Sunday, 21 June 2020

WEBINAR என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன?


WEBINAR
என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன?

கோ. மன்றவாணன்

ஊரடங்கு உள்ளதால் நேரடியாக இலக்கியக் கூட்டங்களோ அரசியல் கூட்டங்களோ வணிக நிறுவனக் கூட்டங்களோ எதுவும் நடைபெறவில்லை. எனவே இணையவழிக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இக்கூட்ட ஏற்பாடுகளுக்குச் செலவு ஏதும் இல்லை என்பதால் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் கல்வி நிறுவனங்களும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையவழி வகுப்பறைகளை நடத்துகின்றன.

இத்தகைய இணையவழிக் கூட்டங்களுக்கு webinar என்ற சொல் புழக்கத்தில் வந்துள்ளது. இந்தச் சொல்லுக்கு உரிய தமிழ்ச்சொல் கண்டறிய முயன்றேன்.

Web + Seminar ஆகிய இரு சொற்களின் இணைவில் உருவானது Webinar என்ற சொல். வலைத்தளத்தில் நிகழ்த்தும் கருத்தரங்கு என்று இதற்குப் பொருள்கொள்ள முடிகிறது. வெப்சைட் என்பதன் முன்னொட்டான வெப் என்பதை வலை என்போம். செமினார் என்பதன் பின்னொட்டான இனார் என்பதை அரங்கு என்போம்.  இரண்டையும் இணைத்து வலையரங்கு என்று சொல்லலாம் என்று எடுத்த எடுப்பிலேயே தோன்றுகிறது. 

இணையத் தளத்தில் நடத்தும் கருத்தரங்கு (A seminar conducted on Internet) என்றே  ஆக்ஸ்போர்டு அகராதியில் சொல்லப்பட்டு உள்ளது. வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து பார்க்கிற, கவனிக்கிற, மறுவினை ஆற்றுகிற வகையில் இணையத்தளத்தில் நிகழ்த்துகின்ற உரையாடல் (a talk on a subject which is given over the Internet, allowing a group of people in different places to watch, listen and sometimes respond on the same occasion) என்றவாறு மாக்மில்லன் அகராதியில் பொருள் தரப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அலைபேசி என்ற சொல் உள்ளதால் வெபினார் என்பதற்கு அலையரங்கு, அலைமேடை, அலைக்கூடல், அலைக்கூடம், அலைக்கூடுகை ஆகிய சொற்களையும் உருவாக்கலாம்.

ஆனால் வெப் என்ற சொல்லுக்கு ஏற்கனவே நாம் வலை என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். வெப் சர்வர் என்பதை வலைப் பணியகம் என்று மணவை முஸ்தபா அவர்கள் கணினிச் சொற்களஞ்சியத்தில் குறிக்கிறார். ஆகவே வலை என்பதையே நாம் முன்சொல்லாகக் கொள்வோம். வலையின் பின்சொல்லாக அரங்கு, அரங்கம், மேடை, கூடல், கூடம், கூடுகை ஆகிய சொற்களை இணைக்கலாம். அவ்வாறு இணைத்தால் வலையரங்கு, வலையரங்கம், வலைமேடை, வலைக்கூடல், வலைக்கூடம், வலைக்கூடுகை ஆகிய சொற்கள் பிறக்கின்றன. இவற்றுக்கு விளக்கங்கள் தேவை இல்லை. இவற்றில் வலையரங்கு என்பது எளிதாகவே உள்ளது. ஆனால் தமிழ்ச்சூழலில் கருத்தரங்கு கவியரங்கு போன்ற நிகழ்வுகள் உள்ளன. வலையரங்கில் இன்று கவியரங்கு நடைபெறும் என்று சொல்லும்போது இருமுறை அரங்கு என்ற சொல் வருமே என்று தடைக்கல் நடுவோர் வரலாம்.

இலக்கியக் கூட்டங்களைக் குறிக்கத் தற்காலத்தில் கூடல் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் கூடுகை என்ற சொல்லாட்சியும் அதே பொருளில் பொதுவாகக் கையாளப்படுகிறது. இதன்படிப் பார்க்கையில் வலைக்கூடல், வலைக்கூடுகை ஆகிய சொற்கள் பலருக்கு ஏற்புடையவையாக இருக்கலாம். இதில் கூடுகை என்பதே முதன்மையாக இருக்கிறது. கருத்தாடல் பற்றித் தெளிவுறுத்தல் இல்லை.

வலைமேடை என்ற சொல், மிகவும் எளிமையானது. சொல்ல இனிமையானது. பொருள் பொதிந்தது. வெபினார் என்பதே பேசுவதற்கான ஒரு தளம்தான். மேடை என்ற சொல்லே பேசுவதற்கான ஒரு குறியீடுதான். மேடை என்றால் அங்கே செவிமடுப்போர் உண்டு. பார்வையாளர் உண்டு. ஐயம் தீர்க்க வினா எழுப்போர் உண்டு. வகுப்பறையில்கூட ஓரடி உயர மேடை உண்டு. மேடை என்ற சொல்லாட்சி, தமிழ்ச்சூழலில் வலுவாக வேர் ஊன்றி உள்ளது. ஆகவே வலைமேடை என்ற சொல்லும் அனைத்து வகையிலும் பொருத்தமானதாகும்.

ஒருசொல் உருவாகும் போது, அதற்குரிய ஒரு பொருள் இருக்கும். தொழில்நுட்பம் வளர வளர, அதன் பயன்பாடுகள் விரிவடைந்துகொண்டே போகும். ஆனால் முதலில் தோன்றிய சொல்லே தொடர்ந்து பயன்பட்டுவரும். சொல் என்பதும் ஒரு குறியீடுதான். இதற்கு இதுதான் சொல் என்று முடிவெடுத்த பிறகு, அதுவே தொடர்வது வழக்கம்தான். நூறு விழுக்காடும் பொருந்திவர வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.

மேலே கண்டவாறு வெபினார் என்பதற்கு வலையரங்கு, வலையரங்கம், வலைமேடை, வலைக்கூடம், வலைக்கூடல், வலைக்கூடுகை ஆகிய சொற்கள் உள்ளன. இவை எல்லா வகையான கூட்டங்களுக்கும் கல்வி வகுப்புகளுக்கும் பொருந்தும். இந்தச் சொற்களில் ஒன்றை அவரவர் விருப்பத்துக்கு ஏற்பப் பயன்படுத்தலாம். தற்போதைக்கு இச்சொற்கள் ஒருபொருள் பன்மொழி என விளங்கட்டுமே. இவற்றுள் வெல்லும் சொல் எது என்று வருங்காலம் உணர்த்திவிடும்.

ஆனாலும் பல சொற்கள் கொடுத்து, ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றால் பலரால் முடியாது. ஒரு சொல்லை மட்டும் குறிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால் அந்தச் சொல் இதுதான்.
வலைமேடை

நன்றி :
மின்னம்பலம்
18-06-2020


No comments:

Post a Comment