Wednesday, 14 October 2020



கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது

கோ. மன்றவாணன்


கள் விகுதி பின்னர் வந்தது. கள் விகுதியை உயர்திணைக்குப் பயன்படுத்தக் கூடாது. அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இந்த விவாதம் குறித்துக் கொஞ்சம் காண்போமே...

தொல்காப்பியர் காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் கள் விகுதி இருந்ததா என்றால் இருந்தது என்பதுதான் பதில். அப்படியானால் கள் விகுதி பின்னர் வந்தது என்று எப்படிப் புறந்தள்ள முடியும்?

     முதலில் தொல்காப்பியத்தில் பார்ப்போம்.

     கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே

     கொள்வழி உடைய பலவறி சொற்கே

            - தொல்காப்பியம், சொல்லதிகாரம், பெயரியல் 15

இந்தக் கள் விகுதி அஃறிணைப் பலவின்பால் இயற்பெயர்க்கு வரும் என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் என்று உரைவிளக்கம் தருகின்றனர். ஆகத் தொல்காப்பியர் காலத்தில் கள் விகுதி இருந்துள்ளது.

     கீழ்க்கண்ட குறள்களைக் காண்போம் :


     துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

     மற்றை யவர்கள் தவம் – குறள் 263

 

     வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

     பூரியர்கள் ஆழும் அளறு  - குறள் 919 


     அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

     அவாஉண்டேல் உண்டாம் சிறிது – குறள் 1075 


ஆக இந்த மூன்று குறள்களிலும் கள் விகுதி வந்துள்ளது. 

இக்குறள்களில் முதல் குறளில் உள்ள “மற்றையவர்கள் தவம்” என்பது தவறு. “மற்றையவர்கண் தவம்” என்பதே சரி.  இந்த இரண்டும் “மற்றையவர் கடவம்” என்று புணரும். அந்த “மற்றை யவர்க டவம்” என்பதைத்தான் சொல்பிரித்து எழுதியவர்கள் “மற்றையவர்கள் தவம்” என எழுதிவிட்டனர் என்று கலிபோர்னியாவில் உள்ள பொறியாளரும் புலவருமான செந்தமிழ்ச்சேய் தெரிவிக்கிறார். இது குறித்துக் கள் மயக்கம் என்ற தலைப்பில் அவரொரு கட்டுரை எழுதி உள்ளார். அவர் சொன்னதைக் கேட்டு அந்தக் குறளை விட்டுவிடுகிறேன். ஆனால் அடுத்துவரும் இரு குறள்களில் உள்ள கள் என்பது கள் விகுதிகள்தாம். அவற்றை யாரும் கண் என்ற ஏழாம் வேற்றுமை உருபாகக் கொள்ளவில்லை. அந்தக் கால முறைப்படி உயர்திணைச் சொற்களுக்குக் கள் விகுதி வராது. அஃறிணைச் சொற்களுக்கு மட்டும்தாம் கள் விகுதி வரும். அந்த வகையில் பூரியர்கள், கீழ்கள் ஆகிய சொற்கள் உயர்திணையாகிய மக்களைச் சுட்டுகின்றன. ஆனால் வள்ளுவர் ஏன் உயர்திணையில் கள் விகுதியைச் சேர்த்தார் என்ற கேள்வி எழுகிறது? அதற்கும் புலவர் செந்தமிழ்ச்சேய் விளக்கம் அளிக்கிறார். அவர்கள் மக்கள் என்றாலும் அவர்களிடத்தில் உயர்பண்புகள் இல்லாமையால் அஃறிணையாக உணர்த்திக் “கள்” விகுதியைச் சேர்த்து எழுதி உள்ளார் என்பதுதான் அந்த விளக்கம். இவ்வாறு சொற்களில் குறியீட்டுத் தன்மைகளை ஏற்படுத்திப் பொருள் உணர்த்துவது கவிஞர்களுக்கே உரிய தனி அதிகாரம். 

தொல்காப்பியம், திருக்குறள் மட்டுமல்ல. பிற சங்க இலக்கியங்களிலும் கள் விகுதி ஆளப்பட்டுள்ளது. பதிற்றுப் பத்தில் அரண்கள் என்றும் ஐங்குறு நூற்றில் மயில்கள் என்றும் கலித்தொகையில் சொற்கள் என்றும் எடுத்துக் காட்டுகள் உள்ளன.

எது எப்படி இருப்பினும் தொல்காப்பியர் காலத்திலும் வள்ளுவர் காலத்திலும் சங்கப் புலவர்கள் காலத்திலும் கள் விகுதி இருந்துள்ளது. ஆனால் கள் விகுதி பிற்காலத்தில் வந்தது என்று சில கட்டுரைகள் வந்துள்ளன. இதிலிருந்து ஓர் உண்மையை ஊகித்து அறியலாம். முற்காலத்தில் கள் விகுதியின் பயன்பாடு மிகக்  குறைவாக இருந்துள்ளது. பிற்காலத்தில்தான் அதன் பயன்பாடு அதிகம் ஆனது என்று அமைதி கொள்ளலாம். 

அடுத்ததாகக் கள் விகுதியை அஃறிணைக்கு மட்டும்தான் சேர்க்க வேண்டுமா? உயர்திணைக்குச் சேர்க்கக் கூடாதா? எனக் கேள்விகள் எழுகின்றன.

என்னதான் செந்தமிழ்ச்சேய் விளக்கம் அளித்தாலும் மேற்கண்ட குறள்களில் இலக்கணப்படி உயர்திணையான மக்களைச் சுட்டியபோது “கள்“ விகுியை வள்ளுவர் பயன்படுத்தி இருக்கிறார். எனவே கள் விகுதியை இரு திணைகளுக்கும் பயன்படுத்தலாம் என்று வாதிட முடியும். பொதுவாக முற்காலத்தில் அஃறிணைப் பலவின் பாலுக்கு மட்டும்தான் கள் விகுதி பொருத்தப்பட்டது. 

அரசர் என்ற சொல் ஒருமையா பன்மையா என்றால் பன்மை என்றே நம் இலக்கணம் சொல்கிறது. அரசர் என்ற சொல்லுக்கு ஒருமை என்ன என்று கேட்டால், அரசர் என்றே சொல்வார்கள். இருவராக இருந்தாலும் அரசர் என்றே எழுதுவார்கள். அரசர் என்பது ஒருமையா பன்மையா என்பதை எண்ணிக்கையை வைத்தே ஊகித்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அரசன் என்றால் ஒருமைதான் என்று முடிவாகத் தெரியும். ஆனால் தமிழ்ப்பண்பாட்டில் அரசன் என்று அன் விகுதி போட்டுச் சொல்வதை மதிப்புக் குறைவாகக் கருதுகிறார்கள். அதனால் அர் என்கிற பன்மை விகுதியை இட்டு அரசர் என்று மரியாதையாகச் சொல்வது வழக்கமாகி இருக்கிறது. இதனை மரியாதைப் பன்மை என்று இலக்கணம் சுட்டுகிறது. இது போலவே அரசி என்பது ஒருமையைக் குறிக்கும். ஆனால் அரசியார் என்று மரியாதைப் பன்மையில் சொல்வார்கள்.

புலவர் என்ற சொல் ஒருவரைக் குறிக்கிறதா ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிக்கிறதா என்றால் இரண்டையும் குறிக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க என்ன வழி?

புலவர் என்றால் ஒருவரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். புலவர்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டவரைக் குறிப்பதாகச் சொல்லலாம் என்று முடிவு செய்துவிட்டால் ஒருமை பன்மை சிக்கல் தீர்ந்துவிடும்.

ஆனால் புலவர் அரசர் என வருகிற சொற்களில் ஏற்கனவே “அர்” விகுதி வந்துவிட்டது. புலவர்கள்,  அரசர்கள் ஆகிய சொற்களில் அர் என்ற விகுதியும் அத்துடன் சேர்ந்து கள் விகுதியும் உள்ளது. ஒரு சொல்லில் இரு விகுதிகள் வருவன சரியில்லை என்று சிலர் கூறுகிறார்கள், இரு விகுதிகள் வந்தால் என்ன குறைந்துவிடும்?

தமிழில் உள்ள விகுதிகளைப் பட்டியல் இட்டுள்ளனர். அதன்படிச் சில பகுசொற்களை நுட்பமாக ஆராய்ந்தால் இரு விகுதிகள் இருக்கும். ஆனால் இறுதி விகுதிக்கு முன் வரும் விகுதியைச் சாரியை என்று சொல்லிவிடுகின்றனர். வந்தனர் என்ற சொல்லை வா+த்(ந்)+த்+அன்+அர் என்று பகுத்துரைக்கலாம். இப்பகுப்பில் அன்+அர் என இருவிகுதிகள் உள்ளன. ஆனால் இங்கே அன் என்பதைச் சாரியை என்கின்றனர். ஒரு சொல்லில் ஒரு விகுதி மட்டும்தான் வரும் என்று உறுதியாக இருக்கின்றனர். விகுதி என்றாலே இறுதி என்றுதான் பொருள் என்றும் சொல்கிறார்கள். அதுபோல் வந்தார்கள், அரசர்கள் போன்ற சொற்களில்  உள்ள அர் ஆர் ஆகியவற்றைச் சாரியை என்றோ, வேறொன்றாகவோ சொல்லிக் கொண்டால் என்ன என்றோர் எண்ணமும் எழுகிறது. இதை இன்றைய நிலையில் யாரும் ஏற்க மாட்டார்கள். சில தமிழறிஞர்கள் சொல்வது போல் அரசர்கள் என்பதிலும் வந்தார்கள் என்பதிலும் இரு விகுதிகள்தாம் வருகின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்வோம். தற்கால நடைமுறையில் இரு விகுதிகள் கொண்ட சொற்கள் வந்துவிட்டன. அதனால் ஒரு சொல்லில் இரு விகுதிகள் வரலாம் என்று இசைவு தந்தால் தமிழ்த்தாய் மறுப்பாளா என்ன?

மரியாதைப் பன்மையை முன்னிட்டு நாம், யாம் என்று சிலர் சொல்லியும் எழுதியும் இருக்கிறார்கள். நாம் என்பதும் யாம் என்பதும் ஒருவரைக் குறிக்கிறதா பலரைக் குறிக்கிறதா என்ற கேள்வி முன்னரே எழுந்துள்ளது. அதனால்தான் நாங்கள் என்றும் யாங்கள் என்றும் உயர்திணையில் “கள்” சேர்த்து ஒருமை பன்மை மயக்கத்தைத் தெளிய வைத்துள்ளார்கள்.

இவ்வாறு மரியாதைப் பன்மையில் ஏற்படும் ஒருமையா பன்மையா என்ற குழப்பத்தைத் தீர்க்க அர் விகுதியோடு கள் விகுதியைச் சேர்த்து வந்துள்ளோம். இது நெடுங்காலமாகவே பயன்பாட்டில் உள்ளது. எந்த இடரும் ஏற்படுவதில்லை.

சங்க காலத்தில் கள் விகுதி அஃறிணைப் பன்மைக்கு வந்துள்ளது. வராமலும் இருந்துள்ளது. கள் விகுதி இல்லாமல் அஃறிணைப் பன்மையை எவ்வாறு சுட்டினார்கள் என்று ஒரு கேள்வி எழுகிறது.

குறுந்தொகையில் “காலே பரிதப்பினவே” என்றொரு சொல்தொடர் உள்ளது. இதன் பொருள் கால்கள் ஓய்ந்தன என்பதாகும். காலே என்பதில் உள்ள கால் அஃறிணை ஒருமை ஆகும். பரிதவிப்பினவே என்பதில் பன்மை வினைமுற்று இருக்கிறது. இந்த வினைமுற்றைக் கொண்டு கால் என்பது கால்கள் என உணர்த்தி உள்ளார்கள். இதுபோலவே “கலுழ்ந்தன கண்ணே” என்றொரு சொல்தொடர் நற்றிணையில் உள்ளது. இதன் பொருள் அழுதன கண்கள் என்பதாகும். கலுழ்ந்தன என்ற பன்மை வினைமுற்றைக் கொண்டு கண் என்பதைக் கண்கள் என்று உணர்த்தினர். நெகிழ்ந்தன வளையே என்றும் நற்றிணையில் உள்ளது.

தற்காலத்தில் நாம் “பறவைகள் வந்தன” என்று எழுதுகின்றோம். இந்தச் சொல்தொடரில் “வந்தன” என்னும் பன்மை வினைமுற்று இருந்தாலும் பறவைகள் என்பதில் “கள்” விகுதி சேர்ந்து உள்ளதைக் கவனியுங்கள். சில சங்க இலக்கியங்களில் கையாண்டவாறு பறவை வந்தன என்று எழுதி, பன்மை வினைமுற்றைக் கொண்டு பறவை என்பது பறவைகள்தாம் என உணர்த்தலாம். ஆனால் இன்றைய தமிழாசிரியர்கள் பறவை வந்தது என்று திருத்துவார்கள். ஆகவே, அப்படி இப்படி என்று எப்படியும் ஒருமை பன்மை மயக்கம் வந்துவிடக் கூடாது என்ற கூடுதல் முன் எச்சரிக்கையோடுதான் இந்தக் கள் விகுதியை இணைத்திருக்கிறார்கள்.

வந்தார்கள் என்று எழுதக் கூடாது. வந்தனர் என்றுதான் எழுத வேண்டும் என்று சிலர் இன்றும் விடாப்பிடியாகச் சொல்லி வருகின்றனர் / வருகின்றார்கள். இதுபற்றிப் பார்ப்போம்.

ஆடு வந்தது என்று அஃறிணை ஒருமையைச் சுட்டுகிறோம்.

ஆடுகள் வந்தன என்று அஃறிணைப் பன்மையைக் குறிக்கிறோம்.

இதில் உள்ள வந்தன என்பதில் இருந்துதான் வந்தனர் என்று உயர்திணைப் பன்மையை உருவாக்கிக் கொண்டுள்ளோம். ஆனால் தற்காலப் பேச்சு வழக்கில் வந்தனர் என்று சொல்வதில்லை. ஒருமையில் வந்தார் என்றும் பன்மையில் வந்தார்கள் (வந்தாங்க) என்றும் பேசுகின்றோம். வந்தனர் என்ற பயன்பாடு நீண்ட காலமாகவே உள்ளது. வந்தனர் என்றாலும் வந்தார்கள் என்றாலும் பொருள்குழப்பமோ ஒருமை பன்மை மயக்கமோ ஏற்படவில்லை. ஆக வந்தனர் என்றும் பயன்படுத்தலாம். வந்தார்கள் என்றும் பயன்படுத்தலாம் என்று நெகிழ்வதே சரியாகும். கற்றலிலும் கற்பித்தலிலும் வந்தார்கள் என்பது எளிமையானது. பன்மைப் பெயர்ச்சொற்களிலும் பன்மை வினைமுற்றுகளிலும் கள் விகுதியைச்  சேர்ப்பது தெளிவு கிடைப்பதற்கே.

எனவே

தொல்காப்பியத்தில் சொல்லிவிட்டதால் கள் விகுதியை அஃறிணைப் பன்மைக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றும் உயர்திணைப் பன்மைக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும் கைவலிக்கப் பிடித்துத் தொங்க வேண்டாம். எளிமை இனிமை தெளிமை கருதி விதி தளர்த்தல் செய்யலாம். நமக்கு முன்பே விதி தளர்த்தல் நடந்தும் விட்டது. பல தமிழறிஞர்கள் ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

தற்காலத்தில் கள் விகுதியை உயர்திணைக்கும் பயன்படுத்தலாம் அஃறிணைக்கும் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்துகொள்வதே தமிழுக்கு நலம் சேர்க்கும். அதுபோலவே ஒருமையா பன்மையா என்பது பற்றிய தெளிவுக்காக ஒரு சொல்லில் இரு விகுதிகள் வரலாம் என்றும் இசைந்து கொடுப்பதே தமிழுக்கு வளம் சேர்க்கும்.

இனி, யார் என்ன செய்தாலும் எப்படி அழுது புரண்டாலும் தமிழில் கள்ளுக்குத் தடைவிதிக்க முடியாது.

 

நன்றி :

திண்ணை, 04-10-2020

 

Monday, 5 October 2020

பதிப்பகச் சூழலில் செம்மையாக்குநர்கள்

 


பதிப்பகச் சூழலில்

செம்மையாக்குநர்கள்

 கோ. மன்றவாணன்

டிட்டிர் என்பதைத் தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. திருத்தர் என்கிறார்கள். செம்மையாக்குநர் என்கிறார்கள். பதிப்பாசிரியர் என்கிறார்கள். இதுகுறித்துச் சரியான சொல்காண வேண்டும். அதுவரை செம்மையாக்குநர் என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

ஆங்கிலப் பதிப்பக உலகில் தொழில்முறை செம்மையாக்கம் உள்ளது. தமிழில் அப்படி இல்லை. என்றாலும் தெரிந்தோ தெரியாமலோ சிறுஅளவில் செம்மையாக்கப் பணி இங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சிலர், தாங்கள் எழுதும் படைப்புகளை நூலாக்கும் போது, தமக்குத் தெரிந்த எழுத்தாளர்களிடமோ வாசகர்களிடமோ காட்டிக் கருத்துக் கேட்கிறார்கள். தம் படைப்புகளைச் சரிபார்க்கவும் திருத்தம் செய்யவும் இத்தகைய அணுகுமுறை உதவுகிறது. அவ்வாறு உதவியவர்களைத் தங்களின் முன்னுரையில் குறிப்பிட்டு நன்றி தெரிவிக்கிறார்கள்.

சங்க காலங்களில்கூடச் சங்கப் பலகை என்ற அமைப்பை வைத்திருந்தார்கள். அதில் பல புலவர்கள் இருந்தார்கள். ஒருவரின் படைப்பை ஆராய்ந்து அதில் இருக்கிற தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவார்கள். தவிர்க்க வேண்டியவற்றைச் சொல்வார்கள். அந்த வகையில் ஒவ்வொரு படைப்பும் செம்மையாக்கம் செய்யப்பட்டதாக அறிகிறோம். பின்னர் ஏன் அத்தகைய அமைப்பு மறைந்து போனது என்று ஆராய வேண்டி உள்ளது.

அதை மீட்டெடுக்கும் முயற்சி ஒன்று கடலூரில் நடந்தது. கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி என்பவர் வெண்பூக்கள் என்றொரு நூல் எழுதினார். அதைப் படிகள் எடுத்துப் பல இலக்கிய அறிஞர்களிடம் முன்னரே கொடுத்தார். அதில் உள்ள குறை நிறை சுட்டவும் சீர்செய்யவும் கூறியதோடு அதையே சங்கப் பலகை என்ற பெயரில் இலக்கிய நிகழ்வாக நடத்தினார். கொஞ்சம் பெரிய நூல் என்பதால், அந்த நூல் பகுதிகளை மூன்றாகப் பிரித்து மூன்று வெவ்வேறு நாள்களில் அந்த நிகழ்வுகளை அமைத்தார். குறைகள் களையவும் நிறைகள் சேரவும் பல திருத்தங்களை அறிஞர் பெருமக்கள் தெரிவித்தனர். அந்த நிகழ்வுகளில் நானும் பார்வையாளராகக் கலந்துகொண்டேன். நூல் செம்மையாக வருவதற்கு இதுவும் ஒரு நன்முறை என்றே எனக்குத் தோன்றியது. எந்தப் படைப்பாளரும் தன் குறை பலர் முன்னிலையில் வெளிப்படுத்தப்படுவதை விரும்ப மாட்டார். குறையோ நிறையோ எதுவோ என்றாலும் பலர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டுத் திருத்தம் செய்துகொள்ள முன்வந்த க.பொ. இளம்வழுதி அவர்களைப் பாராட்ட வேண்டும்.

பூமிக்கு வந்த நட்சத்திரங்களைப் போல எழுத்தாளர்கள் நிறைந்துள்ளனர். ஆனால் படைப்புகளைச் செம்மையாக்கிப் பதிப்பீடு செய்யும் வழிமுறைகளை அவர்கள் அறியவில்லை. இந்த நிலையில்தான் பதிப்பகங்களை நாடுகிறார்கள். எழுத்தாளர் எழுதித் தந்தவாறு நூலை அச்சிட்டு வெளியிடுவது மட்டுமே போதுமானது அல்ல. எழுத்தாளரின் படைப்பை ஆய்வுக்கு உட்படுத்தி மேம்படுத்த வேண்டும். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்குத்தான் செம்மையாக்குநர்கள் தேவைப்படுகிறார்கள்.

தமிழில் செம்மையாக்குநர்கள் யார்யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இருந்தால் விரல் எண்ணிக்கைக்குள்தான் இருப்பார்கள். அவர்களுக்கும் சில அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டும்.

ஒரு செம்மையாக்குநர் பரந்துபட்ட வாசிப்புப் பழக்கம் கொண்டவராக இருத்தல் முதன்மையானது, தவறில்லாமல் எழுதுவதற்குரிய இலக்கணம் தெரிந்தவராக இருப்பது முக்கியமானது. தட்டச்சு, வடிவமைப்பு, அச்சிடல் பற்றிய நுணுக்கங்களை அறிந்தவராக இருத்தல் மேன்மையானது. தற்கால இலக்கியப் போக்குகளையும் நாட்டு நடப்புகளையும் அறிந்து வைத்திருத்தல் நல்லது. ஐயம் ஏற்படும் இடங்களில் வல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெறத் தயங்கக் கூடாது. எழுத்தாளரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து நடக்க வேண்டும். திருத்துவதால் எழுத்தாளரைவிடத் தான் மேம்பட்டவர் என்ற எண்ணம் தகாது. படைப்பைச் சீர்படுத்தவே முயல வேண்டும். இம்மியளவும் சீர்குலைவுக்குக் காரணமாகிவிடக் கூடாது. மொத்தத்தில் பதிப்புத் துறையில் சில ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தத் தகுதிகளோடு செம்மையாக்குநர்கள் கிடைத்தால் நற்பேறு.

தங்கள் படைப்புகளுக்குத் தாங்களே செம்மையாக்குநர்களாக இருக்கத்தான் பெரும்பாலான எழுத்தாளர்கள் விரும்புகிறார்கள். எனினும் தமிழில் செம்மையாக்குநர்களின் அவசியம் மெல்ல மெல்ல உணரப்படுகிறது.

ஜெயமோகன் அவர்கள், ஆழமான இலக்கிய ஞானமும் உலக ஞானமும் கொண்டவர். அவர்தான் பிறருக்கு வழிகாட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் எழுதிய வெண்முரசு நாவல்களுக்கான செம்மையாக்கப் பணிகளை ஸ்ரீநிவாசன் – சுதா இணையர் மேற்கொண்டார்கள். அந்த இணையரை இணை ஆசிரியர்கள் என்றே பெருமைப்படுத்துகிறார் ஜெயமோகன்.

எழுத்தாளர் மெளனி அவர்களை நாம் அறிவோம். அவரின் சிறுகதைகள் பலவும் எம்.வி. வெங்கட்ராம் அவர்களால் திருத்திச் செம்மையாக்கம் செய்யப்பட்டவைதாம் என்பதை அறிவீர்களா?

படைப்பாளர்கள் சிலருக்கு அறிவுச் செருக்கு  இருக்கும். படைப்பைப் பாராட்டினால் ஏற்றுக்  கொள்வார்கள். குறைசுட்டினால் ஏற்க மறுப்பார்கள். மேலும் குறை சொன்னவரையே வெறுப்பார்கள். தெளிவாகவே தென்படும் முரணைச் சுட்டிக் காட்டினாலும், அதற்குப் புதியதாக ஒரு வழுவமைதி வகுப்பார்கள். “அவர் என்ன, என்னைவிட மேலானவரா? எனக்குத் தெரியாதது அவருக்குத் தெரியுமோ?” என்று செம்மையாக்குநர்களை  எழுத்தாளர்கள் ஏற்பதில்லை. படைப்பை மேம்படுத்தவே செம்மையாக்குநர்கள் உதவுகிறார்கள்; உழைக்கிறார்கள் என்பதை எழுத்தாளர்கள் உணர்தல் வேண்டும்.

ஒருவர் தன் கவிதையைத் திருத்தம் செய்து கொடுங்கள் என்று பணிவாகச் சொல்வார். கவிதையில் தேர்ந்த ஒருவர், அதனைச் செம்மை செய்து தருவதோடு, கவிதை இந்த இடத்திலேயே முடிந்துவிடுகிறது. அதற்கு அடுத்துவரும் மூன்று வரிகள் தேவையில்லை என்பார். அவரிடத்தில் அந்தக் கவிஞர், “ஆமாங்கய்யா சரிங்கய்யா” என்று சொல்லிவிட்டுப் போவார். நூல் வெளிவரும் போது, அந்த மூன்று வரிகளும் நீக்கப்படாமல் அப்படியே இருக்கும். தம் வரிகளை நீக்கப் பெரும்பாலும் கவிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. இதனாலும் தமிழில் செம்மையாக்கம் என்பது தனியாக நிகழவில்லை.

ஒற்றுப்பிழை, சொற்பிழை, இலக்கணப்பிழை பற்றிப் பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அக்கறை இல்லை. அவை பிழைகள் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. பிழை திருத்தங்கள் சொன்னால் அவர்கள் பொருட்படுத்துவதும் இல்லை.

அதே நேரத்தில், படைப்பாளர்களின் புனைவுமொழியைப் புரிந்துகொள்ளாமல் இயந்திரத்தனமான மொழிப்புரிதலோடு பிழைதிருத்தினால்  படைப்புச் சிதைவுறும் என்று ஜெயமோகன் சுட்டிக்காட்டி உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூறியது கூறல் என்பது பெரும்பாலும் வருகிறது. முந்தைய பத்தியில் சொன்னவற்றை இரண்டொரு பத்திகள் தள்ளி, வேறு சொற்களில் அதே கருத்தைச் சொல்பவர்கள் உண்டு. தொடர்புடைய செய்திகளைக் கலைத்துப் போட்டிருப்பார்கள். தேவைக்கு மேல் சொற்களைக் குவிப்பவர்கள் உண்டு. அதனால் பொருள்மயக்கம் ஏற்படும் நிலையும் நேருவது உண்டு. தற்காலப் படைப்புகளில் இருவேறு பொருள்தரும் சொற்றொடர்களும் பொருத்தமற்ற சொற்பயன்பாடுகளும் வருகின்றன. 

     கட்டுரைத் தொகுப்பாக இருந்தால், ஒரு கட்டுரையில் உள்ள செய்திகள் வேறொரு கட்டுரையில் இருக்கும். சில போது ஒரே செய்தி அடிக்கடி வரும். வரலாற்று நிகழ்வுகளையும் ஆண்டுகளையும் தவறாகக் குறிப்பிட்டு இருப்பார்கள். ஒரு கட்டுரையில் சொன்னதில் இருந்து, இன்னொரு கட்டுரையில் முரண்பட்டிருப்பார்கள். இவற்றை எல்லாம் சுவடு தெரியாமல் சரி செய்ய செம்மையாக்குநர்கள் உதவுவார்கள்.

பிழை திருத்தமும் செம்மையாக்கத்தின் ஒரு பகுதிதான். ஆனால் தமிழ்ச்சூழலில் பிழை திருத்தம் மட்டுமே நடக்கிறது. அதற்கும் கூடத் தகுதியான பிழை திருத்தர்கள் கிடைப்பதில்லை.

தம் கைப்பட எழுதும்போது ஏராளமான எழுத்துப் பிழைகளோடும் இலக்கணத் தவறுகளோடும் எழுதுகிற எழுத்தாளர்கள் சிலர் உண்டு. ஆனால் இவர்கள் அபாரமான படைப்பாற்றல் மிக்கவர்கள். செம்மையாக்குநர்களின் துணையோடு பிழைகளைக் களைந்து விடலாம். இவர்களின் படைப்பாற்றலுக்கு இணையாக இன்னொருவரைத் தேட முடியாது. இலக்கணம் படித்துத்தான் இலக்கியம் எழுத வரவேண்டும் என்றால் இங்கே நா. பார்த்தசாரதிதான் மிஞ்சுவார்.

நாளிதழ்களில் பருவ இதழ்களில் செம்மையாக்கம் செய்வதற்கு என்றே ஆசிரியர்கள் இருக்கின்றனர். நாளிதழுக்கு ஒரு படைப்பை அனுப்பினால் அதனைச் செம்மையாக்கம் செய்து அழகாக வெளியிடுகிறார்கள். பெரும்பாலும் 500 சொற்களுக்குள் இருக்க வேண்டும். ஒரு பக்கம் அல்லது இரு பக்கங்கள் என்ற அளவுக்குள் வர வேண்டும் என்று அங்கேயும் சில வரையறைகள் வைத்திருக்கிறார்கள். அதனால் படைப்பைச் செம்மையாக்கம் செய்வதைவிட, படைப்பின் அளவைக் குறைப்பதே சில இதழாசிரியர்களின் எடிட்டிங் கலையாக உள்ளது. அவர்கள் அப்படி வெட்டி எறிவதற்கு எழுத்தாளர்களின் இசைவைப் பெறுவதில்லை. படைப்பைச் சுருக்கவும் திருத்தவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு என்று தங்கள் இதழில் முன்னரே குறிப்பிட்டு விடுகிறார்கள்.

தங்கள் படைப்பில் எதையும் வெட்டக் கூடாது என்றும் எதையும் திருத்தக் கூடாது என்றும் இதழாசிரியர்களுக்குக் கட்டளை இடும் பெரிய எழுத்தாளர்களும் உண்டு. புகழ்மிகு எழுத்தாளர்கள் எதை எப்படி எழுதினாலும் அதில் எந்தத் திருத்தமும் செய்யாமல் அப்படியே வெளியிடுகிற இதழாசிரியர்களும் உண்டு.

தமிழகத்தின் தலைசிறந்த நாளிதழுக்கு அறுநூறு சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை அனுப்பினேன். நானூறு சொற்களில் அந்தக் கட்டுரையைச் சுருக்கியதோடு அருமையான தலைப்பும் சூட்டி வெளியிட்டு இருந்தார்கள். வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில்  பொருத்தமான படமும் அழகான பக்க வடிவமைப்பும் செய்திருந்தார்கள். படித்துப் பார்த்த எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்போதுதான் எடிட்டிங் கலை எவ்வளவு முக்கியமானது; அவசியமானது என்பதை உணர்ந்தேன். உடனே அந்த இதழ் ஆசிரியருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மடல்விடுத்தேன்.

பொதுவாக எடிட்டிங் என்றால் அது திரைப்படத் துறை சம்பந்தப்பட்டது என்றே பலரும் அறிவார்கள். ஒரு படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதற்கும், குழப்பம் இல்லாமல் கதை சொல்வதற்கும் எடிட்டிங் முக்கியமானது. எடிட்டிங் சரி இல்லாததால் தோல்வி கண்ட படங்கள் பல உண்டு. திரைப்படத்துக்கு அடுத்ததாக, இதழ்களில் எடிட்டிங் கலையைக் கையாண்டு வருகிறார்கள். தமிழ்ப் பதிப்பகச் சூழலில்தான் எடிட்டிங் பற்றிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

படைப்புகளைச் செம்மையாக்கம் செய்து வெளியிடுவதில் அக்கறை கொண்ட பதிப்பகங்கள் மிகக்குறைவாக உள்ளன. பெரும்பாலான பதிப்பகத்தார் வணிகர்களாக இருக்கிறார்களே தவிர, இலக்கிய நுகர்வு கொண்டவர்களாக இல்லை. அதனாலும் செம்மையாக்கம் பற்றி அவர்கள் கவலைப்படுவது இல்லை. பிழை திருத்தும் பொறுப்பையும் எழுத்தாளர்களிடமே விட்டுவிடுகின்றனர். அவர்கள் சுட்டிய பிழைகளை மட்டும் சரிசெய்துவிட்டு, அந்தக் கோப்பை அப்படியே அச்சகத்துக்கு மின்னஞ்சல் செய்துவிடுகிறார்கள்.

பொதுவாக நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தெரியாது. அடுத்தவர்களின் பார்வையில்தான் அவை தென்படும். அதனால், படைப்பை எழுதி முடித்தவுடன் செம்மையாக்குநர்களிடம் தரவேண்டும். அப்போதுதான் எழுத்தாளருக்கே தெரியாத தவறுகள், முரண்கள், தெளிவின்மைகள், தொய்வான இடங்கள் போன்றவற்றைக் கண்டறிந்து சரிசெய்ய முடியும்.

செம்மையாக்கம் செய்யும்போது எழும் ஐயங்களைக் களைய ஆசிரியருடன் விவாதித்துத் தீர்வுகாண வேண்டும். செம்மையாக்கம் செய்து முடித்தவுடன் ஆசிரியரின் இசைவு பெறுதல் இயற்கை நீதிகளில் ஒன்று.

எழுத்தாளர்கள் உணர்வு வேகத்தில் தமக்குள்ளிருந்து வருவதை எல்லாம் கொட்டி விடுவார்கள். எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்ப அவற்றை ஒழுங்கமைக்க வேண்டியது அவசியம். அந்த இடத்தில்தான் செம்மையாக்கத்தின் இன்றியமையாமை ஏற்படுகிறது. அதனால் பதிப்பகச் சூழலில் வடிவமைப்போர், அச்சிடுவோர் என்பனர் போல், செம்மையாக்குநர்கள் என்று ஒரு பிரிவினர் உருவாக வேண்டும்.

எழுத்தாளரும் செம்மையாக்குநரும் ஒரே திசையில் இணைகோடுகளாக பயணிக்கும் வகையில் நற்சூழலைப் பேணிக் காக்க வேண்டும்.

பரிந்துரை :

ஜெயமோகன் தளத்தில் “வெண்முரசின் இணையாசிரியர்கள்” என்ற கடிதத்தைப் படியுங்கள்.

எடிட்டிங் பற்றி ஜா. ராஜகோபாலனும் காளி ப்ரஸாத்தும் இணைந்து ஒளிஒலிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதையும் பாருங்கள்.

நன்றி :

திண்ணை, 27-09-2020


Tuesday, 29 September 2020

கள்ளுண்டு தள்ளாடும் தமிழ்


கள்ளுண்டு தள்ளாடும் தமிழ்

கோ. மன்றவாணன்

ள் என்றாலே மயக்கம் தருவது. “கள்” விகுதியும் நம் புலவர் பெருமக்களுக்கு மயக்கம் தந்துள்ளது.

எழுத்துகள் என்று எழுத வேண்டுமா? எழுத்துக்கள் என்று எழுத வேண்டுமா? வாழ்த்துகள் என்று எழுத வேண்டுமா? வாழ்த்துக்கள் என்று எழுத வேண்டுமா? என்றெல்லாம் இலக்கணப்போர் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போர் முடிவதுபோல் தெரியும். ஆனால் முடிவது இல்லை.

“முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்” என்றொரு திரைப்பாடலைக் கண்ணதாசன் எழுதி இருந்தார். “சித்திர மண்டபத்தில் சில முத்துகள் கொட்டி வைத்தேன்” என்று அவரே இன்னொரு பாடலும் எழுதினார். இவற்றுள் முத்துக்கள் சரியா? முத்துகள் சரியா? இசையின் தேவைக்கே முதன்மை தரும் திரைப்பாடல்கள் ஆக்கத்தில் யாரும் இலக்கணத்தைக் கறாராகக் கடைப்பிடிப்பது இல்லை. ஆகவே அவற்றை எடுத்துக் காட்டுகளாகக் காட்ட வேண்டியது இல்லை என்பாரும் உண்டு. இங்கேயும் கேள்விகள் எழுகின்றன. எடுத்துக் காட்டுகளா? எடுத்துக் காட்டுக்களா?

‘கள்” விகுதி பின்னர் வந்தது என்று புறக்கணிப்போர் உண்டு. அப்படியானால் வாழ்த்து என்பதற்கும் எழுத்து என்பதற்கும் பன்மைச்சொற்கள் என்ன என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். பின்னர் வந்தது என்று எதிர்ப்போர் யாரும் மொழியின் வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் ஆவார்கள்.

தமிழின் ஒருமை பன்மைக் குழப்பத்தைத் தீர்க்கவே ‘கள்” விகுதியைத் தமிழியல் அறிஞர்கள் சேர்த்து இருக்கின்றனர். தமிழைச் செம்மைப்படுத்திய செயலே அது.

1330 குறள்கள் எழுதிய திருவள்ளுவர், ஏன் திருக்குறள்கள் என்று பெயர் சூட்டாமல், திருக்குறள் என்றார் என்று எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு உரிய பதிலை அவர் தரவில்லை. ஆனால், கள் என்பது வள்ளுவர்க்கு எதிரானது என்று நகைச்சுவையாகவும் நயமாகவும் சொல்லி நகர்ந்துள்ளார்.

இந்தக் கட்டுரையில் அடிக்கடி வன்தொடர்க் குற்றியலுகரம் என்ற இலக்கணப் பெயர் வரும். அப்படி என்றால் என்ன என்று பலருக்குத் தெரியாது. பள்ளிக் கூடத்தில் இலக்கணத்தை நாம் புரிந்து படித்ததில்லை. மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் பெற்றோமே அன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே....

ஒருசொல் உகர ஓசையில் முடிய வேண்டும். எடுத்துக் காட்டு : குறுக்கு. இந்தச் சொல்லில் வரும் ‘கு” என்பதில் உகர ஓசை இருக்கும். இப்படி வரும் உகர ஓசை எழுத்துக்கு முன் க், ச், த், ப், ற் ஆகிய மெய் எழுத்துகளில் ஒன்று வரும். எடுத்துக் காட்டுகள் : முறுக்கு, மெச்சு, வெறுத்து, பொறுப்பு, கற்று. இப்படிச் சொற்கள் வந்தால் அவற்றைக் குற்றியலுகரச் சொற்கள் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்.

எழுத்து என்பதும் வாழ்த்து என்பதும் வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும். வன்தொடர்க் குற்றியலுகரம் நிலைமொழியாக இருக்கும்போது வரும்மொழியாக, க, ச, த, ப ஆகிய வகையறாவின் எழுத்துகளில் தொடங்குகிறச் சொற்கள் வந்தால் ஒற்று மிகும். இந்த இலக்கண விதியை அடிப்படையாகக் கொண்டே நம் புலவர் பெருமக்கள் வாழ்த்துக்கள் என்றும் எழுத்துக்கள் என்றும் எழுதி வந்துள்ளனர். இவை புழக்கத்திலும் உள்ளன. இக்கட்டுரை எழுதுவதற்கு முன்பாகப் பலரைப் பேசச் சொல்லிக் கேட்டேன். அவர்கள் “வாழ்த்துக்கள்” என்றே சொல்லிக் கை குலுக்கினர். அவர்களையே பாராட்டு என்பதற்கான பன்மைச்சொல் என்ன என்று கேட்டேன். அனைவரும் பாராட்டுகள் என்றுதான் உச்சரித்தார்கள்.

வாழ்த்துக்கள் என்று  சொல்லும் போது.... அதில் ஓர் அழுத்தம் இருக்கிறது. ஆழம் இருக்கிறது. அன்பின் வலு இருக்கிறது என்று சிலர் கூறி வருகிறார்கள். அதை அவர்கள் பாணியிலேயே மறுக்கலாம். அன்பு என்பது மென்மையானது. அன்பின் வலிவைக் காட்ட, அதை அழுத்தமாக வலுவாக உச்சரிக்கக்கூடாது என்று சொல்லலாம். இவையெல்லாம் வாதத் திறமையை வெளிப்படுத்துமே தவிர... உண்மை கண்டறிவதற்கு உதவாது. இப்படிப் பேசுவதில் நயம் காண முடியுமே தவிர, ஞாயம் காண முடியாது.

திருக்குறளுக்கு உரை எழுதிய  பரிமேலழகர், பேராசிரியர் மு.வரதராசனார், புலவர் குழந்தை, மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோர்எழுத்துக்கள்” என்றுதான் எழுதியுள்ளனர்நன்னூல் விருத்தி உரைக்கு விளக்கவுரை எழுதியுள்ள பெரும் புலவர் பேராசிரியர் .தண்டபாணி தேசிகரும் எழுத்துக்கள் என்றே எழுதியுள்ளார். கற்றறிந்த தமிழறிஞர்களாகிய அவர்களின் அடியொற்றி எழுத்துக்கள், வாழ்த்துக்கள் என்று எழுதலாம் என்கிறார்கள். இதில் இருந்து வேறு ஒன்றும் தெளிவாகிறது. இந்த அறிஞர்கள் யாவரும் கள் விகுதியை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பின்னர் வந்தது என்று புறக்கணிக்கவில்லை.

சொல்லோடு சொல் சேர்வதற்கு மட்டுமே இந்த வன்தொடர்க் குற்றியலுகர விதி பொருந்தும். விகுதிக்குப் பொருந்தாது. எனவே எழுத்துகள், வாழ்த்துகள் என்று எழுதுவதே சரி என்று வாதிடுவோர் உள்ளனர்.

இரண்டு சொற்கள் இணையும் போதுதான் ஒற்று மிகுமா மிகாதா எனப் பார்க்க வேண்டும்.

“கள்” என்பது சொல் இல்லை. அது விகுதிதான். ஆகவே “கள்” என்ற விகுதி வரும்போது ஒற்று மிகாது என்றே தமிழ் இலக்கணம் சொல்வதாகச் சிலர் எழுதியும் பேசியும் வருகின்றனர். அதற்கான இலக்கணச் சான்றுகள் என்ன என்று காட்டவில்லை. அவர்கள் சொல்வது சரியில்லை என்றே கருதுகிறேன்.

நன்னூல் வகுத்த விகுதிகளில் “ப“ என்பதும் ஒரு விகுதி. நட + ப என்பன சேர்ந்து நடப்ப... என்று வருகிறது. இந்த இடத்தில் விகுதிக்கு முன் ஒற்று மிகுந்துள்ளது.

நிலா, பலா, தாத்தா, ஆயா என ஆகாரம் ஈற்றாக வரும் சொற்களில் “கள்“ விகுதி சேரும் போது ஒற்று மிகுகிறது.

எ.கா. : நிலாக்கள், பலாக்கள், தாத்தாக்கள், ஆயாக்கள்

கணு, மரு, பசு, கரு, உரு, பரு, உடு என வரும் ஈரெழுத்து உகர ஈற்றுச் சொற்களில் “கள்” விகுதி இணையும் போது ஒற்று மிகத்தான் செய்கிறது.

எ.கா. : கணுக்கள், மருக்கள், பசுக்கள், கருக்கள், உருக்கள், பருக்கள், உடுக்கள்.

பூ, ஈ போன்ற ஒற்றை நெடிலெழுத்துச் சொற்களில் கள் விகுதி சேரும் போது ஒற்று மிகுகிறது.

எ.கா. : பூக்கள், ஈக்கள்

ஆக... பலவாறு சிந்தித்தாலும் “கள்“ விகுதிக்கு முன் ஒற்று மிகும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சொல்லும் ஒரு விகுதியும் சேரும் போது ஒற்று மிகாது என்று இவர்கள் எப்படி அடித்துச் சொல்கிறார்கள்?

ஃஃஃ

வாழ்த்து, எழுத்து ஆகிய வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களோடு “கள்” விகுதி இணையும் போது ஒற்று மிகும் என்று சொல்கிற மறுதரப்பினர் இருக்கிறார்கள்.  

கணக்கு, நாக்கு, சிரிப்பு, வளர்ப்புப் போன்ற வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களோடு “கள்” விகுதியைச் சேர்த்து எழுதவோ பேசவோ சொல்லிப் பாருங்கள். அவர்கள் அத்தனை பேரும் கணக்குகள், நாக்குகள், சிரிப்புகள் வளர்ப்புகள் என்றே எழுதுவார்கள்; பேசுவார்கள்.

தோப்பு என்பதன் பன்மையாகத் தோப்புகள் என்றே எழுதுகின்றனர். தோப்புக்கள் என்று எழுதுவது இல்லை. தோப்பிலுள்ள கள் என்று மற்றொரு பொருள்தரும் என்பதால் அப்படி எழுதுவது இல்லை என்கிறார்கள். வாழ்த்துக்கள் என்றாலும் வாழ்த்து எனும் கள் என்று பொருள்தரும். சொற்களில் சிலேடை காண்பது புலவர்களின் நுண்திறன். அதை இலக்கண விதிகளோடு பொருத்திப் பார்க்க வேண்டியது இல்லை. ஆனால் கருத்துத் தெளிவுக்காக இருபொருள் குழப்பம் தவிர்க்கலாம்.

வாழ்த்து, எழுப்பு, நொறுக்கு, முறுக்கு, நிரப்பு, பரப்பு ஆகிய வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுடன் “தல்” விகுதி சேரும்போது வாழ்த்துதல், எழுப்புதல், நொறுக்குதல், முறுக்குதல், நிரப்புதல், பரப்புதல் என்றே வருகின்றன. வாழ்த்துத்தல், எழுப்புத்தல், நொறுக்குத்தல், முறுக்குத்தல், நிரப்புத்தல், பரப்புத்தல் என்று எழுதுவது இல்லை. வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுடன் “தல்” விகுதி சேரும்போது ஏன் ஒற்று மிகவில்லை என்று இந்த மறுதரப்பினரும் சிந்திக்கட்டும்.

இலக்கிய அன்பர்கள் இடையே வாழ்த்துகளா... வாழ்த்துக்களா... எழுத்துகளா... எழுத்துக்களா... என்ற விவாதம், தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. இந்தக் குழப்பம் களைய அவ்வப்போது சிலர் முயன்று வருகின்றனர்.

இப்படியும் எழுதலாம்... அப்படியும் எழுதலாம்... என்று சில பெரும்புலவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள்தாம் உண்மையிலேயே நடுநிலை வகிப்பவர்கள்.

இப்படியும் எழுதலாம் அப்படியும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என்று சொல்வது விதியில்லை, நல்ல வழிகாட்டல் இல்லை. இரண்டில் ஒன்று தெளிவாகத் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்போரும் எதிர்க்குரல் கொடுப்போரும் உண்டு.

குழப்பங்களைத் தீர்க்கவும் தெளிவு பிறக்கவுமே இலக்கண விதிகள் வகுக்கப்படுகின்றன.  காலத்துக்கு ஏற்ப இலக்கண விதிகளை ஆராய்ந்து அவற்றில் மாற்றங்கள் கொண்டு வரலாம். புது விதிகளும் உருவாக்கலாம். இலக்கியம் வளர்வதுபோல் இலக்கணமும் வளர வேண்டும்.

இந்தச் சிக்கலுக்கு என்ன செய்வது?

“கள்” விகுதி வந்தால் ஒற்று மிகும் என்று ஒற்றை விதியை வகுத்துவிட வேண்டும். அப்படிச் செய்தாலும் சில இடங்களில் இடிக்கின்றன.

“கள்” விகுதி வந்தால் எந்த இடத்திலும் ஒற்று மிகாது என்று சொல்லிவிட வேண்டும். அப்படிச் செய்தாலும் நிலா, பலா, உரு, உடு போன்ற சொற்கள் வந்து இடித்துரைக்கின்றன.

இப்படியும் போக முடியவில்லை. அப்படியும் போக முடியவில்லை. குழம்பிப்போய்த் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்துவிடுவதா என்றும் தெரியவில்லை.

ஆக, “கள்” விகுதி ஒற்று மிகுந்தும் வருகிறது. ஒற்று மிகாமலும் வருகிறது. கள் என்பதால்தான் இப்படித் தடுமாறுகிறதோ என்னவோ?

ஆழ்ந்து சிந்தித்தால் வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களில் மட்டும்தாம் “கள்” விகுதி, குழப்பத்தை விளைவிக்கிறது.

மொழி என்பது ஆய்வகத்தில் வைத்து உருவாக்கப்பட்டது இல்லை. மொழி என்பது முன்திட்டம் இட்டுக் எழுப்பப்பட்ட கட்டடம் இல்லை. இயற்கையாகத் தோன்றும் மொழிகளுக்கு இலக்கண விதிகளை வகுக்கும்போது விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்யும். அந்த அடிப்படையில் கீழ்க்கண்டவாறு ஒரு முடிவுக்கு வரலாம்.

ஓரெழுத்து ஒரு மொழியாக இருக்கும் பா, பூ, ஈ போன்ற நெடில் எழுத்துச் சொற்களோடும்- நிலா, பலா, தாத்தா, ஆயா போன்ற ஆகார ஈற்றுச் சொற்களோடும்- உரு, உடு போன்ற ஈரெழுத்து உகர ஈற்றுச் சொற்களோடும் “கள்” விகுதி சேரும்போது ஒற்று மிகும். வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் உட்பட வேறு எந்தச் சொற்களோடும் “கள்” விகுதி சேருகிற போது ஒற்று மிகாது.

மேலே சொன்னவற்றுள், ஒற்றை நெடிலெழுத்துச் சொற்களில் ஐ இனத்தைச் சேர்க்கவில்லை என்பதை அறிக. பைகள், கைகள் என்றே அவை ஒற்று மிகாமல் வருகின்றன. ஐ என்பதை யாப்பிலக்கணத்தில் குறிலாகவும் கொள்வார்கள் நெடிலாகவும் கொள்வார்கள். அதன்படி ஐ என்பதைக் குறிலாகக் கருதலாம். அல்லது ஐ என்பதை விதிவிலக்காக வைக்கலாம்.

எந்த விளக்கம் சொன்னாலும் அதிலிருந்து ஒரு கேள்வி கிளைத்துக் கொண்டே இருக்கும். அதிலிருந்து ஒரு விதிவிலக்கு முளைத்துக்கொண்டே இருக்கும். இந்தக் கள் மயக்கத்தை எப்படித்தான் தெளிய வைப்பது?

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களோடு “கள்” விகுதி சேரும்போது மட்டுமே குழப்பம் வருகிறது. வேறு எந்த இடத்திலும் “கள்” மிகுமா மிகாதா என்ற மயக்கம் நமக்கு ஏற்படுவதில்லை. வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களைத் தவிர்த்துப் பிற சொற்களைக் கையாளும்போது இயற்கையாகவே “கள்” விகுதியைச் சரியாகப் பயன்படுத்தி வருகிறோம்.

எனவே,

குழப்பத்துக்குக் காரணம் வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள்தாம் என்பதால், “கள்” விகுதி வருகிறபோது வன்தொடர்க் குற்றியலுகரப் புணர்ச்சி விதி பொருந்தாது என்று அறிவித்துவிடலாம்.

வாழ்த்துகள் என்றே வாழ்த்துங்கள்.

எழுத்துகள் என்றே எழுதுங்கள்.

இன்றைய மொழிப்பயன்பாட்டு முறைமைக்கும் கற்றலின் எளிமைக்கும் இதுவே சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். எனினும் ஒருபோதும் புலவர்களின் சண்டை ஓய்வதே இல்லை, அலைகளைப் போலவே...

 

Tuesday, 15 September 2020


யாப்புக் கவிதைகளின் எதிர்காலம்?

கோ. மன்றவாணன்

ந்தத் தலைப்பைப் படித்தவுடன் யாப்புக்கு ஏது எதிர்காலம் என்று கேள்வி வடிவிலேயே பதிலைச் சொல்வீர்கள்.

சங்கம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் ஒருபகுதி வரை நம் கவிதை இலக்கியங்கள் யாவும் யாப்பு முறையில் எழுதப்பட்டவையே. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் யாப்புக் குறித்து எழுதப்பட்டுள்ளதால், அதற்கு முந்தைய காலங்களில் வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்றவை இருந்துள்ளன என்பதை ஊகித்து அறிய முடியும்.

தம் படைப்புகளை வெளிப்படுத்தவும், அவற்றைப் பிறரின் நினைவில் பதிப்பதன் வழியாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லவும், நம் மூதாதையர் கண்ட முறைமையே யாப்பு ஆகும். அதாவது எளிதாக மனதில் பதிவதற்கும் மனப்பாடமாகச் சொல்வதற்கும் ஏற்றவை யாப்புக் கவிதைகளே. முதல்வரியோ முதல்சொல்லோ நினைவுக்கு வந்துவிட்டால் முழுப் பாடலையும் எளிதில் சொல்லிவிட முடியும். அது அந்தக் காலத்துக்குத் தேவையாக இருந்திருக்கிறது.

திருக்குறளில், தேவாரத்தில், திருவாசகத்தில், கம்ப ராமாயணத்தில், திருஅருட்பாவில் உள்ள கவிதைகளை நம் முன்னோர் மனப்பாடமாக ஓதி வந்துள்ளார்கள். இன்றும் சிலர் ஏடு புரட்டாமல் நினைவைப் புரட்டியே அந்தக் கவிதை வரிகளை அருவியெனக் கொட்டுகிறார்கள். இதற்குக் காரணம் யாப்புக் கட்டுமானமே.

பாமர மக்களிடத்தில் புழங்கும் பழமொழிகள் பல தலைமுறைகளாக மக்களிடத்தில் தொடர்வதற்கு, அவற்றில் அமைந்துள்ள யாப்பு ஒழுங்கும் ஒரு காரணம் ஆகும். ஓசை ஒழுங்கில் பாடுகிற நாட்டுப்புறப் பாடல்களில் இயற்கையாக அமையும் யாப்புக் கட்டுமானம் உண்டு.

இன்றும் பாரதியார் கவிதைகளை, பாரதிதாசன் கவிதைகளை, கண்ணதாசன் கவிதைகளை முழுமையாகச் சொல்வோர் உண்டு. ஆனால் வசன கவிதைகளையோ புதுக்கவிதைகளையோ நவீன கவிதைகளையோ வரிமாறாமல் மனப்பாடமாகச் சொல்ல முடியாது. வேண்டுமானால் ஓரிரு வரிகளை மட்டும் சொல்ல முடியும். இருப்பினும், மோனை அழகோடு எழுதப்படும் புதுக்கவிதைகள் சிலவற்றை மனப்பாடமாகச் சொல்ல முடியும். அதற்கும் யாப்பின் ஒரு கூறாகிய மோனை உதவுகிறது.

அச்சுப் பதிவுகளும் எண்மப் பதிவுகளும் எளிதாக உள்ள இந்தக் காலத்தில் எதையும் நினைவில் சுமக்க வேண்டியதில்லை. அதனால் புதுக்கவிதைகளையும் நவீன கவிதைகளையும் நினைவில் வைத்துப் பாதுகாக்காமல் தேவையான போது ஏடு திறந்தோ, கணினி திறந்தோ, திறன்பேசி திறந்தோ பார்த்துக்கொள்ள முடிகிறது.

இருபதாம் நூற்றாண்டில்தான் வசன கவிதைகளும் புதுக்கவிதைகளும் நவீன கவிதைகளும் மலர்ந்தன. இக்காலக் கட்டத்திலும் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் என மரபுக் கவிஞர்கள் பெருஞ்செல்வாக்குப் பெற்றுள்ளனர். இவர்களைப் படித்துக் கவிஞர்கள் ஆனவர்கள் அதிகம்.  இதே இருபதாம் நூற்றாண்டில் அப்துல் ரகுமான், மேத்தா, மீரா, வைரமுத்து போன்றவர்கள், மரபுக் கவிதைகளையும் எழுதினார்கள். புதுக்கவிதைகளையும் எழுதினார்கள். புதுக்கவிதைகளின் வளர்ச்சியில் பெரும்பங்கு இவர்களுடையது. இவர்களைப் பார்த்துத்தான் ஏராளமானோர் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்கள். கவிஞர்கள் தொகை வளர்ச்சிக்குப் புதுக்கவிதை இயக்கம் ஒரு காரணம். மேலும் ந. பிச்சமூர்த்தி, நகுலன், பசுவய்யா, பிரமிள் போன்றவர்கள், புதுக்கவிதை வீச்சுகளைத் தாண்டியும் கவிதை படைத்தார்கள்.

இந்த இருபத்து ஓராம் நூற்றாண்டிலும் புதுக்கவிதை செல்வாக்கு கொண்டுள்ளது.  என்றாலும், நவீன கவிதையின் வளர்ச்சியும் மேலோங்கி வருகிறது. தற்காலத்தில் புதுக்கவிதைகளை விடவும் நவீன கவிதைகளையே தரம் மிகுந்த இலக்கிய இதழ்கள் வெளியிடுகின்றன. இந்தக் கவிதைப் போக்குகள் தமிழுக்குப் பெருமை சேர்ப்பதோடு புதுமையையும் சேர்க்கின்றன. நவீன கவிதை நூல்கள் நிரம்ப வருகின்றன. ஒவ்வொன்றும் தனிச்சிறப்புக் கொண்டதாக உள்ளது.

யாப்பு வடிவத்தைப் புறக்கணித்து விட்டாலும் புதுக்கவிதைகளில் மரபின் நீட்சி உண்டு. இன்றைய நவீன கவிதைகளிலும் சங்க இலக்கியத் தாக்கங்கள் உண்டு.

காலம் தோறும் கவிதை வடிவங்களும் போக்குகளும் மாறித்தான் வந்துள்ளன. ஒன்றிலிருந்து ஒன்று எனப் புதுவடிவம் தோன்றுவது இயற்கையானது. அப்படித்தான் இப்போது நவீன கவிதை உருவாகி வந்துள்ளது. நவீன கவிதைக்குப் பிறகும் இன்னொரு நனிநவீன கவிதையோ வேறொன்றோ நிச்சயமாக வரும். அதையும் வரவேற்போம்.

எனினும்-

எல்லாக் கவிதை வகைப்பாடுகளும் மதிப்புக்கு உரியவை. ஒரே வகைப்பாட்டில் கவிதை எழுதி அலுப்புவதைவிட எல்லா வகைப்பாடுகளிலும் கவிதை எழுதலாம். இங்கு நவீன கவிதை எழுதுபவர்கள், புதுக்கவிதையையும் மரபுக் கவிதையையும் ஒதுக்குகிறார்கள். புதுக்கவிதை எழுதுபவர்கள், மரபுக் கவிதையையும் நவீன கவிதையையும் வெறுக்கிறார்கள். சிலர் ஒரே வகைப்பாட்டில் பழகி விட்டதால் பிற வகைப்பாடுகளில் எழுதத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் புதுக்கவிதையும் நவீன கவிதையும் நல்ல நிலையில் வளர்ந்து வருகின்றன. ஆனால் மரபுக் கவிதைக்கு எதிர்காலம் இருக்குமா என்பதுதான் கேள்விக்குறி. இரண்டாயிரம் ஆண்டு காலத்துக்கும் மேலாக நிலைத்து நீடித்து வந்த யாப்புக் கவிதை மரபு, இந்த 21 ஆம் நூற்றாண்டில் அழிவு நிலையில் உள்ளது. யாப்புக் கவிதை எழுதும் யாரோ சிலரையும் ஏளனமாகப் பார்க்கும் நிலையும் இலக்கிய நிகழ்வுகளில் காண முடிகிறது.

மரபுக் கவிதைகள் எழுதுவோர் குறைந்து வருகிறார்கள் என்பதைவிட மறைந்து வருகிறார்கள் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மரபுக் கவிதை ஏன் இந்த நிலையில் இருக்கிறது என்று கவிதை நண்பர்களிடம் கேட்டேன்.

இன்றும் மீன்விழி மான்விழி என்றே எழுதிக் குவிக்கிறார்கள். உவமைகளில் புதுமை இருப்பதில்லை. புதிய பாடுபொருள்கள் இல்லை.  சொல்லும் முறையில் புதுக்கோணம் காண்பதில்லை. காலம் என்ற சொல்லில் தொடங்கினால் ஞாலம் பாலம் நீலம் சூலம் ஜாலம் என்று ஒரே மாதிரியான எதுகை போட்டு எழுதி எழுதித் தமிழைத் தேய்த்துவிட்டார்கள் என்று நண்பர் ஒருவர் சொன்னார். இதில் உண்மை இல்லாமல் இல்லை.

யாப்புச் சட்டகத்துக்குள் சொற்களை அடைத்துவிட்டால் அது கவிதை ஆகிவிடாது. அப்படிச் சொற்களை அடைத்ததனால்தான் மரபுக் கவிதை வீழ்ச்சி அடைந்தது என்று ஒரு தோழி சொன்னார். இதிலும் மெய் இருக்கத்தான் செய்கிறது.

பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களுக்கே இன்னமும் இலக்கணம் பிடிபடவில்லை. அதிலும் யாப்பு இலக்கணம் சொல்லித் தரும் அளவுக்கு திறன் உள்ளவர்கள் இல்லை. ஒரு பொருளில் ஒருவருக்கு முழுப்புரிதல் இருந்தால்தான் அடுத்தவர்க்குப் புரியும்படிச் சொல்லித்தர முடியும். ஆசிரியருக்கே புரியவில்லை என்றால் மாணவர்களுக்கு எப்படிப் புரியும்?  நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என்று மனப்பாடம் செய்யச் சொல்லி அடுத்த பாடத்துக்குத் தாண்டுகிறார்களே தவிர, மாணவரை யாப்பு வடிவில் கவிதை எழுதத் தூண்டுவதில்லை என்று தமிழாசிரியர்கள் மீது பழி சுமத்தினார் இன்னொரு தோழர்.

யாப்புக்குள் கவிதை எழுதும்போது, அதில் நம் எண்ணங்களை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. யாப்பு, நம் சுதந்திர சிந்தனைக்குத் தடை போடுகிறது. இதனால்தான் கட்டற்ற கவிதைபாட புதுக்கவிதைகளும் நவீன கவிதைகளும் மலர்ந்தன என்று வாதிடுவோர் உண்டு.

இது குறித்துச் சில மரபுக் கவிஞர்களிடம் பேசிய போது, யாப்பே நம் சிந்தனையைத் தூண்டும் என்று சொன்னார்கள். எதுகைக்கு ஏற்பவும் மோனைக்கு ஏற்பவும் கருத்துகள் உருவாகிவரும் என்றார்கள்.

யாப்பு அழிவதால் கவிதை இலக்கியத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது என்று துடிப்பான இளைய கவிஞர் ஒருவர் சொன்னார்.

யாப்பு முதுமுதுமை அடைந்துவிட்டது. யார் தூக்கி நிறுத்தினாலும் அதனால் நடமாட முடியாது. அது தானாகவே மறைந்து போகும். ஒரு பழைமை அழிந்தால்தான் ஒரு புதுமை நிலைகொள்ள முடியும் என்றும் ஒருவர் சொன்னார்.

பழைமை என்பதால் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட முடியாது. புதுமைகளுக்கு இடம் அளித்தபடிச் சில பழைமைகள் காலம் தோறும் உடன்வரும். அந்த வகையில் யாப்பையும் பேணிப் பாதுகாக்கலாம் என்றார் ஒரு கவிதை ரசிகர்.

புதுக்கவிதைகள் எழுதிவரும் பலரிடம் பேசி இருக்கிறேன். அவர்களில் சிலருக்கு மரபுக் கவிதைகள் எழுத ஆசை இருக்கிறது. ஆனால் அதன் இலக்கணம் புரிபடவில்ல; புரிய வைப்பாரும் இல்லை என்கிறார்கள். புதுக்கவிதை எழுதும் சிலர், பாரதியார் பாரதிதாசன் கவிதைகளைப் படித்துவிட்டு, அதே வடிவத்தில் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் அதில் வடிவம் இருக்கிறதே தவிர அதற்குரிய இலக்கணம் இல்லை. வெண்பா போல விருத்தம் போல சிலர் எழுதுகிறார்கள். ஆனால் வெண்பாவில் தளை தட்டுப்படும். விருத்தத்தில் சீர்குறையும் அல்லது நீளும். குறைசொல்லியே பேர் வாங்கும் புலவர்களுக்கு அது அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிடும். தவறுகளைச் சுட்டிக் காட்டி, அந்த இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கத்தான் தகுந்த கவிஞர்கள் இங்கு இல்லை. “நாம் கற்றுக் கொடுத்தால் அவன் நன்றாக எழுதிப் பேர் வாங்கி விடுவான்” என்று சிலர் கற்றுத் தருவதும் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன், மரபுக் கவிதைக்கு மின்சாரம் பாய்ச்ச வேண்டும் என மெனக்கீடு செய்து வைரமுத்து அவர்கள் மரபுக் கவிதைகளை எழுதி வந்தார்கள். அதுதான் “ரத்த தானம்” என்ற கவிதை நூலாக வந்தது என்று கருதுகிறேன். கல்கியில் மரபுக் கவிதைப்  போட்டிகூட வைத்தார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன், பல இலக்கிய இதழ்களில் வெண்பா போட்டி நடத்தி வந்தனர். ஈற்றடி கொடுத்துவிடுவார்கள். மீதி மூன்று அடிகளை எழுதி அனுப்ப வேண்டும். கண்ணதாசன் நடத்திய தென்றல் இதழில் வந்த வெண்பா போட்டிகள் மிகவும் புகழ்பெற்றவை. எழுபதுகளில் தமிழக அரசு வெளியீடான தமிழரசு இதழில் வெண்பாப் போட்டிகள் நடந்தன. மரபுக் கவிதைக்காகவே தெசிணி என்பவர், கவிதை என்ற இதழைப் பல ஆண்டுகாலமாக நடத்தி வந்தார். தலையங்கம், பேட்டிகள், எல்லாம் கவிதையாக வடித்து நடத்தி வந்தார்.

இவை எல்லாம் மரபுக் கவிதையைப் காப்பாற்றவும் வளர்க்கவும் எடுத்த முயற்சிகள். இப்போது இந்த முயற்சிகள் எங்கோ இரண்டோர் இதழ்களில் இருக்கக் கூடும். ஆனால் இளைஞர்களை ஈர்க்கக் கூடிய அளவுக்கு முயற்சிகள் இல்லை. புகழ்மிகு இலக்கிய அச்சிதழ்களும் மின்னிதழ்களும் மரபுக் கவிதைகளை வெளியிடுவதில்லை. நம் கண்முன்னே யாப்பு, நம்மைவிட்டுப் பிரிவதைக் காண முடிகிறது.

வள்ளுவர், இளங்கோ, கம்பர் போற்றிய யாப்புக்கு இன்று செல்வாக்கு இல்லை என்று நினைக்கிற போது வருத்தமாகத்தான் இருக்கிறது. வள்ளலார், பாரதியார், பாரதிதாசன் கொண்டாடிய யாப்பு, இன்று வழக்கொழிந்து வருகிறது என்பதைப் பார்க்கிற போது ஒரு பெருங்கொடையை இழப்பதுபோல் ஆகிறது என்ன செய்வது? காலத்தின் முன்னால் கைபிசைந்து நிற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை..

இன்றைய புதுக்கவிதை எழுதும் கவிஞர்களும் நவீன கவிதை எழுதும் கவிஞர்களும் புதுப்புது உத்திகளைக் கையாளுகிறார்கள். யாரும் நினைக்காத கோணத்தில் சிந்திக்கிறார்கள். யாரும் பாடாத பொருள்களில் கவிதை எழுதுகிறார்கள். நுண்சித்தரிப்புகளில் வியப்பின் உயரத்தைத் தாண்டுகிறார்கள். தமிழின் தேய்வழக்குகளை விட்டுவிலகிப் புதிய சொல் இணைவுகளையும் சொற்றொடர்களையும் உருவாக்குகிறார்கள். இதுவரை இல்லாத புதிய தமிழ் அழகை... கவியழகை இன்றைய இளைய கவிஞர்களிடம் கண்டு மகிழ முடிகிறது. இந்த இளைஞர்களுக்குத் திரைப்பாடல் எழுதவும் ஆசை இருக்கிறது. எந்தக் கவிஞருக்குத்தான் திரைப்பாடல் எழுத ஆசை இருக்காது என்று நீங்கள் கேட்பதும் கேட்கிறது. யாப்பு இலக்கணம் கற்றிருந்தால் திரைப்பாடல் எழுதுவது எளிதாகும்.

நகைச்சுவை எழுத்தாளரும் நடிகருமான கிரேஸி மோகன் அவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் வெண்பாக்கள் எழுதி அசத்தினார்கள். எதுகை மோனையைப் பற்றிக் கவலைப் படாமல் ஞானக் கூத்தன் எழுதிய பல கவிதைகளில் யாப்புக் கட்டுமானம் உண்டு.

இளைஞர்கள் கொஞ்சம் யாப்புக் கற்றுக்கொண்டால் நவீன கவிதைகளோடும் புதுக்கவிதைகளோடும் மரபுக் கவிதைகளையும் எழுதலாம். யாப்புக் கவிதை எழுதும் மூப்புக் கவிஞர்களிடத்தில் புதுவீச்சுக் காண முடியாது. இளைஞர்கள் எழுதினால் யாப்புக் கவிதைக்குள் புதிய கோள்களைப் படைத்து ஒளிவீசச் செய்ய முடியும்.

யாப்புக் கவிதை எழுதுவது கடினம் என்று யாரும் கருத வேண்டாம். யாப்பு இலக்கணத்தைக் கண்டு மிரளவும் வேண்டாம். புலவர் குழந்தை அவர்கள் “யாப்பதிகாரம்” என்ற நூலையும்- கி.வா.ஜகந்நாதன் அவர்கள் “கவி பாடலாம்” என்ற நூலையும்- மருதூர் அரங்கராசன் அவர்கள் “யாப்பறிந்து பாப்புனைய” என்ற நூலையும் எழுதி இருக்கிறார்கள். மரபுக் கவிதைகள் எழுதுவது குறித்துப் பல வலைப்பூக்கள் இணையத்தில் உள்ளன.  இவற்றை முழுமையாகப் படிக்க வேண்டாம். அசை, சீர், எதுகை, மோனை பற்றி மேலோட்டமாகத் தெரிந்துகொண்டால் போதும். இதில் எதுகை மோனை பற்றி நம் கவிஞர்களுக்கு ஏற்கனவே புரிதல் உண்டு. விருத்தப்பாவுக்கு உரிய வாய்ப்பாடுகளில் ஒன்றிரண்டு தெரிந்துகொள்ளுங்கள். இவற்றைக் கொண்டு விருத்தங்கள் எழுதிவிட முடியும். கம்பனைப் போல் காவியமும் படைக்க முடியும். தேர்ந்த கவிஞர்கள் எழுதிய ஆசிரியப்பாவில் அமைந்த கவிதைகள் சிலவற்றைப் படித்தால் போதும். இலக்கணம் படிக்காமலேயே ஆசிரியப்பா எழுதிவிட முடியும். இணைக்குறள் ஆசிரியப்பா என்று ஒன்று இருக்கிறது. இதைவிட எளிய யாப்பு எதுவும் இல்லை. இன்றைய புதுக்கவிதைகளையும் நவீன கவிதைகளையும் இணைக்குறள் ஆசிரிப்பாவுக்குள் அடக்கிவிட முடியும்.

இளைய கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் :

புதுக்கவிதை நூல்கள், நவீன கவிதை நூல்கள் என ஏராளமான நூல்களை வெளியிடுங்கள். உலகக் கவிதைத் தரத்தைத் தாண்டியும் பயணியுங்கள். உங்கள் வாழ்வில் ஒரேஒரு மரபுக் கவிதை நூலாவது வெளியிடுங்கள். இரண்டாயிரம் அகவை தாண்டிய உங்கள் தாய்க்கு நீங்கள் செய்யும் குல மரியாதையாக அது இருக்கட்டுமே.

நன்றி :

திண்ணை, 06-09-2020





 

Monday, 7 September 2020

 

மனம்... மனம்...

அது கோவில் ஆகலாம் 

கோ. மன்றவாணன் 

கொவைட் 19 கொள்ளைநோய்க் கொடுமையின் சாட்சியாகத் திகழ்கின்ற தலைமுறை நாம். இமைப்பொழுதும் இடைவெளி இன்றி இரவும் பகலும் இயங்கிக் கொண்டிருந்த நம் நாடு, ஐந்து மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. எப்பொழுதுதான் மீட்சி என்று யாருக்கும் தெரியவில்லை. மக்கள் மட்டும்தாம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள் என்றில்லை. தெய்வங்களுக்கும் அதே நிலைதான். நூற்றாண்டுக்கு முந்தைய கொள்ளைநோய்க் காலத்தில்கூடக் கோவில்கள் மூடப்பட்டதாகக் குறிப்புகள் இல்லை.

அரசுச் சம்பளம் வாங்குவோர், ஓய்வூதியம் பெறுவோர் சமாளித்துக் கொள்கிறார்கள். பணச்செழுமை மிக்கவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். நடுத்தரத்தினர் சிலபல இடையூறுகளைத் தாண்டி வாழ்வை நகர்த்திக் கொள்கிறார்கள். அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் அந்தந்த நாள் வாழ்க்கையை நடத்த முடியும் என்றிருக்கும் ஏழை மக்களின் நிலையை எத்தனைபேர் உணர்ந்து வருந்தி இருப்பார்கள் என்று தெரியாது.

வறியவர்களின் குரல் எவர் காதில் விழுகிறது? ஏழைகளின் கண்ணீர் எவர் இதயத்தை நனைக்கிறது?

வேலை இல்லை. வருமானம் இல்லை. வயிற்றுக்குச் சோறு இல்லை. வாழ்வதற்கு வாய்ப்பு ஏதும் தொலைதூரம் வரை புலப்படவில்லை. கோவில்களில் பகல் வேளைகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதுவும் நின்று போனது. பள்ளிகளில் உணவு அளிக்கப்பட்டது. அதுவும் தடைப்பட்டுவிட்டது. யாரேனும் உணவுப் பொட்டலம் வழங்க மாட்டார்களா என்று கை ஏந்தியபடி நாளைத் தள்ளுகிறவர்கள் பெருகிவிட்டார்கள்.

அரசியல் கட்சியினர், தொண்டு அமைப்பினர் பலர் பொருள்திரட்டி, ஏழை எளிய மக்களுக்குக் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வழங்கி வந்தனர். அதுவும் தற்போது படிப்படியாகக் குறைந்து பல இடங்களில் இல்லாமலேயே போய்விட்டது.

தனிப்பட்ட சிலர் தங்கள் சொந்தப் பணத்தில் தினந்தோறும் மக்களுக்குக் கபசுரக் குடிநீர் அளித்து வருகின்றனர். முகக்கவசங்களைச் சிலர் வழங்கி வருகின்றனர். விளம்பர வெளிச்சத்துக்கு வராமலேயே ஏராளமானோர் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அருந்தொண்டு ஆற்றுகின்ற இவர்கள் எல்லாரையும் பாராட்ட வேண்டும்.

இந்தக் கொள்ளைநோய்க் காலத்தில் ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளங்களை ஊடகங்களின் வழியாக அறிந்து வருகிறோம். என் பார்வையில் பட்ட ஊடகத் தகவல்களின் அடிப்படையில் அவர்களில் சிலரை மனதார நினைத்துப் போற்றவே இக்கட்டுரையில் பதிவிடுகிறேன்.

ஃ ஃ ஃ  

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்துள்ளவர் மோகன். அவருடைய அன்புமகளின் படிப்புச் செலவுக்காக ஐந்து லட்சம் ரூபாய் சேமித்து வைத்திருந்தார். இந்தச் சமயத்தில்தான் இந்தியா முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அவர் வாழ்ந்த பகுதியில் ஏழை எளிய மக்களே மிகுதி. அவர்களின் பசிக்குரல் அவருக்கும் அவரின் அன்பு மகள் நேத்ராவுக்கும் கேட்டது. அங்குள்ள குடும்பங்களுக்குத் தேவையான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றைப் பல நாட்களாகத் தொடர்ந்து வழங்கி மகிழ்ந்தனர். அடுத்தடுத்த மாதங்களில் தம் நிலைமை என்னாகும் என்று தெரியாத நிலையிலேயே தங்கள் சேமிப்பை ஏழை மக்களின் பசிப்பிணி போக்கவே செலவு செய்துள்ளனர் அப்பாவும் மகளும்.

தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் படிப்புச் செலவுக்கான பணத்தை ஏழைகளுக்காகச் செலவிட்டு உதவிய அந்த இளம்பெண்ணை எவ்வளவு போற்றினாலும்  தகும். நம் இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் மோடி அவர்களும் மனதின் குரல் நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணைப் பாராட்டிப் பேசி உள்ளார்.

ஃ ஃ ஃ

கருநாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் தாஜ்முல் பாஷா மற்றும் முஸாமுல் பாஷா என்று இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்தே தொழில்செய்து வந்தனர். இந்தக் கொள்ளைநோய்க் காலத்தில் ஏழை மக்கள் படும் அல்லல்களை நேரில் கண்டு மனம் உருகினர். தம் குழந்தைப் பருவத்தில் தாய்தந்தை இழந்து பாட்டியிடம் வளர்ந்த இவர்களுக்கு மதவேற்றுமை பாராது பலர் உதவி உள்ளனர். அதன் நன்றிக் கடனாகவோ என்னவோ... ஏழை மக்களுக்கு உதவ விரும்பினர். அவர்கள் வாழ்ந்த பகுதியில் உள்ள ஏழை மக்கள் அனைவருக்கும் ஊரடங்கு முடியும்வரை உணவளிக்க முடிவு செய்தனர். தம் வீட்டருகே ஒரு கூடாரம் அமைத்து அங்கே சமையல் கூடம் ஒன்றை உருவாக்கினர். மளிகைப் பொருட்கள், காய்கறிகள் யாவையும் வாங்கிக் குவித்தனர். நாள்தோறும் உணவு சமைத்து அந்த மக்களுக்கு வழங்கினர். இவர்கள் இவ்வளவு செய்வதற்கு ஏது அவ்வளவு பணம் என்று யாரும் கேட்கலாம். தம்முடைய நிலத்தை 25 லட்சத்துக்கு விற்றுத்தான் இந்த அருந்தொண்டைச் செய்துள்ளனர்.

இவர்களைப் போலவே பலர், தமிழகத்தின் பல பகுதிகளில் வறியவர்களுக்கு உணவு சமைத்து வழங்கி இருக்கிறார்கள். வழங்கியும் வருகிறார்கள்.

ஃ ஃ ஃ

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர். பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருபவர். பொதுமுடக்கக் காலத்தில் அவர் மதுரையில் இருக்க வேண்டியதாயிற்று. அங்குள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் தங்கியபடி, மதுரை மாநகரில் பிச்சை எடுத்து வந்துள்ளார். அதில் சேர்ந்த பத்தாயிரம் ரூபாயைக் கொரோனா நிதியாக மதுரை ஆட்சித் தலைவரிடம் வழங்கினார். அத்தோடு விட்டுவிடவில்லை. அதுபோல் எட்டு முறை வழங்கினார். இதுவரை பிச்சை எடுத்தே எண்பதாயிரம் ரூபாய்வரை கொரோனா நிதியாக ஆட்சியரிடம் அளித்துள்ளார். இவரை ஊடகத்தினர் விசாரித்த போது, இதற்கு முன்பேகூட அவர் தன் பிச்சை வருமானத்தில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மேசைகள் நாற்காலிகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரிந்தது. வயது முதிர்ந்த ஒரு பிச்சைக்காரர், தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தான் சேர்த்த எண்பதாயிரம் ரூபாயையும் கொரோனா நிதிக்காக அரசிடம் கொடுத்துள்ளார் என்பதை நினைத்தால், கடையேழு வள்ளல்களையும் வென்ற வள்ளல் இவர் அல்லவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இவருக்குப் பணம்கொடுத்தால் நல்ல செயலுக்குச் சென்று சேரும் என்று மக்களும் இவருடைய பிச்சைத் தட்டில் தாராளமாகப் பணம் போட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் நடந்த சுதந்திர நாள் விழாவில் இவருக்கு விருது வழங்க மதுரை ஆட்சியர் முடிவு செய்துள்ளார். அரசு அலுவலர்கள் அவரைத் தேடித் தேடி அலைந்தனர். அவருக்கேது முகவரி? அவருக்கேது அலைபேசி? அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுதந்திர நாளில் அவருக்கு விருது வழங்க முடியாமலேயே விழா நடந்து முடிந்தது. மறுநாள் இது ஊடகங்களில் செய்தியாக வெளியானது. அதன் பின்னரே அவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அந்த விருதை அளித்துள்ளார்.

ஃ ஃ ஃ

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். குழந்தைப் பருவத்தில் இருக்கும் போதே பெற்றோரை இழந்தவர். அருப்புக்கோட்டையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர். அங்கிருந்தே படித்தவர். இளம்அறிவியல் பட்டம் பெற்றவர். வேலை தேடிச் சென்னை சென்றுள்ளார். பகலில் வேலை தேடுவதும் இரவில் மெரீனா கடற்கரையில் படுத்து உறங்குவதுமாக இருந்தார். அவ்வாறு படுத்திருந்த போது அவருடைய சான்றிதழ்கள் உள்ளிட்ட உடைமைகள் கொண்ட பையை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். பணி கிடைக்காததால் பல பகுதிகளில் பிச்சை எடுத்துள்ளார். பின்னர் மதுரையில் தொடர்வண்டி நிலையத்தில் தங்கியபடிப் பிச்சை எடுத்து வாழ்வை நகர்த்தி உள்ளார். குப்பை பொறுக்கி விற்றும் உள்ளார். காவல் துறையினர் விரட்டியதால் அங்கிருந்து நடந்தபடியே அலங்காநல்லூர் வந்த போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. தேநீர்க் கடை திறக்கப்படவே இல்லை. கையில் வைத்திருந்த கொஞ்ச பணத்தைக் கொண்டு தேநீர் விற்கத் திட்டம் இட்டார். மிதிவண்டியையும்  தேநீர்க் குடுவையும் வாடகைக்கு வாங்கித் தேநீர் தயாரித்துத் தெருதோறும் சென்று விற்றார். எங்கும் தேநீர்க் கடை இல்லாததால் வியாபாரம் நன்றாக நடந்தது. தொடக்கத்தில் முந்நூறு ரூபாய் வரை ஊதியம் கிடைத்தது. அப்போது தெரு ஓரங்களில் வறுமை வாழ்வை நடத்தியவர்களுக்கு இலவசமாகவே தேநீர் வழங்கி உள்ளார். சற்று வருமானம் கூடுதலாகக் கிடைத்ததும் அதைக்கொண்டு  உணவுப் பொட்டலங்களை வாங்கி அந்தச் சாலையோர மக்களுக்குக் கொடுத்துள்ளார். பின்னர் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஊரில் தேநீர்க் கடைகள் திறக்கப்பட்டன. அதனால் முன்போல் அவருக்கு வியாபாரம் ஆகவில்லை. இருந்தாலும் அலுவலகங்களில், நிறுவனங்களில், பட்டறைகளில் உள்ளோர் தேநீர் வாங்கி ஆதரித்தனர். உணவை வாங்கித் தருவது கட்டுப்படி ஆகவில்லை என்பதால், தான் தங்கி இருந்த இடத்தில் தானே உணவு சமைத்து அந்த மக்களுக்கு அளித்து வந்துள்ளார். ஆதரவற்று வளர்ந்த பிள்ளைக்குத்தான் ஆதரவற்றவர்களின் துயரங்கள் யாவும் தெரியும் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இந்தச் சேவைகளுடன் இன்னொரு உதவியையும் அவர் செய்துள்ளார்.

சோழிங்க நல்லூரில் உள்ள சூர்யகலா என்ற பெண்மணி வீட்டுவேலை செய்து வந்துள்ளார். கொரோனா அச்சத்தால் வீட்டுவேலை யாரும் தரவில்லை. தன் பிள்ளைகளோடு வாடி வதங்கிய அந்தப் பெண்மணியின் கதறலை வாட்ஸப் வழியாகத் தமிழரசன் அறிந்துள்ளார். அந்தப் பெண், தனக்குத் தையல் வேலை தெரியும் என்றும் யாரேனும் தையல் இயந்திரம் வாங்கித் தந்தால் பிழைத்துக் கொள்வேன் என்றும் சொல்லி உள்ளார். சென்னையில் உள்ள தன் நண்பர் வெங்கடேசனுக்குப் பணம் அனுப்பி ஒரு தையல் இயந்திரமும் அதனுடன் துணைப்பொருட்களையும் வாங்கி சூர்யகலாவுக்குத் தரச் செய்துள்ளார். அது மட்டுமின்றி வீட்டுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களையும் வாங்கித் தந்துள்ளார். இந்த உதவிகளைச் செய்த கையோடு அவருடைய நண்பர் அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்த படியே காணொளி அழைப்பு மூலம் பேசி உள்ளார். தனக்கு உதவி செய்த தமிழரசனையும் அவருடைய நிலைமையையும் பார்த்த அந்தப் பெண், கண்ணீர் பெருகி அழுதுள்ளார்.

ஃ ஃ ஃ

ஆயிரம் கல் தொலைவுக்கு அப்பால் இருக்கும் தம் வீடுகளுக்கு நடந்தே சென்ற தொழிலாளர்களின் பாதங்கள் வலித்த போது, சிலரின் இதயங்கள் வலித்துள்ளன. அவர்களுக்காக நெடுஞ்சாலைகளில் காத்திருந்து தண்ணீர், உணவு, பழங்கள் வழங்கிய அந்த நெஞ்சங்கள் யார்யார் என்று யார் அறிவார்?  

பொதுமுடக்கக் காலத்தில் ஏழைகள் படும் துயரங்களைச் சொல்லத் தொடங்கினால் முடிக்க முடியாது. இந்நிலையில் நம்மையே நம்பி வாழும் சில விலங்குகளுக்குத் தாம் படும்பாட்டைச் சொல்ல மொழி தெரியவில்லை. சுற்றுலா இடங்களில் மக்கள் தரும் உணவை நம்பித்தான் குரங்குகள் உள்ளன. ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவில்லை. அதனால் அவற்றுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை. காட்டுக்கும் செல்லவில்லை. நம்மிடையே அவை பழகிவிட்டன. பசியால் அலையும் குரங்குகளுக்காகச் சிலர் பழங்கள் வாங்கித் வழங்கி இருக்கிறார்கள். சிலர் உணவு சமைத்துத் தந்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் பல பகுதிகளில் சிலர், தெரு நாய்களுக்கு நாள்தோறும் உணவு அளித்து வந்துள்ளார்கள்.

இத்தகையோரின் பேரன்பை மனிதநேயம் என்ற சொல்லுக்குள் அடக்கிவிட முடியாது. அவர்களின் இதயங்கள் விலங்குகளுக்கும் இரங்குவதால் அந்த அன்பை உயிர்நேயம் என்றுதான் சொல்ல வேண்டும்..

தன்னைப் போலப் பிறரை எண்ணும் நெஞ்சம் கொண்டவர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவானவர்கள். அவர்களால்தாம் அடுத்தவர்களின் துயரைத் தம் துயர்போல் உணர முடியும்.

இந்த ஊரடங்குக் காலத்தில் இத்தகைய இதயங்கள் உருகி உருகிப் பிறருக்குச் செய்த தொண்டுகளைக் காலம் மறந்துவிடக் கூடும். ஆனால் கதிரும் நிலவும் சாட்சிகளாக என்றும் இருக்கும்.

 

நன்றி :

திண்ணை

30-08-2020

 


Monday, 31 August 2020

தத்தித் தாவுது மனமே...


 

தத்தித் தாவுது மனமே

கோ. மன்றவாணன்

 

நித்தம் நித்தம் எழும் வாழ்க்கை நிகழ்வுகளில் நமக்குக் கிடைத்துள்ள திரும்பக் கிடைக்காத நொடிகளைச் சரியாகப் பயன்படுத்துகிறோமா? இந்தக் கேள்விக்குப் பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதில்.

மனைவி சுவையாக உணவு சமைத்து அன்போடு பரிமாறுகிறார். எங்கோ சிந்தனையைப் பறக்கவிட்டு, அனிச்சை செயலாகச் சாப்பிட்டுவிட்டுக் கைகழுவுகிறோம்.

வாகனம் ஓட்டியவாறு அலுவலகமோ வேறு வேலைக்கோ போகிறோம். நம் மனம் வாகன வேகத்தையும் தாண்டித் தறிகெட்டு எங்கோ ஓடுகிறது. எப்படியோ விபத்து இல்லாமல் போய் சேர்ந்து விடுகிறோம். சில நேரங்களில் விபத்தும் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.

அலுவலகம் சென்று அமர்ந்து வேலை பார்க்கும்போது... வீட்டுக்குள் உலாவுகிறது அதே மனம்.

அலுவலக வேலையைவிட்டு வீட்டுக்கு வருகிறோம். வீட்டுக்குள்ளும் அலுவலகச் சிந்தனைதான். “என்னங்க” என்று அழைத்து மனைவி ஏதோ சொல்கிறார். காதில் பாதி விழுந்தும் பாதி விழாமலும் போகிறது. அந்தப் பாதியிலும் நம் கவனம் இருப்பது இல்லை. அப்போதும் நம் மனப்பறவை எல்லை தாண்டி எங்கோ பறந்து போகிறது.

இருள்சூழ்ந்த பொழுதில் உடலுறவு கொள்ளும் போதும்... இன்னொரு துணையை இன்னொரு உறவைத் தேடி மனம் மதில் தாவுகிறது என்று சிலர் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணும் போதும் கூடத் தொலை தூரத்துக்குச் செல்கிறது சிந்தனை.

மனதுக்குப் பிடித்த எழுத்தாளரின் நாவலை வாசிக்கையிலும்...  புத்தகப் பக்கங்களில பார்வை இருக்கிறது. புத்தியோ பூமியைச் சுற்றக் கிளம்பி விடுகிறது. அதற்குள் பல பக்கங்கள் புரட்டப் பட்டிருக்கும். என்ன படித்தோம் என்பது தெரியாது. மீண்டும் மனதைப் பிடித்து இழுத்துவந்து முந்தைய பக்கங்களைத் தேடிப் படிப்போம். மனவேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு நம்மை ஏளனமாகப் பார்க்கும். பிறகென்ன... புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் படுக்கச் செல்வோம். படுத்துக் கொண்டிருக்கும் போது, மூளை மிகவும் சுறுசுறுப்பாகி விடுகிறது. உடல் பஞ்சணையில் படுத்துக் கிடக்கிறது. உள்ளம் போர்க்களத்துக்கு வாள்தூக்கிச் செல்கிறது.

இந்த நொடியில் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து அதற்கு இயைந்து அந்த நொடியை நாம் அனுபவிப்பது இல்லை. சாப்பிடும் போது சிந்தனை வேறிடத்தில் இருந்தால், அந்த உணவின் சுவை நம் நாவைத் தழுவுவது இல்லை. அந்தச் சாப்பாட்டின் மணம் நம் நாசியைத் தொடுவது இல்லை. அந்த அமுதுணவின் சத்து நம் உடலுக்குள் சரியாகச் சேர்ந்து இருக்குமா என்பது ஐயம். உடலும் உள்ளமும் இணைந்து இயைந்து இயங்கினால்தான் சரியான செயலும் அதற்கு உண்டான சரியான பயனும் உருவாகும்.

செய்யும் வேலையில் கவனம் இல்லாமல் சிந்தனை சிதறினானல் அந்த வேலைப்பாடு நேர்த்தியாக இருப்பது இல்லை. மண்பானை வனைகிற போது கண்ணும் கவனமும் வேறு பக்கம் சென்றால், பானையின் வாய் கோணலாகி இளிக்கும். உளிகொண்டு சிற்பம் செதுக்குகிற போது, உள்ளம் வேறு திசை நோக்கிச் சென்றால், சிலை உருவாகிற போதே ஊனம் அடையும். இயந்திரங்களில் வேலை செய்வோர் தம் கவனக் குறைவால் கைகளை, கால்களை இழப்பதோடு வாழ்க்கையையும் இழந்து தவிக்கிறார்கள்.

வாகன விபத்துகளுக்கு மிகுவேகம் மட்டும் காரணம் இல்லை. கவனக் குறைவும் காரணம் ஆகும். திரும்பித் திரும்பிப் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்களை எங்கும் காணலாம். அரசியல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டபடி ஓட்டுபவரையும் என்றும் பார்க்கலாம். வீட்டிலோ வேறு எங்கோ நடந்த ஒரு நிகழ்வைத் திடீரென நினைத்து, அதனால் கோபம் தலைக்கு ஏறிப் பல்லைக் கடித்தபடி ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு நொடிக் கவனக் குறைவு, ஒரு கோர விபத்துக்குக் காரணம் ஆகிவிடுகிறது. 

ஒன்றில் நிலைக்காமல் எண்ணம் தாவி ஓடுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை, உளவியல் வல்லுநர்கள் நுட்பமாக விவரிக்கலாம்.

பொதுவாக...

ஒரு வேலையில் ஒரு நிகழ்வில் ஆர்வம் இல்லாமல் போவது, எண்ணச் சிதறலுக்கு முக்கிய காரணம் என்று எல்லாரும் அறிவார்கள்.

நிகழ்சூழலில் மனம் நிலைகொள்ளாமல் இருப்பதற்கு, எதிர்வரும் சூழலை முன்னரே நினைத்துப் பரபரப்பு அடைவதும் காரணம் ஆகிறது. இதனால்தான் பதறாத காரியம் சிதறாது என்கிறார்கள்.

மனதை ஒன்றில் குவிய விடாமல் தடுப்பதில் வல்லமை கொண்டவை தீயப் பழக்கங்கள்.

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை என்ற வள்ளுவரின் கருத்து உண்மைதான். ஆனால் அறிவுத் தெளிவைத் தாண்டி அஞ்சுவதும்- மிகை அச்சம் கொள்வதும் வாழ்வை ரசிக்க விடாமல் செய்கின்றன. மனம் அங்கும் இங்கும் பறப்பதற்கு அத்தகைய அச்சம்தான் சிறகுகள் தயாரித்துத் தருகின்றது.

மனஅழுத்தம் இருந்தாலே எதிலும் நாட்டம் இருக்காது. மகிழ்ச்சியே வந்தாலும் அதைத் துய்க்க முடியாது. அதனால் அவர்களால் நிகழ்நொடியில் வாழ இயலவில்லை.

பூப்பூவாய்ப் பறந்து போகும் பட்டாம் பூச்சி போல, மனம் பறந்து போவதைத் தடுக்க மேற்சொன்ன தடைகளைத் தகர்க்க முயல்வது நல்லது.

இன்பம் வரும்போது மகிழ்ச்சி அடையாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் துன்பம் வரும்போது துயர் அடையாமல் இருப்பது இல்லை. துயர் அடையாமல் இருந்தால் அவர்கள் ஞானிகளாக இருக்க வேண்டும். அல்லது மனநோயாளிகளாக இருக்க வேண்டும்.

அந்தந்த நேரத்து இன்பத்தையும் அனுபவிக்க வேண்டும். அந்தந்த நேரத்துத் துன்பத்தையும் துய்க்க வேண்டும். துன்பம் வரும்போது அதில் இருந்து மீள முயல வேண்டுமே தவிர, அதிலே தோய்ந்து கிடப்பதா என்று நீங்கள் வினா எழுப்ப முடியும். அப்படி மீள எடுக்கும் முயற்சிகளில் உங்கள் கவனம் முழுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் பதில்.

நிகழ்கால நொடிகளில் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றால் எதிர்காலத்தை எப்படி வடிவமைத்துக் கொள்வது என்று சிலர் கேட்கக் கூடும். எதிர்காலத் திட்டமிடலும் அதற்கான செயல்களும் நிகழ்காலத்தில் அடங்கி உள்ளன. அவற்றையும் அதன் அதன் நேரத்தில் மனம் இயைந்து செயல்படுத்துங்கள்.

இரவு நேரம். பல் வலிக்கிறது. நேரம் ஆக ஆக வலி கூடுகிறது. மருத்துவ மனைக்குச் செல்ல முடியாத நிலை. வலி தணிக்கும் மாத்திரைகளும் கைவசம் இல்லை. படுத்திருந்தபடியே அந்த வலியில் உங்கள் மனதைச் செலுத்திப் பாருங்கள். அந்த வலியின் நுட்பத்தில் உங்கள் கவனத்தை வைத்துப் பாருங்கள். அதுகூட சுகமாக மாறலாம். அந்த வலியின் போக்கைக் கவனிக்க கவனிக்க... ரசிக்க ரசிக்க... அந்த வலியின் வலிமை குறைந்து போவதை அறியலாம். உங்களை அறியாமல் உறக்கம் உங்களை தழுவி இருக்கலாம். இதை நீங்கள் நம்ப மறுக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் அனுபவமே இது. அந்த வலியை நிரந்தரமாகப் போக்க மறுநாளோ வாய்ப்புள்ள ஒருநாளோ மருத்துவரிடம் சென்று தீர்வு காணலாம். அதற்காகப் வலி வரும் போதெல்லாம் அதை ரசியுங்கள் என்று சொல்லப் போவது இல்லை.

சுகத்தைக் கொண்டாடலாம். சோகத்தையும் ரசிக்கலாம். அதுஅது கொஞ்ச நேரம்தான் இருக்க வேண்டும். அதில் இருந்து நாம் கடந்து வந்துவிட வேண்டும். வாழ்க்கை நதியில் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எந்த இடத்திலும் தேங்கிவிடக் கூடாது. ஒவ்வொரு நொடியிலும் நம் பயணம் இருக்க வேண்டும்.

சில நேரங்களில் திரையரங்கில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியைப் பார்க்கிறோம். சிந்தனை சிதறாமல் அந்த நகைச்சுவையோடு ஒன்றிச் சிரிக்கிறோமே... திரையில் தோன்றும் சோகக் காட்சிகளில் அது கதை என்று தெரியாமல் கண் கலங்குகிறோமே... ஆபத்தில் சிக்கிய நாயகனையோ நாயகியையோ பார்த்துப் பதைபதைக்கிறோமே... இந்தக் கற்பனைக் காட்சிகளில் மனம் ஒன்றி இருக்கும்போது, மெய்வாழ்க்கையில் மனம் ஒன்ற முடியாதா என்ன?

ஒவ்வொரு நொடி நேர நிகழ்வையும் அனுபவித்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்வின் அருஞ்சுவை. இதைச் சொல்ல எளிதாக இருக்கிறது. முடிவதில்லை என்பதுதான் இயல்புநிலை.  இதில் நானோ நீங்களோ யாருமோ விதிவிலக்கு இல்லை.

நம் நவீன கால வாழ்க்கை,  போட்டிகள் நிறைந்தது ; போராட்டங்கள் சூழ்ந்தது. மனஅழுத்தம் இல்லாதவர்களே இப்போது இல்லை. குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் இருக்கிறது. இவற்றை முழுமையாக எதிர்கொள்ள முடியாது. ஒவ்வொரு நொடியும் மனதை அலைபாய விடாமல் வாழ வேண்டும் என்று ஆசைப்படலாம். அது நடைமுறைக்கு வருவது இல்லை. அப்படியானால் என்னதான் செய்வது?

கீழ்க்கண்டவாறு குறைந்தளவு செயல்திட்டம் ஒன்றை வகுத்துக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்க முடியாது என்றால், இன்னும் குறைத்துக் கொள்ளலாம். முடியாது என்று ஒதுங்குவதைவிட, முடிந்தவரை முயன்றுதான் பாருங்களேன். முயல முயல மனம் நம் வசப்படும். தியானப் பயிற்சியும் அப்படித்தானே! இதோ செயல்திட்டங்கள்...

குழந்தைகள் ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொஞ்சிப் பேசும் போது, நீங்களும் குழந்தையாய் மாறுங்கள். குழந்தைகளோடு விளையாடி மகிழுங்கள். அப்போது மனதுக்குள் பூக்கள் மலரும்.

நீங்கள் கணவர் ஆனால் உங்களுக்கு மனைவியைவிட வேறு யாரும் மிக முக்கியமானவர் இல்லை. நீங்கள் மனைவி ஆனால், உங்கள் கணவரே உங்களுக்கு முக்கியமானவர். எனவே துணையிடம் பேசும்போது மனம் ஒன்றித்து உரையாடுங்கள். அந்த ஒவ்வொரு நொடியும் வாழ்வைச் சீராக்கும்.

வேலையில் கவனம் குவியுங்கள். அது உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும்.

ஒவ்வொரு நொடியிலும் சாலையில் கவனம் வைத்தும், வேகத்தைக் கட்டுப்படுத்தியும் வாகனத்தை ஓட்டுங்கள். உயிரைப் பாதுகாக்கும் மந்திரம் அதுதான்.

பொழுதுபோக்கு நிகழ்வில் பங்குகொண்டால், உங்கள் மனதும் அந்த நிகழ்வும் பாலும் வெண்சர்க்கரையும்போல் இரண்டறக் கலக்கட்டும். அப்போது மனம் இளைப்பாறும்.

கண்ணதாசன் சொன்னதுபோல் “நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து” ஒவ்வொரு நாள் இரவும் உறங்கச் செல்லுங்கள். இடையூறு இல்லாத தூக்கமும் வாழ்வின் சுவைதான்.

நன்றி :

திண்ணை 23-08-2020