Wednesday, 20 May 2020

தேநீர் குடிக்க வாரீகளா...


தேநீர் குடிக்க வாரீகளா...
கோ. மன்றவாணன்

உடல் தூய்மை, உள்ளத் தூய்மை பற்றிக் காலம் காலமாகவே பலரும் சொல்லி வந்துள்ளார்கள். சொல்லியும் வருகிறார்கள். இனியும் சொல்வார்கள். இதிலிருந்து பெரும்பாலோர் தூய்மையைக் கடைப்பிடிப்பது இல்லை என்று தெரிகிறது.

தூய்மையைப் பேணுவது என்பது கடினமான ஒன்றா என்றால்... இல்லை என்பதுதான் உரிய பதில்.

தோழர்களுடன் சென்று தேநீர் அருந்துவது சமூக கவுரவங்களில் ஒன்றாகிப் போனது. அந்தக் கடைகளில் தூய்மை என்பது “சுத்தமாக” இருப்பதில்லை. ஓர் அகலப் பாத்திரத்தில் இருக்கும் கொஞ்சம் நீரிலேயே எல்லா எச்சில் குவளைகளையும் கழுவார்கள். அதுவும் ஒழுங்காகக் கழுவ மாட்டார்கள். அப்படியே தண்ணீரில் முக்கி எடுப்பார்கள். தண்ணீரை மாற்ற மாட்டார்கள். அந்த நீர் பழுப்பு நிறமாகவே இருக்கும். அப்படியே இந்நிலை நீடித்தால் அந்த நீரும் தேநீர் நிறத்துக்கு மாறிவிடும். அப்போதாவது தண்ணீர் மாற்றும் எண்ணம் அவர்களுக்கு எழுமோ... என்னவோ? அந்தத் தண்ணீரையே சுடவைத்துக் கொடுத்தாலும் நாமும் குடித்தபடி நாட்டு நடப்புகளைப் பேசுவோம். தேநீர் நினைப்பைவிட தேச நினைப்பே நம்மில் விஞ்சி நிற்கிறது என்பதை நிலைநாட்டப்  பட்டிமன்றம் தேவையில்லை.

கடை நடத்தும் புண்ணியவான்கள் சிலர், அவ்வப்போது தண்ணீர் மாற்றுவார்கள். தண்ணீர் மாற்றிய அதே தருணத்தில் கழுவப்பட்ட குவளையில் தேநீர் அருந்தும் வாய்ப்பு எப்போதாவது கிடைக்கலாம். அப்படிக் கிடைத்துவிட்டால் அது ஆண்டவனின் பேரருள்தான்.

சில கடைகளில் மட்டுமே குவளைகளில் வெந்நீர் ஊற்றுவார்கள். ”ஏதாவது வைரஸ் கெய்ரஸ் இருந்தால் சுடுநீரில் செத்துவிடும் என்று நம்பித் தூய மகிழ்வுடன் தேநீர் பருகுவோர் உண்டு. ஆனால் அரைக்குவளை வெந்நீரை வரிசைப்படுத்தப்பட்ட 20 குவளைகளில் கண்இமைக்கும் நேரத்தில் சிந்திவிட்டுப் போவார்கள். கடைசிக் குவளையில் சிலவேளை வெந்நீர்த் துளி விழாமலும் போகும். ஆக... முழுக் குவளையிலும் படுமாறு எந்தத் தேநீர்க் கடையிலும் வெந்நீர் ஊற்றுவதில்லை. அதுபோன்ற நேரங்களில் சுடச்சுடக் கிடைக்கும் தேநீரில் எந்த வைரசும் செத்துவிடும் என்ற நம்பிக்கை,  துளியாவது துளிர்க்கத்தான் செய்கிறது. முக்கால் பங்குக் கடைகளில் வெந்நீரே வைத்திருப்பதில்லை.

சாலை ஓரங்களில் இருக்கும் இத்தகைய தேநீர்க் கடைகளில் திறந்த படியேதான் பால் பாத்திரங்கள் இருக்கும். பலத்த இரைச்சலோடு பாய்ந்து செல்லும் மோட்டார் வாகனங்களின் புகையும் புழுதி மண்ணும் தூசும் மாசும் பால் பாத்திரங்களில் படிந்தபடியே இருக்கும்.

தேநீரைக் கால்பங்கு குடித்துவிட்டு, “சர்க்கரை பத்தல. இன்னும் கொஞ்சம் போடுங்க” என்று குவளையை நீட்டுவோர் நம்மில் பலருண்டு. அப்போது டீ மாஸ்டர் சிறுகரண்டியில் சர்க்கரையை அள்ளி, அந்த எச்சில் குவளையில் விட்டுக் கலக்குவார். அந்தக் கரண்டியை அப்படியே ஏற்கனவே சொன்ன அழுக்கு நீரில் முக்கி, மீண்டும் சர்க்கரைக் கிண்ணத்தில் செருகி விடுவார். சில சமயங்களில் அந்தக் கரண்டியை அழுக்குக் கைலியில் துடைத்துப் போடுவார். இன்னும் சில சமயங்களில் எச்சில் குவளையில் சுழற்றிய கரண்டியைத் துடைக்காமலும் கழுவாமலும் அப்படியே சர்க்கரையில் குத்தி நிறுத்துவார். “எச்சில் எல்லாம் கலக்குது அது சமத்துவத்தை வளர்க்குது” என்று பாட்டுப் பாடினாலும் வியப்பதற்கு இல்லை.

தேயிலைத் தூளைத் துணிவடிகட்டியில் போடும்போது  வாயைக் குவித்து ஊதுவார்கள். தேநீர் போடும் தோழர் புகை பிடிப்பவராக இருக்கலாம். பான்பராக் போடுபவராக இருக்கலாம். வேறு நோய்ப்பிரச்சனைகள் உள்ளவராகவும் இருக்கலாம்.

பக்கத்தில் இருப்பவர்களிடம் உரக்கப் பேசியபடியே தேநீ்ரைச் சர்சர்ரென்று ஆற்றுவார்கள். அவ்வாறு பேசுகையில் தெறிக்கும் எச்சில் துளிகள்  தேநீரில் விழலாம்.

நம் முன்பே விரல்களால் குட்காத் தூளை எடுத்து எச்சில் படப்பட நாக்கு அடியில் வைத்துக்கொள்வார்கள். அந்தக் கையைக் கழுவாமல் ஸ்டார்ங் டீ போட்டுத் தருவார்கள்.

மாதக் கணக்கில் அழுக்குச் சேர்ந்த கைலியில் கையைத் துடைத்துவிட்டுக் குவளையின் பக்கவாட்டில் சிதறிய தேநீரை அதே கையால் ஸ்டைலாகத் துடைத்து வேகமாக நம்மிடம் நீட்டுவார்கள். அந்தக் கைகளில் என்ன என்ன காயங்களோ? என்ன என்ன மாயங்களோ?

சில கடைகளில் குவளையில் முதலில் பாலை ஊற்றிவிட்டுப் பிறகு சாயத்தை ஊற்றுவார்கள். அப்படிப் பாலை ஊற்றும்போது பால்குவளையில் அடிக்கடி ஊதுவார்கள். ஏடு அகற்றும் ஏற்பாடுதான் அது. ஏடு அகலுமோ கேடு நிகழுமோ யாரறிவார்? ஆனால் சூட்டில் நுண்ணுயிரிகள் செத்துவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் நாம் இருக்கிறோமே!

தேநீர்க் கடையின் பத்துக்குப் பத்து அறையில் பத்துக்கும் மேற்பட்டோர் நின்றும் அமர்ந்தும் தேநீர் பருகுவார்கள். அங்கே யாரும் யாரையும் இடிக்காமல் இருக்கவே முடியாது. அவர்களில் பெரும்பாலோர் வெண்சுருட்டை விரல்இடுக்கில் பிடித்தபடி ஆவேசமாக அரசியல் பேசுவார்கள். வெண்சுருட்டின் சாம்பல் துகள்கள் பறந்துபோய், அருகில் இருப்போரின் தேநீரில் கலந்து புதுச்சுவை சேர்க்கும். அவர்களில் பலர் அடிக்கடி தும்மியும் இருமியும் கொண்டிருப்பார்கள். சிகரெட் நெடிகளால் பிறருக்கும் தும்மலும் இருமலும் தொற்றிக்கொள்ளும். அந்தத் தும்மலின் இருமலின் துணையோடுதான் கரோனா தீநுண்மி தன் சாம்ராஜ்யத்தை உலகெங்கும் விரிவு செய்துகொண்டிருக்கிறது. அங்கே எல்லா நேரமும் புகைமணம் கமழ்ந்துகொண்டே இருக்கும். அதில் நுழைந்து வரும் ஆஸ்துமா நோயினருக்கு அன்றைய நாளில் நுரையீரலில் இலவச இசைக்கச்சேரி நடக்கும்.

அந்தக் கடைகளில் அலறும் ஸ்பீக்கரின் ஒலியை மீறிக் கடும் வாக்கு வாதங்களில் ஈடுபடுவார்கள். அந்தப் பேச்சுகளில் இருந்து தெறிக்கும் உமிழ்நீர்த் துளிகள் தேநீரிலும் விழும். தேகங்களிலும் படியும்.  சிலர் அங்கேயே சளியைச் சிந்திச் சுண்டிவிடுவார்கள். அல்லது சுவரிலோ அங்குள்ள நாள்காட்டியிலோ அல்லது ஏதேனும் பொருளிலோ அனிச்சைச் செயலாகத் தேய்ப்பார்கள். அடுத்த சில நொடிகளில் அந்த இடங்களில் பிறர் கைவைத்துச் சளியை அப்பிக்கொண்டு செல்வார்கள். சிலர் அடிக்கடி எச்சில் துப்பும் வழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களிடத்தில் பார்த்து நடந்துகொள்ளுங்கள் “மக்கழே...”

சிலர் பெஞ்சு மேலே தேநீர்க் குவளையைத் தள்ளிவிட்டுத் துடைக்காமல் போவார்கள். அடுத்து வரும் வெள்ளை வேட்டி அண்ணாச்சி அந்தப் பெஞ்சில் அமர்ந்து, “காவி”ய நாயகனாய்த் திரும்பிச் செல்வார். 
 
தேநீர்க் கடைகளில் சுடச்சுட பஜ்ஜி போட்டுத் தருவார்கள். எண்ணெய் சுரக்கச் சுரக்க வரும் அந்த பஜ்ஜிகளை நாளிதழ்த் தாள்களில் சுருட்டித் தருவார்கள். அந்தத் தாள்களில் உள்ள அச்சு மைகளில் பஜ்ஜியைப் புரட்டிச் சாப்பிடுவார்கள். மையில் உள்ள வேதியியல் பொருட்கள் நம் குடலுக்குள் உடலுக்குள் வேகமாகப் பயணித்து சோகமான விளைவைத் தரும்.

இவ்வளவையும் சகித்துக்கொண்டு எப்படி நாள்தோறும் தேநீர் அருந்துகிறார்கள் என்றா கேட்கிறீர்கள்? கரோனாவோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று அரசே சொல்கிறது அல்லவா? அதுபோல்தான் தேநீர்க் கடையின் சூழலோடு வாழப் பழகிக்கொண்டார்கள்.

கடைசியில் நூறு ரூபாய்த் தாளையோ ஐநூறு ரூபாய்த் தாளையோ கடையின் கல்லாவில் இருப்பவரிடம் கொடுப்போம். அவர் அதை வாங்கிப் போட்டுக்கொண்டு, பத்து ரூபாய்த் தாள்களைப் பொறுக்கிக் கையில் அடுக்கிக்கொண்டு எச்சில் தொட்டுத் தொட்டு எண்ணி மீதிப்பணம் தருவார்.

வாங்க ஸார்... டீ சாப்பிடலாம்.

நன்றி :
திண்ணை
17-05-2020

Tuesday, 19 May 2020

கரோனா தீநுண்மி சொல்லித் தந்த தமிழ்


நன்றி :
தினமணி
15-05-2020

திசைவேலிக்குள் சுழலும் வாழ்க்கை இது...
















திசைவேலிக்குள் சுழலும்
வாழ்க்கை இது... 
(Containment Zone சொல் குறித்து)
 கோ. மன்றவாணன்


கொரோனா தொற்றூழிக் காலத்தில் அச்சத்தின் பிடியில் நாம் நொறுங்குகிறோம். கொரோனாவின் அறிகுறி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று சொல்கிறார்கள். யாருக்கும் அதன் முழுமுகம் தெரியவில்லை.
ஒரு பகுதியில் கொரோனா தொற்று உள்ளோரைக் கண்டறிந்தால் அந்தப் பகுதியை Containment Zone என்று குறிப்பிடுகிறார்கள். அதைத் தடைசெய்யப்பட்ட பகுதி என்று சிலர் அழைக்கிறார்கள். அது சொல்போல் இல்லை. சொல்விளக்கம் கொண்ட சொற்றொடராக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று சில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதுவும் சொற்றொடர்தான். கட்டுப்பாட்டு மண்டலம் என்று சிலர் சொல்கிறார்கள். அகராதியின் பொருளுக்கு அச்சொல் பொருந்திதான் வருகிறது. ஆனால் ஓர் ஊரை, ஒரு தெருவை, அல்லது ஒரு சிறுபகுதியைத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் மண்டலம் என்ற சொல் இத்தகைய சிறுபகுதிக்குப் பொருந்தி வரவில்லை.
தொற்றுப் பகுதியில் உள்ளோர் வெளியில் சென்றால் நோய் பரவும் என்பதால் அவர்களைத் தடுத்து வைக்கிறார்கள். அவர்கள் வெளியேறக் கூடாது என்றும் வெளியாட்கள் உள்செல்லக் கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆக... தடுப்புச்செயலும் தடைவிதிப்பும் இருக்கின்றன. எனவே இத்தகைய பகுதியைத் தடையரண் பகுதி, தடுப்பரண் பகுதி எனக் குறிப்பிடலாம். காலப் போக்கில் பகுதி என்ற சொல்லையும் தவிர்த்துத் தடையரண், தடுப்பரண் என்றும் கூறலாம். மேலும் தடைவளாகம், தடுப்பு வளாகம், தடைவளையம், தடுப்பு வளையம் போன்ற சொற்களையும் கருத்தில் கொள்ளலாம். தடைவேலி, தடுப்பு வேலி எனச் சொல்லலாமோ என நினைத்தேன். தற்காலத்தில் அவை தோட்டம் போன்ற இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
     Containment Zone :
     தடையரண், தடுப்பரண்
     தடையரண் பகுதி, தடுப்பரண் பகுதி
     தடைவளாகம், தடுப்பு வளாகம்
     தடைவளையம், தடுப்பு வளையம்
இத்தனைச் சொற்களில் எதனைப் பயன்படுத்துவது என்பது அடுத்த வினா? தடுப்பு என்ற செயலைவிடத் தடைவிதிப்பு என்பதே இங்கே மேலோங்கி உள்ளது. அந்த அடிப்படையில் தடை என்ற முன்னொட்டு வரும் சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம். தடை என்ற முன்னொட்டுடன் பல சொற்கள் உள்ளனவே. அவற்றுள் எதைத் தேர்ந்தெடுப்பது? பலருக்குப் பல தேர்வுகள் இருக்கலாம்.
என்னைப் பொறுத்தவரை....
தற்காலச் சூழலுக்கு ஏற்பவும் இயல்பான பயன்பாட்டுக்கு உகந்ததாகவும் பொருள்செறிவு கொண்டதாகவும் தடையரண் பகுதி என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

Wednesday, 13 May 2020

கொரோனா சொல்லித் தந்த தமிழ்



கொரோனா
சொல்லித் தந்த தமிழ்

கோ. மன்றவாணன்

கொரோனா நோய்நுண்மியின் கோரத் தாண்டவத்தில் மிதிபட்டு நசுங்குகிறது இந்த உலகப் பந்து. இந்த நோய்பரவும் காலக் கட்டத்தில் Quarantine, Isolation போன்ற சொற்கள் ஊடகங்களில் அடிக்கடி ஒலிக்கின்றன. இந்தப் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்கள் என்ன என என்னிடம் கேட்டார் தோழி ஒருவர்.

தமிழ் ஊடகங்களில் அச்சொற்களுக்குத் தனிமைப்படுத்தல் என்று தமிழ்படுத்தி உள்ளனர். இது போதுமான பொருளைத் தருகிறது. என்றாலும் தனிமைப்படுத்தல் என்ற சொல் வேறு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுத் தனிமை என்பதில் தனிமை பொருந்தாது. சுற்றிலும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள். தொற்றுநோய் பரவும் காலத்தில் குறிக்கப்படும் கலைச்சொற்களுக்கு உரிய தமிழ்ச்சொற்களைக் கண்டறியலாம். தமிழின் சொல்வங்கிக்கு உதவலாம்.

Quarantine என்ற சொல் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகிவிட்டது. இச்சொல் பிரஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்தது. பிரஞ்சு எழுத்தொலிப்போடும் இலத்தீன் வேரோடும் இத்தாலிய பொருளோடும்  இச்சொல் ஆங்கிலத்தில் ஆளப்படுகிறது. 1600 வாக்கில் பிளேக் நோய் பரவலின் போது, மனிதர்களையும் சரக்குகளையும் ஏற்றிவந்த கப்பல்களை 40 நாட்களுக்கு ஒதுக்கி வைப்பதற்கு இச்சொல் பயன்பட்டது. இச்சொல்லின் தொடக்கக் காலப் பொருளே நாற்பது நாள்கள் என்பதே ஆகும்.

Isolation என்ற சொல்லின் இலத்தீன் வேர் Insula ஆகும். அதிலிருந்து Island உருவானது. அதன்பொருள் தீவு ஆகும். அந்த Island என்ற சொல்லில் இருந்தே Isolation என்ற சொல் உருவானது.

இந்த இரு சொற்களுக்கும் பொதுவான பொருள் தனிமைப்படுத்தல்தான். கால மாற்றங்களில் பலவகைச் சூழல்களுக்குப் பொருந்துமாறும் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வப்போது சில பொருள்மாற்றங்களையும் அடைந்தன. இன்றைய கொரோனா காலத்துக்கு ஏற்பவே இச்சொற்களுக்குத் தமிழ்ச்சொற்கள்  கண்டறிய வேண்டும்.

ஆங்கிலத்திலும் Quarantine, Isolation ஆகிய இருசொற்களையும் ஒன்றுபோல் பயன்படுத்துவது உள்ளது. ஆனால் இந்த இருசொற்களுக்கும் இடையே சின்ன வேறுபாடு இருக்கிறது என்பதைச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Quarantine என்பது அறிகுறி ஏதும் இல்லை என்றாலும்... நோய்த்தொற்று இருக்கலாம் என ஐயத்திற்கு உரியோரின் வெளிநடமாட்டத்தைத் தடுத்துத் தனிஇடத்தில் வைத்துக் கண்காணிப்பதைக் குறிக்கும். Quarantine என்பதை ஒதுக்கரண், ஒதுக்ககம், ஒதுக்கம்,  தனித்தொதுக்கம் ஆகிய சொற்களால் குறிக்கலாம். Self Quarantine என்பதைத் தன்னொதுக்கம் எனலாம். தனிமை, தனிமைப்படுத்தல் என்ற சொற்களைவிட, ஒதுக்கம், ஒதுக்கிவைப்பு போன்ற சொற்கள் பொருள்செறிவு மிக்கவை.

எடுத்துக் காட்டுகள் :

பிற மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் தனித்தொதுக்கம் செய்யப்பட்டனர்.

இன்று கப்பலில் வந்தவர்களை ஒதுக்ககத்தில் வைத்துக் காண்காணிக்கின்றனர். ஒதுக்கரணில் 1252 பேர்  உள்ளனர்.

அண்மையில் வெளிநாட்டில் பயணம் செய்து திரும்பிய புகழ்பெற்ற
நடிகர் தன்னைத் தன்னொதுக்கம் செய்துகொண்டார்.

Isolation என்பது நோய்த்தொற்று அறிகுறிகள் உள்ளோரைத் தனிமைப்படுத்தி, அவர்களால் பிறருக்கு நோய்பரவாமல் தடுப்பது ஆகும். இந்தச் செயலுக்குத் தொற்றொதுக்கம் என்று சொல்லலாம். தொற்றரண் என்றும் சொல்லலாம்.

எடுத்துக் காட்டுகள் :

கொரோனா அறிகுறிகளுடன் வந்த ஐந்து பேர் தொற்றொதுக்கம்      செய்யப்பட்டனர். 

நோய் அறிகுறிகளுடன் வந்த வெளிநாட்டினரைத் தொற்றரணில்     வைத்துக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்று தொற்றொதுக்கப் பிரிவில் நான்குபேர் அனுமதிக்கப்பட்டனர்.

கலைச்சொல் வடிவில் பார்க்கும்போது Quarantine என்பதற்கு ஒதுக்கரண் என்றும்- Isolation என்பதற்குத் தொற்றரண் என்றும் குறிப்பிடுவதில் சொல்நேர்த்தி உள்ளது. ஆனால் புழக்கத்துக்கு வருமா?

2

Respirator என்பது முகக்கவசம் போன்ற ஒன்றுதான். நாம் மூச்சு இழுக்கும் போது நோய்நுண்ணிகளை வடிகட்டித் தூய காற்றை உள்ளனுப்பும் ஒரு காப்புப் பொருளாகும். எனவே ரெசிபிரேட்டரை மூச்சுக்காப்பு என்றோ மூச்சு வடிகட்டி என்றோ சொல்லலாம்.

Ventilator என்பது நுரையீரலுக்குள் உயிர்க்காற்றை உள்செலுத்தி, கரிக்காற்றை ஒருகுழல் வழியாக வெளியேற்ற உதவும் கருவி ஆகும். எனவே வெண்டிலேட்டரை மூச்சியக்கி என்று உரைக்கலாம்.

3

Outbreak என்ற சொல், ஒரு தொற்று நோய் திடீரென வெடித்துப் பரவுதைக் குறிப்பதாகும். இதை தொற்று வெடிப்பு என்றோ வெடித்தொற்று என்றோ தொற்றெழுச்சி என்றோ சொல்லலாம்.

Epidemic / Epidemic Disease என்பது... ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் வேகமாகப் பரவும் தொற்று நோயைக் குறிப்பதாகும். அகராதியில் உள்ள விளக்கங்களை உள்வாங்கி இச்சொல்லை அப்படியே தமிழ்ப்படுத்தினால் வெகுபரவல் நோய் என்றாகும். கலைச்சொல் முறையில் தமிழாக்கினால் Epidemic என்பதைத் தொற்றலை எனலாம். Epidemic Disease என்பதைத்  தொற்றலை நோய் எனலாம். மக்கள் வழக்கில் கொள்ளைநோய் என்ற பொருத்தமான சொல் உள்ளது.

Pandemic / Pandemic Disease என்பது... திடீரெனத் தொற்று வெடித்து, நாடு முழுவதுமோ உலகம் முழுவதுமோ மிகுவேகமாகப் பரவுவதைக் குறிக்கும். அகராதியில் உள்ள விளக்கங்களை உள்வாங்கி இச்சொல்லை அப்படியே தமிழ்ப்படுத்தினால் மிகுபரவல் நோய் என்றாகும். கலைச்சொல் முறையில் தமிழாக்கினால் Pandemic என்பதைத் தொற்றூழி எனலாம். Pandemic Disease என்பதைத் தொற்றூழி நோய் எனலாம். மக்கள் பேசுமுறையில் பெருங்கொள்ளை நோய் என்று சொல்லலாம். ஆங்கிலச் சொற்களில் இருக்கும் ஓசை நயம்போன்றே இந்தத் தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட்டன.

இத்தனைச் சொற்களில் எதனை முடிவாகக் கொள்வது என்று நீங்கள் கேட்கக் கூடும். கடந்த நூற்றாண்டுகளில் Epidemic Disease என்பதை கொள்ளைநோய் என்று சொல்லி உள்ளனர். இச்சொல் எளிதாகவும் உள்ளது. ஏற்கனவே பயன்பாட்டிலும் இருக்கிறது. எனவே Epidemic Disease என்பதைக் கொள்ளை நோய் என்றே குறிக்கலாம். அதன் அடியொற்றி Pandemic Disease என்பதைப் பெருங்கொள்ளை நோய் என்று கூறலாம். Epidemic Diseases Act என்பதைக் கொள்ளை நோய்கள் சட்டம் என்று அழைக்கலாம்.

4

Personal Protective Equipments (PPE) கொரோனா தொற்றாளர்களுக்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்கள, செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் யாவரும் PPE அணிய வேண்டும். இந்த பிபிஇ என்ற தொகுப்பில் தலையுறை, கண்ணாடி, முகக்காப்பு, மூச்சுக்காப்பு, காலுறை, உடலுறை ஆகியவை அடங்கி இருக்கும். இவற்றை மொத்தமாக இணைத்து ஆங்கிலத்தில் PPE Kit என்கிறார்கள். நாம் இதனை உடல் காப்பு என்றோ மெய்மறை என்றோ சொல்லலாம். இங்கே குறிப்பிடும் மெய்மறை என்ற சொல் பதிற்றுப்பத்து என்ற பழங்காலத் தமிழிலக்கியத்தில் இடம்பெற்ற சொல்தான். மெய்மறை என்பதற்குத் தமிழ்ப்பேரகராதியில் மெய்புகும் கருவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக பிபிஇ கிட் என்பதை உடல்காப்பு, உடல்கவசம், மெய்மறை ஆகிய சொற்களால் குறிப்பிடலாம்.

5

கொரோனா பரவலின் மூன்றாம் கட்டத்தை Community Spread என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். அதற்குத் தற்போது புழக்கத்தில் உள்ள சமூகப் பரவல் என்ற சொல்லே சரியானதுதான்.

ஒருவருக்குக் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர் எங்கு எங்கு சென்றார்.... யார்யாரை எல்லாம் தொடர்புகொண்டார் என்பதை அறிந்து அவர்கள் அனைவரையும் தனித்தொதுக்கம் செய்வதன் மூலம் நோய்பரவல் சங்கிலியைத் துண்டிக்கிறார்கள். அவ்வாறான தொடர்புகளைக் கண்டறிவதற்கு Contact tracing என்கிறார்கள். அதனைத் தமிழில் தொடர்புத்தடம் அறிதல் எனச் சொல்லலாம். தொடர்பாய்வு எனவும்  சொல்லலாம்.

கொரோனா நோய்க்கு மருந்தில்லை என்பதால் அது வராமல் தடுத்துக்கொள்ள Social Distance கடைப்பிடிக்க வேண்டும் என்பது கட்டாயம். இதனைச் சமூக இடைவெளி என்று அழைக்கிறோம். சிலர் சமூக விலகல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். யாரும் சமூகத்திலிருந்து விலகிவிட முடியாது என்பதால் சமூக விலகல் என்ற சொல் சரியன்று. சிலர் மனித இடைவெளி என்ற சொல்லைப் பரிந்துரைக்கிறார்கள். சமூகத் தொடர்பாடல்கள் பல உள்ளன. அவற்றுள் சிலவற்றைத் தவிர்ப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் இச்சொல் பயன்படுகிறது. மனிதன் சமூகத் தொடர்போடுதான் வாழ்ந்தாக வேண்டும். அந்த வகையில் சமூக இடைவெளி என்ற சொல்லே பொருத்தமானது.  சமூகம் என்பது தமிழில்லை எனும் சிலர், குமுகம் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் வேண்டுமானால் குமுக இடைவெளி, குமுகப் பரவல் எனப் பயன்படுத்தட்டுமே. அதுவும் தமிழ்நலம் காக்கும் செயல்தானே.

Ouarantine
Isolation
ஒதுக்கரண்
தொற்றரண்
தனித்தொதுக்கம்
தொற்றொதுக்கம்
ஒதுக்ககம்

Self Quarantine : தன்னொதுக்கம்

Home Quarantine : வீட்டு ஒதுக்கம்



Epidemic
Pandemic
தொற்றலை
தொற்றூழி
வெகுபரவல் நோய்
மிகுபரவல் நோய்
கொள்ளைநோய்
பெருங்கொள்ளை நோய்

Outbreak : தொற்றெழுச்சி / வெடித்தொற்று / தொற்று வெடிப்பு

Containment Zone :   
தடையரண், / தடுப்பரண், 
தடையரன் பகுதி, / தடுப்பரண் பகுதி                              தடைவளாகம், தடுப்பு வளாகம்,                                   தடைவளையம், தடுப்பு வளையம்

Respirator : மூச்சுக் காப்பு / மூச்சு வடிகட்டி
Ventilator : மூச்சியக்கி
Personal Protective Equipments (PPE) : உடல்காப்பு / உடல்கவசம் / மெய்மறை
Face Mask : முகக்காப்பு / முகக்கவசம்
Contact Tracing : தொடர்பாய்வு / தொடர்புத்தடம் அறிதல்
Community Spread : சமூகப் பரவல் / குமுகப் பரவல்
Contact Tracing : தொடர்புத்தடம் அறிதல்
Social Distance : சமூக இடைவெளி / குமுக இடைவெளி

“ஒரு குண்டூசியைக் கூடக் கண்டுபிடிக்க மாட்டீங்க... எவனோ கண்டுபிடிச்சு வைச்சா பேர மட்டும் தமிழ்ல மாத்தீங்குவீங்க...” என்று என்னை இடித்துரைத்துவிட்டுச் சமையல் அறைக்குச் சென்றார் என் மனைவி. கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் சில காய்கறிகள் இல்லை. சில மளிகைப்பொருட்கள் இல்லை. இருந்த பொருட்களைக் கொண்டு புதுமையாக அவர் செய்த ஒரு பலகாரத்தை எடுத்துவந்து கொடுத்தார். அதைச் சாப்பிட முயன்ற போது என்னைத் தடுத்து... “இந்தப் பலகாரத்துக்குத் தமிழ்ப்பேர சொல்லிட்டு அப்புறம் சாப்பிடுங்க” என்று கட்டளை இட்டார். இரண்டு நாளாக அந்தப் பலகாரம் அப்படியே இருந்து ஊசிப்போய்விட்டது.

நன்றி :
திண்ணை, 03-05-2020




Monday, 4 May 2020

இனி, துயரீடு கேட்டுப் போராடலாம்...


இனி,

துயரீடு கேட்டுப் போராடலாம்....

கோ. மன்றவாணன்

வழக்கம் போலவே வளவ. துரையன் அய்யா அவர்கள் ஒரு பதிவை அனுப்பி இருந்தார். அதில் நிவாரணம் என்ற சொல்லின் தற்காலப் பயன்பாடு தவறானது என்று கிருஷ்ணசாமி தியாகராசன் என்பவர் எழுதி இருந்தார். “நிவாரணம் என்றால் அழித்தல் என்று பொருள். நிவாரணம் வேண்டும் என்றால் அழிக்கச் சொல்கிறோம் என்றாகும்.  இடைக்கால நிவாரணம் என்றால் இடைக்கால அழிப்பு.” என்றவாறு அவர் விளக்கம் அளித்திருந்தார். அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான்.

நிவாரணம் என்பது சமஸ்கிருதச் சொல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நிவர்த்தி / நிவிர்த்தி என்ற சொல்லும் நிவாரணம் என்பதற்கான பொருளையே உள்ளடக்கி உள்ளது. இச்சொல்லும் சமஸ்கிருதச் சொல்தான்.

வலிநிவாரணம் என்றல் வலிநீக்கம் என்று பொருள்கொள்ளப்படுகிறது. அதற்கான மருந்தை வலிநிவாரணி என்கிறோம். தமிழில் வலிநீக்கி என எழுதுகிறோம். கஷ்ட நிவாரணம் என்றால் கஷ்டத்தை அழிப்பது அல்லது நீக்குவது என்பதாகும் புயல் நிவாரணம், வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் என்றால் புயலை அழிப்பது... வெள்ளத்தை அழிப்பது... வறட்சியை அழிப்பது என்பனவாகவே பொருளாகும்.

கடந்த காலங்களில் கஷ்ட நிவாரணம் என்று பேசப்பட்டது. அது சரியான பயன்பாடுதான். அதன் சுருங்கிய வடிவமாக நிவாரணம் என்ற சொல் இன்று நிலைத்துவிட்டது. அதனால்  நிவாரணம் என்ற சொல்லின் தற்காலப் பயன்பாடுகளில் பொருள்பிழைகள் உண்டாயின.. ஆனால் நிவிர்த்தி என்ற சொல் அதன் விடுபாடு, அழிப்பு என்ற பொருள் உணர்த்தலில் இருந்து மாறுபடவில்லை.

புயல் கஷ்ட நிவாரணம் என்றால் புயல் துயரிலிருந்து விடுபடல் என்றோ புயல்துயர் அழிப்பு என்றோ அச்சொற்கள் ஒன்றிணைந்து சரியாகப் பொருள் உணர்த்தும். நிவாரணம் மற்றும் நிவர்த்தி ஆகிய சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொல் Relief என்பதாகச் சுட்டப்படுகிறது. இந்த ரிலீஃப் என்ற சொல்லுக்கு இணையாகவே சமஸ்கிருதத்தில் ஆபத்சகாயம், உபஷாமா, மோஜனம் போன்ற சொற்களும் உள்ளன.

மேலும் பரிகாரம், பிராயச்சித்தம் போன்ற சொற்களும் தமிழில் ஆளப்படும் சமஸ்கிருதச் சொற்கள். பரிகாரம் என்ற சொல் கிட்டதட்ட ரிலீஃப் என்ற சொல்லுக்கு இணையாகச் சிலர் பயன்படுத்துகின்றனர். நீதிமன்ற வழக்குரைகளில் கோரப்படும் ரிலீஃப்  என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் பரிகாரம் என எழுதுகின்ற போக்கு நீதிமன்றங்களில் தற்போதும் உண்டு. பிராயச்சித்தம் என்ற சொல்லையும் அதே பொருளில் பேசுகின்றவர்கள் உண்டு. பிராயச் சித்தம் என்ற சொல், தற்போதைய பயன்பாட்டில் உள்ள நிவாரணம் என்ற சொல்லுக்கு இணையானது இல்லை. பரிகாரம், பிராயச்சித்தம், நிவாரணம் ஆகிய சொற்களுக்கு இடையில் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. 

பேச்சு வழக்கில் இருக்கிற எந்த மொழியிலும் ஒருசொல், சூழலுக்கு ஏற்ப பலபொருள்களை வெளிப்படுத்துவது இயற்கையாகவே நிகழ்வதுதான். அந்த வகையில் கஷ்ட நிவாரணம் என்பது... நிவாரணம் என்ற ஒற்றைச்சொல்லாகிப் பயன்பாட்டில் உள்ளது. முற்காலத்தில் ஒரு பொருளும் தற்காலத்தில் வேறு பொருளும் கொண்ட சொற்கள் தமிழில் உண்டு. நாற்றம் என்ற சொல் அப்படிப்பட்டதுதான் அதுபோல் நிவாரணம் என்ற சொல்லின் இன்றைய பயன்பாட்டை ஏற்கலாம் என வாதிடலாம். இதற்கு வழுவமைதி என இலக்கணமும் சொல்லலாம்.

இந்த நிவாரணம் என்ற சொல்லைத் துயர்துடைப்பு என்றும் துயர்தணிப்பு என்றும் துயர்தடுப்பு என்றும் தமிழாக்கம் செய்து பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. நிவாரண நிதியைத் துயர்துடைப்பு நிதி என்று சொல்வது உண்டு. வறட்சிகாலத் துயர்துடைப்பு உதவிகளை அரசு செய்து வருகிறது எனவும் சொற்றொடர் அமைக்கப்படுகிறது.

தற்காலத்தில் அரசிடத்தில் நிவாரணம் கொடு என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். நிவாரணம் எனும்சொல் தற்போது அழித்தல் நீக்கல் என்ற அதன் பொருள்களை இழந்துள்ளது. அச்சொல், உதவிகள் என்ற பொருளில் ஆளப்படுகிறது. இப்படிப் பயன்படுத்துவது தவறுதான் என்பதில் சிலர் உறுதியாக உள்ளனர். சரியாகவும் அச்சொல்லைப் பயன்படுத்த முடியும். வறட்சித்துயர் நிவாரண உதவிகளை வழங்குங்கள். தொற்றுநோய்க் காலத் துயர் நிவாரண உதவிகளைத் தாருங்கள் என்று பயன்படுத்தினால் நிவாரணம் என்ற சொல் தவறான பொருளைத் தரவில்லை. ஆனால் தற்போதைய ஊடகங்களில் உள்ளவர்கள் இதைப் பொருட்படுத்த மாட்டார்கள்.

நிவாரணம் என்ற வடசொல்லைத் தவறாகப் பயன்படுத்துவதைவிட அதற்குண்டான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவதே சிறந்ததாகும். அந்த வகையில் நிவாரணம் என்ற சொல்லின் தற்காலப் பொருள்மாறுதலுக்கு உட்பட்டு... துயருதவி, இடருதவி எனச்சொல்லாம். இவை பேசுவதற்கு எளிதாகவும் இருக்கின்றன. இவை இருக்க... இன்னும் பொருள்செறிவு மிகுந்த வேறு தமிழ்ச்சொல்லைக் கண்டறியலாம். அதற்குத் துணைபுரியும் வகையில் சில தமிழ்ச்சொற்களைக் காணலாம்.

நஷ்டஈடு :
உயிரிழப்பு, பொருளிழப்பு போன்றவற்றுக்குப் பணத்தால் ஈடுசெய்வதை இழப்பீடு என்கிறோம். முன்பு நஷ்டஈடு என்ற சொல்லைப் பயன்படுத்தினோம்.  தற்போது தமிழ்த்தூய்மை கருதி இழப்பீடு என்று சொல்கிறோம்.

பிராயச்சித்தம் :
ஒருவர் மற்றவருக்கு ஒருபிழையைச் செய்துவிட்டுப் பின்னர் வருந்தி அதற்கு ஈடு செய்வதே பிராயச்சித்தம் எனப்படுகிறது. இதற்கு ஏற்கனவே கழுவாய் என்ற தமிழ்ச்சொல் உண்டு. பிராயச்சித்தம் என்ற சொல்லுக்குப் பிழையீடு என்ற அழகிய சொல்லை எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறார். இழப்பீடு என்ற சொல்லின் அடிப்படையில்தான் அவர் பிழையீடு என்ற சொல்லை உருவாக்கி இருக்கிறார் என்பது தெளிவு.

பரிகாரம் :
ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய உரிமைக்கு / பாதிப்புக்குச் சரியாக ஈடு செய்வதே பரிகாரம் ஆகும். பரிகாரம் என்பதற்குச் சரியீடு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். நீதிமன்ற வழக்குரையில் ரிலீஃப் என்பதற்குச் சரியீடு என்ற சொல் பொருந்தும். (சட்டத்தமிழ் அகராதியில் தீர்வழி என்ற சொல் உள்ளது)

நிவாரணம் :
கஷ்ட நிவாரணம் என்பது எதிர்பாராது நிகழ்கின்ற துயர்களுக்கு ஈடாக பிறரோ அரசோ உதவுவது. இது உரிமையின் பாற்பட்டது அல்ல. கஷ்ட நிவாரணம் என்பதன் சுருங்கிய வடிவமாகிய இன்றைய நிவாரணம் என்ற சொல்லுக்கும் அதேபோல் ஒருசொல்லை உருவாக்க முடியும். வெள்ளத்தால் புயலால் தொற்றுநோய்ச் சூழலால் ஏற்படும் துயர்களுக்கு ஈடு செய்யும் உதவிகளுக்குத் துயரீடு என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.. ஈடு என்ற பின்இணைப்புச் சொல், பல்வேறு உதவிகளை / வழிமுறைகளை உள்ளடக்கிப் பொருளுணர்த்தும்.

           இழப்பீடு :  நஷ்டஈடு
           பிழையீடு : பிராயச்சித்தம்
           சரியீடு :   பரிகாரம்
           துயரீடு :   நிவாரணம்