசு என்ற தலைப்பில் உ்ளள கவிதையில் வேண்டாம் என்ற சொல்லையே  கையாண்டு உள்ளார்.  எடுத்துக் காட்டாக...

     பாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில்

     பற்பல சண்டைகள் வேண்டாம். 

பாவேந்தர் கவிதைகளில்... 

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் வேண்டாம் என்ற சொல்லை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளவில்லை. எடுத்துக் காட்டாய்ப் பெண்ணுக்கு நீதி என்ற பாட்டில்...

     வல்லி உனக்கொரு நீதி – இந்த

     வஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம். 

குழப்பம் தீர... 

வேண்டு என்று வருகிற போது, அதன் எதிர்ச்சொல் வேண்டா என்றாகும். வேண்டும் என்று வருகிற போது அதன் எதிர்ச்சொல் வேண்டாம் என்றாவதும் சொல்மலரும் இயல்புகளில் ஒன்றாகும். இது போலவே, வேணும் என்பது வேணாம் என்றாகிறது. சொல் மலர்தலுக்கு உகந்துதானே இலக்கணமும் அமைய வேண்டும். அதுதானே இயல்பான இலக்கணப் போக்கு. Analogy என்ற ஒப்புமை ஆக்கத்தின் படியும், வேண்டாம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று சிலர்  நெகிழ்வு அளிக்கின்றனர்.

வேண்டாம் என்ற சொல், பழக்கத்திலும் வழக்கத்திலும் வந்து நம் பேச்சில் இரண்டறக் கலந்துவிட்டது. மேலே கண்ட எடுத்துக் காட்டுகளின் அடிப்படையில் நம் முன்னோரும் வேண்டாம் என்ற சொல்லைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தமிழின் முதன்மை அகராதியான தமிழ் லெக்சிகன் என்னும் தமிழ்ப் பேரகராதியிலும் வேண்டாம் என்ற சொல் இடம்பிடித்துவிட்டது. வேண்டா என்ற சொல், நான் பார்த்த அகராதிகளில் இல்லை. வேறு அகராதிகளில் இருக்கலாம். தற்காலத்தில் ஓரிரு புலவர் பெருமக்களைத் தவிர, யாரும் வேண்டா என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஒரு வேளை, வேண்டாம் என்ற சொல் பயன்பாடு தவறானதுதான் என்றால்... அதை வழு இலக்கண நோக்கில் சரிசெய்து கொள்ளலாமே!

எனவே மக்கள் உணர்த்தும் முறையிலேயே வேண்டாம் என்ற சொல்லை யாவரும் ஏற்றிட வேண்டும். வேண்டாம் என்பது, வேண்டும் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்தான். ஆகவே வேண்டும் என்ற சொல்லுக்கு வேண்டாம் என்ற சொல்லையே எதிர்ச்சொல்லாகப் பயன்படுத்தலாம். இதனால் தமிழ் அழகுறுகிறதே தவிர, அழிவுறுவது இல்லை.

.........

“அங்க என்ன செஞ்சிக்கிட்டு இருக்கீங்க” என்று என் மனைவி குரல் கொடுத்தார். “வேண்டும் என்ற சொல்லுக்கு எதிர்மறைச் சொல், வேண்டாம் என்பதா வேண்டா என்பதா வேறுசொல் சொல்வதா என்பது குறித்து எழுதிக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னேன். “இது வேண்டாத வேலை” என்ற அவர், “தோட்டத்தில புல் செதுக்கட்டுமானு கேட்டு ஒருத்தர் வருவாரு. வேண்டாம்னு சொல்லிடுங்க.” என்று என்னிடத்தில் அவருடைய அதிகாரத்தைச் சற்று நேரம் கைமாற்றிச் சென்றார்.  

நன்றி :

திண்ணை

16-08-2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Monday, 17 August 2020

இரண்டடி கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்

 

இரண்டு அடி கொடுத்தால்

பிரச்சனை தீர்ந்துவிடும்.

கோ. மன்றவாணன்

சிற்பத்தில் மேடு பள்ளங்கள் இல்லை என்றால் அது சிலை ஆகாது. ஓவியத்தில் வளைவு நெளிவு இல்லை என்றால் அது சித்திரம் ஆகாது. வாழ்வில் இன்ப துன்பங்கள் இல்லை என்றால் அது வாழ்க்கை ஆகாது. ஆனால் வாழ்வு முழுவதும் இன்ப மயமாகவே இருக்க வேண்டும் என்றே மனம் ஆசைப்படுகிறது.

ஒவ்வொரு மனமும் தன்னை மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொள்கிறது. துயர் ஏதும் வந்துவிட்டால் அது தனக்கு மட்டுமே வந்துவிட்டதாக வருந்துகிறது. பிறரும் சிலபல நேரங்களில் துயரப் படுகிறார்கள் என்பதை மனம் ஏனோ உணர்வதே இல்லை.

பஞ்சு மெத்தையில் புரள்வோருக்கும் பிரச்சனைகள் உண்டு. நடைபாதைப் புழுதியைப் போர்த்தியபடி, பட்டினியில் படுத்துக் கிடப்பவர்களுக்கும் பிரச்சனைகள் உண்டு. பிரச்சனை இல்லாதவர் என்று யாரேனும் இருக்கிறார் என்றால் அவர் இன்னும் பிறக்காதவரே.

ஒரு பிரச்சனை முடிந்துவிட்டால் இன்னொரு பிரச்சனை வராது என்பது கிடையாது.     சிறிய காயம் பெரிய துன்பம். ஆறும் முன்னே அடுத்த காயம் என்பதுபோல் பிரச்சனைகள் நம்மைத் துரத்தியும் வரலாம். வந்த பிரச்சனையை ஒருவன் எவ்வாறு அணுகுகிறான். அதில் இருந்து மீள்வதற்கு என்ன வழிமுறைகளைக் கண்டு வெற்றி அடைகிறான் என்பதில்தான் வாழ்க்கையின் உயர்வு அடங்கி உள்ளது.

பிரச்சனைகளைக் கையாளுவது எப்படி என்று பிறருக்கு நாம் ஆலோசனை சொல்ல முடியும். நமக்கே பிரச்சனை வந்தால் செய்வது அறியாது தவிப்போம். அதனால்தான் தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்றார்கள்.

தன்னம்பிக்கை நூல்கள் தற்காலத்தில் நிறைய வெளிவருகின்றன. அவற்றை நிறைய பேர் படிக்கின்றனர். வெற்றி பெற்ற மனிதர்களை மட்டுமே எடுத்துக் காட்டுகளாகக் கூறிப் படிப்பவர்களுக்கு ஊக்கம் ஊட்டுபவையாக அந்த நூல்கள் உள்ளன. வாழ்வில் வீழ்ந்தவர்களை எடுத்துக் காட்டுகளாக அந்நூல்கள் சுட்டுவது இல்லை. வீழ்ச்சியை எழுதினால் ஊக்கக் குறைவு ஏற்படும் என்றும்-  அதைப் படிக்க யாரும் விரும்ப மாட்டார்கள் என்றும் “வாழ்வியல் கலை” எழுத்தாளர்கள் சொல்கின்றனர்.

வெற்றி என்பது எப்படி நமக்கு ஒரு பாடமோ... தோல்வியும் நமக்கு ஒரு பாடம்தான். எதைச் செய்ய வேண்டும் என்று சொல்கிற வேளையில்... எதைச் செய்ய வேண்டாம் என்பதையும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும். அப்போதுதான் நாம் எந்த எந்த இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அறிய முடியும்.

அடுக்கடுக்காய்த் தோல்விகளைச் சந்தித்தவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆகிவிட்டார். தெருமுனையில் இட்லி சுட்டு விற்ற விதவையின் மகன் மருத்துவராகி விட்டார். மூளை வளர்ச்சி குன்றியவர் விஞ்ஞானி ஆகிவிட்டார். தேநீர் விற்றவர் நாடாளும் பிரதமர் ஆகிவிட்டார். பார்வை அற்றவர் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். விபத்தில் ஒரு காலை இழந்தவர் சிறந்த நடனமணி ஆகி அசத்துகிறார். தம்பி நீதான் நாளைய முதலமைச்சர் என்றெல்லாம் ஆரவாரமாகப் பேசி உற்சாகம் ஊட்டுகின்றனர். ஆனால் வெற்றி அடைவதற்காக அவர்கள் தாண்டிய நெருப்பு ஆறுகள் எத்தனை என்பதை விளக்குவதே இல்லை. அவர்கள் எப்படித் தடைகளை உடைத்து எறிந்தார்கள் என்பதை விவரிப்பதே இல்லை. எப்படிப் பிறரின் உதவிகளைப் பெற்றார்கள் என்று பேசுவதே இல்லை.

பிரச்சனைகளைத் தாண்டாமல் எந்தச் சாதனையும் நிகழ்வது இல்லை. தடைகளைத் தகர்க்காமல் யாரும் தலைவர் ஆகிவிடுவது இல்லை. தடைகளை உடைத்த அந்தச் செயல்பாடுகளே வெற்றியின் திறவுகோல்கள். அந்தத் திறவுகோல்களைத் தராமல், வெற்றிக் காட்சியை மட்டும் நமக்குக் காட்டி உசுப்பேற்றி விடுகிறார்கள்.

மற்றவர்க்குப் பிரச்சனை என்றால் அதனைத் தீ்ர்ப்பதற்கு வழிசொல்லத் தெரிகிறது. நமது பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஏன் நமக்கு வழி தெரிவது இல்லை? நமக்குப் பிரச்சனை வருகிற போது, அந்தப் பிரச்சனைக்கு உள்ளேயே வட்டமிட்டு யோசிக்கிறோம். அதை வெளியில் இருந்து பார்ப்பதில்லை. ஒரு பிரச்சனையை வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால்தான் அதன் முழுப்பரிமாணமும் தெரியும். பிரச்சனைக்கு உள்ளே இருந்து சிந்திக்கும் போது, அந்தப் பிரச்சனையின் மற்றொரு புறத்தை நாம் பார்க்க முடிவதில்லை. ஆனால் பிறரின் பிரச்சனைகளை வெளியில் இருந்து பார்ப்பதால் அதற்கான தீர்முறைகளைக் காண முடிகின்றன. மேலும் நம்முடைய பிரச்சனையாக இருக்கையில் நாம் அறிவு வசப்படுவதைக் காட்டிலும் மிகுதியாக உணர்ச்சி வசப்படுகிறோம். அடுத்தவர் பிரச்சனையை நாம் அறிவு வசப்பட்டே அணுகுகிறோம். அதனாலும் தீர்வு காண முடிகிறது.

பொதுவாக...

நமக்கு ஏற்படும் 70 விழுக்காடு பிரச்சனைகள் சாதாரணம் ஆனவை. அவை கால ஓட்டத்தில் கரைந்து போய்விடும். எந்த முயற்சியும் இன்றிச் சில பிரச்சனைகள் தாமாகவே சரியாகிவிடும். உறங்கி எழுந்தால் நேற்றைய பிரச்சனை இன்று முடிந்து போயிருக்கும்.

20 விழுக்காடு பிரச்சனைகளைக் கொஞ்சம் முயற்சி செய்தால் நாமே தீர்த்துவிடலாம்.

அடுத்துவரும் 5 விழுக்காடு பிரச்சனைகளைத் தீர்க்க நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும். பிறரின் உதவிகளையும் பெற வேண்டும்.  

அதற்கு அடுத்துள்ள 5 விழுக்காடு பிரச்சனைகளை நம் சக்திக்கு உட்பட்டு... நம் சூழலுக்கு ஆட்பட்டு எவ்வளவு முயன்றாலும் எத்தனை பேர் உதவி புரிந்தாலும் தீர்க்கவே முடியாமல் போகலாம். அந்த நேரத்தில் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆக... ஒரு பிரச்சனை வரும்போது அதைத் தீர்க்க முயலாவிட்டால் அது மேலும் நூறு பிரச்சனைகளை உடன் அழைத்து வந்து உங்களைச் சுற்றி வளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தும். எனவே பிரச்சனையை அந்தந்த நேரத்திலேயே எதிர்கொள்ளுங்கள். எதிர்த்து வெல்லுங்கள். கால ஓட்டத்தில் கரைந்துவிடும் என்று காத்திருக்க வேண்டாம்.

பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி? என்ற பொருளில் ஏராளமான புத்தகங்கள் வருகின்றன. பல நூற்றுக் கணக்கான பக்கங்களில் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்று எழுதி எழுதிக் குவிக்கின்றனர். அவ்வளவு பக்கங்களையும் படிப்பதற்கு நமக்குப் பொறுமை இல்லாமல் போகலாம். வாழ்வியல் நுட்பங்களை இரண்டே அடிகளில் சொல்லித் தரும் வள்ளுவரிடத்தில் பிரச்சனையைத் தீர்ப்பது எப்படி என்று ஒரு கேள்வி கேட்டேன்.

     அவர் சொன்ன குறள் :

     நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

     வாய்நாடி வாய்ப்பச் செயல்

இந்தக் குறள், நோய் பற்றியதுதானே. பிரச்சனையைப் பற்றியது இல்லையே என நீங்கள் என்னை மடக்கலாம். உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள். நோய் என்ற சொல்லின் இடத்தில் பிரச்சனை என்ற சொல்லை வைத்துப் பாருங்கள். நோயும் ஒரு பிரச்சனைதானே!

பிரச்சனை நாடி –

என்ன பிரச்சனை என்றே தெரியாமல் பலர் அல்லாடுவார்கள். பிரச்சனை என்ன என்று தெரியாவிட்டால் தீர்வு காண முடியாது. ஆகவே பிரச்சனை என்ன என்று முதலில் கண்டுபிடியுங்கள்.

பிரச்சனை முதல் நாடி –

இந்தப் பிரச்சனை ஏன் ஏற்பட்டது? எவ்வாறு ஏற்பட்டது? என்று கேள்விகள் கேட்டுக் காரணங்களைக் கண்டு பிடியுங்கள். ஒரு காரணம் இருக்கலாம். பல காரணங்களும் இருக்கலாம். ஆக, பிரச்சனை உருவானதற்கான மூலத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் குறளின் அடுத்த இரு சீர்களைப் படியுங்கள்.

அதுதணிக்கும் வாய்நாடி-

பிரச்சனை உண்டாவதற்கான மூலங்களையும் காரணங்களையும் தவிர்க்க வேண்டும் அல்லவா? அதற்காக அவற்றைத் தணிக்கும் வழிமுறைகள்... செயல்முறைகள் என்ன என்ன உள்ளன என்று அமைதியாக ஆராய்ந்து அறியுங்கள்.

வாய்ப்ப-

பிரச்சனையின் மூலத்தைத் தீர்க்கும் வழிமுறைகள் பல இருக்கலாம். அவற்றுள் எந்த முறை நமக்கு வாய்ப்பானது? எந்த முறை பெரிதும் பயன் அளிக்கக் கூடியது என்று தீர்மானியுங்கள். தீர்மானிப்பது என்பது... முடிவு எடுப்பது என்பது... மிகச் சரியாக இருக்க வேண்டும். பலரும் தவறும் இடம் இதுதான். சரி... தீர்மானித்து விட்டீர்களா? குறளின் அடுத்த சீரைப் பாருங்கள். அதுதான் முக்கியம்.

செயல்-

நீங்கள் தீர்மானித்த வழிமுறையைக் கவனமாகச் செயல்படுத்துங்கள். மேலே சொன்ன செயல்படிகளில் தேவை ஏற்படின் தகுந்தவர்களின் உதவிகளைக் கேட்டுப் பெறுவதும் நல்லது. இவ்வாறு செயல்படுத்தும் போது வெற்றி கிடைக்கலாம். ஆனால் மிகவும் சிற்சில வேளைகளில் வெற்றி கிடைக்காமலும் போகலாம். அந்தத் தறுவாயில் அதை மறுஆய்வு செய்யுங்கள். இன்னொரு கதவு திறக்கும்.

ஒரு கருத்து :

பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்று ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் வந்திருக்கலாம். பல்லாயிரம் பக்கங்களில் வழிமுறைகளைச் சொல்லி இருக்கலாம். ஆனால் இந்த இரண்டடிக் குறளைத் தாண்டி எதுவும் அந்தப் புத்தகங்களில் இருக்கப் போவதில்லை.


நன்றி :

திண்ணை

16-08-2020

 


Monday, 10 August 2020

கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா...

 

கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா....

கோ. மன்றவாணன் 

ஜாவர் சீத்தாராமன் அவர்கள் எழுதிய “பட்டணத்தில் பூதம்” என்ற நாவலை அதே பெயரில் திரைப்படமாகவும் எடுத்தார்கள். அதில் பூதமாக அவரே நடித்தார்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை அந்தக் காலத்தில் முணுமுணுக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. அதில் உள்ள ஒரு பாடலைக் கேட்டு வியந்தேன்.

          கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா? – உன்

          கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?

என்று தொடங்கும் அந்தப் பாடலை நீங்களும் கேட்டு இருப்பீர்கள். ஜெய்சங்கரும் கே.ஆர்.விஜயாவும் அந்தப் பாடலுக்கேற்ப நடித்துள்ளார்கள். நான் படம் பார்க்கவில்லை என்பதால் பாட்டின் கதைச்சூழல் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பாட்டின் சொல்லிலும் பொருளிலும் கரைந்து போனேன்.

பாடலை எழுதியவர் கண்ணதாசன். அவரைக் குறித்து எத்தனையோ வலைக்காட்சிப் பதிவுகளும் தொலைக்காட்சிப் பதிவுகளும் வந்துள்ளன. ஆனால் இந்தப் பாடலின் சிறப்புக் குறித்து யாரும் ஏதும் சொல்லவில்லையே என்ற ஏக்கம் எனக்கு எழாமல் இல்லை. இந்தப் பாட்டுக்கு இசை அமைத்தவர் கோவர்த்தனம்.

அந்தப் பாட்டின் பொருளுக்கு ஏற்ற சூழ்நிலை ஒவ்வொருவர் வாழ்விலும் வரக்கூடும்.

காதல் பருவத்தில்... காதலி காதலனைச் சந்தேகப் படுவது உண்டு. காதலன் வேறு பெண்ணுடன் பேசிவிட்டால் போதும். துயில் மாத்திரைகள் விழுங்கினாலும் காதலியின் மனம் உறங்கவே உறங்காது. அவளின் மூச்சுக் காற்று பட்டுத் தீவிபத்துக் கூட ஏற்படலாம்.

கணவன் அடிக்கடி தாமதமாக வந்தாலும்- கணவனுக்கு அடிக்கடி எந்தப் பெண்ணிடம் இருந்தாவது அழைப்புகள் வந்தாலும்- யாரேனும் ஒரு பெண்ணுடன் கணவன் நீண்ட நேரம் சிரித்துப் பேசினாலும் மனைவியின் மனதில் சந்தேகச் சூறாவளி சுழன்று அடிக்கும்.

“வள்ளலார் நகருக்கு எப்படிங்க போகணும்” என்று வழிகேட்ட பெண்ணுக்கு வழிகாட்டிய கணவனை வறுத்து எடுக்கும் மனைவி எங்கேனும் இருக்கலாம். “எத்தனையோ பேர் இருக்காங்க. அவ உங்ககிட்ட வந்து ஏன் வழி கேக்குறா” என்ற கேள்வியில் இருந்து திருவிளையாடல் ஆரம்பம் ஆகிவிடும்.

இப்படிச் சந்தேகப்படும் பெண்களைச் சமாதானம் செய்வது என்பது சாதாரணமான ஒன்றல்ல. உண்மையைப் புரிய வைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. என்னதான் விளக்கம் சொன்னாலும்... அந்த விளக்கத்தில் இருந்தே சந்தேக இழை திரித்து மேலும் மேலும் பின்னிச் செல்வார்கள். சந்தேகம் என்பது பெண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. ஆண்களையும் அது ஆட்டிப் படைக்கும்.

இதுபோல் ஒரு சந்தேகச் சூழலில்... காதலன் காதலியைச் சமாதானப் படுத்தவும் உண்மையைப் புரிய வைக்கவும் முயல்கிறான். அந்தச் சூழலில் இந்தப் பாடலைப் பொருத்திக் கேளுங்கள்.

பாடல் வழியாக இருவரும் பேசிக் கொள்ளும் உரையாடலில்தான் கவிஞரின் திறன் பளிச்சென மின்னுகிறது. ஒன்றை ஒன்று மிஞ்சிச் செல்வது போலவே இருவரின் வாதங்களும் ஏறுமுகத்தில் ஏறிக்கொண்டே இருக்கும். இப்படி எழுதுவது என்பது எல்லாராலும் முடியாது.

          கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா? – உன்

          கண்ணே உண்மைசொல்லும் சாட்சியா?

கண்ணால் காண்பது எல்லாம் உண்மையாகி விடாது. பனை மரத்தின் கீழ் அமர்ந்து பால் பருகினாலும் கள் குடித்தான் என்றுதான் உலகம் நம்பும். அந்தப் பழைய பழமொழி போலத்தான் நாம் காணும் காட்சிகள் இருக்கும் என்பதாக இந்த வரிகளின் மூலம் காதலன் சொல்கிறான். டாஸ்மாக் கடை இருக்கும் வழியாக நடந்து வந்தாலும் குடித்துவிட்டுத்தான் வருகிறான் என்றே நம்புவார்கள் என்று புதுமொழியும் எழுதிக் கொள்ளலாம்.

பெண்கள் என்றாலே அவர்களுக்குச் சந்தேகம் அதிகம் இருக்கும் என்று எல்லாரையும் போலவே அவனும் நினைக்கிறான். பலவீனர்களிடத்தில் சந்தேகம் எழும் என்பது உளவியல் சார்ந்த கருத்து. பெண்களும் பலவீனம் ஆனவர்கள்தானே! அதனால் அவளைப் பார்த்து, “தேகம் முழுவதும் உனக்குச் சந்தேகம் தானா” என்று கேள்வி கேட்கிறான். அவள் முகம் சிவந்துபோய் மேலும் கோபப் படுகிறாள். கோபப் படும்போது கண்ணாடியில் நம் முகத்தைப் பார்த்தால் கோரமாகத் தெரியும். ஆனால் அவளின் கோபமும் அவனுக்கு அழகின் அலங்காரமாய்த் தெரிகிறது. அதுதான் அன்பின் மாயவித்தை. “உன் கோபம் வான வில்லின் வர்ண ஜாலமா” என்று வருணனை செய்கிறான். பெண்ணிடத்தில் அழகை வருணனை செய்தால் அவர்கள் மயங்கி விடுவார்கள் என்பது ஆண்கள் கண்டறிந்து வைத்துள்ள கைமருத்துவம். அந்த வருணனைக்கு எல்லாம் அவள் மயங்கவும் இல்லை. சந்தேகம் அகலவும் இல்லை.

         அதைத்தான்...

         இளம்பெண் தேகமே வெறும் சந்தேகமா?

         கோபம் வான வில்லின் வர்ண ஜாலமா?  - என்கிறான்.

அந்த வருணனையைக் கேட்டதும் அவள் அலட்சியமாகப் பழித்துக் காட்டுகிறாள்.

காதலன் அடுத்த வாதத்தை எடுத்து வைக்கிறான். “மூடி இருக்கிற கைகளில் என்ன இருக்குன்னு எப்படிச் சொல்ல முடியும். அதில் முத்தும் இருக்கும்” என்கிறான். “ஏன் அதில் முள்ளும் இருக்கலாம்ல,” என்று அவள் சொல்கிறாள்.   “உன்னைத் தேடி வந்திருக்கிற இந்தக் கண்களுக்குள் இருக்கும் காதலை... அதன் தேவையை நீ அறிய மாட்டாயா” என்கிறான். அந்தக் கண்களுக்கு ஒரு பார்வை அல்ல... நூறு பார்வைகள் இருக்கும் என்று பதிலடி கொடுக்கிறாள்.

          “மூடிக் கொண்ட கைகளிலே

                முத்தும் இருக்கும் - ஒரு

                முள்ளும் இருக்கும்.

          தேடி வந்த கண்களுக்குத்

                தேவை இருக்கும் – நூறு

                பார்வை இருக்கும்.

சொல்வதை நம்பாமல் இப்படிப் பதில் சொன்னால் என்னதான் செய்வான் அவன்.

     “உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இனி இல்லை” என்றவாறு அவள் நடந்து கொள்வதை அவன் சண்டையாகக் கருதவில்லை. காதலியின் அன்பைப் புரிந்தவன் என்பதால் அதை ஊடலாகவே எண்ணுகிறான். “என்ன செய்வது.. ஊடல் செய்ய உனக்கு நேரம் இருக்கு” என்பான். அதற்கு அவள் “என் நெஞ்சில் எவ்வளவு பாரம் இருக்குன்னு உனக்குத் தெரியுமா” என்கிறாள்.  “ஒருநாள் உண்மை தெரியும்போது உன் நெஞ்சம் திறக்கும். அப்ப என்னைப் பத்தி தெரிஞ்சிக்குவ” என்பான். அதையும் அவள் நம்ப மாட்டாள். அப்படி உண்மை தெரிவதாகக் காட்டும் நாடகத்திலும் வஞ்சம்தான் இருக்கும் என்கிறாள்.

    

          ஊடல் செய்ய பெண்களுக்கு

                நேரம் இருக்கும் – நெஞ்சில்

                பாரம் இருக்கும்

          உண்மை கண்ட பின்னாலே

                நெஞ்சம் திறக்கும் – அதிலும்

                வஞ்சம் இருக்கும்.

 

இப்படி எடுத்து எறிந்து அவள் பேசினாலும் அவன் விக்ரமாதித்தன் போல் மனம் தளராமல் மீண்டும் சமாதானம் முயற்சியில் ஈடுபடுகிறான். “ஏதோ உன்னப் பாத்துப் பேசி சமரசம் ஆகலாம்னு வந்திருக்கேன். ஆனால் நீ ரொம்ப கோபப்படுறீயே” என்று சொல்கிறான். “என்னை ஏன் பார்க்குறே? அங்கே அவளைப் பார்த்தது போதாதா” என்று குத்திக் காட்டுகிறாள். அவள் மனம் இரங்கியும் வரவில்லை இறங்கியும் வரவில்லை என்பதை உணர்ந்து துவள்கிறான். “இவ்ள காலம் நாம பழகினோம் பேசினோம். இப்ப பிரியிறதுன்னா அது எவ்ளோ பாவம்னு தெரியுமா உனக்கு” என்று அவளின் பாவச் செயலை உணர்த்துகிறான். ஆனால் அதற்கும் அவள்  சளைக்கவில்லை. “இது ஒண்ணும் பாபம் இல்ல. இப்பவாவது ஒங்களப் பத்தித் தெரிஞ்சுதே. யப்பா இது என் பெண்மைக்கு லாபம்” என்று உறுதியாக இருக்கிறாள். இதைவிட அவனைக் கழற்றிவிட வேறு வார்த்தை தேவையில்லை.

 

          பார்த்துக் கொஞ்சம் பேச வந்தால்

                எத்தனை கோபம் – அங்கே

                பார்த்தது போதும்

           பழகிய பின் பிரிவது என்றால்

                எத்தனை பாபம் – என்

                பெண்மைக்கு லாபம்

 

இவ்வளவு நடந்த பிறகும்... அவள் முற்றிலும் வெறுக்கிறாள். எனினும் அவன் தன் முயற்சியைத் தொடருகிறான். அவள் மீது அவன் கொண்ட தூய காதல்தான் அதற்குக் காரணம்.

கடைசியாகக் கடவுளை அழைத்துவர முடிவு செய்துவிட்டான். “எனக்காகத் தெய்வமே நேரில் வந்து சாட்சி சொன்னாலாவது உன் கோபம் தீரும் இல்லியா” என்கிறான். அதற்கு அவள்,  “ஓ... கடவுளும் பொய்சாட்சி சொல்லக் கிளம்பிட்டாரா” என்று தெய்வத்தையே நம்ப மறுக்கிறாள்.

கடவுள் வந்து சொன்னாலும் அவள் நம்ப மாட்டேன் என்கிறாள். வேறு என்னதான் ஒரு காதலன் செய்ய முடியும். எப்படித்தான் அவளை நம்ப வைக்க முடியும்? என்ன செய்துதான் அவளைச் சமாதானப் படுத்த முடியும்? ஒரு வழியும் அவனுக்குத் தெரியவில்லை. நமக்கும்தான் தெரியவில்லை. “உன் கைகளில் நான் உயிர விட்டிடுறேன். அப்பவாவது உனக்கு என் மீது பாசம் வந்தா சரி” என்று மனம் நொறுங்கிப் போய்  இறக்கத் துணிகிறான். இந்த நேரத்தில் எந்தப் பெண்ணுக்கும் இரக்கம் தோன்றிவிடும் என்றுதான் எல்லாரும் நம்புவோம். ஆனால் அதற்கும் அவள் “உயிரும் வேஷம் போட்டு நடிக்குமா?” என்று கேள்விக் கணை  தொடுத்து அவனை ஏற்க மறுக்கிறாள். கோபத்திலிருந்து கொஞ்சமும் இறங்க மறுக்கிறாள்.

          

           தெய்வம் வந்து சாட்சி சொன்னால்

                கோபம் தீருமா? – தெய்வம்

                பொய்யும் கூறுமா?

           கைகளிலே உயிர் இழந்தால்

                பாசம் தோன்றுமா? – உயிரும்

                வேஷம் போடுமா?

ஆமாம்...

ஆதாம் ஏவாளுக்குப் பிறகு... காதலனைச் சந்தேகப் படாத காதலி யாரும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன். 


நன்றி :

திண்ணை, 02-08-2020


.......

 


Tuesday, 4 August 2020

இல்லை என்றொரு சொல் போதுமே...


இல்லை என்றொரு சொல் போதுமே...

கோ. மன்றவாணன்

அன்று அல்ல அல்லன் அல்லள் அல்லர் ஆகிய சொற்களில் அல்ல என்ற சொல்லைத் தவிர, பிற சொற்களை இன்றைய இதழ்களில் காண முடிவதில்லை.  இச்சொற்கள் யாவும்  எதிர்மறைப் பொருள்களைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. வினையை முடித்தவர் பற்றிய திணை / பால் வேறுபாடுகளை உணர்த்தவும் இச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

இது நாய் அன்று (நாய் என்பது அஃறிணை ஒன்றன்பால் என்பதால் அதன் வினைமுற்று அன்று என வந்துள்ளது).

இவை நாய்கள் அல்ல (நாய்கள் என்பது அஃறிணைப் பலவின்பால் என்பதால் அதற்குரிய வினைமுற்று அல்ல என வந்துள்ளது).

வந்தவன் குமரன் அல்லன். (உயர்திணை ஆண்பால் ஒருமை என்பதால் அதற்குரிய  வினைமுற்றாக அல்லன் என வந்துள்ளது).

சமைத்தவள் பொன்னி அல்லள். (உயர்திணைப் பெண்பால் ஒருமை என்பதால் அதற்குரிய வினைமுற்றாக அல்லள் என வந்துள்ளது).

அவர் அமைச்சர் அல்லர். (உயர்திணைப் பலர்பால் ஒருமை என்றாலும் மரியாதைப் பன்மையாகக் கருதி, அதற்குரிய வினைமுற்றாக அல்லர் என வந்துள்ளது).

ஆய்வு செய்தவர்கள் அலுவலர்கள் அல்லர். (உயர்திணைப் பலர்பால் பன்மை என்பதால் அதற்குரிய வினைமுற்றாக அல்லர் என வந்துள்ளது).

மேலே கண்ட விளக்கப்படி, மேற்கண்ட வினைமுற்றுகளில் உயர்திணை அஃறிணை வேறுபாடுகளும் சுட்டப்படுகின்றன. அஃறிணை ஆயின் அவற்றுள் ஒருமை பன்மை வேறுபாடுகள் அறியப்படுகின்றன. உயர்திணை ஆயின் அவற்றுள் ஆண்பால், பெண்பால், பலர்பால் வேறுபாடுகளும் சுட்டப்படுகின்றன.

அந்தச் சொற்றொடர்களை இப்படி எழுதிப் பாருங்கள்.

    இது நாய் அல்ல / இல்லை

    இவை நாய்கள் அல்ல / இல்லை

    அவன் குமரன் அல்ல / இல்லை

    அவள் பொன்னி அல்ல / இல்லை

    அவர் அமைச்சர் அல்ல / இல்லை

    அவர்கள் அலுவலர்கள் அல்ல / இல்லை

இப்படி எழுதினால் ஏதும் பொருள் மாறுபடுகிறதா? இல்லவே இல்லை. இந்தச் சொற்றொடர்களில் எழுவாய்களாக வரும்...

    இது, அஃறிணை ஒருமையைக் குறிக்கிறது.

    இவை, அஃறிணைப் பன்மையைக் குறிக்கிறது.

    அவன், ஆண்பால் ஒருமையைக் குறிக்கிறது.

    அவள், பெண்பால் ஒருமையைக் குறிக்கிறது.

    அவர், பலர்பால் ஒருமையைக் குறிக்கிறது

    அவர்கள், பலர்பால் பன்மையைக் குறிக்கிறது.

சொற்றொடரின் முன்னுள்ள எழுவாய்ச் சொற்களே ஒன்றன்பால், பலவின்பால், ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவற்றைச் சுட்டி்விடுகிறபோது, வினைமுற்றுகளிலும் ஏன் இரட்டிப்பாக அந்த வேறுபாடுகளைச் சுட்ட வேண்டும்? அப்படிச் சுட்டுவதால் வினைமுற்றுகளிலும் பால் வேறுபாடுகளைக் காண முடியும் என்றும்- இலக்கணச் செழுமைக்கு மேலும் வலுவூட்டும் எனவும்- செம்மொழியின் செம்மார்ந்த நிலைக்கு மெருகூட்டும் என்றும் வாதிடுவோர் இருக்கலாம்.

எங்கோ ஓரிரு புலவர் பெருமக்களைத் தவிர, அன்று, அல்லன், அல்லள், அல்லர் ஆகிய வினைமுற்றுச் சொற்களைத் தற்காலத்தில் யாரும் பயன்படுத்தவில்லை. அவற்றின் வேறுபாடுகளையும் பொதுவாக யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால், அல்ல என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் அனைத்துப் பால்களுக்கும்  பயன்படுத்தினால் பேசவும் கற்கவும் கற்பிக்கவும் எளிதாகும். குழப்பங்களும் தீரும். ஆகவே அனைத்துப் பால்களுக்கும் அல்ல என்ற சொல்லையோ அல்லது இல்லை என்ற சொல்லையோ பயன்படுத்தலாம்.

இல்லை என்பதற்குப் பதிலாக இல, இலது, இலன், இலள், இலர் என்றெல்லாம் பயன்படுத்தினால் பேச்சின் இயல்போட்டத்தில் தடுக்கல்கள் தடங்கல்கள் ஏற்படுகின்றன. அவ்வளவு நுட்பமாகக் கவனித்துப் பேசுவது இயலாத ஒன்றாகும். இல்லை என்ற ஒற்றைச் சொல்லே போதும்.

அல்ல / இல்லை  என்னும் எதிர்மறைச் சொற்களையே அனைத்துத் திணை / பால் வேறுபாடுகளுக்கும் பொதுவாகப் பொருத்திப் பேசுகின்றனர் தற்கால மக்கள். இதனால் எந்தக் குறைவும் இல்லை. புரிதலில் எந்தக் குழப்பமும் இல்லை.

இலக்கண உணர்வின்றிப் பேச்சு நிரம்பி வழிந்து சரியான பாதையில் தானாகப்  பாய்வதே மொழியின் உயிரோட்டம். அத்தகைய உயிரோட்டப் பேச்சுக்குத் துணை சேர்க்கும் வகையில் அல்ல / இல்லை ஆகிய எதிர்மறைச் சொற்களையே பயன்படுத்தலாம். எழுவாய்ச் சொற்களின் துணையால் பால், திணை, ஒருமை, பன்மை வேறுபாடுகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த வழிமுறையைத்தான், ஆங்கிலத்தில் not என்ற சொல்லால் பின்பற்றுகின்றனர். இலக்கணச் சீர்திருத்தம் மூலம் தமிழிலும் இந்த நடைமுறைக்கு நாம் இசைவு அளிக்கலாம்.

இதனால் தமிழ் மேலும் எளிமையாகும். மென்மேலும் இனிமையாகும்.

மொழியைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் எளிமை இருக்க வேண்டும். கணினி வந்த காலத்தில் அதைக் கற்பதற்கு எளிதாக இல்லை. மென்பொருள்களும் எளிதாக இல்லை. பின்னர் எல்லாரும் பயன்படுத்தும் வண்ணம் மென்பொருள்கள் வந்தன. மேலும் மேலும் எளிமையாகியும் வருகின்றன. அதனால்தான் கணினியையும் திறன்பேசியையும் நாம் அனைவரும் எளிதில் கற்றுப் பயன்படுத்துகிறோம். அதுபோல் மொழியும் எளிமையாக இருக்க வேண்டும். இலக்கணத்தில் உள்ள சிக்கல்களையும் குழப்பங்களையும் தீர்க்கும் வகையில் அவ்வப்போது இலக்கணச் சீர்திருத்தங்களை நாம் செய்து வர வேண்டும்.

அல்ல என்ற சொல்லையோ இல்லை என்ற சொல்லையோ பயன்படுத்தலாம் என்று இக்கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளேன். இதன் அடுத்த கட்ட நகர்வையும் இப்போதே சொல்லிவிடுகிறேன்.

பொதுமக்களிடம் பேசும் போது உணர்வீர்கள்.

அல்ல என்ற சொல்லைவிட, இல்லை என்ற சொல் இன்னும் எளிதானது.

 

நன்றி :

திண்ணை, 26-07-2020