Tuesday, 30 June 2020

பொய்யில் நிச்சயிக்கப் படுகின்றன திருமணங்கள்



பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன
திருமணங்கள்....

கோ. மன்றவாணன்

“ஆயிரம் பொய்சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வை” என்று அறிவுரை சொல்கிறார்கள். மொய் இல்லாமல் திருமணம் நடக்கலாம். பொய் இல்லாமல் திருமணம் நடக்காது என்று ஆகிவிட்டது..

ஆயிரம் தடவைகள் “போய்ச்சொல்லி” ஒரு திருமணத்தை நடத்தி வை என்று சொன்னதாகச் சிலர் சொல்கிறார்கள். இப்படி விளக்கம் அளிப்பவர்களின் நோக்கமும் பொய்சொல்லித் திருமணம் செய்யாதீர்கள் என்பதாகத்தான் இருக்கும்.

ஒரு திருமணம் நடக்க ஆயிரம் பொய்சொல்லலாம் என்று எந்தச் சான்றோரும் சொல்லி இருக்க முடியாது. பொய் சொல்லக் கூடாது பாப்பா என்றுதான் பாடினார் பாரதியார்.

பொய்மையும் வாய்மை இடத்த; புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற வள்ளுவர் வழங்கிய சலுகையால் நல்லது நடப்பதற்குப் பொய்சொல்லலாம் என்று கருதி இருப்பார்களோ...? உயிர்போகும் இடரில் இருப்பவரிடம் அதிர்ச்சியான செய்தியைச் சொல்லக் கூடாது என்பது வரையில் அந்தக் குறளை ஏற்கலாம்.. சட்டத்தின் ஓட்டையைப்போல் எல்லாவற்றுக்கும் அதைப் பொருத்திக்கொண்டு பொய்க்கு நீதி கற்பிக்கக் கூடாது.

பொய் என்பது இருபுறமும் கூர் உள்ள கத்தி. ஒரு பொய்யைச் சொல்லித் திருமணத்தை நடத்தவும் முடியும். ஒரு பொய்யைச் சொல்லித் திருமணத்தைத் தடுக்கவும் முடியும். ஆனால் பொய்யால் நிறைவேறும் எதுவும், சிக்கல்களை அள்ளிவந்து குவித்துக்கொண்டே இருக்கும்.

திருமண அழைப்பிதழிலேயே பொய் அரங்கேறி விடுகிறது. பொறியியல் பட்டம் பெற்ற மணமகளைவிட அதிகம் படித்தவராக மணமகன் படிப்பைக் குறிப்பார்கள். திருமணம் நடந்து குழந்தை பெற்ற பிறகே தெரியவரும், மாப்பிள்ளை 9ஆம் வகுப்பைத் தாண்டாதவர் என்று.

வாடகை வீட்டைச் சொந்த வீடாகச் சொல்லிக் கொள்வார்கள். நிலபுலன் உள்ளதாக நீளமாகப் புளுகுக் கயிற்றைத் திரிப்பார்கள். சம்பளம் பல்லாயிரம் என்று பொய்க்கம்பளம் விரிப்பார்கள். வயதைக் குறைப்பார்கள். ஜாதகத்தைக்கூட மாற்றி சாதகமாக எழுதித் தருவோர் இருக்கிறார்கள். பெரும்பணக்காரத் தோரணை காட்டுவார்கள். நோயைப் மறைப்பார்கள். பொய்யின் திரை நாளையே கிழிந்துவிடும் என்று தெரிந்தாலும் இன்று  அலங்காரமாகக் கட்டித் தொங்கவிடுவதில் அலாதியான துணிச்சல் பலருக்கு உண்டு. கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளிலே தெரிந்து போகும் என்பார்கள். அது அந்தக் காலக் கணிப்பு. பொய்யையம் புரட்டையும் அறிவதற்கு எட்டு மாதங்கள்கூட... எட்டு ஆண்டுகள்கூட ஆகிவிடுகிறது. அவ்வளவு திறமையோடு புளுகித் தள்ளுகிறார்கள்.

எய்ட்ஸ் நோயாளி ஒருவர். அவருக்கு அந்த நோய் இருப்பது அவருடைய குடும்பத்தினருக்கும் தெரியும். கொடிய நோயை மறைத்தார்கள். அவருக்கு அழகான அப்பாவியான பெண்ணை மணம்முடித்தார்கள். அளவுக்கு மீறி வரதட்சணையையும் வற்புறுத்தி வாங்கிக்கொண்டார்கள். ஆறு மாதங்களிலேயே பொய்யின் தோல் உரிந்தது. பிறந்தகத்துக்கு அவள் வந்துவிட்டாள். அந்தப் பெண்ணின் மனம் என்னபாடு படும் என்பதை நினைத்துப் பாருங்கள்.  

ஏற்கனவே திருமணம் ஆகிக் குழந்தைகள் இருக்கும், அதை மறைத்து இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்கள். இதில் ஏமாந்து போகிறவர்களில் மெத்த படித்தவர்களும் உண்டு. பெரும்பதவிகளில் இருப்போரும் உண்டு. சமூக மதிப்பில் உயர்ந்து நிற்போரும் உண்டு.

திருமணம் ஆனால் மனநோய் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை நம் சமூகப் பரப்பில் உள்ளது. இது தவறான நம்பிக்கை.  மறுதரப்பினருக்குத் தெரிவிக்காமல் மனநோய்ப் பீடித்தவரை மணம்செய்து வைக்கிறார்கள். இதனால் சட்டை கிழிகிறதோ புடவை கிழிகிறதோ... வாழ்க்கை கிழிந்து தொங்குகிறது.

இவ்வாறு திருமணம் நடந்து முடிந்த பிறகே, உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கும். ஏமாற்றப் பட்டோம் என்று மனம் வலிக்கும். ஒற்றுமை உடைந்து நொறுங்கும். மணவாழ்வு சீர்குலையும். ஏமாற்றப்பட்டவர் ஆணாக இருந்தால் பெரும்பாலும் அவர் அதை எளிதாகக் கடந்து போகிறார். ஆணுக்கு சமூகம் அளிக்கும் சலுகைதான் அதற்குக் காரணம். ஏமாற்றப்பட்டவர் பெண்ணாக இருந்தால்... அவர்கள் அடையும் வேதனைகள் ஏராளம்.  சமூகச் சூழ்நிலைகளால் பொறுத்துப் போக வேண்டியவளாக இருப்பாள். பொறுக்கவே முடியாத சூழல்களும் உருவாகின்றன.

சில நேரங்களில் சின்னச் சின்னப் பொய்கள்கூட, திருமண வாழ்வைச் சிதைத்துவிடுகின்றன.

மாப்பிள்ளை குடிகாரர் என்றால் அதை மறைக்க வேண்டியதில்லை. அதை ஏற்கிற பெண்ணை அவர் திருமணம் செய்துகொள்ளலாம். இதில் இன்னொரு பக்கம் இருக்கிறது. மாப்பிள்ளையே தான் குடிப்பழக்கம் உடையவர் என்று சொன்னாலும்.. பெண்ணைப் பெற்றோர் அதைப் பெண்ணிடம் மறைத்துத் திருமணம் செய்து வைப்பார்கள். ஆனால் குடும்பச் சீர்குலைவுக்குக் குடிப்பழக்கமும் காரணமாக இருக்கிறது.

என் நண்பர் ஒருவர் தன்னைப் பற்றிய குறிப்பைத் தட்டச்சு செய்து வைத்திருந்தார். மணமகன் தேடி வருவோரிடம் அதைக் கொடுப்பார். அதில் அவர் தனக்குச் சர்க்கரை நோய், ஆஸ்துமா இருப்பதாகக் குறித்திருந்தார். குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உண்டு என்று தெரிவித்து இருந்தார். வாழ்க்கையை நடத்த முடியாத, குறைவான சம்பளத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். பெண்கொடுக்க யாரும் வரவில்லை. அவரை முழுவதும் அறிந்த ஒரு பெண் அவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்குள் சிக்கல்கள் இருக்கலாம். ஏமாற்றப்பட்டோம் என்ற மனவீழ்ச்சி அவர்களிடத்தில் ஏற்பட வாய்ப்பு இல்லை. இதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் வந்த  “மணமகன் தேவை” விளம்பரத்தில் பெண்ணுக்கு 1ஆம் வகை நீரிழிவு நோய் இருப்பதாகவும், நாள்தோறும் இன்சுலின் செலுத்திக்கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதுதான் நேர்மை.

எல்லா மனிதர்களுக்கும் குறைகளும் உண்டு; நிறைகளும் உண்டு. நூறு விழுக்காடு நிறைகள் கொண்ட ஒருவரைக் காண முடியாது. குறைநிறைகளை அலசி ஆராயலாம். அவரவர் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, விட்டுக் கொடுக்க வேண்டியதை விட்டுக்கொடுத்தும், விலக்க வேண்டியதை விலக்கியும் மணத்தேர்வு செய்யலாம். முடிவுகள் தவறாகப் போகலாம். தவறுகளில் நம் பங்கு இருப்பதால் நம் மனம் தாங்கிக்கொள்ளும். தவறுகளில் நம் பங்கு இல்லை என்றால் மனம் பொறுக்காது. புரிதலுக்காக இதையே இன்னொரு முறையில் சொல்கிறேன்.

நேரடியான அணுகுமுறையில்  தீமையை அடைந்தால் மனம் கவலையுறும். அதிலிருந்து மீளவும் வழி கண்டறியும். ஆனால் பொய்சொல்லி, நம்ப வைத்து, மோசம் செய்வதை மனம் பொறுத்துக்கொள்ளாது. மணவாழ்க்கைக் கசப்புகளுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றுள், சூதுவாதுகளால் ஏமாற்றப்பட்டோம் என்ற உணர்வால் எழும் மனக்கொதிப்புகளுக்கு வலு அதிகம்.

திருமணம் என்பது...

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள் கடவுள் பற்றாளர்கள்.

ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள் காசேதான் கடவுள் என்பவர்கள்.

பொய்யில்தான் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள் கல்யாணத் தரகர்கள்.

பொய்யில்தான் தொடங்க வேண்டுமா மணவாழ்வை?

நன்றி :
திண்ணை இணைய இதழ்
21-06-2020



Sunday, 21 June 2020

WEBINAR என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன?


WEBINAR
என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன?

கோ. மன்றவாணன்

ஊரடங்கு உள்ளதால் நேரடியாக இலக்கியக் கூட்டங்களோ அரசியல் கூட்டங்களோ வணிக நிறுவனக் கூட்டங்களோ எதுவும் நடைபெறவில்லை. எனவே இணையவழிக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். இக்கூட்ட ஏற்பாடுகளுக்குச் செலவு ஏதும் இல்லை என்பதால் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் கல்வி நிறுவனங்களும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையவழி வகுப்பறைகளை நடத்துகின்றன.

இத்தகைய இணையவழிக் கூட்டங்களுக்கு webinar என்ற சொல் புழக்கத்தில் வந்துள்ளது. இந்தச் சொல்லுக்கு உரிய தமிழ்ச்சொல் கண்டறிய முயன்றேன்.

Web + Seminar ஆகிய இரு சொற்களின் இணைவில் உருவானது Webinar என்ற சொல். வலைத்தளத்தில் நிகழ்த்தும் கருத்தரங்கு என்று இதற்குப் பொருள்கொள்ள முடிகிறது. வெப்சைட் என்பதன் முன்னொட்டான வெப் என்பதை வலை என்போம். செமினார் என்பதன் பின்னொட்டான இனார் என்பதை அரங்கு என்போம்.  இரண்டையும் இணைத்து வலையரங்கு என்று சொல்லலாம் என்று எடுத்த எடுப்பிலேயே தோன்றுகிறது. 

இணையத் தளத்தில் நடத்தும் கருத்தரங்கு (A seminar conducted on Internet) என்றே  ஆக்ஸ்போர்டு அகராதியில் சொல்லப்பட்டு உள்ளது. வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து பார்க்கிற, கவனிக்கிற, மறுவினை ஆற்றுகிற வகையில் இணையத்தளத்தில் நிகழ்த்துகின்ற உரையாடல் (a talk on a subject which is given over the Internet, allowing a group of people in different places to watch, listen and sometimes respond on the same occasion) என்றவாறு மாக்மில்லன் அகராதியில் பொருள் தரப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அலைபேசி என்ற சொல் உள்ளதால் வெபினார் என்பதற்கு அலையரங்கு, அலைமேடை, அலைக்கூடல், அலைக்கூடம், அலைக்கூடுகை ஆகிய சொற்களையும் உருவாக்கலாம்.

ஆனால் வெப் என்ற சொல்லுக்கு ஏற்கனவே நாம் வலை என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். வெப் சர்வர் என்பதை வலைப் பணியகம் என்று மணவை முஸ்தபா அவர்கள் கணினிச் சொற்களஞ்சியத்தில் குறிக்கிறார். ஆகவே வலை என்பதையே நாம் முன்சொல்லாகக் கொள்வோம். வலையின் பின்சொல்லாக அரங்கு, அரங்கம், மேடை, கூடல், கூடம், கூடுகை ஆகிய சொற்களை இணைக்கலாம். அவ்வாறு இணைத்தால் வலையரங்கு, வலையரங்கம், வலைமேடை, வலைக்கூடல், வலைக்கூடம், வலைக்கூடுகை ஆகிய சொற்கள் பிறக்கின்றன. இவற்றுக்கு விளக்கங்கள் தேவை இல்லை. இவற்றில் வலையரங்கு என்பது எளிதாகவே உள்ளது. ஆனால் தமிழ்ச்சூழலில் கருத்தரங்கு கவியரங்கு போன்ற நிகழ்வுகள் உள்ளன. வலையரங்கில் இன்று கவியரங்கு நடைபெறும் என்று சொல்லும்போது இருமுறை அரங்கு என்ற சொல் வருமே என்று தடைக்கல் நடுவோர் வரலாம்.

இலக்கியக் கூட்டங்களைக் குறிக்கத் தற்காலத்தில் கூடல் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்படுகிறது. அதுபோல் கூடுகை என்ற சொல்லாட்சியும் அதே பொருளில் பொதுவாகக் கையாளப்படுகிறது. இதன்படிப் பார்க்கையில் வலைக்கூடல், வலைக்கூடுகை ஆகிய சொற்கள் பலருக்கு ஏற்புடையவையாக இருக்கலாம். இதில் கூடுகை என்பதே முதன்மையாக இருக்கிறது. கருத்தாடல் பற்றித் தெளிவுறுத்தல் இல்லை.

வலைமேடை என்ற சொல், மிகவும் எளிமையானது. சொல்ல இனிமையானது. பொருள் பொதிந்தது. வெபினார் என்பதே பேசுவதற்கான ஒரு தளம்தான். மேடை என்ற சொல்லே பேசுவதற்கான ஒரு குறியீடுதான். மேடை என்றால் அங்கே செவிமடுப்போர் உண்டு. பார்வையாளர் உண்டு. ஐயம் தீர்க்க வினா எழுப்போர் உண்டு. வகுப்பறையில்கூட ஓரடி உயர மேடை உண்டு. மேடை என்ற சொல்லாட்சி, தமிழ்ச்சூழலில் வலுவாக வேர் ஊன்றி உள்ளது. ஆகவே வலைமேடை என்ற சொல்லும் அனைத்து வகையிலும் பொருத்தமானதாகும்.

ஒருசொல் உருவாகும் போது, அதற்குரிய ஒரு பொருள் இருக்கும். தொழில்நுட்பம் வளர வளர, அதன் பயன்பாடுகள் விரிவடைந்துகொண்டே போகும். ஆனால் முதலில் தோன்றிய சொல்லே தொடர்ந்து பயன்பட்டுவரும். சொல் என்பதும் ஒரு குறியீடுதான். இதற்கு இதுதான் சொல் என்று முடிவெடுத்த பிறகு, அதுவே தொடர்வது வழக்கம்தான். நூறு விழுக்காடும் பொருந்திவர வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.

மேலே கண்டவாறு வெபினார் என்பதற்கு வலையரங்கு, வலையரங்கம், வலைமேடை, வலைக்கூடம், வலைக்கூடல், வலைக்கூடுகை ஆகிய சொற்கள் உள்ளன. இவை எல்லா வகையான கூட்டங்களுக்கும் கல்வி வகுப்புகளுக்கும் பொருந்தும். இந்தச் சொற்களில் ஒன்றை அவரவர் விருப்பத்துக்கு ஏற்பப் பயன்படுத்தலாம். தற்போதைக்கு இச்சொற்கள் ஒருபொருள் பன்மொழி என விளங்கட்டுமே. இவற்றுள் வெல்லும் சொல் எது என்று வருங்காலம் உணர்த்திவிடும்.

ஆனாலும் பல சொற்கள் கொடுத்து, ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றால் பலரால் முடியாது. ஒரு சொல்லை மட்டும் குறிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால் அந்தச் சொல் இதுதான்.
வலைமேடை

நன்றி :
மின்னம்பலம்
18-06-2020


Monday, 15 June 2020

வஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது மனித மனம்



வஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது
மனித மனம்

கோ. மன்றவாணன்

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டக் கிராமப் பகுதியில் பசியோடு வந்தது ஒரு பிள்ளைத்தாய்ச்சி யானை. அது யாருக்கும் தொல்லை கொடுக்கவில்லை. யாரோ சிலர், அந்த யானைக்கு அன்னாசிப் பழத்துக்குள் வெடிபொருட்களை மறைத்து வைத்துக் கொடுத்துள்ளார்கள். அது தனக்காகச் சாப்பிடவில்லை என்றாலும் தன் வயிற்றில் உள்ள குட்டிக்காகச் சாப்பிட வேண்டிய நிலை. அந்த வெள்ளந்தி யானை, மனிதர்களை நம்பி உள்ளது. அன்னாசிப் பழத்தை வாய்க்குள் நுழைத்துச் சாப்பிட முயல்கையில் அது வெடித்துவிட்டது. வலியால் யானை துடிதுடித்து உள்ளது. அதன் தும்பிக்கை, வாய்ப் பகுதிகளில் சதைகள் கிழிந்து சிதைந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. பற்கள் யாவும் உடைந்துள்ளன. தாடைகள் நொறுங்கி உள்ளன. அப்படியானால் அது எவ்வளவு சக்தி வாய்ந்த வெடிபொருள் என்று ஊகிக்கலாம்.

வலி பொறுக்க முடியாமல் ஓடிச் சென்று ஆற்றில் இறங்கி வாயையும் தும்பிக்கையும் தண்ணீரில் அழுத்தியபடியே சில நாள்களாக நின்றுள்ளது. தண்ணீர் ஒத்தடம் சற்று வலி குறைக்கும் என்று அந்த யானைக்குத் தெரிந்த மருத்துவமாக இருக்கலாம். அல்லது புண்களில் ஈக்கள் உட்காருவதைத் தவிர்ப்பதற்காக ஆற்றில் இறங்கி இருக்கலாம். வனத்துறையினர் கும்கி யானைகளைக் கொண்டுவந்து மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அந்த யானையின் உயிர் ஆற்று நீரில் கலந்து கரைந்து ஓடியது. இந்தச் செய்தியைக் கேள்விபட்ட பலரும் மனம்பதைத்து உள்ளனர்.

தேங்காயில் ஊசி செருகி யானையிடம் கொடுத்த  கதை ஒன்றை நம் சிறு பருவத்தில் கேட்டிருக்கிறோம். அது கற்பனைக் கதை என்று நம்பினோம். அன்னாசிப் பழத்துக்குள் வெடிவைத்துக் கொடுத்த நிகழ்வைப் படித்தபோது, அந்தக் கதைக்குத் தூண்டலாக அந்தக் காலத்தில் எங்கோ அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கக் கூடும் என்றே மனம் நினைக்கின்றது. ஏன் என்றால்... முழுக்க முழுக்கக் கற்பனையாகக் கதை எழுத முடியாது. ஏதோ ஒரு நிகழ்வின் அடிப்படையில்தான் கற்பனையைக் கலந்து கதையை வளர்க்க முடியும். யானைக்குத் தேங்காயில் ஊசி செருகிக் கொடுத்த கொடூரன் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம்.

சிறுவயது நிகழ்வுகள் சில உண்டு. வாழைப்பழத் தோலைச் சாலையில் போட்டுவிட்டு, யாராவது வழுக்கி விழுகிறார்களா என்று ஆர்வத்தோடு பார்ப்பார்கள். நாயின் வாலில் வெடியைக் கட்டி, திரி கொளுத்துவார்கள். தும்பியின் வாலில் நூல்கட்டி அதன் சுதந்திரத்தைச் சிதைப்பார்கள். அடுத்தவர்களைத் துன்பப்படுத்தி அதில் மகிழ்ச்சி காணும் உளநோய் இது. அதன் தொடர்ச்சிதான் இத்தகைய கொடுமைகள்.

தொன்று தொட்டு யானைகளும் தமிழர்களின் வாழ்வியலில் சேர்ந்தே வாழ்ந்து வந்திருக்கின்றன. மனிதர்களுக்கு யானைகள் பயனுடையவையாக இருந்து வந்துள்ளன.

ஆனால்

தற்காலத்தில் தந்தங்களுக்காவும் மருந்துகளுக்காகவும் யானைகளைக் கள்ளத்தனமாக வேட்டையாடுகின்றனர். இதில் கோடிக் கணக்கில் பணம் பார்க்கின்றனர் என்கிறார்கள். தற்போதும் ஆயிரக்கணக்கில் யானைகள் இந்தியாவில் இருந்தாலும் அவை அருகி வருகிற உயிரினமாகவே பார்க்க முடிகிறது. காடுகள் அழிப்பாலும்... வழித்தடங்களில் தடைகள் ஏற்படுவதாலும்... தண்ணீர், உணவு கிடைக்காமையாலும் யானைகள் ஊருக்குள் நுழைகின்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கின்றன. இதனால் மனிதர்களுக்கு உயிர் அச்சம் ஒருபுறம். கடன்பட்டுச் செய்த வேளாண்மையில் இழப்பு ஏற்படுமோ என்ற பயிர் அச்சம் மறுபுறம்.

உயிர் அச்சம் பயிர் அச்சம் இவற்றுக்கு இடையில் யானையை விரட்ட பல முயற்சிகளை மக்கள் மேற்கொள்கின்றனர். தீப்பந்தங்கள் ஏற்றி வைக்கிறார்கள், ஊர் எல்லையில் பள்ளங்கள் வெட்டி வைக்கிறார்கள். வெடிச்சத்தம் முழக்குகிறார்கள், தகரங்கள் பாத்திரங்களைத் தட்டி அதிரொலி எழுப்புகிறார்கள். வனத்துறையினருக்குத் தெரிவித்து மயக்க ஊசி போட்டுப் பிடித்துச் சென்று காட்டில் விடச் செய்கிறார்கள்.. ஆனால் யானைகளை அவர்கள் கொல்ல நினைப்பதில்லை.

யானை ஊருக்குள் வந்தால் அதை விரட்ட முயன்றிருக்க வேண்டுமே தவிர, பாச நடிப்புக் காட்டிப் பழத்தில் வெடிசெருகிச் சாப்பிட வைத்துக் கொன்றிருக்கக் கூடாது. கொலையிலும் இது கொடுமையான கொலை ஆகும். அந்த யானைக்கு வாய்ப்பேச்சு இல்லை என்பதால் மரண வாக்குமூலம் கொடுக்க முடியவில்லை. சில நாள்களாக உணவுண்ண முடியாமலும் உறக்கம்கொள்ள முடியாமலும் ஆற்றிலேயே நின்றிருந்த யானை என்ன நினைத்திருக்கும்? தன் வயிற்றில் வளரும் குட்டியைக் காப்பாற்ற முடியாமல் இறக்கிறோமே என்று கண்ணீர் விட்டிருக்கும். தன் உறவு யானைகளுக்குச் செய்தி சென்று சேர வழியில்லையே என்று கலங்கி இருக்கும். இந்தக் கொடூர மனிதர்களிடம் ஏமாந்து இன்னும் எத்தனை யானைகள் இறக்குமோ என்று வேதனைப் பட்டிருக்கும்.

அவ்வப்போது யானைகள் கொல்லப்படும் நிகழ்வுகளை நாம் அறிவோம். ஆனால் அன்னாசிப் பழம் என்று நம்பி சாப்பிட்டு இறந்த இந்த யானைக்காக மட்டும் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறோம்.

நம் நீதிமன்றங்களில் மனிதக் கொலைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கிறார்கள். அதைத் தினச்செய்தியாக கடந்து போகிறோம். கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சத்தைப் பதற வைக்கும் அரிதினும் அரிதான மனிதக் கொலை வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனையை விதிக்கிறார்கள். அதுபோல அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொடுத்து யானையைக் கொன்றதும் அரிதினும் அரிதான கொடுமையான விலங்குக் கொலைதான். அதனால்தான் அந்த நிகழ்வைக் கேள்விபட்டவுடன் நமக்கு நெஞ்சு பதறுகிறது.

விலங்குகள் தாவரங்கள் உள்ளிட்ட எல்லா இயற்கைப் படைப்புகளுக்கும் இந்த உலகம் சொந்தம்.  ஆனால் உலகம் முழுமையும் தமக்கே சொந்தம் என்று நினைக்கிறான் தன்னல மனிதன். அதனால்தான் ஒவ்வொன்றாக அழித்து வருகிறான்.

அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து வைத்து யானைக்குக் கொடுத்துள்ளார்கள் என்றும் சொல்கின்றனர்.. பயிரைக் காக்கும் பொருட்டு, காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்காக வைக்கப்பட்ட அன்னாசிப் பழவெடியைத் தானாகவே யானைச் சாப்பிட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்துப் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

எனினும்-

உணவில் நஞ்சு வைத்துக் கொல்லும் உத்தியைக் கையாளும் ஒரே உயிரினம் மனிதன்தான். விலங்குகளுக்கு இந்த வஞ்சக நெஞ்சம் இல்லை. அதிலும் உணவுப் பொருளில் வெடிசெருகிக் கொடுக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது விலங்குகள் மேன்மையானவை.

     கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
     ஆனால் அவன் நேரில் தோன்றுவதில்லை.
     மனிதனைக் கண்டு அவனும் அஞ்சுகிறான்.


Wednesday, 10 June 2020

நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை




நம்மைப் போல்
நேரம் காத்துக் கிடப்பதில்லை.

கோ. மன்றவாணன்

ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று அழைப்பிதழில் அச்சிட்டு இருப்பார்கள். அதற்குச் சற்று முன்னதாக அரங்குக்குச் சென்றுவிடுவோர் உண்டு. அவர்களே கால தேவனை மதிப்பவர்கள். “கூட்டம் வந்ததும் தொடங்கி விடலாம்” என்று அமைப்பாளர்களில் ஒருவர் சொல்வார். காத்திருப்போம் காத்திருப்போம் காலம் கரைந்துகொண்டு இருக்கும். ஆறரைக்குத் தொடங்கிவிடலாம் என்பார்கள். அந்த ஆறரையை அவர்கள் மறந்து விடுவார்களோ என்னவோ...?  மணி ஏழு நோக்கி ஏறுநடை போட்டபடி இருக்கும். ஓரளவு கூட்டம் வந்திருக்கும். அதற்குமேல் வருவோரைப் பற்றி ஏன் அமைப்பாளர்கள் எதிர்நோக்கி இருக்க வேண்டும்? சரியான நேரத்தில் வந்தவர்களை மதிப்பதில்லை. வராதவர்களை மதித்துக் காத்துக் கிடக்கிறார்கள். இது சரிதானா?

ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகள் கால தாமதமாகவே தொடங்குகின்றன. இதில் யாருக்கும் வியப்பு இல்லை. இணையவழிக் கூட்டத்துக்கும் அந்த நிலைமை நேரலாமா?

சில நாட்களுக்கு முன் இணையவழிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் ஒரு கவியரங்கம் நிகழ்ந்தது. காலை 11 மணிக்குத் தொடங்குவதாக அழைப்போவியம் அனுப்பி இருந்தார்கள். 11.25 வரை நிகழ்ச்சியைத் தொடங்கவில்லை. பலர் இணைப்பில் இருந்தார்கள். தங்களுக்கு வசதிபட்ட நேரத்தில் ஒவ்வொரு கவிஞராக இணைந்தார்கள். அப்போதும் நிகழ்ச்சியைத் தொடங்கவில்லை. அந்த அமைப்பின் தலைவர் இன்னும் இணைப்பில் வரவில்லையாம். ஒருங்கிணைப்பாளர் அவருக்கு அலைபேசினார். இதோ வருகிறேன் என்றார். அவர் வந்த பிறகே தொடங்கினார்கள். முதல் கவிஞர் கவி படித்தார். இரண்டாம் கவிஞரை அழைத்த போது, அந்தத் தலைவர் குறுக்கிட்டார். காலம் குறைவாக உள்ளதால் இனிவரும் கவிஞர்கள் தங்கள் கவிதையில் பத்து வரிகளை மட்டும் படிக்க வேண்டும் என்று கட்டளை இட்டார். கவிஞர்கள் தடுமாறினார்கள். சரியான நேரத்தில் தொடங்கி இருந்தால் இந்தச் சங்கடம் நேராது இருந்திருக்குமே.

சுவைஞர்கள் வருகிறார்களோ இல்லையோ, அழைப்பிதழில் இடம்பெற்றவர்கள் முன்னதாகவே வந்துவிட வேண்டும் என்பது அவை நாகரிகம்.

சிறப்பு விருந்தினர் வந்த பிறகுதான் நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும் என்று சிலர் குறியாக இருப்பார்கள். உள்ளூர் எம்எல்ஏ வந்த பிறகுதான் விழாவைத் தொடங்க வேண்டும் என்பார்கள். அப்படியானால் அது, உரிய நேரத்தில் வந்து காத்திருப்பவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை அன்றி வேறென்ன?

பட்டிமன்ற நடுவர், கவியரங்கத் தலைவர், கருத்தரங்கத் தலைவர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் போன்றோர் வரத் தாமதம் ஆவதாலும் நிகழ்ச்சியைத் தொடங்க முடியாமல் தவிக்கின்ற அமைப்பாளர்களைப் பார்த்திருக்கிறோம். ஒருவர் வரத் தாமதம் ஆனால் வேறு ஒருவரை வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி விடுகிற துணிவுடையோரும் உண்டு.
தாமதம் என்பது நேரத்தை வீணடிப்பது. அதுவும் தங்கள் தாமதத்தால் பிறரின் நேரத்தை வீணடிப்பவர்களை என்ன செய்வது? குழுவாகச் சுற்றுலா சென்றவர்களுக்குத் தெரியும். ஒருவர் வருகைக்காக மற்ற அனைவரும் காத்தழியும் அவலம்.

அனைவருக்கும் நிகழ்ச்சி பயன் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சற்றுக் காலம் தாழ்த்துகிறார்கள் என்று சிலர் நினைக்கலாம். முக்கிய விருந்தினர் வந்த பிறகு தொடங்குவதுதான் அவருக்கு நாம் தரும் மரியாதை என்று சிலர் கூறலாம். ஏதோ பத்துப் பேரை வைத்து நிகழ்ச்சியைத் தொடங்குவது சுவை சேர்க்காது என்பாரும் உளர்.

தாமதமாக நிகழ்ச்சியைத் தொடங்குவதால் மொத்த நிகழ்ச்சி நிரலிலும் அவசரகதி ஏற்படுமே தவிர, சுவை பயக்காது. முன்னதாகவே வந்துவிட்ட தேநீர்க் குடுவையும் சில்லிட்டுப் போய்விடும்.

இலக்கிய உலகில் இன்னொரு விசித்திரம் நடக்கிறது....

ஒரே நிகழ்ச்சியை முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, அறுபெரும் விழா என்று சிலர் எண்வித்தை செய்து நடத்துகிறார்கள். அழைப்பிதழ்களில் உள்ள பெயர்களை அடைமொழி சேர்த்துப் படித்தாலே போதும். நிகழ்ச்சி நேரம் முடிந்துவிடும். அவர்களுக்கு நேரத்தைப் பற்றிய கவலை அறவே இல்லை.

சொன்ன நேரத்தில் எந்தக் கூட்டம் தொடங்குகிறது? ஆறு மணி என்று போட்டிருந்தால் ஏழு மணிக்குப் போனால் போதும் என்ற மனப்பான்மை வளர்ந்ததற்கு யார் காரணம்?

காரணமே, உரிய நேரத்தில் வராதவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தாம்.

இதுபோன்ற கூட்டங்கள் காலம் கடந்து தொடங்குவது வழக்கமாகி விட்டது. அதனால்தான், சரியான நேரத்துக்கு வர நினைப்போரும் தாமதமாக வருகிறார்கள்.

கடலூரில் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி என்றொரு கவிஞர் இருந்தார். 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். மூன்று முறை தமிழ்நாட்டு அரசின் பரிசுகள் பெற்றவர். ஒரு முறை புதுச்சேரி அரசின் பரிசு பெற்றவர். இவர் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதைவிட பிறரை முன்னிலைப் படுத்துவதே தன் நோக்கமாகக் கொண்டவர். கவிஞர்களில் / பேச்சாளர்களில் பெரும்பாலோர், யாரோ மேடை போட்டுக் கொடுத்தால் ஆவேசமாகக் கவிபாடி / உரையாடி ஆகாயத் தேரில் பறப்பார்கள். யாரோ சில கவிஞர்கள்தாம் / பேச்சாளர்கள்தாம் மற்றவர்களுக்குப் பொதுநோக்கோடு மேடை அமைத்துத்  தருகிறார்கள். மேடையில் பேசி மின்னுவோரைவிட, நிகழ்ச்சியை அமைப்பவர்களே தமிழ் வளர்ச்சிப் பணிகளில் முதன்மையானவர்கள்.

க.பொ.இளம்வழுதி நிறைய இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியவர். அவர் நடத்தும் கூட்டங்களில் ஒரு சிறப்பு உண்டு. தொடங்கும் நேரத்தையும் முடிக்கும் நேரத்தையும் யாருக்காவும் எதற்காகவும் விட்டுத் தரமாட்டார். அழைப்பிதழில் மாலை 6.31 என்று அச்சிட்டு இருப்பார். அரங்கில் யார் வந்தாலும் வராவிட்டாலும் 6.31க்கு மொழிவாழ்த்து ஒலிக்கும். முடியும் நேரம் 8.15 என்றிருக்கும். அதே நேரத்தில் நிகழ்ச்சியை நிறைவு செய்துவிடுவார். ஒருமுறை நன்றியுரை ஆற்ற நேரம் ஒதுக்க முடியாமல் மணி 8.14ஐ நெருங்கிய போது அவர் மேடையில் தோன்றி “நன்றி“ என்ற ஒற்றைச் சொல்லோடு நிகழ்ச்சியை முடித்துவிட்டார்.

இதனால் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி கூட்டம் என்றாலே உரிய நேரத்தில் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் ஏற்பட்டுவிட்டது. 08.15க்கு கூட்டம் முடிந்துவிடும் என்ற உறுதி நிலைநாட்டப்பட்டதால் வீட்டுக்குத் திரும்பும் நேரத்தை மனைவியிடம் துல்லியமாகச் சொல்ல முடிந்தது. எப்பொழுது வருவார் என்று அவரும் காத்திருக்க வேண்டியது இல்லையே!

நன்றி :
திண்ணை
31-05-2020







Tuesday, 2 June 2020

இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்



இல்லம் தேடிவரும்
இலக்கியக் கூட்டங்கள்

கோ. மன்றவாணன்

தமிழகத்தின் பல ஊர்களில் இலக்கிய அமைப்புகள் உள்ளன. அவர்களால் முடிந்த அளவில் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிலர் இலக்கியத்தையும் தமிழையும் வளர்க்கிறார்கள். சிலர், தங்களைப் பற்றிய புகழை வளர்ப்பதற்காகவே அந்த அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். நெல்லுக்குப் பாயும் போது சற்றுப் புல்லுக்கும் பாய்வதுபோல் என்றொரு பழமொழி உண்டு. நெல்லுக்குப் பாய்வதுபோல் தங்களின் புகழை வளர்த்தாலும் புல்லுக்குப் பாய்வதுபோல் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் சிறுபயன் கிடைக்கத்தான் செய்கிறது.

பட்டி தொட்டி எங்கும் நாடு நகரம் எங்கும் திரை நடிகர்களுக்கான மன்றங்கள் உண்டு. ஆனால் இலக்கிய அமைப்புகள் மிகச்சிலவே உண்டு. அந்த அமைப்புகளை உண்மையான பொதுநோக்கம் கொண்டு நடத்துபவர்களில் பெரும்பாலோர் பொருளியலில் மிகவும் பின் தங்கியவர்கள். பிறரின் உதவிகளுடன்தாம் நிகழ்ச்சிகளை நடத்த முடியும். அதற்காக அவர்கள் படும்பாடுகள், பழிச்சொற்கள், அவமானங்கள், அலைக்கழிப்புகள் ஏராளம். 

அழைப்பிதழ் அச்சடிப்பு, அஞ்சல் செலவு, தட்டி விளம்பரம், ஒலிஒளி அமைப்பு, அரங்கு வாடகை, சிற்றுணவு, பேச்சாளர் ஊதியம், தங்கும் விடுதிக் கட்டணம் எனப் பல செலவுகளைச் செய்ய வேண்டும். இதற்குப் பெருந்தொகை வேண்டும். ஒவ்வொருவராய்ப் பார்த்துப் பொருள் சேர்த்து நிகழ்ச்சியை நடத்துவது என்பது போதும் போதும் என்றாகிவிடும். இதனால் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் பல இலக்கிய அமைப்புகள் மூடுவிழா கண்டுவிட்டன. மடல்கட்டு (லெட்டர்பேட்) அமைப்புகளாகச் சில உள்ளன.  உள்ளுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகளால் உடைந்து, பின் மறைந்து போன அமைப்புகள் நிறைய உண்டு.

நிகழ்ச்சியைக் குறைந்த செலவில் நடத்துபவர்களால் மட்டுமே தொடர்ந்து இயங்க முடிகிறது. திருவிழா போல் நடத்துபவர்கள், மத்தாப்பு வெளிச்சமாய் மின்னி மறைந்து விடுகிறார்கள்.

செலவு குறைவாகத் திட்டம் இடுபவர்கள், பள்ளிக்கூட அறைகளில் நண்பர்களின் வீட்டு மாடிகளில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அச்சு அழைப்பிதழ் செலவைத் தவிர்க்க, நகல் அழைப்பிதழ்களுக்கு நகர்ந்தார்கள். அஞ்சல் அட்டைகளில் எழுதி அழைத்தார்கள். செல்பேசி வழியாகக் குறுஞ்செய்தி அழைப்புக்குப் பழகினார்கள். வினவி (வாட்ஸப்) வந்த பிறகு, அதில் தொட்டச்சு செய்து அனுப்பினார்கள். தற்காலத்தில் படக்கடை (போட்டோ ஷாப்) மென்பொருள் மூலமாக அழைப்பிதழ் வடிவமைத்து அனுப்புகிறார்கள். ஆக மொத்தத்தில் அழைப்பிதழ்களுக்கான செலவும் அவற்றை அனுப்புவதற்கான செலவும் இல்லாமல் போய்விட்டன.

ஒலிஒளி அமைப்புக்காக நிறைய செலவு ஆவதைத் தவிர்க்க, சில அமைப்பினர் நன்கொடையாளர்கள் வழியாக ஒலிபெருக்கி (ஆம்ப்ளிபயர்) ஒலிக்குழல் (சவுண்ட் ஆர்ன்), ஒலிவாங்கி (மைக்) ஆகியவற்றைத் தொகுப்பாக வாங்கி வைத்து நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இதைச் சுருக்கமாக மைக்செட் என்றோ ஒலிக்கருவிகள் என்றோ நான் சொல்லி இருக்கலாம். சில தமிழ்ச்சொற்களைக் கற்றுக் கொள்ளுங்களேன் என்பதற்காகவே ஒவ்வொரு கருவியாகக் குறிப்பிட்டேன். தற்போது சிறுகூட்டம் நடத்தும் அளவுக்குக் கையடக்கமான ஒலிபரப்புப் பெட்டகம் வந்துவிட்டது. அதைச் சொந்தமாக வாங்கி வைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். ஒலிக்கருவிகள் இல்லாமலேயே நிகழ்ச்சியை உணர்வு ததும்ப நடத்துபவர்களும் உண்டு.

நிகழ்வின்  இடைப்பொழுதில் தேநீரும் மேரி மாச்சில்லுகளும் (பிஸ்கெட்டுகள்) கொடுத்து வருவது தொடர்ந்துவரும் வழக்கம். நண்பர்கள் குழாமின் உதவியோடு அந்தச் செலவைச் சரிகட்டுகிறார்கள். மேரி மாச்சில்கள் மேல் ஒரு சலிப்பு வந்துவிட்டது. எனவே ஐந்து ரூபாய் குட்டே மாச்சில் பொதியுறைகளைக் (பாக்கெட்டுகளை) கொடுக்கலாம் என்று சொல்லி வருகிறேன். சில அமைப்பினர் அதைப் பின்பற்றுகிறார்கள். சிலர் நிகழ்வின் முடிவில் பெருஞ்செலவில் விருந்து அளிக்கிறார்கள். அவர்கள் இலக்கியத்தில் மேல்தட்டினர். அவர்கள் நம்மோடு சேர மாட்டார்கள்.

இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்போரும் பல இடர்ப்பாடுகளைப் பொறுத்துக்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்து செல்கிறார்கள். அதற்காகப் பேருந்து, தானி ஆகியவற்றில் பயணம் செய்யும் செலவு, சொந்த வண்டிகள் இருந்தால் அதற்கான எரிபொருள் செலவு, உடன் அழைத்துவரும் நண்பா்களுக்கான செலவு போன்றவற்றையும் செய்ய வேண்டியதாகிறது. நீண்ட நேரம் நிகழ்ச்சி நடந்தால் பேருந்து கிடைக்காத நிலைமை. நிகழ்ச்சியை உரிய நேரத்தில் தொடங்க முடியாத நிலைமையில் காத்திருப்பு. இவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டு இலக்கிய அன்பர்கள் சிலர் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

கூட்டத்தில் கேள்வி கேட்டே பேர் வாங்கும் புலவர் திருக்கூட்டம் உண்டு. அவர்களைச் சமாளிக்க முடியாது. கூட்டத்தில் எழுந்து எதிர்வாதம் செய்வார்கள். அவை நாகரிகம் கருதி அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை.

இவ்வளவையும் கடந்துதான் இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த இடர்ப்பாடுகளுக்கு இறுதிப்புள்ளி வைப்பதற்கான ஒரு தொழில்நுட்பம் வந்துள்ளது. கரோனா தீநுண்மி காலம் வழங்கிய கொடை என்று சொல்லலாம். இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே இருந்ததுதான் என்றாலும் கரோனா காலத்தில்தான் அனைவருக்கும் அறிமுகம் ஆனது.
     
ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகள் மூலம் இலக்கியக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் அரங்கு வாடகை இல்லை. ஒலிஒளிச் செலவு இல்லை. சிற்றுணவுகள் வழங்க வேண்டியதில்லை. பேச்சாளருக்கான விடுதிக் கட்டணம் இல்லை. வருகை தருவோருக்குப் போக்குவரத்துச் செலவு இல்லை. வீட்டுக்குள் இருந்தபடியே நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முடியும். உலகின் எந்த மூலையில் இருப்போரும் பங்கேற்க முடியும். சிறப்புப் பேச்சாளர் பேசும் போது யாரும் குறுக்கிடாதவாறு கட்டுப்பாடு உண்டு. கேள்வி நேரம் ஒதுக்க முடியும். விவாதம் செய்ய முடியும்.

யாராவது மன்றவாணன்கள் இடக்கு மடக்காகக் கேள்வி கேட்டுச் சலசலப்பை ஏற்படுத்தினால், அவர்களைத் தவிர்க்கும் வழிமுறைகள் உண்டு. ஒரே நேரத்தில் பலர் கேள்வி எழுப்புவது தவிர்க்கப்பட்டு ஒவ்வொருவராகக் கேள்வி கேட்கும் வகையில் ஒருங்கிணைப்பாளரிடம் கடிவாளம் உண்டு. கூட்டத்தை ஒழுங்கமைவு செய்வதற்கு வேண்டிய அத்தனை வழிமுறைகளும் இருக்கின்றன.

இந்தக் கரோனா தீநுண்மி காலத்தில் தமிழகத்தில் பலர் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். யாரும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தலாம். உலகின் எந்த மூலையில் இருந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இந்தச் செயலிகளும் இலவசமாகவே கிடைக்கின்றன. கட்டணச் செயலிகளும் உண்டு. அவற்றை இலக்கிய மேல்தட்டினர் வேண்டுமானால் பயன்படுத்தலாம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்கூட Cisco Webex என்ற செயலி வழியாக வட்டாரத் தமிழ் என்ற பொருளில் ஏழு நாள் பயிலரங்கம் நடத்துகிறது. இனிவரும் காலங்களில் இலக்கியக் கூட்டங்கள் எல்லாம் இணைய வழியில்தான் நடக்கும். இலக்கிய நண்பர்களை நேரில் பார்த்துப் பேசுகிற மகிழ்ச்சியை இணையவழிக் கூட்டங்கள் தராது என்று எதிர்க்குரல் கேட்கும். எந்தப் புதுமையும் எந்த இலகுவான வசதியும் வருகிற போது, இதுபோன்ற குரல்கள் எழுந்து அடங்கும்.

பொதுவாக நகரத்தில் இரண்டு மூன்று கல்லூரிகள் இருக்கின்றன. பத்துப் பன்னிரண்டு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அவற்றில் தமிழ் சொல்லித் தரும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உண்டு. ஓரிருவரைத் தவிர, தமிழ் கற்பிப்போர் யாரும் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதே இல்லை. பங்கேற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். கட்டாயப்படுத்த முடியாது. ஆனாலும் தமிழாசிரியர்கள்தாம் தமிழ்வளர்ச்சிக்கு மிகவும் வேண்டியவர்கள். கல்விச் சாலையோடு நின்றுவிடாமல் பொதுச்சாலைக்கு அவர்கள் வந்தால், தமிழ் இனி மெல்ல வளரும். இனியேனும் அவர்கள் தமிழுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இல்லத்தில் இருந்தபடி இணையவழி இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பார்களா?

தமிழுக்கு அந்தக் கொடுப்பினை இருந்தால் நல்லது.

நன்றி :
திண்ணை
24-05-2020