Tuesday, 19 May 2020

திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது...
















திசைவேலிக்குள் சுழலும்
வாழ்க்கை இது... 
(Containment Zone சொல் குறித்து)
 கோ. மன்றவாணன்


கொரோனா தொற்றூழிக் காலத்தில் அச்சத்தின் பிடியில் நாம் நொறுங்குகிறோம். கொரோனாவின் அறிகுறி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். யாருக்கும் அதன் முழுமுகம் தெரியவில்லை.
ஒரு பகுதியில் கொரோனா தொற்று உள்ளோரைக் கண்டறிந்தால் அந்தப் பகுதியை Containment Zone என்று குறிப்பிடுகிறார்கள். அதைத் தடைசெய்யப்பட்ட பகுதி என்று சிலர் அழைக்கிறார்கள். அது சொல்போல் இல்லை. சொல்விளக்கம் கொண்ட சொற்றொடராக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதுவும் சொற்றொடர்தான். கட்டுப்பாட்டு மண்டலம் என்று சிலர் சொல்கிறார்கள். அகராதியின் பொருளுக்கு அச்சொல் பொருந்திதான் வருகிறது. ஆனால் ஓர் ஊரை, ஒரு தெருவை, அல்லது ஒரு சிறுபகுதியைத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் மண்டலம் என்ற சொல் இத்தகைய சிறுபகுதிக்குப் பொருந்தி வரவில்லை.
தொற்றுப் பகுதியில் உள்ளோர் வெளியில் சென்றால் நோய் பரவும் என்பதால் அவர்களைத் தடுத்து வைக்கிறார்கள். அவர்கள் வெளியேறக் கூடாது என்றும் வெளியாட்கள் உள்செல்லக் கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆக... தடுப்புச்செயலும் தடைவிதிப்பும் இருக்கின்றன. எனவே இத்தகைய பகுதியைத் தடையரண் பகுதி, தடுப்பரண் பகுதி எனக் குறிப்பிடலாம். காலப் போக்கில் பகுதி என்ற சொல்லையும் தவிர்த்துத் தடையரண், தடுப்பரண் என்றும் கூறலாம். மேலும் தடைவளாகம், தடுப்பு வளாகம், தடைவளையம், தடுப்பு வளையம் போன்ற சொற்களையும் கருத்தில் கொள்ளலாம். தடைவேலி, தடுப்பு வேலி எனச் சொல்லலாமோ என நினைத்தேன். தற்காலத்தில் அவை தோட்டம் போன்ற இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
     Containment Zone :
     தடையரண், தடுப்பரண்
     தடையரண் பகுதி, தடுப்பரண் பகுதி
     தடைவளாகம், தடுப்பு வளாகம்
     தடைவளையம், தடுப்பு வளையம்
இத்தனைச் சொற்களில் எதனைப் பயன்படுத்துவது என்பது அடுத்த வினா? தடுப்பு என்ற செயலைவிடத் தடைவிதிப்பு என்பதே இங்கே மேலோங்கி உள்ளது. அந்த அடிப்படையில் தடை என்ற முன்னொட்டு வரும் சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம். தடை என்ற முன்னொட்டுடன் பல சொற்கள் உள்ளனவே. அவற்றுள் எதைத் தேர்ந்தெடுப்பது? பலருக்குப் பல தேர்வுகள் இருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை....
தற்காலச் சூழலுக்கு ஏற்பவும் இயல்பான பயன்பாட்டுக்கு உகந்ததாகவும் பொருள்செறிவு கொண்டதாகவும் தடையரண் பகுதி என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

No comments:

Post a Comment