ஒருகண்
கோ.
மன்றவாணன்
எனக்கு
முகநூல் கணக்கு உண்டே தவிர, அதில் எந்தப் பதிவும் செய்யவில்லை. ஆனால் பிறரின் முகநூல்
பக்கங்களை எப்போதாவது பார்ப்பது உண்டு.. படிப்பது உண்டு. அதுபோல் புத்தகக் காதலர் சேலம் பொன். குமார் அவர்களின் முகநூல்
பக்கத்தைப் பார்த்தபோது, சங்கரன்கோவில் அருணகிரி அவர்களின் பதிவைக் காண நேர்ந்தது.
அவர், என் நூலுக்குப் பிழைதிருத்தம் செய்து செப்பமாக்கியவர் என்பதால் அவரது முகநூல்
பக்கத்தில் நுழைந்தேன். அதில் Surveillance Camera என்பதற்குக் கண்காணிப்புக் கண்கள்
என்று பதிவிட்டதாகவும் அடுத்த ஐந்தே நிமிடங்களில் அதைவிடச் சிறந்த சொற்கள் கிடைத்தன
என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சொற்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அவை வருமாறு
:
காவல்
கண்கள் (நாசரேத் ரஞ்சன்)
உறங்காத
விழிகள் (துரை. மோகன்ராஜ்)
வேவுக்கருவி,
ஒற்று ஒளிவான் (சுப்பிரமணியன் வேலுசாமி)
இந்தச் சொற்கள் எல்லாம் சரியானவை போலவே தெரிகின்றன.
எனினும் அந்தச் சொற்களை ஆராய்ந்து பார்த்தால், இன்னும் நுட்பம் கண்டறிந்து செப்பம்
செய்யலாம்.
கண்காணிப்புக்
கண்கள் என்ற சொல் சரியாகத்தான் உள்ளது. இச்சொல்லில் ஒருசொல்லே பல அவதாரங்கள் எடுக்கிறது. இருமுறை கண் என்ற சொல் நேரடியாக வந்துள்ளது. காணிப்பு
என்பதிலும் கண் என்பதன் வினைச்சொல்லாகக் காண் வந்துள்ளது. அந்தக் காண் என்ற வினைச்சொல்லிருந்து
இருந்து பெயர்ச்சொல்லாக மாறியதுதான் காணிப்பு என்ற சொல். கண் – காணிப்பு - கண்கள் ஆகிய
மூன்று சொற்களிலும் கண் என்ற சொல்லின் ஆட்சியே பரவி இருக்கிறது. இது தமிழின் வியப்பு
என்றாலும் சொல்லாக்கத்தில் ஒருசொல்லே பல மடிப்புகள் கொண்டு விளங்குவதைத் தவிர்க்கலாம்
என நினைக்கிறேன். ஆனாலும் அருணகிரி அவர்களின் அறிவையும் ஆற்றலையும் உணர்ந்தவன் என்பதால்
அதுகுறித்து உறுதிபடக் கூற முடியவில்லை.
காவல்
கண்கள் என்ற சொல், எளிமையான இனிமையான புரியும்படியான சொல்லாக இருக்கலாம். ஆனால் காவல்
என்பதன் பொருளை நுண்ணுணர்ந்தால் அச்சொல் சரிதானா என்று ஐயுற வேண்டி இருக்கிறது. பூந்தோட்டக்
காவல்காரன் என்ற சொல்வழக்கை ஆராய்ந்தால், தோட்டத்தைக் கள்வர்களிடமிருந்தோ பிறரிடமிருந்தோ
காப்பவன் என்பதாகும். ஆனால் இந்தக் கருவி அவ்வாறு நம் வீ்ட்டையோ அலுவலகத்தையோ காப்பதாகத்
தெரியவில்லை. Police என்பதற்கு நாம் காவல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஏனென்றால்
அந்தத் துறையினர் நம்மைக் காப்பவர்கள். ஆகவே காவல் கண்கள் என்ற சொல், அந்தக் கருவிக்குப்
பொருத்தமானதாகத் தெரியவில்லை.
உறங்காத
விழிகள் என்ற சொல், கவியினிமை கொண்டதாக இருக்கிறது. ரசிக்கத் தக்கதாகவும் இருக்கிறது.
சொல்வதற்கும் எளிதாக இருக்கிறது. அந்த ஒளிப்படக் கருவியே விழிகள் போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நாம் உறங்கும் நேரத்திலும் நாம் இல்லாத நேரத்திலும் அந்தக் கருவி விழித்திருந்து பார்க்கிறது.
எனவே உறங்காத விழிகள் என்றே சொல்லலாம் என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனாலும் அக்கருவியின்
நோக்கத்தை அச்சொல் தெளிவுபடுத்தவில்லை.
வேவுக்கருவி
என்ற சொல் பொருத்தமுடையதாக இருக்கிறது. கலைச்சொல் போல் அல்லாமல் மக்களால் எளிதில் புரிந்து
பயன்படுத்தக் கூடிய சொல்லாகவும் இருக்கிறது. கருவி என்ற பொதுச்சொல்லோடு, பயன்பாட்டை
வெளிப்படுத்தும் சொல்லை இணைத்துக் கொள்ளலாம் என்ற முறையில் அச்சொல் உருவாகி உள்ளது.
எல்லாவற்றுக்கும் கருவி என்ற பொதுச்சொல்லை இணைப்பது சொல்லழகைத் தருவதில்லை. அச்சொல்லில்
கருவி என்ற பொதுச்சொல் சேராமல் ஒருசொல்லை உருவாக்குதல் நன்று. அவ்வாறு எச்சொல்லும்
கிடைக்கவில்லை என்றால் வேவுக்கருவி என்ற சொல்லையே பயன்படுத்தலாம்.
மேற்கண்ட
சொற்களில்... கண்கள், விழிகள் என்று பன்மை பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காமிரா ஒற்றைவிழி
போலத்தான் உள்ளது. எனவே பன்மைவிகுதி பொருத்தமில்லை. மேலும் யார் மீதாவது நமக்குச் சந்தேகம்
இருந்தால் அவன்மீது ஒருகண் இருக்கட்டும் என்று சொல்வார்கள். அந்த “ஒருகண்” என்ற சொல்கூட,
அவனுக்குத் தெரியாமல் கண்காணிப்பதைத்தான் உணர்த்துகிறது.
இணையத்தில்
தேடிய போது, கண்காணிப்பு ஒளிப்படக் கருவி என்று குறித்திருந்திருந்தார்கள். அச்சொல்
அதன் முழு நோக்கத்தையும் செயலையும் குறிக்கின்றன. ஆனால் அது மூன்று சொற்கள் கொண்ட ஒரு
விளக்கமாக உள்ளது.
மேற்கண்ட
சொற்களிலிருந்தே ஒரு சொல்லிணைவை உருவாக்கலாம். யார் வருகிறார்கள் யார் போகிறார்கள்
என்ன நடக்கிறது என்பதை வேவு பார்ப்பதற்காகவே அந்தக் கருவி அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே அக்கருவியின் பயன்பாடு வேவு பார்த்தல். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். அத்துடன்
கண் என்ற சொல்லை இணைத்துப் பாருங்கள். வேவுக்கண் என்ற சொல் தோன்றும்.
அந்தக்
கருவி பார்க்கிறது... கண்காணிக்கிறது என்பதைக் கண் என்ற சொல் உணர்த்துகிறது. அந்தக்
கருவியின் வடிவமும் பெரும்பாலும் ஒருகண் போலவே இருக்கிறது. காமிரா செய்கிற வேலையைத்தான்
அந்தக்கண் செய்கிறது. கண் என்ற சொல், ஓர் உறுப்பைத்தான்
குறிக்கும். கருவியைக் குறிக்குமா என்றொரு கேள்வியும் எழுகிறது. கேள்வி நியாயமாகத்தான்
இருக்கிறது. செயற்கைக்கால் என்பதைப்போல் இவ்விடத்தில் கண்ணையும் ஒரு கருவியாகக் கருதிக்கொள்ளத்தான்
வேண்டும். முடிந்த அளவு ஓவியத்தைச் சிறப்பாகத் தீட்டலாம். அதிகமாக முயன்றால் அழகு குலைந்து
போகலாம். எனவே சொல் தீட்டலிலும் ஓரளவோடு நிறுத்திக்கொள்வதே சரி.
வேவு
பார்த்தல் என்பதுகூட மறைந்திருந்து பார்ப்பது என்றே பொருள்தரும். பெரும்பாலும் அந்தக்
கருவி மறைவான இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். கருவி இருப்பது தெரிந்தால்... அதன் முன்
குற்றம் இழைக்காமல் வேறு இடம்தேடிக் குற்றம் புரிவார்கள். கண்டறிய முடியாது. கையூட்டு
வாங்குபவர்கள் “இங்குக் காமிரா இருக்கிறது அந்தப் பக்கம் வாங்க” என்று அழைத்துச் சென்று
பெறுவதைக் காண முடிகிறது. எல்லாருக்கும் தெரிவதுபோல் சில இடங்களில் அக்கருவி அமைக்கப்பட்டிருந்தாலும்
மறைவான இடங்களில் அமைப்பதே வழக்கமாக உள்ளது.
வருமுன்
காப்போம் என்பதுபோல் குற்றச் செயலை நிகழாமல் தடுக்கும் நோக்கத்தில் “இங்கே காமிரா பொருத்தப்பட்டுள்ளது”
என்ற விளம்பரப்பட்டியும் சில இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.
ஓர்
அலுவலகத்தில் எந்தெந்த இடங்களில் என்னென்ன நடக்கிறது... ஊழியர்கள் பணிசெய்து கொண்டிருக்கிறார்களா
என்பதையும் அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிக்கவும் அக்கருவி பயன்படுகிறது. குற்றம்
நிகழ்ந்த பிறகே அக்கருவியின் பதிவு, குற்றவாளிகளைக் கண்டறியப் பயன்படுகிறது. அலுவலகத்தில்
மட்டுமல்லாமல் வீதிகளைக் கண்காணிக்கும் வகையிலும் சுற்றுப்புறங்களைக் கண்காணிக்கும்
வகையிலும் யாருக்கும் தெரியாதவாறு அக்கருவிகள் பல இடங்களில் பொருத்தப்படுகின்றன. ஆக
எல்லா வகையிலும் அந்தக் கருவி வேவு பார்க்கின்றது.
ஆகவே
வேவுக்கண் என்ற சொல் Surveillance
Camera என்ற சொல்லுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களிடமிருந்து
இதைவிட நற்சொல் கிடைக்கலாம்.
பின் குறிப்பு :
எங்கள் வீ்ட்டில் எந்த இடத்திலும் வேவுக்கண்
நிறுவவில்லை. என் அறையில் நான் என்னென்ன செய்கிறேன் என்பதை, அடுத்த அறையிலிருந்து துல்லியமாகச்
சொல்கிறார் என் மனைவி. அது எப்படி?
நன்றி :
திண்ணை 29-03-2020
No comments:
Post a Comment