Monday, 27 April 2020

கேட்காமலே சொல் பூத்தது...

















கேட்காமலே சொல் பூத்தது...

கோ. மன்றவாணன் 

கொரோனா என்ற தீநுண்மியின் பரவலால் சாவு அச்சத்தில் உலகமே உறைந்து கிடக்கிறது. இதற்கு முன்தடுப்பு மருந்து இல்லை. இந்நோய் தொற்றிய பின்னும் அதிலிருந்து மீளவும் மருந்து இல்லை. இந்நிலையில் இந்தத் தீநுண்மி தொற்றாமல் இருப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவதே தற்போதைய அறிவார்ந்த ஏற்பாடு. அதற்காக விழித்திரு விலகிஇரு வீட்டிலிரு என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விட்டிருக்கிறது. தனிமனித இடைவெளியும் கைகழுவுதல் உள்ளிட்ட தூய்மை ஒழுக்கங்களைப் பேணவும் சொல்கிறார்கள். இன்றியமையாத காரணங்களுக்காக வெளியில் வரும்போது Face Mask ஐ கட்டாயமாகப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். தற்போது வீட்டில் இருக்கும்போதும்கூட அதனைப் பொருத்திக்கொள்ளச் சொல்கிறார்கள்.

இந்த Face Mask என்ற சொல்லுக்கு முகக்கவசம் என்ற சொல்லை ஊடகங்கள் பயன்படுத்துகின்றன. இதனால் பட்டிதொட்டி எங்கும் இந்த முகக்கவசம் என்ற சொல் பரவி உள்ளது. இந்தச் சொல்மீது சிலருக்கு ஏன் ஒவ்வாமை ஏற்பட்டது என்று தெரியவில்லை. முகநூல் பக்கங்களிலும் வினவி (Whatsapp) பதிவுகளிலும் Face Mask என்ற பிறமொழி சொல்லுக்குத் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கப் பலரும் முயன்று வருகின்றனர் என்பதை வளவ. துரையன் அய்யா அவர்கள் வழியாக அறிந்தேன். அவற்றுள் முகக்கவசம் என்ற சொல்லையும் தாண்டி அழகான செறிவான சொல்கிடைத்தால் நம் தமிழுக்கு நல்வரவுதானே.

முகமூடி, முகத்திரை, முகக்கவசம், முகவணி, முகமி ஆகிய சொற்களைப் பேராசிரியர் வ. ஜெயதேவன் பரிந்துரைத்து இருக்கிறார். முகக்காப்பு, முகமறைப்பு, முகவட்டு, முகவுறை, முகழி, மூக்குமூடி, சுவாசக் கவசம், சுவாசக் காப்பு, எச்சில் சளிக்கவசம், எச்சில் சளித் தொற்றுக் காப்பான், ஆகிய  சொற்களையும் பலர் தெரிவித்துள்ளனர். மேலும் பல அருமையான சொற்களைப் பலர் உருவாக்கி முகநூலில் வலம் வந்துகொண்டு இருக்கலாம். 
   
பேராசிரியர் மதிவாணன் பாலசுந்தரம் அவர்கள் மேற்கண்ட சொற்களைப் பார்க்கையில் அவருக்குப் பதிற்றுப்பத்து என்ற சங்க இலக்கிய நூலில் இடம்பெற்ற மெய்ம்மறை என்ற சொல் நினைவுக்கு வந்துள்ளது. அச்சொல் போர்புரியும்போது மெய்யை மறைத்துப் பாதுகாக்கும் கவசத்தைக் குறிக்கிறது. அச்சொல்லில் இருந்து முகமறை என்ற சொல் Face Mask என்பதற்குப் பொருத்தமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இச்சொல்லுக்குத் தமிழ்அறிஞர்கள் தமிழ்ஆர்வலர்கள் இடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.

புதுச்சொல் ஆக்கங்களில் பலரையும் ஈடுபடுத்தி வருகிற சங்கரன்கோவில் அருணகிரி என்பவர் வாய்மூக்கு மூடி என்று பாமர மக்களுக்குப் புரியும்படி சொல் ஆக்கியுள்ளார். சுவாசக் கவசம், சுவாசக் காப்பு எனப் பலர் தெரிவித்துள்ள நிலையில் மூச்சுக் காப்பு என்ற மிகுபொருத்தமான சொல்லை இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் பரிந்துரைத்துள்ளார்.
     
தற்காலத்தில் புதுச்சொல் கண்டறிவதில் மக்கள் ஈடுபாடு உள்ளது என்பது தமிழின் வளர்ச்சிக்கு உகந்த நற்போக்குதான். மக்களில் ஒருவனாக நானும் Face Mask என்பதற்கு வேறு ஏதேனும் சொற்கள் கிடைக்குமா என்று சிந்தித்துப் பார்த்தேன்.

ஊறுகாய் போடும்போதோ வேறு பயன்பாட்டுக்கோ பாத்திரத்தின்... பானையின் வாயைத் துணியால் மூடிக் கட்டி வைப்பதற்கு வேடு கட்டுதல் என்பர். வேடு என்ற சொல்லே மறைத்தலைக் குறிப்பதுதான். அதனால் முகவேடு என்று சொல்லலாமா என்று நினைத்தேன். அச்சொல் பொருத்தமாகத்தான் இருக்கிறது. அச்சொல் முக வேடு என்றும் முக ஏடு என்றும் பிரிந்து பொருள்தருகிறது. முக ஏடு என்றாலும் அதுவும் ஒருவகையில் பொருந்திதானே வருகிறது எனக் கருதினேன்.

அடுத்ததாக மார்புக்கச்சை, இடுப்புக்கச்சை நினைவுக்கு வந்தன. அதனை அடியொற்றி முகக்கச்சை என்ற சொல்லும் மிகச்சரியாகப் பொருந்தும் என்று அறிந்தேன். மேலும் முகச்சீலை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் எனவும் கருதினேன். ஆனால் இவையாவும் தற்காலப் பேச்சாடலுக்கு எளிதாக  இல்லை.

முகமூடி, முகத்திரை ஆகிய சொற்கள் புழக்கத்தில் உள்ளன. இச்சொற்களும் Face Mask என்பதற்கு முழுமையாகப் பொருந்தும். ஆனால் முகமூடி என்ற தற்கால வழக்கில் நல்லவர்களைக் குறிக்காமல் திருடர்களை, வஞ்சகர்களைக் குறிக்கவே பயன்படுகின்றன. அதுபோலவே முகத்திரை என்ற சொல்லும். “உன் முகத்திரையைக் கிழிப்பேன்” என்று நடித்து ஏமாற்றுவோரைப் பலர் எச்சரிப்பதைக் கேட்கலாம். ஆகவே புழக்கத்தில் வேறு பயன்பாடுகளுக்கு வந்துவிட்ட அந்தச் சொற்களைத் தவிர்க்கலாம். முகவணி என்ற சொல்லில் அணி என்பது காதணிபோல் அழகியல் சார்ந்தவற்றை அணிவதாகப் பொருள்படுகிறது. மாஸ்க் என்பது அழகியல் சார்ந்த அணிகலன் இல்லை.

இப்படி முடிவுக்கு நான் வருகையில் நண்பர் ஒருவர் கேட்டார். கவசம் என்பது உலோகம் போன்ற கடினமான பொருளால் உருவாக்கப்பட்டதைத்தான் குறிக்கும். அதனால் அதைப் போரில் தமிழர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் மாஸ்க் என்பதில் மென்மையான வளைந்து கொடுக்கும் தன்மையினான துணி போன்ற பொருள்களால் ஆனது என்றார். அதுகுறித்தும் ஆராய்ந்து அவரிடத்தில் தெரிவித்தேன். போரில் பயன்படுத்தப்பட்ட கவசம் அப்படிப்பட்டதுதான். சென்னைப் பல்கலைக் கழகம் உருவாக்கிய தமிழ்ப்பேரகராதியில் கவசம் என்பதற்கு மெய்புகு கருவி, இரட்சை, காயத்திற்கு இடும் கட்டு, மருந்தெரிக்கும் பாண்டங்களை மூட இடும் சீலைமண் எனப் பொருள்கள் தரப்பட்டுள்ளன. மந்திரங்களால் உருவாகும் பாதுகாப்பைக் குறிப்பதாகவும் சுட்டப்பட்டுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக “உளத்தாற் கவசமுரைத்து” என்ற சைவ சமய நெறியில் குறிப்பு உள்ளது. ஆக மேலே சொன்னவாறு கவசம் என்பது உலோகத்தால் ஆன கருவியாகவும், துணியாலான ஆடையாகவும் மண்ணாலான ஏடாகவும், சஷ்டி கவசம்போல் உள்ளத்தால் உணரும் பாதுகாப்புக்கு உரியதாகவும் உள்ளது. எனவே கவசம் என்ற அச்சொல் வளைந்துகொடுக்கக் கூடிய பொருள்களால் உருவாகும் மாஸ்க் என்பதற்கும் பொருந்தும்.

ஊடகங்களில் முகக்கவசம் என்ற சொல் பரவலாகிவிட்டது.  பயன்பாட்டிலும் வந்துவிட்டது. எனவே முகக்கவசம் என்ற சொல்லே இருந்து விட்டுப் போகட்டுமே என்று நான் சொன்னேன். அதற்கு எதிர்ப்புரை எழுதியவர்கள் உண்டு. அவர்கள் அனைவரும் சொல்லும் காரணம் கவசம் என்பது வடசொல். சமஸ்கிருதச் சொல்லைத் தவிர்ப்பதற்காகவே வேறு புதுச்சொல் தேடுகிறோம் என்றனர்.

கவசம் என்ற சொல்,  வடமொழிச் சொல்தானா என அறிய முயன்றேன். கலசம் என்ற வடசொல் இருப்பதால் கவசம் என்பதும் வடசொல்லாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள். மேலும் கந்தசஷ்டி கவசம், கண்ணதாசன் எழுதிய கிருஷ்ண கவசம் போன்ற நூல்களைக் காணும் போது கவசம் வடமொழிச் சொல்லாகத்தான் இருக்கும் என்று மயங்குகிறார்கள். மறைமலை  அடிகளின் மகள் நீலாம்பிகை அவர்கள் தொகுத்த வடமொழி தமிழ் அகர வரிசை என்ற நூலிலும், மொழியாய்வு அறிஞர் ப. அருளி அவர்கள் தொகுத்த அயற்சொல் அகராதி என்ற நூலிலும் கவசம் என்ற சொல்லைத் தேடினேன். அச்சொல் அந்த அகராதிகளில் இல்லவே இல்லை. இரண்டாயிரம் ஆண்டு பழமையான சங்க இலக்கியங்களில் கவசம் என்ற சொல் உள்ளதா என்றால் உள்ளது. புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய என்ற வரி புறநானூறு 13 ஆவது பாட்டில் உள்ளது.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலியில் கவசம் குறித்துத் தேடினேன். அதில்      கவ்வு – கவ்வியம் – கவயம் – கவசம் என அச்சொல் உருவான முறை சொல்லப்பட்டு உள்ளது. ஆகவே கவசம் என்பது தமிழ்ச்சொல்லாக இருக்கும் என்றே நம்புகிறேன். இச்சொல் வடமொழிக்குச் சென்று புழங்கி இருக்கலாம். ஆகவே தலைக்கவசம் எனச்சொல்லலாம். அச்சொல்லில் தமிழ்த்தாய் பாதுகாப்பாகவே இருக்கிறார்.

இதில் ஓர் ஐயம் யாருக்கேனும் இருக்குமானால் அவர்களுக்கு நான் பரிந்துரைப்பது. கவசம் என்பதற்கு இணையான ஒருசொல் காப்பு என்பதாகும். காப்புக் கட்டுதல் என்ற சொல்வழக்கையும் இங்கே ஒப்பீடு செய்துகொள்ளலாம். ஒன்றை மறைத்தலைவிட, காப்பது சரியான பொருளுணர்த்தல் ஆகும். ஆகவே தலைக்கவசத்தைத் தலைக்காப்பு என்றும் முகக்கவசத்தை முகக்காப்பு என்றும் சொல்லலாம்.

“அங்க என்னாங்க பண்றீங்க”ன்னு என் மனைவி தொலைவில் நின்று கேட்டார். “மாஸ்க் என்பதற்குத் தமிழ்ச்சொல் கண்டுபிடிக்கிறேன்” என்றேன். “அவனவன் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான். நீங்க சொல்லக் கண்டுபிடிக்கிறீங்களா? மொதல்ல உங்க சொல்லப் பேசறதுக்கு மக்கள் உயிரோட இருக்கணும்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார். நானும். உள்ளே போய்ப் பார்த்தேன். மறந்து எங்கோ வைத்துவிட்ட தொலைஇயக்கியைக் (ரிமோட்) கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தார்.

நன்றி :
திண்ணை
19-04-2020





Monday, 6 April 2020

தமிழின் சுழி



















தமிழின் சுழி

கோ. மன்றவாணன்

பதிமூணாவது சரியா... பதிமூனாவது சரியா என்று வளவ. துரையன் அய்யா அவர்கள் என்னிடம் கேட்டிருந்தார். 13 என்ற எண்ணே பலரைப் பயமுறுத்தக் கூடியது. அவர்களைக் கேட்டால் 13 என்ற எண்ணே சரியில்லை என்பார்கள். 

எழுத்து வழக்கில் மூன்று என்று எல்லாரும் எழுதுகிறோம். அதில் எந்தப் பிழையும் இல்லை. மேலும் இருசுழி ன்-க்குப் பிறகு று-தான் வரும்; றகர வரிசைதான் வரும். அதுபோல்  முச்சுழி ண்-க்குப் பிறகு  டகர வரிசைதான் வரும். எனவே “ன்”, “ண்” மாறிவந்தால் அதுவே தவறெனக் காட்டிக்கொடுத்துவிடும்.

நம் எழுத்தாளர்கள், பேச்சு வழக்கு உரையாடல்களைப் பதிவு செய்யும் போது, மூன்று என்பதைக் குறிக்க மூணு என்று எழுதுகின்றனர்.

இதில் மூணு சரியா? மூனு சரியா? என்ற இரு கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்விக்கு உரிய விடையைக் கண்டறிந்தால் மேற்கண்ட பதிமூணாவது சரியா... பதிமூனாவது சரியா... என்பதற்குப் பதில் கிடைத்துவிடும்.

பேச்சு வழக்கில் ஒன்று என்பதை ஒண்ணு என்று மூன்று சுழி “ண்”  போட்டு எழுதுகிறார்கள். ஏன் ஒன்னு என்று எழுதவில்லை? கன்றுக்குட்டி என்பதைக் கன்னுக்குட்டி என்றும் கண்ணுக்குட்டி என்றும்... எதுசரி என்று தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு என்பதற்கு ரெண்டு என்று சரியாக மூணு சுழி “ண்” போடுகிறோம். இங்கே முச்சுழி “ண்” பக்கத்தில் “டு” என்று டகர வரிசை வந்துவிட்டதால் குழப்பம் நிகழவில்லை. ஆனால் மூன்று என்பதை மூணு என்று முச்சுழி போட்டு எழுதுகிறார்கள். இது ஏன்?  நம் எழுத்தாளர்கள் இதழாளர்கள் தொடர்ந்து மூணு என்று எழுதி எழுதி அவ்வாறு நிலைத்துவிட்டதா? அல்லது அதுதான் சரியா? உச்சரிப்பில் இயற்கையாக எழும் மாற்றமா?

தோன்றுகிறது என்ற சொல், பேச்சு வழக்கில் தோணுகிறது என்று எழுதப்படுகிறது. தோன்றுகிறது என்ற சொல்லில் இரண்டு சுழி “ன்” தான் வந்துள்ளது. ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை.

தற்காலிக முடிவாக.... 

எழுத்து வழக்கில் இரண்டு சுழி “ன்” பயன்படுத்தப்பட்டிருந்தால், பேச்சு வழக்கில் இரண்டு சுழி னு-தான்  பயன்படுத்தப்பட வேண்டும்.

எழுத்து வழக்கில் மூன்று சுழி “ண்” பயன்படுத்தப்பட்டிருந்தால், பேச்சு வழக்கில் மூன்று சுழி ணு-தான் பயன்படுத்த வேண்டும் என்று நாம் முடிவு எடுத்துக் கொண்டால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும்.

பதிமூணாவதா... பதிமூனாவதா... என்பதற்கு இப்போது வருவோம். 

பதின்மூன்றாம் என்றோ பதின்மூன்றாவது என்றோ எழுதிவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் பேச்சு வழக்கு அவ்வாறு இல்லை. பதின்மூன்று என்னும் சொல்லின் பேச்சு வடிவே பதிமூன்று, பதிமூன் என்றாகிப் பின்னர் பதிமூனு, பதிமூணு எனத் திரிந்திருக்க வாய்ப்புண்டு. மூன்று என்ற சொல்லில் இரண்டு சுழி “ன்” தான் உள்ளது. அப்படிப் பார்க்கிற பொழுது, பதிமூனாவது என்ற சொல் சரியாக இருக்கும்.

இதை எழுதிவிட்டு...

நான் என் வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே போனபோது பஞ்சர் ஆகிவிட்டது. அருகில் இருந்த பஞ்சர் கடைக்குத் தள்ளிக்கொண்டு போனேன். அங்கிருந்த விளம்பரப் பலகையில் இரண்டு சக்கர வாகனங்களுக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் பஞ்சர் ஒட்டப்படும் என்றிருந்தது. கவனித்துப் பார்த்தேன். இரண்டு சக்கரம் என்பதில் உள்ள இரண்டு என்பதில் இரன்டு என்று இருசுழி “ன்” போட்டிருந்தார்கள். நான்கு சக்கரம் என்பதில் நான்குசுழி போட்டிருந்தார்கள்.

நன்றி : திண்ணை 29-03-2020



ஒருகண்


























ஒருகண் 

கோ. மன்றவாணன்

எனக்கு முகநூல் கணக்கு உண்டே தவிர, அதில் எந்தப் பதிவும் செய்யவில்லை. ஆனால் பிறரின் முகநூல் பக்கங்களை எப்போதாவது பார்ப்பது உண்டு.. படிப்பது உண்டு. அதுபோல் புத்தகக் காதலர் சேலம் பொன். குமார் அவர்களின் முகநூல் பக்கத்தைப் பார்த்தபோது, சங்கரன்கோவில் அருணகிரி அவர்களின் பதிவைக் காண நேர்ந்தது. அவர், என் நூலுக்குப் பிழைதிருத்தம் செய்து செப்பமாக்கியவர் என்பதால் அவரது முகநூல் பக்கத்தில் நுழைந்தேன். அதில் Surveillance Camera என்பதற்குக் கண்காணிப்புக் கண்கள் என்று பதிவிட்டதாகவும் அடுத்த ஐந்தே நிமிடங்களில் அதைவிடச் சிறந்த சொற்கள் கிடைத்தன என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சொற்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். அவை வருமாறு :

     காவல் கண்கள் (நாசரேத் ரஞ்சன்)
     உறங்காத விழிகள் (துரை. மோகன்ராஜ்)
     வேவுக்கருவி, ஒற்று ஒளிவான் (சுப்பிரமணியன் வேலுசாமி)

இந்தச் சொற்கள் எல்லாம் சரியானவை போலவே தெரிகின்றன. எனினும் அந்தச் சொற்களை ஆராய்ந்து பார்த்தால், இன்னும் நுட்பம் கண்டறிந்து செப்பம் செய்யலாம்.

கண்காணிப்புக் கண்கள் என்ற சொல் சரியாகத்தான் உள்ளது. இச்சொல்லில் ஒருசொல்லே பல அவதாரங்கள் எடுக்கிறது.  இருமுறை கண் என்ற சொல் நேரடியாக வந்துள்ளது. காணிப்பு என்பதிலும் கண் என்பதன் வினைச்சொல்லாகக் காண் வந்துள்ளது. அந்தக் காண் என்ற வினைச்சொல்லிருந்து இருந்து பெயர்ச்சொல்லாக மாறியதுதான் காணிப்பு என்ற சொல். கண் – காணிப்பு - கண்கள் ஆகிய மூன்று சொற்களிலும் கண் என்ற சொல்லின் ஆட்சியே பரவி இருக்கிறது. இது தமிழின் வியப்பு என்றாலும் சொல்லாக்கத்தில் ஒருசொல்லே பல மடிப்புகள் கொண்டு விளங்குவதைத் தவிர்க்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும் அருணகிரி அவர்களின் அறிவையும் ஆற்றலையும் உணர்ந்தவன் என்பதால் அதுகுறித்து உறுதிபடக் கூற முடியவில்லை.

காவல் கண்கள் என்ற சொல், எளிமையான இனிமையான புரியும்படியான சொல்லாக இருக்கலாம். ஆனால் காவல் என்பதன் பொருளை நுண்ணுணர்ந்தால் அச்சொல் சரிதானா என்று ஐயுற வேண்டி இருக்கிறது. பூந்தோட்டக் காவல்காரன் என்ற சொல்வழக்கை ஆராய்ந்தால், தோட்டத்தைக் கள்வர்களிடமிருந்தோ பிறரிடமிருந்தோ காப்பவன் என்பதாகும். ஆனால் இந்தக் கருவி அவ்வாறு நம் வீ்ட்டையோ அலுவலகத்தையோ காப்பதாகத் தெரியவில்லை. Police என்பதற்கு நாம் காவல் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அந்தத் துறையினர் நம்மைக் காப்பவர்கள். ஆகவே காவல் கண்கள் என்ற சொல், அந்தக் கருவிக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை.

உறங்காத விழிகள் என்ற சொல், கவியினிமை கொண்டதாக இருக்கிறது. ரசிக்கத் தக்கதாகவும் இருக்கிறது. சொல்வதற்கும் எளிதாக இருக்கிறது. அந்த ஒளிப்படக் கருவியே விழிகள் போலவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் உறங்கும் நேரத்திலும் நாம் இல்லாத நேரத்திலும் அந்தக் கருவி விழித்திருந்து பார்க்கிறது. எனவே உறங்காத விழிகள் என்றே சொல்லலாம் என்று நம்மில் பலர் நினைக்கலாம். ஆனாலும் அக்கருவியின் நோக்கத்தை அச்சொல் தெளிவுபடுத்தவில்லை.
   
வேவுக்கருவி என்ற சொல் பொருத்தமுடையதாக இருக்கிறது. கலைச்சொல் போல் அல்லாமல் மக்களால் எளிதில் புரிந்து பயன்படுத்தக் கூடிய சொல்லாகவும் இருக்கிறது. கருவி என்ற பொதுச்சொல்லோடு, பயன்பாட்டை வெளிப்படுத்தும் சொல்லை இணைத்துக் கொள்ளலாம் என்ற முறையில் அச்சொல் உருவாகி உள்ளது. எல்லாவற்றுக்கும் கருவி என்ற பொதுச்சொல்லை இணைப்பது சொல்லழகைத் தருவதில்லை. அச்சொல்லில் கருவி என்ற பொதுச்சொல் சேராமல் ஒருசொல்லை உருவாக்குதல் நன்று. அவ்வாறு எச்சொல்லும் கிடைக்கவில்லை என்றால் வேவுக்கருவி என்ற சொல்லையே பயன்படுத்தலாம்.

மேற்கண்ட சொற்களில்... கண்கள், விழிகள் என்று பன்மை பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காமிரா ஒற்றைவிழி போலத்தான் உள்ளது. எனவே பன்மைவிகுதி பொருத்தமில்லை. மேலும் யார் மீதாவது நமக்குச் சந்தேகம் இருந்தால் அவன்மீது ஒருகண் இருக்கட்டும் என்று சொல்வார்கள். அந்த “ஒருகண்” என்ற சொல்கூட, அவனுக்குத் தெரியாமல் கண்காணிப்பதைத்தான் உணர்த்துகிறது.

இணையத்தில் தேடிய போது, கண்காணிப்பு ஒளிப்படக் கருவி என்று குறித்திருந்திருந்தார்கள். அச்சொல் அதன் முழு நோக்கத்தையும் செயலையும் குறிக்கின்றன. ஆனால் அது மூன்று சொற்கள் கொண்ட ஒரு விளக்கமாக உள்ளது. 

மேற்கண்ட சொற்களிலிருந்தே ஒரு சொல்லிணைவை உருவாக்கலாம். யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்ன நடக்கிறது என்பதை வேவு பார்ப்பதற்காகவே அந்தக் கருவி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அக்கருவியின் பயன்பாடு வேவு பார்த்தல். அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். அத்துடன் கண் என்ற சொல்லை இணைத்துப் பாருங்கள். வேவுக்கண் என்ற சொல் தோன்றும்.

அந்தக் கருவி பார்க்கிறது... கண்காணிக்கிறது என்பதைக் கண் என்ற சொல் உணர்த்துகிறது. அந்தக் கருவியின் வடிவமும் பெரும்பாலும் ஒருகண் போலவே இருக்கிறது. காமிரா செய்கிற வேலையைத்தான் அந்தக்கண் செய்கிறது.  கண் என்ற சொல், ஓர் உறுப்பைத்தான் குறிக்கும். கருவியைக் குறிக்குமா என்றொரு கேள்வியும் எழுகிறது. கேள்வி நியாயமாகத்தான் இருக்கிறது. செயற்கைக்கால் என்பதைப்போல் இவ்விடத்தில் கண்ணையும் ஒரு கருவியாகக் கருதிக்கொள்ளத்தான் வேண்டும். முடிந்த அளவு ஓவியத்தைச் சிறப்பாகத் தீட்டலாம். அதிகமாக முயன்றால் அழகு குலைந்து போகலாம். எனவே சொல் தீட்டலிலும் ஓரளவோடு நிறுத்திக்கொள்வதே சரி.

வேவு பார்த்தல் என்பதுகூட மறைந்திருந்து பார்ப்பது என்றே பொருள்தரும். பெரும்பாலும் அந்தக் கருவி மறைவான இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். கருவி இருப்பது தெரிந்தால்... அதன் முன் குற்றம் இழைக்காமல் வேறு இடம்தேடிக் குற்றம் புரிவார்கள். கண்டறிய முடியாது. கையூட்டு வாங்குபவர்கள் “இங்குக் காமிரா இருக்கிறது அந்தப் பக்கம் வாங்க” என்று அழைத்துச் சென்று பெறுவதைக் காண முடிகிறது. எல்லாருக்கும் தெரிவதுபோல் சில இடங்களில் அக்கருவி அமைக்கப்பட்டிருந்தாலும் மறைவான இடங்களில் அமைப்பதே வழக்கமாக உள்ளது.

வருமுன் காப்போம் என்பதுபோல் குற்றச் செயலை நிகழாமல் தடுக்கும் நோக்கத்தில் “இங்கே காமிரா பொருத்தப்பட்டுள்ளது” என்ற விளம்பரப்பட்டியும் சில இடங்களில் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம். 

ஓர் அலுவலகத்தில் எந்தெந்த இடங்களில் என்னென்ன நடக்கிறது... ஊழியர்கள் பணிசெய்து கொண்டிருக்கிறார்களா என்பதையும் அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிக்கவும் அக்கருவி பயன்படுகிறது. குற்றம் நிகழ்ந்த பிறகே அக்கருவியின் பதிவு, குற்றவாளிகளைக் கண்டறியப் பயன்படுகிறது. அலுவலகத்தில் மட்டுமல்லாமல் வீதிகளைக் கண்காணிக்கும் வகையிலும் சுற்றுப்புறங்களைக் கண்காணிக்கும் வகையிலும் யாருக்கும் தெரியாதவாறு அக்கருவிகள் பல இடங்களில் பொருத்தப்படுகின்றன. ஆக எல்லா வகையிலும் அந்தக் கருவி வேவு பார்க்கின்றது.

ஆகவே வேவுக்கண் என்ற சொல் Surveillance Camera என்ற சொல்லுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களிடமிருந்து இதைவிட நற்சொல் கிடைக்கலாம்.

பின் குறிப்பு :
எங்கள் வீ்ட்டில் எந்த இடத்திலும் வேவுக்கண் நிறுவவில்லை. என் அறையில் நான் என்னென்ன செய்கிறேன் என்பதை, அடுத்த அறையிலிருந்து துல்லியமாகச் சொல்கிறார் என் மனைவி. அது எப்படி?

நன்றி :
திண்ணை 29-03-2020